Friday, August 26, 2011

உனக்குள் ஒரு சப்தம்


அடிப்படையில் மனிதர்கள் இரண்டுவகை

ஒன்று: பிறரின் சப்தங்களுக்காக வாழ்பவர்கள்,

இரண்டு:தன்னுள் எழும் சப்தங்களைகொண்டு வாழ்பவர்கள்.

பிறரின் சப்தங்களுக்காக என்றால், அதாவது, நீங்கள் திறமைசாலி, நீங்கள் பெரிய மேதை, நீங்கள் எங்கள் நிறுவனித்தின் தூண், நிலைத்தாங்கி, இடிதாங்கி..இப்படி பிறரின் புகழ்ச்சிக்கும், பாராட்டுக்கும், பாராட்டு தரும் மயக்கத்திற்குமே ஏங்கி ஏங்கி, தன்னுடைய உழைப்பை வாரி இரைக்கும் நபர்கள், இவர்களால் உலகில், உலகுக்காக சிறப்பாய் வாழமுடியுமே தவிர, தன்னுள் ஆழ்ந்து சென்று தனக்கானதை தேடி செய்ய இயலாது.
இவர்களால் ஒரு நாளும் ஓய்வாய் அமர்தல் முடியாது. காரணம், இவர்கள் இயந்திரமானவர்கள். நான் பழி சொல்லவில்லை. அவர்களை அறியாமல் அவர்களை அவர்களே அப்படி செய்துகொண்டார்கள். I feel sorry for those people. அப்படி மெல்ல மெல்ல தன்னை இயந்திரமாய் மாற்றிகொண்டு, எதோ ஒரு மனிதனின் என்றோ கண்ட கனவை நினைவாக போராடிகொண்டிருக்கிறார்கள். இப்போது நாம் வாழ்க்கை இயந்திரதனமாய்
மாறிவிட்டதாய் புலம்புவதற்கு காரணம் இவர்களை போன்றோர் தான். இவர்களால் தான் வாழ்க்கை ஒரு வெறித்தன்மையும், போட்டித்தனும், போலித்தனமுமாய் மாறி நிற்கிறது. நான் சொல்வதை செய், இல்லையேல் ஓடிவிடு என்பது இவர்கள் கொளகை. இயந்திரத்தனமான, அன்பில்லாத, நிம்மதியில்லாத இவர்களின் தலைமையின் கீழ் 98% சதவிகத உலகம் சிக்கி சின்னப்பட்டுகொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் தீர்வே கிடையாதா? இவர்களிடம் இருந்து உலகை யார் காப்பாற்றுவது என்கிறீர்களா?


இப்போது இரண்டாவது வகை ஆட்கள், அதாவது, தன்னுள் எழும் சப்தங்களுக்காக வாழ்பவர்கள்.
தன்னுள் எழும் சப்தம் என்றதும், உடனே, நம் மனதின் வெற்று கூச்சல்களையே, வெறித்தன கூச்சல்களையே நாம் நம்முடைய சப்தம் என்று நினைத்திகொண்டிருக்கும். இல்லை. இல்லவே இல்லை. அது மனம். இயந்திரத்தனமானவர்கள் உங்களுக்குள் ஏற்படுத்திய நோய் மனம். அது எப்போதும் இயந்திரத்தனமானவர்களுக்கு உதவுமே தவிர உங்களுக்கு உதவாது. நீங்கள் அந்த மனமும் கிடையாது. நீங்கள் ஆன்மா. பெயரில்லா, மதமில்லா, சாதியில்லா ஒரு பிரபஞ்ச குழந்தை. உங்கள் தாய் பிரபஞ்சம், தந்தை வானம். நீங்கள் யாரென்று தெரிந்துகொள்ள முயல்வதே உங்கள் சப்தங்களை நீங்கள் கேட்டு உணரும் கணம். உங்கள் ஆன்மாவின் சப்தம், உங்கள் இதயத்தின் மூலமே கேட்கும். ஆம். உங்களில் இதயம், ஆன்மாவின் உதடுகள். இதயத்தை கவனியுங்கள்.
உங்களை திருப்திபடுத்த இதயத்தால் தான் முடியும். அதனால்தான் காதலின் சின்னம் இதயம். அன்பின் சின்னம் இதயம். இதயத்தின் படி வாழ மாபெரும் தைரியம் வேண்டும். அதுவும் இதயத்திலேயே இருக்கிறது. அப்படி வாழ்ந்தவர்கள் தான் பல்வேறு கண்டுபிடிப்புகளை உலகிற்கு அளித்து சென்றனர். அவர்களாலே உலகம் உய்கிறது.
அவர்களே, அந்த பிரபஞ்ச குழந்தைகளே, புத்தனாய், இயேசுவாய், கிருஷ்ணராய், ஐன்ஸ்டீனாய், ரமணராய், ஷெல்டனாய், ஷேக்ஸ்பியராய், பாரதியாய், பட்டினத்தாராய், விவேகானந்தராய், இப்படி நம்மால் பைத்தியமாய் பார்க்கப்பட்ட பலராய் நம்மிடையே வந்து, நம் இயந்திரத்தனத்திலிருந்து இதயத்தில் வாழ நமக்கு வழி செய்தவர்கள். இன்னும் காலமிருக்கிறது. நீங்கள் இதயம் திறந்து நிறைவாய் வாழப்போகிறீர்களா? இல்லை  ஆட்டுகூட்டத்தில் ஆடாய், வாழாத வாழ்க்கைக்காக அழுதபடி இறக்கப்போகிறீர்களா? இல்லை சிங்கமாய், கம்பீரமாய், தனித்தன்மையோடு வாழ்ந்தோம் என்கிற நிறைவோடு புன்னகையோடு வாழ்வை முடிக்கப்போகிறீர்களா? முடிவு உங்கள் கையில்..

