Friday, July 23, 2010

உறவுப்பூர்வமான அன்பும், உணர்வுப்பூர்வமான அன்பும்!!
அன்பு, கேட்க, காண, நுகர, தொட, உணர என பல்வேறு வழிகளில் தினமும் நாம் அன்பை , அன்பாய் பெற்றும் கொடுத்தும் வருகிறோம்.
அதே அன்பு இன்றைய உலகில் இரண்டு வேறு கூறுகளாக பிரிந்துகிடக்கிறது. 

ஒன்று: உறவுப்பூர்வமான அன்பு.
இரண்டு: உணர்வுப்பூர்வமான அன்பு.

முதலில் ஏன் இப்படி அன்பு இருகூறுகளாய் பிரிந்தது என்று தெரிஞ்சிக்குவோம்.
அன்பு எப்போதும் அன்பு மட்டுமே. அதற்கு வேறு  அடைமொழிகள் கிடையாது.
ஆனால் உறவுக்காக சிலர் அன்பாய் இருப்பதாய் காட்டிகொள்ள ஆரம்பித்த போது,
உண்மை அன்பு குறைந்து சிதறி, உறவுப்பூர்வமான அன்பாகி போனது.

உணர்வுப்பூர்வமான அன்பு என்பது முழுக்க முழுக்க சுயநலமான அன்பு. என்னடா
இவன் உணர்வுப்பூர்வமான அன்பை சுயநலம் என்கிறானே என்று நீங்கள் எண்ணலாம்.
ஆனால் அதில்தான் விஷயம் இருக்கிறது.

நீங்கள் உங்கள் அன்பை பிறருக்கு பகிர்ந்தளிக்க வேண்டுமெனில், அது முதலில் உங்களுக்காக,
உங்களுக்குள் பூத்த அன்பாய் இருக்கவேண்டும். அதாவது, உங்களுக்குள் மணற்கேணி நீராய் ஊரும்
அன்பானது வெளியே கொடுக்கப்பட்டால் அது உண்மையில் நல்ல சுயநலமான, அன்புதான்.
அப்படிப்பட்ட அன்பை தான் புத்தர் போதித்தார். ஏசு ரத்தத்தில் காட்டினார். மஹாவீரர் அகிலத்தையே
அரவணைத்து தன் சொந்த அன்பால் உலகை நனைத்தார்.

இப்படி அன்பானது அதன் துவக்கம், அல்லது அது பிறக்கும் காரணத்தை பொறுத்து மாறுபடுகிறது.
உறவுப்பூர்வமான அன்பிற்கு வருவோம். இதுதான் இந்த உலகில் இப்போது மலிந்துகிடக்கும் அன்பின்
ரகம். ஆனால் தரம் மிககுறைவு. ஏன் தரம் குறைந்தது என்கிறேன்..?

பல நேரங்களில் பல உறவுக்காரர்களை நமக்கு பிடிக்காவிட்டாலும், அவர்களை பார்த்தமட்டில் அன்பே
பொங்காவிட்டாலும், அவர்கள் மீது அன்புசெலுத்துவதாய் காட்டிகொள்கிறோம். அவர்களை நாம் ஆதரிப்பதாகவும்,
அரவணைப்பதாகவும் காட்டிகொள்கிறோம். காரணம். சொஸைட்டி. கௌரவம். அவர்கள்மீது நீங்கள் அன்பாய் இருப்பதாக
காட்டிகொண்டால் மட்டுமே நீங்கள் மற்றவரால் மதிக்கப்படுவீர்கள் என்கிற சூழ்நிலை என்பதால், இந்த அன்பு நாடகம்.

இது வெரும் உறவுக்காரர்கள் மத்தியில் மட்டும் நாம் செய்வதல்ல, நம் நண்பர்களிடமும் இதே நிலைமை தான். வசதிப்படைத்த
நண்பர்கள் கைவசம் இருக்கவேண்டும் என்பதற்காக நாம் அன்பாய் நடிக்கிறோம். சரி..நண்பர்கள், உறவுக்காரர்கள் மத்தியில்
மட்டும்தான் இந்த நிலை என்றால் அதுதான் இல்லை. ஒரு குடும்பத்திற்குள்ளேயே இது நடக்கிறது. எனக்கு தெரிந்தவர் வீடு ஒன்றில்,
கலியாணம் முடிந்த  அடுத்த வருடமே குழந்தை பெற்றுகொள்கிறார்கள்! இப்போது
இரண்டு பிள்ளைகளுடன் அந்த இளம்தாயார், "இதுங்களை பெத்ததுக்கு", "ஏன்தான் இந்த மனுஷனை கட்டிகிட்டேனோ?!" என்று எசப்பாடல்கள்
பாடிவருகிறார்.

சமுதாய அங்கீகாரத்திற்காக பிள்ளைகள் பெறுவதை  எப்போதுதான் நிறுத்துவார்களோ சில பெண்கள். இப்படி சமுதாயத்திற்காக பிள்ளைபெற்றுகொள்ளும் மனோபாவம் மாறவேண்டும்.

இப்படி பிள்ளைபெற்றவர்கள் உண்மை அன்பை அவர்களுக்கு காட்ட இயலுமா? அவர்களால் அதை உணர்ந்திருக்கவும் முடியுமா?பிள்ளைகளை நல்லமுறையில் வளர்க்கமுடியுமா? என்பது சந்தேகமே!!

