Thursday, July 30, 2009

அலோ யாரு ஜார்ஜ் புஷ்ஷா?


அலோ யாரு ஜார்ஜ் புஷ்ஷா?

ஆமா நீங்க?

நாந்தான் பில் கிளண்டன் பேசுறேன்.

ஓ..சொல்லுங்க நலமா? லெவெண்ஸ்கி நலமா?

யாவரும் நலம் ஜார்ஜ், அங்க எல்லாரும் சௌக்கியமா?

ஆங்,, நலம்.!!

...பில் கிளிண்டனின் பின்னால் ஒபாமா நிற்கிறார்.

சார் நானும் பேசணும் ஒரு நிமிஷம்..

ஜார்ஜ்.. ஒபாமா பேசணுமாம்..

இல்லை வேண்டாம்.. நீங்க பேசுங்க.ஒபாமா கைப்பேசியை வாங்கி கீழே எறிகிறார்.

கிளிண்டன் அதிர்ச்சியடைகிறார்.

புஷ்ஷீக்கும் அதிர்ச்சி.

டேய் ஒபாமா ஏண்டா இப்படி பண்ண?


ஒழுங்கா போய் தூங்கு.. இல்லனா சோனியா காந்தி கிட்ட சொல்லிடுவேன்..


பயந்துபோய் கட்டிலிக்கு ஓடிப்போய் படுத்துகொள்கிறார் கிளிண்டன்.

ஒரு பெருமூச்சு விடுகிறார் ஒபாமா.


இதெல்லாம் தினசரி வாடிக்கையாகிவிட்டது , இந்த பைத்தியகார ஆஸ்பத்திரிக்கும் நமது கம்பவுண்டர் ஓபாமா கந்தசாமிக்கும்!!!

Tuesday, July 28, 2009

ராமன் எத்தனை ராமனடி!!”அய்யயொ.. இன்னிக்கும் அம்மா வீட்டில் இல்லையா?”

வருத்தத்துடன் ராமன் விலாஸுக்குள் நுழைந்தாள் கனகா.

அவள் அந்த வீட்டு வேலைக்காரி.

”கனகா, நல்லா இருக்கியா?” என்றார் ராமன்.
வயது 60-ஐ தொட்டிருக்கும்.


பகீர் என்றது கனகாவிற்கு.

“ம்ம்..இருக்கேன் ஐயா”
என்றாள்.

அடடா இன்னிக்கு இவர் மட்டும் தான் வீட்டில் இருக்கார் போல.

போன முறை இதே போல் சிக்கிகொண்டு நான் பட்ட பாடு.

அப்பப்பா எந்த பெண்ணுக்கும் அப்படி ஒரு நிலைமை வரகூடாது.

ஆனால் இன்று மீண்டும் அதே நிலைமை எனக்கு வந்துவிட்டதே..

மனதுக்குள் கலங்கினாள்.

பாத்திரங்களை சீக்கிரம் விளக்கி வைத்துவிட்டு முடிந்தால் சொல்லாமலே ஓடிவிட வேண்டும்.
இவரிடம் சிக்கினால் இன்று அதோகதிதான்.

கடவுளே காப்பாத்து என்று வேண்டிக்கொண்டாள்.

*******

ஒருவழியாக பாத்திரங்களை விளக்கி முடித்தாயிற்று.

கிளம்பிடலாம் என்று எழுந்த போது பின்னால் யாரோ நிற்பதை உணரமுடிந்தது.

திரும்பி பார்த்ததும் திடுக்கிட்டாள்.

ராமன்.

முகத்தில் புன்னகையோடும், கண்களில் ஆசையோடும் நிற்கிறார்.

”அம்மாடி கனகா, எனக்கு கால் வலி , கொஞ்ச நேரம் கால் அமுக்கி விடேன்”.

மறுக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் விதியை நொந்தபடி அவர் அறைக்கு நடந்தாள்.

நாற்காலியில் அவர் அமர இவள் கீழே அமர்ந்து கொண்டு கால் அமுக்க ஆரம்பித்தாள்.

ராமன் கனகாவின் அருகில் நெருங்கி பேச ஆரம்பித்தார்.

“இப்ப நாடு நிலைமையே சரியில்ல கனகா, நாங்க 1948-ல லக்னோவில் இருந்தபோது........”

.

.

.கனகா மனதுக்குள் கதறினாள்.

”போன வாரமும் இதே போல் 2 மணி நேரம் வரலாறு பேசி அறுத்து தள்ளிச்சு கிழம்.

இந்த வாரம் தப்பித்துவிடலாம் என்று பார்த்தால் இந்த வாரமும் சிக்கிவிட்டேன்.

ஹூம்ம்.. விதி வலியது!!”.

Thursday, July 23, 2009

இரண்டாவது மணநாளில்!!


இன்று பார்கவனுக்கும், ஹேமாவுக்கும் இரண்டாவது கலியாண நாள்

என்னங்க.. ஸேரி நல்லா இருக்கா?

