Friday, October 29, 2010

என் கேள்விக்கென்ன பதில்?



நாம் நம்முடைய இந்திய கல்வியின்படி சிறப்பாக பதில் சொல்லவே கற்றுதரப்படுகிறோம்.
அதே 40 வருட பழமையான கேள்விகள். பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கிற்து.

என்னை எப்போதும் வாட்டுவது..
ஒரு குழந்தையிடம் ¨நீ வருங்காலத்தில் என்னவாக போகிறாய்?¨ என்ற முட்டாள்தனமான
கேள்வி.
ரேடியோக்களில், டி.வியில், ஏன் நம் வீடுகளிலும் சகஜமாய் இந்த கேள்வி குழந்தைகளிடம்
கேட்கப்படுகிறது. இது ஒரு அர்த்தமற்ற கேள்வி.
அதே கேள்வியை குழந்தை உங்களிடம் திருப்பிகேட்டால்..
¨நீங்க என்னவா  ஆகி இருக்கீங்க அங்கிள்/ஆண்டி? சின்னவயசில் நீங்க சொன்னதை அடைஞ்சுட்டீங்களா?¨ என்று தன் பிஞ்சு மொழியில் கேட்டாலும்..நெஞ்சில் நஞ்சை பாய்ச்சியதுபோல
இருக்கும். காரணம். நமக்கே தெரியும்.
நாம் நம்மை இலக்கை இன்னும் அடையவே இல்லை. நம் இலக்கை இன்னும் தீர்மானிக்கக்கூட இல்லை என்பது.
குழந்தைகள் கலெக்டர்களாவதற்கு பிறக்கவில்லை, டாக்டராகவும் பிறக்கவில்லை, என்ஜினியராகவும்
பிறக்கவில்லை. அவர்கள் வாழப் பிறக்கிறார்கள்.  அவர்கள் நம்மைப்போல் கேள்விகளுக்கு பதில்
சொல்லும் கிளிப்பிள்ளைகள் இல்லை. பிரபஞ்சத்தின் மிச்சங்கள் அவர்கள். அவர்களுக்கு சிறப்பாக
பதில் சொல்ல கற்றுதருவதை விட சிறப்பாக கேள்விகேட்க கற்றுகொடுக்க வேண்டும்.

இனி பிள்ளைகளிடம் நீ என்னவாக போகிறாய் என்று கேட்காதீர்கள்..
அவர்கள் எப்படியும் நீங்கள் சொல்லிகொடுத்ததை தான் சொல்வார்கள்.
அவர்களுக்கு முதலில் வாழ கற்றுகொடுங்கள். கேள்வி கேட்கும் பிள்ளைகளால்தான் உலகம் இந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறதே தவிர..
டேப்ரிக்காடர்களாலோ, கிளிப்பிள்ளைகளாலோ..இந்த உலகுக்கு ஒரு புண்ணியமும் இல்லை.

ஏன் ஆப்பிள் கீழே விழவேண்டும்? என்று ஒரு இந்தியன் யோசிக்கவில்லை.
ஒருவேளை  பூமி சூரியனை சுற்றுகிறதோ? என்று இந்தியன் யோசிக்கவில்லை. தீக்குளித்தானே முத்துகுமார்.. உண்மையில் அவன் ஈழத்துக்காகத்தான் இறந்தானா? என்று
எத்தனை பேர் யோசித்து இருப்போம்..??

3000 ஆண்டுகளாக மண்ணையும், பெண்ணையும் தின்றே வாழ்ந்த சமூகம் நம் சமூகம்.
இல்லை..இல்லை..ஆர்யபட்டருக்கு புவியீர்ப்பு தெரியும், கோள்களை பற்றியும் தெரியும் என்று சொன்னாலும்..
அவைகள் மதக்கலாச்சாரத்தில் மக்கிபோய்விட்டன.

தெரியும் என்று சொல்வதை விட..தெரிவிக்க என்ன செய்யலாம் என்று யோசிப்பவனை தான் உலகம்
தேடிக்கொண்டிருக்கிறது.

இன்று கேள்விகளை சிறப்பாக கேட்க தெரிந்ததால் தான் சந்திராயன் என்கிற இந்திய செயற்கோளை
உலகுக்கு தந்து நம்மால் நெஞ்சை  நிமிர்த்தி நிறக முடிகிறது.

கேட்பவனின் துணிவும், அதற்கான பதிலை  அடைய துடிக்கும் முயற்சியும் இருந்துவிட்டால்..பிரபஞ்சத்தின் கதவுகள்..தானே  திறந்துகொள்ளும்..!!

(பி.கு):  இந்த பதிவு சம்பந்தமாய் எதேனும் கேள்விகள் இருந்தால் என்னை கேட்கலாம்!!

Monday, October 25, 2010

எல்லாருக்குள்ளும் ஒரு கமலஹாசன்!!









"ம்கும்..ஆளை பார்த்ததும் என்ன நடிப்பு நடிக்கிறா /ன்.."
"வந்துட்டா/ன்.. இவ /ன்கிட்ட கமல் ட்யூஷன் போகணும்.."
”ஹையோ.. இப்படி நடிக்கிதே பக்கி.”
”ஆரம்பிச்சுட்டாண்டா/டி சீனை..!!”





