Monday, October 10, 2011

தாழ்வு மனப்பான்மையிலிருந்து வாழ்வு மனப்பான்மைக்கு - 4


இன்று நான் பார்க்கும் இளைஞர்கள், நடுத்தர வயதினர், முதியவர்கள் அனைவரிடமும் ஒரு ஒற்றுமையை என்னால் கவனிக்க முடிகிறது. அதுதான் ”பிறரோடு தன்னை ஒப்பிட்டு வருந்துதல்”.

அவரை போல் தான் இல்லையே.. அந்த நடிகனைப்போல் எனக்கு கட்டுடல் இல்லையே..அந்த நடிகைப்போல் நான் சிகப்பாக, ஒல்லியாக இல்லையே.. அந்த எதிர்வீட்டுக்காரரைப் போல் தன்னால் ஒரு கார் வாங்க முடியவில்லையே..அந்த பெண்மணிபோல் உயர்ந்த பதவிகளில் இருந்துகொண்டு பிறரை ஆள நமக்கொரு வாய்ப்பில்லையே.. என் பிள்ளைகள் அவர்களைப்போல் அறிவுஜீவிகளாக இல்லையே..இப்படி எதற்கெடுத்தாலும் பிறரோடு நம்மை ஒப்புநோக்கும் பழக்கம் நம்மிடம் வந்துவிட்டது.

எப்படி வந்தது?

பள்ளியில் நீங்கள் படிக்கும்போது இந்த Comparision உங்களுக்கு போதிக்கப்படுகிறது. அதாவது நீங்கள் உங்களைவிட சிறப்பாக படிக்கும் மாணவரோடு எப்போதும் உங்களை ஒப்பிட்டுப்பார்த்துகொள்ள முதலில் உங்களுக்கு சொல்லித்தரப்படுகிறது. இப்படி செய்வதால், உங்களை நீங்களே காயப்படுத்திகொண்டு, அதாவது மாடு தன்னைத்தானே சவுக்கால் அடித்துகொண்டு வேகமாய் ஓடுவதுபோல்.. நீங்கள் உங்களை காயப்படுத்திகொண்டு மேலும் நன்றாய் படிக்க முயற்சி செய்கிறீர்கள். இப்படி கொஞ்சம் மேலே வந்ததும்..இன்னும் மேலே இருப்பவனோடு கம்பேர் செய்கிறீர்கள். பத்தாவது, பன்னிரெண்டாவது  வரும்போது.. காயங்களே உங்கள் உடம்பாய், கம்பேர் செய்வதொன்றே உங்கள் முழுநேர வேலையாகிவிடுகிறது. இப்படி கொஞ்சம் கொஞ்சமாய் உங்கள் மனம் கம்பேரிங் இயந்திரமாய் மாறிவிடுகிறது. உங்களை விட மெத்த படிப்பவன் 4 நண்பர்கள் வைத்திருந்தால், நீங்கள் 6 நண்பர்களை சேர்த்துகொள்வீர்கள். அவனை முந்தவே உங்கள் முழுநேரப்பொழுதும் செலவழிந்திருக்கும். இப்படி.. முப்பொழுதும் முழுமூச்சாய் போட்டி மனப்பான்மையில் வாழ நீங்கள் பழக்கப்பட்டுவிட்டீர்கள்.

இப்போது கல்லூரி வந்ததும், காதல் மலர்கிறது. அவன் அவளை காதலிக்கிறானே..நம்மை ஒருத்தியும் பார்ப்பதில்லையே..இவளுக்கு இவ்வளவு ஆண் நண்பர்கள் இருக்கிறார்களே..நம்மை ஒருவன்க்கூட பார்ப்பதில்லையே.. அவள் அவ்வளவு அழகாய் இருக்கிறாளே நாமில்லையே.. என்று..மீண்டும் மீண்டும் கம்பேரிங் குழியில் விழுகிறோம். தாழ்வு மனப்பான்மையில் தவிக்கிறோம்.

சரி.. பிறகு திருமணம்.. அங்கேயும் நகை, சீர்செய்வது, என்று மீண்டும் ஒரு கூட்டம் நம்மை கம்பேர் செய்து கேலி செய்கிறது. அல்லது மெச்சுகிறது. அடுத்து குழந்தை பேறு. அங்கேயும், அவள் உடனே பெற்றுவிட்டாள், நீ ஏன் இன்னும் இழுத்தடிக்கிறாய் என்று கம்பேர் செய்கிறது. அடுத்து நம் பிள்ளை படிப்பு முதல், நம் செல்வ செழிப்புகள் வரை அந்த கூட்டம் நம்மையும், நாம் அந்த கூட்டத்தையும் பார்த்து கம்பேர் செய்தபடியே வாழ்க்கையை வீணடிக்கிறோம்.

ஒருநாளாவது, அந்த இளைஞன் 20லேயே இறந்துவிட்டாரே.. நாம் இன்னும் இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று யாரும் கம்பேர் செய்ததில்லை. ஏன்? அதையும் முயன்று பாருங்களேன்.. நாட்டில் ஜனத்தொகையாவது குறையும்.

சரி இதற்கு தீர்வு என்ன?

முதலில் கம்பேரிஸனால் பொருள் சேருமே தவிர நிம்மதி சேராது என்பதை தெளிவாய் புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்காக நீங்கள் உழைத்து சேர்த்ததுதான் பொருளே தவிர, பிறரை பார்த்து, நீங்கள் சேர்த்தது உங்கள் பொருள் இல்லை அது அவர்களின் பொருள்.. காரணம் அவர்கள்தானே உங்களை வாங்க ஊக்கப்படுத்தியது. எனவே மனநிம்மதி என்பது பொருள் சேர்ப்பதில் இல்லை..நல்ல எண்ணங்களை, நல்ல சுபாவங்களை, நல்ல மனிதர்களை சேர்ப்பதில்தான் இருக்கிறது...இதை புரிந்துகொண்டாலே..இதை வாழ்வில் கொண்டுவர துவங்கினாலே போதும்..வாழ்வு நிறைவு பெறும்..!!