ம்ம்.. சூப்பர்.. அழகா இருக்குடா.

தேங்க் யூ டா தடியா!!

ஹேய்..என்ன கொழுப்பா? அடிங்க!

ஹாஹா..சும்மா . கண்ணடித்தாள் ஹேமா.


ஏங்க..அத்தைக்கு முந்திரி பக்கோடா, மாமாவுக்கு மெதுவடையும், முறுக்கும் பண்ணி இருக்கேன்.

பாவம் மாமா அத்தை இதெல்லாம் சாப்பிட வாய்ப்பே இல்லாம போச்சு.

பார்கவன் நெகிழ்ந்தான்.

ம்ம்.. உண்மைதான் ஹேமா.

உன் அக்கறை என்னை சிலிர்க்க வெக்கிது.

தோ..நான் கூட அப்பாவுக்கு பிடிச்ச மாதிரி டிரஸ் பண்ணி இருக்கேன்.

ம்ம்..கலக்குறீங்க.

சரி..சீக்கிரம் வாங்க அவங்க வெயிட் பண்ணிட்டு இருக்க போறாங்க!!

வீட்டு கதவை பூட்டிவிட்டு கிளம்பினார்கள் இருவரும்.

முதியோர் இல்லத்திற்கு!!Friday, July 17, 2009

உங்கள் பதிவுலக நண்பருக்கு ஒரு விருது!நெடு நாட்களாக இந்த ஆசை மனதை நெருடிக்கொண்டே இருந்தது.

இன்று அதற்கான சிறப்பான வழி ஒன்று கிடைத்துவிட்டது.

ஆம்.. அதுதான் இந்த பதிவர் என் சிறந்த நண்பர் விருது!
(This Blogger is My Best Friend!) விருது.

இதை ஏற்படுத்த காரணம் உண்டு.

முதல் காரணம்: என்னால் இந்த பதிவுலகத்திற்கு எதாவது நல்லது செய்ய முடியுமா என்கிற ஏக்கம்.

இரண்டாவது காரணம்: நீங்கள் நான் எல்லாருமே இனி இந்த விருதை பார்க்கும்போது ஒரு நட்புணர்வும்,நம்பிக்கையும் வருமே
அதற்காக தான்.

மூன்றாவது காரணம் : பதிவுலத்தில் நிலவும் நம்பகமற்ற தன்மையை விலக்கவே இந்த விருது.

இந்த காரணங்களை முன்னிட்டே இந்த விருது உருவாக்கப்பட்டது.


இந்த விருதுக்கு சில கண்டிஷன்கள் உண்டு :

1. நீங்கள் இதை எத்தனை பேருக்கு வேண்டுமானால் தரலாம்.

2. கிஃப்ட் எதும் தருவதாக இருந்தாலும் தரலாம்.

3. அவர்களிடம் உங்களுக்கு பிடிச்ச விஷயம், ஏன் அவருக்கு தருகிறீர்கள் என்பதை ஒரு வரியில் சொல்லிவிட வேண்டும்.

4. எக்காரணம் கொண்டும் விருது நீக்கப்பட கூடாது.
அப்படி நீக்கப்பட்டால் அதற்கான காரணத்தை உங்கள் நண்பருக்கு தெரிவிக்கவும்.


எனக்கு பிடித்த பன்னிரெண்டு பேர் :

1. நாமக்கல் சிபி
(நம்மை இந்த பதிவுலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர், தல)

2. தமிழரசி
(ரெண்டாவது அம்மா, இதுக்குமேல சொல்ல ஆரம்பிச்சேன் ஒரு வரி பத்தாது)

3. புதுகைத் தென்றல்
(நல்ல தோழி, இவங்க பதிவில் இல்லாத நல்ல விஷயங்களே இல்லை எனலாம்)

4. குசும்பர்
(இவர் பதிவு பக்கம் போனாலே என்னை வீட்டில் ஒரு மாதிரி பாக்குறாங்க..அப்பூடி சிரிப்போம்ல!!)

5. வடகரை வேலன்
(சார்.. சிம்பிளி சூப்பர் சார், எழுத்தில் எளிமை அத்தனை எழுத்துக்களும் அருமை)

6. தூயா
( ஒரு பெண் பூ..ஒரு பெண் போராளி, இவங்க கிச்சன் எனக்கு உசுரு)


7. ஜீவ்ஸ்| jeeves
(நல்ல நண்பர்...புகைப்படங்களில் பேசுவார், இவரிடம் பேச ஆரம்பிச்சேன்... நாள் போறதே தெரியாது, ஒரு மனித லைப்ரரி)

8. ஜெஸ்வந்தி
(கவிதையிலும் கதையிலும் என்னை சிந்திக்க வைத்தவர்)

9. நட்புடன் ஜமால்
(இவர் நம்ம ஆளு!, கமெண்ட் அடிச்சே நண்பர்கள் சேர்த்தவர், நல்ல மனிதர்)

10. ரம்யா
(இவங்களோட பயணக் கட்டுரைக்கும், குட்டீஸ் கதைகளுக்கும் நான் ரசிகன்)
11. மயாதி
(இவரின் கொஞ்சும் கவிதைகள் என் மனதை கொஞ்சும்)

12. சுரேஷ் குமார்

(இவரின் எழுத்து நடை என்னை மிகவும் கவர்ந்த ஒன்று!)