உறவுரீதியான அன்பை  விடுத்து, உணர்வுப்பூர்வமான அன்பை கொடுங்கள்!! அதுவே மனிதத்தின் வளர்ச்சியாகும். மனதின் முதிர்ச்சியும் அங்கேதான் பரிமளிக்கிறது!!
உறவுப்பூர்வமான அன்பிற்கு மனமுதிர்ச்சி தேவையே இல்லை. ஆனால் உணர்வுப்பூர்வமான அன்பில் மனம் நிச்சயமாய் முதிர்ச்சியடையும்! உலகம் மீதான பயம் தெளிந்து
தெளிவு பிறக்கும்.

உறவுரீதியான அன்பை  விடுத்து, உணர்வுப்பூர்வமான அன்பை கொடுங்கள்!!


வாழ்க்கை அன்புமயமாகட்டும், வாழ்த்துக்கள்!!


டிஸ்கி : இந்த பதிவில் தாய்மார்களை தாக்க வேண்டுமென எனக்கேதும் எண்ணமில்லை.
அப்படி தாக்கி இருந்தாலும் அது வெகு சிலரையே தவிர.. என் அன்னையை  போல் எல்லாரையும் மதிக்கிறேன்.

Friday, July 9, 2010

சிங்கத்தின் எண்ணங்கள்!!

இந்த பதிவில் நான் எழுதியது எதுவும் இல்லை..!!
விவேகானந்தரின் வீரமான வார்த்தைகளில் இருந்து பிறந்த வாக்கியங்களை இங்கே தந்துள்ளேன்..!


முடிந்தால் ப்ரிண்ட் போட்டு கண்ணில்படுமாறு ஒட்டிவிடுங்கள்.
தன்னம்பிக்கை குறைவதாய்ப்படும் சமயங்களில் இது பெரிதும் உதுவும்.(அனுபவச்சி சொல்றேன் :) )* எப்போதும் வெற்றி பெறுவது அன்பு மட்டுமே. அன்புடன் ஒப்பிடும்போது நூல்களும், அறிவும், யோகமும், தியானமும், ஞான ஒளியும் ஆகிய யாவுமே அதற்கு ஈடாகாது.


* நல்லவர்கள் உலகில் பெரும் தியாகங்களைச் செய்கிறார்கள். அதன் விளைவாக வரும் நன்மைகளை மனிதகுலம் பெற்று அனுபவிக்கிறது. இந்த உண்மையை உலக வரலாறு எங்கும் காணமுடியும்.


* தேவையில்லாத விஷயங்களைப் பற்றி அலட்டிக் கொள்வதில் ஆற்றலைச் சிதற விடாமல் அமைதியுடனும், ஆண்மையுடனும் ஆக்கப்பூர்வமான கடமைகளில் அக்கறை காட்டுங்கள்.


* யாருடைய நம்பிக்கையையும் கலைக்க முயலாதீர்கள். முடியுமானால் அந்த மனிதனுக்கு அவன் கொண்ட நம்பிக்கைக்கும் மேலாக இன்னொன்றைக் கொடுங்கள்.


* மனிதன் தன் வாழ்க்கையைத் தானே உருவாக்கிக் கொள்கிறான். தனக்குத் தானே அமைத்துக் கொள்ளும் விதிகளைத் தவிர, வேறு எதற்கும் மனிதன் கட்டுப்பட்டவன் அல்ல.


* ஒரு எஜமானைப் போல உங்கள் செயல்களைச் செய்யுங்கள். அடிமையைப் போல உங்கள் செயல்பாடுகள் அமையக்கூடாது. முழுமையான சுதந்திர உணர்வும், அன்பும் கொண்டு உங்கள் கடமைகளில் பணியாற்றுங்கள்.


* எழுந்து நில்லுங்கள். தைரியமாயிருங்கள். பலமுடையவராகுங்கள். உங்கள் மீதே முழுப்பொறுப்புகளையும் சுமந்து கொண்டு வாழப்பழகுங்கள்.


* வலிமையின்மையே துன்பத்திற்கான ஒரே காரணம். பொய்யும், திருட்டும், கொலையும், மற்ற அனைத்து பாவச் செயல்களும் மனபலவீனத்தாலே தோன்றுகின்றன.


* வாழ்க்கை என்னும் போர்க்களத்தில், அஞ்சாது எதிர்த்து நிற்கும் வெற்றி வீரன் ஒருவனுடைய மனநிலையே இப்போது நமக்கு தேவை.


* தைரியமாக இருங்கள். உங்கள் விதியை நிர்ணயிக்கும் சக்தியைப் பெறுவீர்கள். நல்ல செயல்களுக்கும், இதயப்பூர்வமான நன்மைகளுக்கும் இறைவனே முன்நின்று உதவுவார்.


* இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் ஆகிய மூன்றும் நமக்குத் தேவை.


* நம் மனநிலைக்கு தகுந்தவாறு உலகம் காட்சியளிக்கிறது. நமது எண்ணங்களே உலகத்தை அழகுடையதாகவும், அவலட்சணமுடையதாகவும் ஆக்குகின்றன.


* உலகில் உள்ள தீமைகளைப் பற்றியே நாம் வருந்துகிறோம். நம் உள்ளத்தில் எழும் நச்சு எண்ணங்களைப் பற்றி சிறிதும் கவலை கொள்வதில்லை. உள்ளத்தை ஒழுங்குபடுத்தினால் இந்த உலகமே ஒழுங்காகிவிடும்.