நன்றி..!!

Saturday, August 6, 2011

எப்போ ம்மா வருவீங்க?

நேரம்: 7.08 மணி

இதோ.. வேகமாய்.இன்னும் வேகமாய்.. அடுத்த கணமே என் தங்கத்தை அடைந்துவிடக்கூடாதா?
இன்னும் எதற்கு அவளுக்கும் எனக்கும் 7 நிமிட இடைவெளி.. அன்பில் காலம் கரைவதில்லை..கூடுகிறது..
கணமொன்று கடக்கையில் யுகம்கடந்த வலி..ச்சே..மின்னல் வேகத்தில் வாகனங்கள் செல்லாதா?
இல்லை இந்த ஆட்டோகாரன் மெதுவாக செல்கிறானா? வேகமாகத்தான் திருகுகிறான்.. இத்தனை பேர் சாலையில்
என்ன செய்கிறார்கள்.. ச்சே.. அசமஞ்சங்கள்..நகரவே நாள் செய்கின்றன. எருமைகள்...
சீக்கிரம் போங்க ..ப்ளீஸ் .. மீண்டும் ஆட்டோகாரனுக்கு கெஞ்சலாய் உத்தரவிட்டேன்.

போறேன்மா..போறேன்..ன்னு கொஞ்சம் உறுமலாய் சொல்லிவைத்தான்.

அட..சொல்ல மறந்துவிட்டேனே..நான் அஞ்சலி.. என் வீட்டிற்குதான் இவ்வளவு வேகமாய் போய்கிட்டு இருக்கேன்..
காரணம்.. என் மகள் ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கி இருக்கா..!! சந்தோஷமாய் இருக்கா? எனக்கும்தான்..ஆனால்..

நேரம் 6.45 மணி
ஹையா..ஹையா..யய்யய்..ஹையா.. !! கூச்சலுடன் வீட்டிற்குள் ஓடிவந்தாள் இந்திரா.

வந்துடுச்சு பிஸாஸு.. இன்னைக்கு என்ன கிழிச்சிதோ? புகைந்தபடி வெளிவந்தாள் கற்பகம் பாட்டி.

குழந்தையை ஏன் திட்ற..எதுவா இருந்தாலும் என்னை நேரா சொல்லிட்டு போ.. மாடிப்படியிலிருந்து கூவினாள் லட்சுமி.

பாட்டி பாட்டி.. இன்னைக்கு நான் ஸ்கூல்ல..

வந்தது லேட்டு.. இதுல கதைவேற அளக்கறியா.. ஃபங்ஷன் முடிச்சமா..புள்ளைய அனுப்பினமான்னு இல்ல..
இவ்வளவு நேரமா பண்ணுவனுங்க.. என்ன ஸ்கூலோ..?!

உங்கம்மா இருக்காளே.. அவளை அப்படியே உரிச்சி வெச்சிருக்க.. அதே துள்ளல், அதே திமிரு.. அதே அடம்..

பொக்கென்று போனது இந்திராவிற்கு.

அப்பா எங்க பாட்டி..? என்று சோகமாய் கேட்டாள்.

அவன் உள்ளதான் இருக்கான்.. ஏன் அவனை வேறு வம்பிழுக்கணுமா நீ.?
என்னை படுத்தும் இம்சை போதாதா? என்றவண்ணம் அவளுக்கு கவுன் மாட்டிவிட்டாள்.

பேக்கை தன்னோடு தூக்கிகொண்டு..அறைக்குள் நுழைந்தாள்.
சர்ரென்று ஒரு பேனா அவள் கன்னம் உரசி வெளியே விழுந்தது.