இன்னும் பலர் இருக்காங்க..ஆனால்.. என் விதிய நானே மீறக்கூடாது .. அதனால் மத்தவங்க கோச்சிக்காதீங்க..
(டிஸ்கி)

ஆமா..இந்த விருதை எனக்கு யார் தர போறீங்க?

Thursday, July 16, 2009

என்னுள் விழுந்த மழைத்துளிகள்!!

குழந்தை தொழில்!! :


இந்தா கொழந்தெ நேரா பாரு...

ஆங்..,,இப்போ லேசா தலைய சாயி..

அட..எரும மாடே.. எதுக்கு இப்போ அதை கீழே போட்டே..!!

கைத்தவறி விழுந்திடுச்சு சாமி... அழுதாள் பானு.

பளாரென அறைந்தார் முதுகில்..மீண்டும் ஒரு அடி.

செங்கல் சட்டியை மீண்டும் தலையில் ஏற்றினார்.

ம்ம்.. இப்போ ஒழுங்கா பிடி..

நேரா பாரு..

நட..

ம்ம்.. சரி...போதும்..போய் காச வாங்கிக்க..

கிளம்பினார் ராமு.

குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டம் பற்றிய விளம்பரத்திற்கு

படங்கள் தயார் செய்துவிட்டார்.

பானு மதிய உணவுக்கு காசு சேர்த்துவிட்டாள்.
-----------------------
நேரம் சரியில்லை!! :அப்பா..ப்ளீஸ் பா..

என்னடா குமார்?

அப்பா..வாங்கி குடுங்கப்பா..

ம்ம்..பார்க்கலாம்..

பா..ப்ளீஸ்ப்பா.. இன்னிக்கே வேணும்..
என் ஃப்ரெண்ட்ஸ் எல்லார்கிட்டயும் இருக்கு.
எனக்கும் ஒண்ணு வேணும்பா..

சரிடா.. அதான் வாங்கிதரேன்னு சொல்றேன்ல..
இதுக்கு மேல பேசினா அடிதான் விழும்..

நீ அடிச்சாலும் பரவால்ல..வாங்கி தரேன்னு சொன்னாதான்
விடுவேன்..

ஏய்..சொல்லிட்டே இருக்கேன்..

குமார் , அம்மாஆஆஆ....!!

குமாரை லேசாக தள்ள ..தள்ளிய வேகத்தில் அவன் கீழே படிகளில் சரிந்து விழுகிறான்.

ச்சை..இதெல்லாம் ஒரு புள்ளை.. ஒரே நச்சரிப்பு..

நீயும் உன் புள்ளையும்...

அடிப்பட்ட மகனை கவனிக்காமல் ஆபிஸ் கிளம்பி போகிறார்.

அவரை கண்ணீரோடு முறைக்கிறாள் சிவகாமி.
...

ஆபீஸில் வேலையே ஓடவில்லை.
எதோ பெரிய தவறு செய்ததாய் உணர்கிறார்.
..

மாலை..

டேய்.. குமார்.. இங்க பாரு.

அப்பா என்ன வாங்கி வந்துருக்கேன் பாரு..

நீ கேட்ட ரிஸ்ட் வாச்..

..எங்கடா இருக்க..குமார்..குமார்..

குரல் கேட்டு வெளியே சிவகாமி வர..

ஏய்..குமார் எங்கடி?

உள்ளதான் இருக்கான் போங்க..

புன்னகையோடு உள்ளே போகிறார்..

குமார்..இந்தா நீ கேட்ட ரிஸ்ட் வாட்ச்..அப்படியே அதிர்ந்து போனார்...கண் கலங்கினார்.

குமாரின் இடது கையில் பெரிய கட்டு.

வலது கையில் மணிக்கட்டு வரை சிராய்ப்புகள்.(பி.கு).

குழந்தைகள் நம் நாட்டின் வீட்டின் எதிர்கால தூண்கள்.

நாம் இந்த பூமிக்கு வந்தோம் என்பதற்கு அவர்கள் தான் சாட்சி.

உங்களால் முடிந்தால் ஒரு குழந்தைகான கல்வி செலவை ஏற்றுகொள்ளுங்கள்.


வலிமை இல்லாதவர்களிடமும், குழந்தைகளிடமும் தன் வலிமையை கோபத்தை காட்டுபவன் மிருகமாக கருதப்படுவான்- திருக்குறள்.

யோசித்தேன்! எழுதிவிட்டேன்..!! இந்த பதிவில் ஹைக்கூ

கடவுளும் மரமும் :தன்னை திட்டுபவனுக்கும்
அருள் தருகிறது கடவுள்,
தன்னை வெட்டுபவனுக்கும்
நிழல் தருகிறது மரம்.

