Sunday, May 31, 2009

தோழிக்கு !!


தோழி..

மரணிக்க கடலில்
குதித்த வேளையில்
மீனவன் வலை சிக்கியவனாய்..
வீழ கிடந்த என்னை
தாங்கி பிடித்தாய் நீ..

சருகாய் வாடி
மண்ணோடு மக்க
இருந்த வேளையில்
பாசத்தண்ணீர் ஊற்றி
பாதுகாத்தாய் நீ...

காற்றில் மறையும்
கானல் நீராய்
இருந்த வேளையில்
மெல்ல மெருகேற்றி
நதியாக்கினாய் நீ...

விழுந்த என்னை
எழுப்பி..
சுருண்ட என்னை
நிமிர்த்தி..
பழையதான என்னை
புதியவனாக்கி..

என்னுள் என்னை
எனக்கே அறிமுகம் செய்தாய்..
எப்போதும் என்னை
தாங்கி பிடிக்கும் நீயும் எனக்கு
ஒரு தாய்..!!

Saturday, May 30, 2009

அப்பா.....!!


என்னில் எப்போதும் சில புயல்கள் வந்து போவதுண்டு.
எப்போதும் அவைகள் அவையாகவே மறைந்துவிடும்.

அன்றும் அப்படிதான் வந்தது ஒரு புயல்
உன்னை பிரியும் ஒரு பயங்கர புயல்..

எப்படி என்று இன்று நினைத்தாலும்
என்னுயிர் மெல்ல சறுக்கி விழுகிறது.

ஏன் என்று இன்று நினைத்தாலும்
நெஞ்செல்லாம் வலியுடன் துடிக்கிறது.

எதற்கு என்று இன்று நினைத்தாலும்
காரணம் தெரியாமல் விழி நீர்சேர்க்கிறது.

என்ன செய்ய.. ஏது செய்ய
என சிந்தித்து முடிப்பதற்குள்

எங்கோ போய்விட்டாய் நீ
என்னை தனியாய் தவிக்கவிட்டு..

நீ பிரியும் தருணத்தில் கூட
உன் வார்த்தைகளை மதித்தேன்..

ஆம்..

ஒரு துளி கண்ணீர் கூட சிந்தவில்லை
உன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு..

வாழ்நாளில் நீ என்னை நினைத்து
வருந்தினாய்..
மன்னித்துவிடு..!!
உன்னை வருந்த வைத்தமைக்கு..

இனி எவருக்கும் வருத்தந்தராதவனாய்
வாழ்ந்து காட்டுவேன் ...!!

இனி உன் குடும்பத்தின் பொறுப்பு
என் தோள்களில்...!!

உன்னை கேட்பதெல்லாம் ஒன்று தான்..

சுமையை குறைக்காதே..
என் தோள்களை விரிவாக்க செய்..

பாட்டு பாஸ்கி :
அவர் எங்கயும் போகலைப்பா.. ரங்கா.. அவர் எப்பவும் உங்களோட தான் இருக்காரு.. இருப்பாரு..
வலியை மற.. வாழ்வை நினை.. வெற்றி உனக்கே.. வாழ்த்துக்கள்!

Monday, May 25, 2009

அந்த மழை காலத்தில் ஒரு மதிகெட்டவன்..!!



மெல்லிய மழை..
சாலையோரம் நான்..
எப்போதும் போல நனைய மறுக்கும்
நமத்துபோன நெஞ்சங்கள்..
எனக்கும் நனைய விருப்பமில்லை..
என்றாலும் காலையில் படித்த ஓஷோ
என்னை என்னவோ செய்ய சொன்னாரே...?!

ஆங்... உன் மனதை கவனி..
அப்போது உன் உண்மையான உன்னை நீ உணரலாம்..

கவனித்தேன்..
ரொம்பவும் அஞ்சுகிறது..
நனைந்தால் சுரம் வரும்..
ஆபிஸ் லீவ் வேறு இல்லை..
பார்ப்பவர்கள் பைத்தியமென்பார்கள்..
வீட்டில் விட்டு விட்டு திட்டுவார்கள்..
இவனுக்கு ஒழுங்கா வேலைக்கு போற எண்ணமில்லை என்பார்கள்..
இப்படி பல மடங்கு அஞ்சியது..