இதெல்லாம் மக்களிடையே பொதுவாக ஆக்டிங் போடுபவர்களை
பார்த்ததும் எழும் மைண்ட் வாய்ஸ்.
ஏன்யா இந்த நடிப்பு நடிக்கிறாய்ங்க..?
என்னதான் பிரச்சனை இவங்களுக்குன்னு
ரோசிக்கிறதுக்கு முன்னாடி..
ஏன் நடிக்கிறோம்னு யோசிச்சமா?
லேது..இப்போ யோசிப்போம்..

பொதுவா நடிப்பு என்பது..நாலு அடிப்படை விஷயங்களால் நடக்குது.
1. சுயநலம்.   
2. சுயமரியாதை.
3. பயம்
4. கோபம்

1. சுயநலம்னா..
தனக்காக ஒருத்தரை அன்புகாட்டியோ, கோபப்பட்டோ பணியவெச்சு, அல்லது தானே பணிஞ்சு போய்
வேலைகளை முடித்துகொள்ளுதல். இதற்காக இவங்க போடுற சீன், நடிப்பு எல்லாமே வேலை முடிஞ்சதும் கலைஞ்சிடும்.

2. சுயமரியாதை..
தன்னை யாரும் எதுவும் சொல்லிடக்கூடாது..
தன்னை யாரும் தப்பா நினைக்க கூடாது
தன்னை எல்லாரும் நல்லவன், மேதாவி, அறிவாளி, அனுபவசாலினு நம்பணும்..
தன்னை ஒரு தேவமகன்/தேவமகள் மாதிரி மக்கள் பார்க்கணும்..
இப்படி தன்னை பிறர் ரொம்ப உயர்வா நினைக்கணுனே வாழும் க்ராக்குகள்..ஸாரி..
நண்பர்கள் அருமையா நடிப்பாங்க..
அவர்களை பற்றி உண்மை தெரியும்போது.. டர்ர்ர்ர்னு ஒரு சத்தத்தோட அவங்க முகத்திரை
கிழிஞ்சி..ஒரு கோரமான முகம் தெரியும்..உவ்வே.. இவங்களை கிட்டவே சேர்க்காதீங்க.
ரொம்ப பாவமா இருந்தா மட்டும் மன்னிசுடுங்க.!!

3. பயம்..
மத்தவங்க நம்மை எதுவும் சொல்லிடுவாங்களோ?
அவங்க தப்பா நினைச்சா என்ன பண்றது?
இப்படி தன் அந்தஸ்தும் மரியாதையும் கெட்டுவிடக்கூடாது என்கிற பயம்.
இது முத்தி போவதால் தான் பலவீடுகளில் இன்று வாங்கும் சம்பளம் EMI கட்டவே சரியா போகுது.
இந்த பயத்தில் இருந்து கொஞ்சம் முயன்றாலே வெளியே வந்துடலாம்.

4. கோபம்..
கோபத்துல நிறைய கேட்டகரிங்க.. வேணாமா..சரி சிம்பிளா சொல்றேன்..
கேலியால் வர்ற கோபம், ஏமாற்றத்தால் வர்ற கோபம் ரெண்டுதான் மெயினா
மனசை ரொம்ப பாதிக்கும். ஆனா அதுக்கு உடனே நெகட்டிவா எதாவது பண்ணினா..
உறவுக்கயிறு அந்துக்கும். அதுக்காகவும் நடிக்க வேண்டி இருக்கும். இதுக்கு செம
பொறுமை வேணும். (எல்லாரும் அவங்கவங்க அம்மாகிட்ட இதை கத்துக்கோங்க ;)

ஃபைனலா பார்த்தீங்கன்னா.. நடிப்பு என்பது..எந்த உறவு பாலங்கள் எளிதில் உடைந்துகொள்ளாமல்
இருக்க உதவும் கயிறு மாதிரி. ஆனா என்னைக்கு நீங்க நடிச்சீங்கன்னு தெரிஞ்சாலும்..
டமால் தான்..அப்புறம் அவங்க உங்களை மதிப்பாங்கன்னு எதிர்ப்பார்க்க கூடாது.
அதே போல்.. நடிக்கிறதே தெரியாம நடிக்கவும் நாம நல்லா பழகிக்கணும்.
அப்போ உறவுகளும் நஷ்டமாகாது. எந்த சூழ்நிலையும் கஷ்டமாகாது.

இன்னும் ஒண்ணு சொல்லிக்கிறேன்.. ரொம்ப நெருக்கமானவங்க.. லைக்..அம்மா, அப்பா,
மனைவி, கணவன், நெருங்கிய உண்மையான நண்பர்கள் ,
இவங்ககிட்ட நடிக்காதீங்க.
எவ்ளோ சூப்பரா நடிச்சாலும் மாட்டிப்பீங்க...உண்மையா இருங்க(இவங்ககிட்டயாச்சும்!!)