ஆம்புலன்ஸ் :அப்பாவுக்கு நெஞ்சுவலி
எங்களோடு சேர்ந்து தானும்
கதறுகிறது சைரனோடு.


பயணச் சீட்டு :சீட்டு இருக்கு கண்டக்டர்
ஆனால் சீட்டு தான் இல்லை
கால்வலியோடும் காமெடி செய்கிறார்
அந்த 82வயது முதியவர்.காவ(லி)ல் நிலையம் :
எப்போதும் இருவர் கையில் ஆயுதங்களுடன் காவலில்
பாதுக்காப்பாய் தான் இருக்கிறது காவல் நிலையம்.

கடவுள் தெரிகிறார்! :பத்து ரூபாய் சேர்த்து கொடுத்தேன்
இப்போது பக்கத்தில் தெரிகிறார் கடவுள்.

மறதி :
குடை மறந்த நாள் ஒன்றில்
மறக்காமல் வந்து சேர்ந்தது
மழை.

நீங்களுமா..?
:ஆத்திரத்தில் மனைவியை அடிக்கபோகிறார்

அந்த “லாஃபிங் தெரபி டாக்டர்”.அட! :


"உடம்பு சரியில்லைங்க
ஆபரேஷன் நாளைக்கு வெச்சிகலாம்."
அலுப்புடன் போனை வைத்தார் டாக்டர்.

Wednesday, July 15, 2009

"சக்தி"ய கொன்னுட்டாங்க!!

இந்த கதைக்கும்.. நமது சக்தி எனும் பெயர் கொண்ட பதிவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தெரிவித்துகொள்கிறேன்.
இல்லீங்க நான் வரலை..

ஏண்டி திமிரா.. சொல்லிட்டே இருக்கேன் வரலைன்னா என்ன அர்த்தம்?
தேவை இல்லாம என் தங்கச்சி முன்னாடி அவமான பட சொல்றியா..?ஒழுங்கா கிளம்பு.

இல்லீங்க..எனக்கு நிஜமா ஒடம்புக்கு முடியலை..கை கால் எல்லாம் ஒரே வலி..நீங்க போய்ட்டு வாங்க..

ஹேய்..சொல்லிட்டே இருக்கேன்..

“பளார்”..

ச்சி.. நீயெல்லாம் ஒரு ஜென்மம்.. சுத்த நோஞ்சானை எனக்கு கட்டி வெச்சு..வாழ்க்கையையே வீண் பண்ணிட்டாங்க..

நானே போறேன்.. நீ இங்கயே கிட..

பஸ் ஏறினார் சந்திரன்.

தன் தங்கை வீட்டு கறி விருந்திற்கு.ம்ம்..வாங்க அண்ணே!!

ம்ம்..வரேன் மா.. நல்லா இருக்கியா ?

நல்லா இருக்கேன் அண்ணே!! அண்ணி வரலையா ?

அவளுக்கு கொஞ்சம் உடம்புக்கு முடியலையாம்..அதான் வரலைம்மா..!!

என்னமோ..சரி அண்ணே!!

ஆமா.. இந்த அருண் பையன் எங்க போனான்?
மாமான்னு ஓடி வந்து கட்டிப்பான்.. இப்போ எங்க போனான்?

உள்ளதான் அண்ணே இருக்கான்.. டேய் அருண்!! மாமா பாருடா..!!

அருண்,ம்ம்.. போம்மா.. நான் மாட்டேன்.!!

சரி..விடுமா.. நானே பாத்துக்குறேன் அந்த வாலை!!

..அறைக்குள் செல்கிறார் சந்திரன்.

டேய்.. கண்ணா..!!

ம்ம்..

என்னடா, என்ன இப்படி உக்காந்து இருக்க.. என்ன ஆச்சு அருணுக்கு?

அருண் விசும்ப ஆரம்பிக்குறான்.

அடுத்த சில கணங்களில் கண்களில் நீர் தேங்க ,அழ ஆரம்பிக்கிறான்.

டேய்..கண்ணா!! என்னடா என்ன ஆச்சு?

ஹேய்..ஏன் அழற? அட..மாமா இருக்கேண்டா சொல்லுப்பா என்ன ஆச்சு..!!

சந்திரனின் மார்பில் விழுந்து அழ ஆரம்பிக்குறான்.

என்னடா ஆச்சு..? சொல்லுப்பா..

ம்ம்...சக்திய.. சக்திய கொன்னுட்டாங்க மாமா!!!

டேய்.. யாருடா சக்தி..? உன் ஸ்கூல் ஃபிரண்டா..?

தெரிஞ்ச பொண்ணாடா?


.. இல்லை மாமா.. அது நம்ம வீட்டு ஆடு..என் சக்தி ..!

அதை இன்னிக்கு கழுத்த அறுத்து கொன்னுட்டாங்க மாமா..!!