எங்க.ஒரு பேனா கூட இல்லை.. ச்சை..வீடா இது.. ஒரு நம்பர் நோட் பண்ண பேனா கூட இல்லை...
இருய்யா இருய்யா..இரு லேப்-ல ஸ்டோர் பண்ணிக்கிறேன்.. |
என்கிட்ட மட்டும் எல்லாம் சொல்லு..என்று செல்லில் எவனையோ எகிறிகொண்டிருந்தான் பாலு.

அப்..பாஆஆஆ..

திரும்பி பார்த்தான் பாலு. செல் தவறி கீழே விழுந்தது.. இணைப்பு துண்டிக்கப்பட்டது.. செல்போன் அணைந்தது.

கோபம் குழந்தைமேல் பாய்ந்தது.

ஏய்..எந்த நேரத்துல கூப்பிடறதுன்னு தெரியாது.. ச்சை.. பிஸாஸே..போ..போ வெளியே என்று அலறியபடி
செல்போனை பொறுக்க போனான்.

..குழந்தை மிரண்டே போனது..6 வயது பெண் என்னதான் செய்வாள்.. மலங்க மலங்க விழித்தாள்..
கலங்கி போனாள்.. துக்கம் தொண்டைக்குள் தள்ள..

மெதுவாய் நடந்தாள்.. லேண்ட் லைனில் அம்மாவின் ஆபிஸ்க்கு அழைத்தாள்..

அலோ..எம்.கே. அஸோஸியேட்ஸ்..

அம்மா இருக்காங்களா? அம்மாட்ட பேசணும்..

எந்த அம்மா.. இங்க நிறைய பேர் இருக்காங்களே குழந்த.. பேர் சொல்லு மா..

அம்மா பேர் அஞ்சலி.. என்றாள்.

அஞ்சலி மேடம்.. உங்களுக்கு போன்..

ஹல்லோ..

ம்மா.. ம்மா..

சொல்லும்மா..

மா..குரல் உடைந்தது.. அழ துவங்கினாள்..

மா..ஃப்ர்ஸ்ட் ப்ரைஸ் மா...கதறி அழுதாள்..

அழுகையில் நடுவே..

எப்போ ம்மா வருவீங்க..?

அழுகை தொடர்ந்தது

தொடர்பு துண்டிக்கப்பட்டது.

Wednesday, August 3, 2011

தாழ்வு மனப்பான்மையிலிருந்து வாழ்வு மனப்பான்மைக்கு- 3

 

தவறு செய்ய கத்துக்கோங்க:

தவறுகள்- மனிதனின் பாடசாலை. இயற்கையின் ஆய்வுக்கூடம், நம்மை கூர்செய்யும் காயங்கள்..

தவறி தத்தளித்து தடுமாறி, அடிபட்டு, சிராய்ப்புகளோடு, சின்ன சுளுக்குகளோடு இப்படி நம் இன்றைய நிலையை எட்ட நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்த்திலும் மேற்சொன்னவற்றை அனுபவித்திருப்போம்.

ஏன் தவறு செய்ய கத்துக்கணும்? தவறு என்பது ஒரு ட்ரையல் தான். ஒரு விஷயம் சரியாக வருமா வராதா என்கிற சந்தேகம்
ஆனாலும் முயற்சி செய்து பார்த்துவிடுகிற தைரியம். இவை இரண்டும் சேரும் போது 50% வெற்றி 50% தோல்வி என்றாகிறது. இப்படி 50% வெற்றிகளில் வேலை எளிதாகிறது. 50% தோல்விகளில் நமக்கு மேலும் சில பாடங்களும் நம் அறிவிற்கு இன்னும் சில பாடங்களும் கற்பிக்கப்படுகிறது.

 

அப்போ எப்பவும் அவமானப்பட்டுதான் கத்துக்க முடியுமா? ஆமாம்.. தவறுகளை வரவேற்காத மனமே அவமானத்தில் கூனிகுறுகுகிறது. அப்படியில்லாமல் “இப்போது நான் செய்யும் இச்செயல் தவறாய் போனாலும் அதன்மூலம் நான் கற்றுகொள்ள தயார்” என்னும் மனநிலையோடு வேலைகளை துவங்கினால்…அந்த வேலை செல்லாது போனாலும் அதன் பாடம் நமக்கு மனதில் வாழ்நாள் முழுதும் தங்கும்.

என்னடா இது இப்படி சொல்றானேன்னு பாக்காதீங்க.. எல்லா அவமானங்களையும் படிக்கட்டுகளாக, ஏணிப்படிகளாக பாருங்கள். அவமானங்கள் தாங்கும் மனமே பல உவமானங்கள் தேடிப்பெரும். எனவே தைரியமா தவறு பண்ணுங்க.. கத்துக்கோங்க.. மெச்சூராகுங்க..!!

 

வாழ்த்துக்கள்.. Happy Mistakes..!!