எப்படியோ..எல்லாரும் நல்லா நடிங்கப்பூ..!! வாழ்த்துக்கள்!! ஹிஹிஹி..!!


Tuesday, October 19, 2010

நீங்க அறிவாளியா ? நல்லவரா?


இந்த உலகமே இரண்டு முக்கியமான அம்சங்களில் இயங்குகிறது.
ஒன்று.. அறிவு. இன்னொன்று அன்பு.

சொல்லபோனால்.. இரண்டுமே எல்லாவகையிலும் ஒன்றுகொன்று எதிரானவை.
ஆனால் இந்த இயற்கையை , மொத்த பிரபஞ்சத்தை எடுத்து பார்த்தால்..
வாய்பிளக்கவைக்கும் அறிவியலும், நெஞ்சை பிழியும் அன்பும் சரிசமமாய் இணைந்திருக்கிறது.

ஏன் வானம் வரை போய்கொண்டு... ஒரு மரத்தை எடுத்துகொள்ளுங்கள்.
அதன் வேர்கள்.. அதன் கிளைகளை விட நீளமானவை.. ஆழமானவையும் கூட.
அதன் நடுமரம். அதாவது தண்டுபகுதி.. அது கடினமானதே என்றாலும்..அதன் வழியாகத்தான்
நீர் புகுந்து செல்கிறது. இது கிளைகளின் பரவி..இலைகளை தளைக்க செய்கிறது.
சூரியகாந்தி பூவை எடுத்துகொள்ளுங்கள். அதன் நடுவில் மகரந்த அடுக்கு.. அது ஒரு
Fibonacci numberக்கு சரியான குறியீடு.

இப்படி மனிதன் தன்னை சுற்றி உள்ள எல்லா விஷயங்களில் அறிவியல் ஒளிந்திருப்பதை
காண்கிறான். அதை கணிதத்திலும், கணினியிலும் கணக்கிட்டு புதிய பல மேம்பாடுகளை
அவன் வாழ்க்கைக்கு ஏற்படுத்தி கொள்கிறான்.

இப்படி, வாழ்க்கையின் எல்லா விஷயங்களிலும் அறிவியலை திணித்து திணித்து..
அதாவது..மூளையை கொண்டு மட்டுமே யோசித்து யோசித்து..இன்று மனிதன்
இதயமில்லாதவன் என்ற பெரும்பேறு பெற்றிருக்கிறான்.

ஒரு மரத்தின் இத்தனை விஷயங்களை கவனித்து கணித்த நாம், அதன்
சலசலப்பில் என்றாவது மனம் மயங்கி நின்று..நாமும் மரமும் ஒன்றாகி நின்றிருப்போமா?

இப்போது அறிவியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் வாழ்வில் நடத்த சம்பவத்தை
சொல்கிறேன் கேளுங்கள்.

ஒருமுறை  அவரை சந்திக்க சில விஞ்ஞானிகள் வந்திருக்கிறார்கள்.
என்ன விஷயம் என்று கேட்டால், புகழ்பெற்ற பீத்தோவனின் சிம்பனிகளை
ஆராய்ந்ததில் சில புதிய ஒலிமாறுபாடுகளை கண்டுபிடித்திருப்பதாகவும்,
அவைகளை ஐன்ஸ்டீனும் ஆராய்ந்து ஒரு ஒப்புகை சான்று வழங்கவேண்டும்
எனக் கேட்க வந்திருந்தனர்.
ஐன்ஸ்டீனுக்கோ வெகு கோபம், ஒழுங்காக ஓடிவிடுங்கள்.
அந்த மாமனிதரின் இசையை, அதன் தெய்வீகத்தை  ரசித்து மகிழ்வதை
விட்டுவிட்டு.. அதை கூறுபோட்டு அசிங்கப்படுத்த பார்க்கிறீர்களா?
கிளம்புங்கள் முதலில்.. என்று அவர்களை விரட்டிவிட்டார்.

 அறிவு.. என்ற ஒன்றை மட்டுமே கொண்டு
எந்த வகையிலும் வாழ்க்கையை நடத்திவிட முடியாது என்று இயற்கைக்கே
தெரிந்ததால்தான் நமக்கு இதயத்தையும் சேர்த்து வைத்து படைத்திருக்கிறது.

அதை சுத்தமாய் மறந்துவிட்டு... அறிவியலை கண்ட உலகில் அன்பை
பறிகொடுத்துவிட்டு நிற்கிறோம்.

இதற்கு ஒரு மாற்று உண்டு.
நீங்கள் உங்களை பிடிக்காதவரோடு பேசவும் பழகவும் வேண்டி உள்ளதா?
3:1 என்கிற அளவில் , 3 பங்கு அறிவு, ஒரு பங்கு அன்போடு இருங்கள்.
உங்கள் குழந்தைகளிடம்... 1:3, அதாவது ஒரு பங்கு அறிவு..மூன்று பங்கு
அன்போடு இருங்கள். இப்படி சரியான அளவுகளில் மூளையையும், இதயத்தையும்,
பயன்படுத்த பழகிகொண்டால், வாழ்வில் நாம் எந்த தடைகளையும்
முறியடித்து வாழலாம்..!!