நம்மை நம்பி வந்த ஒரு உயிரை இப்படி சித்திரவதை பண்ணி கொல்றது எவ்ளோ பெரிய பாவம். அது நம்மை எதிர்கிறது இல்லைங்குறதுக்காக
அதை கொலை பண்றது எவ்ளோ கொடூரம்.. இத அம்மாகிட்ட சொன்னா என்னை திட்டுறாங்க.


..அவருக்கு மனதிற்குள் சுருக் என்றது.

அவர் கண்களிலும் கண்ணீர்..

ஆமாம்பா..அது தப்புதான்.

இனி அது நடக்காம பாத்துக்கறேண்டா கண்ணா..நீ அழாதே மா!!

Tuesday, July 14, 2009

மகிழ்ச்சி என்றால் என்ன?-1

என் வாழ்க்கையோட இந்த பகுதிக்கு பேரு..வறுமை.

”...ஹலோ.. யாருங்க உள்ள..

ஹெல்லோ.. யாருப்பா அது..

ஹேய்..வெளிய வாய்யா.. ச்சை..”

............

அவங்க கூப்பிடுறது என்னைத்தான்.
என் பேரு நாதன் சண்முகவேல்.
இங்க பேரிஸில் இருக்கேன்.

சொந்த ஊரு எதுன்னு தெரியாது.
எங்க அம்மா அப்பா சொன்னதே இல்லை.

நான் இப்போ ஒரு பப்ளிக் பாத்ரூமில் உள்தாழ்ப்பாள் போட்டுகிட்டு தரையில் சாய்ந்தபடி இருக்கேன்.

..ஓ.. சொல்ல மறந்துட்டேன். இது என்....என்...ப்ச்..என் மகன்..

பேரு..கிரிஸ்டோபர் நாதன்.

இவங்க அம்மா நேத்து இவனை என்னோட விட்டுட்டு கிளம்பி போய்ட்டாங்க.

அவங்களுக்கு என் நன்றிய சொல்லிக்கிறேன்.

இன்னிக்கு ராத்திரி முழுக்க இங்க தான் இருக்க போறோம்.

ஏன்னா எங்களுக்கு வீடு கிடையாது.

வேலைக்கு அப்ளை பண்ணி இருக்கேன்.

ரிசசன் காரணமா என் வேலை போய்டுச்சு.

இந்தியா திரும்ப காசும் இல்லை.

வாடகை குடுக்க முடியாததால் வீட்டை விட்டு வந்துட்டோம்.

இன்னிக்கு ஒரு நாளைக்கு மட்டும் இந்த பாத்ரூம்தான் எனக்கும் என் பையனுக்கும் வீடு.

.. பரவாயில்ல..இந்த வீட்ல தண்ணி வசதிக்கு பஞ்சமில்லை...ஹாஹாஹா..

சரிங்க ..நானும் தூங்க போறேன். குட் நைட்.

அடுத்த பதிவில் சந்திப்போம்..

Thursday, July 9, 2009

ஹலோ... எமன் ஹியர்.. !!

-”டேய்.. சொன்னா கேளுடா.. ஏண்டா இப்படி பண்ற.”

-”மா. சும்மா இரும்மா..பேசும்போது நொய் நொய்னு. பேசிட்டு இருக்கோம்ல.”

-”டேய்.. மனோ. வேண்டாம்.. இப்போ நிறுத்த போறியா இல்லியா?”

- “.. ம்ம்..ஆமாடா.. அம்மாதான்... சும்மா அட்வைஸ் பண்ணிகிட்டு.. டென்ஷன் ஆகுதுடா.”

- “..என்னவொ போடா..நீ சொன்னா கேக்க மாட்டா.. அப்படியே அப்பன் புத்தி..ம்ஹீம்.”

-“ஹேய்..ஒண்ணு குடேன்.. ப்ளீஸ்டா.. என் செல்லம்ல..”

- “இப்படியே எத்தனை நாளைக்கு கொஞ்சிட்டு இருக்க போற?
ஒழுங்கா கலியாணம் பண்ணிக்கிற வழிய பாரு.. மனோ.”

- “ஹேய்.. அம்மா கட்டிக்க சொல்றாங்கடா . கட்டிக்கவா?
தோடா..வெக்கமா.. ம்ம்... அப்புறம்..”

...கீங்..கீங்..கீங்...

அம்மா, “என்னடா போன் கட்டா?”

மனோ, “ஆமாம்மா..பேலன்ஸ் காலி.”

செல்போனை பார்த்தபடி மனோ பைக்கின் ஆக்ஸிலேட்டரை திருக..

..சில பல.. பலமான சத்தங்களுக்கு பின்.

.
.
.

”அம்மா.. என்ன மன்னிச்சுடு.. நீ சொன்னது சரிதான்.. வண்டி ஓட்டும் போது போன் பேசி இருக்க கூடாது.”