சரி.. நனைந்து தான் பார்த்துவிடுவோம்..
என்னதான் ஆகிவிடும்..
மிஞ்சி மிஞ்சி போனால் காய்ச்சல் வர போகிறது..
ஒரு கால்பாலும்.. ரஹ்மான் பாடலும் போட்டால்
சரியாகிவிடுமே..

ஆஹா.. இவ்ளோ மழையும் எனக்காக
பெய்கிறதா..
என்று ஒரு ஆச்சிரியம்..

மெல்ல இரண்டு கைகளையும் விரித்து நின்றேன்..
இன்னும் இருக்கமாய் அணைத்துகொண்டது அது..

இப்படியே சில கணங்கள் மெல்ல கரைந்து போனேன்...
சாலைவாசிகள் என்னை பார்த்து எதோ சொன்னதுபோல இருந்தது..

இருக்கட்டுமே.. என்ன இப்போ..

நனைவதன் சுகம் எப்போதும் அலாதியானது..
அருவி குளியல் அகத்தினை தொட்டால்...
மழையின் நனைதல்.. ஆன்மாவை தீண்டுகிறதே...

சில கணங்களுக்கு பின்..
என் சாலையில் ஒரு லாரி சடசடத்தபடி ஓடியது..
பாவம் யாரோ ஒருவன்
நட்ட நடு சாலையில் அடிபட்டு கிடக்கிறான்..

அட..!!
நான் அணிந்திருக்கும் சட்டை
போலவே இருக்கிறதே அவனுடையதும்..!!!

பாட்டு பாஸ்கி : இதுக்குதான்.. மழைவந்தா ஒதுங்கி நிக்கணுங்கறது..
இல்லனா.. செம் சர்ட்.. சேம் ப்ளட்...!!

Thursday, May 21, 2009

அவளின் சிவந்த உதடுகளுக்கு!!





உன்னை பற்றி எழுதும் வார்த்தைகளை கவிதை என்கிறார்கள்..
நீயோ யாரை நினைத்து எழுதினாய் என்று என்னை முறைக்கிறாய்.
என்ன செய்வது என்று தெரியாமல்...
எழுத்தோடு நான் ஏக்கமாய் காத்திருக்கிறேன்..உன் வரவுக்காக.

*******************

என்னை தூண்டிவிட்டு விடுகிறாய்..
என் தவிப்புகள் தீயாய் எறிந்து ..
என்னை தீர்த்துவிடும்போது..
என்னோடு இருப்பதில்லை.. நீ.. :(

**********************

என்ன வேண்டும் என்று கேட்காதே இனிமேல்...
என்னிடம் எப்போதும் இருக்கும் ஒரே பதில்..
“நீ மட்டும் போதும்”..

**************************




பாட்டி சொல்கிறார்..
மற்றவரின் எச்சில் பண்டத்தை உண்ணகூடாதாம்..

அவர்களுக்கு எப்படி தெரியும்...
உன் உதடுகளின் சுவை.

****************************

காலெல்லாம் ரத்தம்..
நம் காதலின் கால் தடங்களின் மீது
ஒற்றையாய் நான் நடந்த போது..

********************************

வெள்ளி மழையின்.. ஒவ்வோரு துளியும்..
உன் முத்தங்களாய் சேர்கிறது..
என் மேனியில்..

Friday, May 8, 2009

உன் விழிகள்.. என் வழிகள்!!

சில நேரங்களில் கவிதை கொட்டும்..அதை எழுத இடம் இருக்காது..
அப்படிப்பட்ட ஒரு அவசர கவிதைதான் இதுவும்..






உன் கண்கள் விஷம் தான்..
சில நேரம் நோய் தருகிறது;
சில நேரம் நோய் முறிக்கிறது.

உன் கண்கள்.. எப்போதும்..
கொன்றுகொண்டும்.. வாழவைத்துகொண்டும்..

வாழ்க்கை சக்கரத்தில்
எப்போதும் என்னை
சுழலவிட்டபடி நகைக்கிறது.