தன் பிணத்தின் முன்னால் கதறும் தாயின் பின்னால் நின்றபடி மனோ சொல்லிகொண்டான்.


(பி.கு)..

நேற்று மட்டும் சேலத்தில் இருவர் சாலைவிபத்துகளில் பலி. இருவருமே சாலையில் டூவிலரில் செல்லும்போது செல்லில் பேசியபடி சென்றுள்ளனர்!!!

"வண்டியில் செல்லும்போது செல்லை தொடாதீர்கள்.
அழைப்பது எமனாகவும் இருக்கலாம்."

Tuesday, July 7, 2009

எவரும் எழுதலாம் கவிதை!!


கவிதை எழுவது என்பது.. காதலிப்பதை போல.

ஆனால் சிலர்..

- "இப்போது எல்லாம் கவிதை என்கிற பேரில் கிறுக்க ஆரம்பித்துவிட்டனர் பலரும். ஒரு பத்து கவிதை எழுதுகிறார். கவிஞராகி விடுகிறார். "

என்று கவிதை வராத பலர் உளறிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் விஷயம் அப்படியல்ல. கவிதை எழுவது என்பது.. காதலிப்பதை போல. கவிதை என்றால் வாலியும், வைரமுத்துவும், கண்ணதாசனும், வண்ணதானும், பா.விஜயும், பழனிபாரதியும்
மட்டுமே எழுத வேண்டும் என்றில்லை. அது ஒரு காதல். காதலுக்கு பேதங்கள் இல்லை. இவர்தான் காதலிக்க வேண்டும் என்று எவரையும் தனியே குறிப்பிட முடியாது. அது எல்லாருக்கும் பொது. அது போல் தான் கவிதையும்.

அது பூவுக்குள்ளும் இருக்கும். நேற்று பார்த்த அவளின் கண்ணுக்குள்ளும் இருக்கும்.
அது எல்லாருக்கும் பொதுவானது. அது காற்றை போல.


சரி விஷயத்திற்கு வருகிறேன்.

விதை.. ஆஹா.. சொல்லும்போதே இனிமையான.. மகிழ்ச்சியான.. மற்றும் பல எண்ணங்களை ஏற்படுத்திகொடுக்கிற ஒரு வார்த்தை.

வார்த்தை என்று சொல்வதை விட.. அதை ஒரு மையம் என்று சொல்லலாம். ஆம் கவிதை தான் எழுத முயல்கிறோம். ஆனால் கவிதை நம்மிடம் இருந்து பிறந்து நம்மையே எழுதிவிடுகிறது.

நம் எண்ணங்களை அள்ளி தன்னகத்தே கொண்டு.. ஆங்கே ஓர் இணைவை உருவாக்கிவிடுகிறது.

இப்படிப்பட்ட கவிதைகளை எழுத ஏன் நாம் தயங்குகிறோம்.. ஏன்?

வார்த்தைகள் வந்து விழ வேண்டுமே .. வருவதில்லையே.

என்னை பொருத்த வரை வார்த்தைகள் ஒரு பொருட்டே அல்ல. எப்படி?
ஒரு குழந்தை பார்த்து அதன் அருகில் சென்றதும் என்ன செய்கிறோம்.. ஆஆஅ.. ச்ச்சூசு.. என அதற்கு புரிந்த மொழிக்கு நம் மனம் தாவிவிடுகிறது.
அதே போல் தான் கவிதையும். உங்களுக்கு வர வேண்டிய வார்த்தைகள் தானாய் வந்து விழும்.. நீங்கள் வழிவிட்டால் மட்டும் போதும்.

ஓஷோ சொல்வார்.

“நீ உன் கதவை திறந்து மட்டும் வை. வரும் காற்றை வா.. வா. என்று அழைத்துகொண்டு இருக்க வேண்டியதில்லை. அது உனக்கானது நிச்சயமாக. அது உனக்கு வந்தே தீரும். நீ செய்ய வேண்டியதெல்லாம் உன்னை நீ திறந்து வைத்திரு. எதையும் போட்டு குழப்பிகொள்ளாமல் தயாராய் மட்டும் இரு.”

அவ்வளவுதான்.

நீங்கள் கவிதை எழுத முடிவு எடுத்து பேனாவோடு அமர்ந்துகொண்டு ..கவிதையே வா.. என்று கூவினால் வரப்போவதில்லை.மிஞ்சி போனால்.. அடுத்த
அரை மணி நேரத்தில் நீங்கள் அடுத்த வேலையில் இருப்பீர்கள் ..அல்லது தூங்கிகொண்டு இருப்பீர்கள். அவ்வளவே..

பின்ன எப்படி தான் வரும் கவிதை ?

கவிதை.. அது வந்து போகும் ஒரு பொருளோ. எண்ணமோ அல்ல. அது எப்போதும் இருக்கிறது.

நீங்கள் காய்கறி வாங்கும் போதும், பல் துலக்கும்போதும்,
நடக்கும்போதும் அது எப்போதும் இருக்கிறது.

நீங்கள் செய்ய வேண்டியது அதை உணர வேண்டியது மட்டுமே. அந்த போதை வஸ்து உங்களுக்குள்ளேயே
ஊறி கிடக்கிறது.

நீங்கள் போதையை(கவிதையை) உணர நீங்கள் தான் இடைஞ்சல். அதை புரிந்து கொள்ளுங்கள்.

சரி எப்படித்தான் உணர்வது?

கடவுளையும் கவிதையையும் .. அதன் உணர்வையும் எந்த மொழியாலும் சொல்ல முடிந்ததில்லை. அதற்கு வார்த்தைகளே இல்லை.

எனக்கு தெரிந்த ஒரே வழியை சொல்கிறேன்.

நல்ல ஒரு பாடலை கேளுங்கள். அதன் வரிகளை ரசியுங்கள். முடிந்தால் ஆடுங்கள். பாடுங்கள். அனுபவியுங்கள்.

உங்களுக்குள் ஒரு சிலிர்ப்பு பரவும். அருவியின் சாரல் பட்டால் உடல் சிலிர்க்குமே அந்த சிலிர்ப்பு வரும்.


அப்போது எடுங்கள் பேனாவை.

அடுத்த பத்து நிமிடங்களில் நீங்கள் ஒரு அழகான அற்புதமான வரிகள் கொண்டு ஒரு கவிதையை புனைந்திருக்கிறீர்கள்.

முயன்று பாருங்கள்.

உங்களுக்குள் பரவசத்தை கொண்டு வரும் வழி எது என்று கண்டுபிடியுங்கள்.

பிறகு நீங்களும் ஒரு மகாகவி.

Saturday, July 4, 2009

படித்ததில் பிடித்தவை பாகம்-1.

படித்ததில் பிடித்தவை என்கிற இந்த பகுதி..

பல நாட்களாக எழுத நினைத்து, நேரமின்மை காரணமாக தள்ளிபோய்கொண்டே இருந்தது.

இன்று அதற்கான சிறப்பான நேரம் அமைந்ததை தொடர்ந்து எழுதுகிறேன்.

"மக்கள் புத்தகங்களை தேர்ந்தெடுப்பதில்லை, புத்தகங்கள் மக்களை தேர்ந்தெடுக்கின்றன" என்கிற வரி நினைவுக்கு வருகிறது.

இவ்வாறு சில பல நல்ல புத்தகங்கள் என்னை தேர்ந்தெடுத்துள்ளன என்பது என்னை பெருமைப்பட செய்கிறது.

என் மனதில் நீங்க இடம் பிடித்த புத்தகங்களில் ஒன்று, முதன்மையானது..

சிகரங்களை நோக்கி- வைரமுத்து.

கவிப்பேரரசு வைரமுத்துவை பற்றி சொல்லிதெரியவேண்டியதில்லை.. சொல்லிலேயே தெரிந்து விடும்.. அவர் இரண்டு ரத்தினங்களுக்கு சொந்தகாரர்.

ஆம்.. முத்துவும், வைரமும் எப்போதும் அவர் பேரில் பளிச்சிடுகின்றன..அவரின் வரிகளைப்போல..

வைரமுத்துவின் புத்தகங்களை பொருத்தமட்டில்.. முன்னுரைக்காகவே ரசிகனானவன் நான். அந்த புத்தகத்தின் மொத்த வார்த்தைகளின் மதிப்பும், பொருளும் முன்னுரையிலேயே முளைத்து நிற்பவை. அவரின் முன்னுரையே இவ்வளவு ரசிக்கப்படுவது என்றால்.. இன்னும் உள்ளே...!!!


தமிழ்தாயின் தமிழ்த்திருமகனின் வார்த்தை ஜாலங்கள், வாழ்க்கை கோலங்கள் என அனைத்தும் முதல் சில பக்கங்களிலேயே ஆரம்பித்துவிடுகிறது.

ஒரு கதையை கவிதையாக சொல்கிறாரா? இல்லை கவிதையினூடே கதையும் பின்னி வந்துள்ளதா? என சில நேரம் எனக்குள் ஒரு ஆச்சரியம் பெருகுவதுண்டு.

அத்தனை அளவுக்கு கதையில் கவியாக, கவியில் கதையாக, பின்னத் துவங்கிறது பக்கங்கள்.

ஒரு கவிஞனின் ஊமைப்பார்வையும், ஒரு பெண்ணின் உலகப்பார்வையும், ஒரு விஞ்ஞானியின் விஷமப்பார்வையும் சேர்ந்து கதையின் வலிமை கூட்டி நிற்கிறது.

ஒரு நகரத்து இளைஞனின் மலைக்கிராம சந்திப்பும், அங்கே மக்களின் அவலங்களும், அதை மீட்டு எடுக்க முயலும் ஒரு பெண்ணும், ஒரு மர்ம விஞ்ஞானியாக அவளின் அப்பாவும் கதையின் உயிர்நாடிகள்.

இவர்களை சுற்றி நகரும் கதையில் பலகளங்களை பற்றிய கருத்தாடல்கள் நிகழ்கின்றன. கவிஞர் கவிதைகளோடு மட்டுமல்லாது அறிவும் புகட்டுகிறார் .


படித்து சுவையுங்கள் : சிகரங்களை நோக்கி.
எழுதியவர் : கவிஞர் வைரமுத்து.

Thursday, July 2, 2009

ஒரு கவிஞனின் விதி...!!!


அப்போது எனக்கு வயது 16..

அன்றொரு நாள்..

..
ஆசையோடு நான்
சில புதுக் கவிதை
எழுதி வந்தேன்;

”ஏண்டா இப்படி பேப்பரா வீண் பண்ற?!” என்றாள் தங்கை.

“ஹோம்வர்க் செய்யறதை விட்டுட்டு,கவிதை கேக்குதா கழுதை” இது அப்பா

“பையன் போற போக்கே சரியில்ல சாந்தி, கொஞ்சம் அடக்கி வை” இது பாட்டி

...

ம்ம்.. அம்மாவும் திட்ட போகிறாள் என்று நினைத்தேன்.


ஆனால் தனியே என்னை அழைத்து..

“லூஸ்.. இதெல்லாம் தனியா என்கிட்ட காட்டி இருக்கலாம்ல.”

கவிதையை பார்த்துவிட்டு

”பரவாயில்லையே.. கவிதை எல்லாம் சூப்பர்.. ம்ம்.. அடுத்த வாலி நீதான்.”

நான் கேட்டேன்..

”வாலா.. வாலியா?”

அழகாய் சிரித்துவிட்டு சொன்னாள்.

“வாலிடா கண்ணா. அவர் ஒரு பெரிய கவிஞர்”. என்று சொல்லி என் தலை வருடினார்.

அப்போது அம்மாவை அப்பா முறைத்தார்.

மாலை..
அப்பா.
“ஏண்டி.. உன் புள்ளைதான் லூஸுன்னு பார்த்தா நீயுமா?”

அம்மா.
“ஏங்க..என்ன ஆச்சு இப்போ?”

அப்பா.
“பின்ன என்ன? அவன் கவிதை எழுதிட்டு வரான். நீ அவனை ரொம்ப புகழ்ற.”

அம்மா.
“ஆமா. புகழ்ந்தேன். அதுக்கென்ன இப்பொ?”

அப்பா.
“இப்படி ஆரம்பிச்சா. அவன் எப்படி ப்ராக்டிகல் வாழ்க்கையில் வாழ முடியும்?,,
எப்ப பார்த்தாலும் கவிதை, கற்பனைன்னே இருந்துட்டா.. சுத்தி நடக்குறது என்னனு தெரியாமலே போய்டும்.
அவன் மட்டும் இந்த உலகத்துக்கு அந்நியமா போய்டுவான். அவனை நீ என்கெரேஜ் பண்ணாதே”

அம்மா.
“அது எனக்கு தெரியாதாங்க. முதலில் என்கெரேஜ் பண்ற மாதிரி பண்ணுவேன். அப்புறம் போக போக, அது சரியில்லை
இது சரியில்லைன்னு சொல்லி. அவனை கவிதை எழுதுவது மேல ஒரு வெறுப்பு வர வெச்சுடுறேன். அப்புறம் அவன்
நம்ம வழிக்கு வந்து தானே ஆகணும். “

அப்பா.
“அட.. நல்லா தான் யோசிச்சுருக்க. குட். அவனை கவிஞனா பாக்க எனக்கு மனசு வரலை. அவன் பெரிய பிசினஸ் மேனா வரணும்.
அது தான் என் ஆசை.”

அம்மா
“என் ஆசையும் அதுதான்.”

..........

ஒரு மெல்லிய விசும்பலோடு.. அவைகளை கேட்டுகொண்டிருந்தேன் நான்.

முதன்முறையாக.. என் தாயே எனக்கு ஒரு எதிரியாக தெரிந்தார்.

என்ன செய்வது.. அவர்களின் தேடல் வேறு. என் தேடல் வேறு.


இறுதியாக...

ஒரு “ரகசிய வாழ்க்கை”யை துவங்குவது பற்றி யோசிக்க ஆரம்பித்தேன்.

இனி உலகுக்கு நான் பிஸினஸ் மேன். எனக்குள் ஒரு மகா கவி.

அன்று முடிவு செய்தேன்:

சுயத்தை இழந்து தானே வாழக்கூடாது. சுயத்தோடு வாழ்ந்துகொண்டே, உலகத்தோடும் வாழ்ந்து காட்டுகிறேன்.


பாட்டு பாஸ்கி : ஐ யம் பேக்.. !!

ஆஹா.. இது என்னடா அந்நியன் படம் பார்த்த எஃபெக்ட்டா இருக்குது.

ஆனா, அந்த பையன் பேர கடைசி வரை சொல்லவே இல்லியே நீ...?