Monday, April 23, 2012

பெண்களும் அழகியலும்..என் வருத்தமும்





..க்ரீம்கள், லோஷன்கள், ஸன்ஸ்க்ரீன்கள், பீல்-ஆஃப்கள், சோப்புகள் இப்படி அத்தனையும் விற்கிறது இந்த வியாபார உலகம்.
அதை கண்ணை மூடிகொண்டு வாங்கி பூசிகொள்கிறது இந்த பெண்களின் உலகம்(கொஞ்ச காலமாய் ஆண்களின் உலகமும்)

. ஃபேர் அண்ட் லவ்லியின் ஏழே நாளின் சிகப்பழகு பிரச்சாரம், என் வீட்டில் இருபது வருடமாய் நிரூபிக்கமுடியாமல்
மீண்டும் மீண்டும் முயற்சி செய்யப்படும் ஒரு அறிவியல் ஆய்வு.

நான் ஒரு நாள் என் அம்மாவிடம் சொன்னேன் “மேக்கப்பில், மேற்புறத்தில் அழகாய் இருப்பது அழகே இல்லை. உள்ளிருந்து ஒரு தெளிவு உன் கண்களிலும்
முகத்திலும் ஒளிரும்பொழுது வருவதே அழகு” என்று சொல்லி புரியவைத்தேன். அன்றே அவர் அந்த பேர் அண்ட் லவ்லியை தூக்கி எறிந்துவிட்டார்.

நான் ஒன்றும் தலை சீவாதே, சுத்தமாய் இருக்காதே என்று சொல்லவில்லை. கண்டமேனிக்கு எதையாவது தடவி, பிறரைவிட நான் அழகு என்று
காட்டிகொள்ள போராடாதே என்று சொல்கிறேன். யாராவது “உன்னைவிட நான் பெரிய முட்டாள் தெரியுமா? பார் என் முட்டாள்தனத்தை” என்று பரைசாற்றுகொள்வார்களா?

இப்பொழுதைய பெண்களை கவனிக்கையில் ஒன்று நன்றாக தெரிகிறது.
தன்னை எவ்வளவு வருத்திகொள்ளவும் அவர்கள் தயார், ஆனால் யாராவது ஒருவராவது தன் அழகை ரசித்துவிட வேண்டும் என்கிற மனப்பாங்கிற்கு வந்துவிட்டனர் போல.
இருக்கமான சுடிதார்களும், ஜீன்ஸும், காலை, உடலை சுற்றி, இறுக்கிகொண்டிருக்கும் ஆடைகளும், ”அய்யோ கடவுளே, ஏன் இப்படி இருக்கிறார்கள்” என்று என்னை மனதிற்குள்
அலறவைக்கிறது. தன்னை சவுக்கால் அடித்துகொண்டு பணம் கேட்பார்களே சிலர், அவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? இதுவும் ஒருவகை குரூரம் தானே. அவன் சாட்டையால் அடித்துகொள்கிறான், இவள் ஆடையால் இறுக்கிகொள்கிறாள். This is Masochism.

வயதுக்கேற்ப ஆடைகள் அணியலாம் என்பது என் கருத்து. 30 வயதை கடந்தவர்கள், அதற்கேற்ற ஆடைகளை அணிவதை விடுத்து, 20 வயது பெண்களைப்போல் சுடிதாருக்குள் சிறைப்பட்டு சித்திரவதைப்படுவது எந்த விதத்தில் புத்திசாலித்தனம் என்று எனக்கு புரியவில்லை.

அன்றொரு நாள் அப்படித்தான், ஒரு முகூர்த்தத்திற்கு செல்ல வேண்டி இருந்தது, வேர்க்க விருவிருக்க பட்டு புடவை அணிந்து வந்தார், பார்க்கவே பாவமாக இருந்தது.
வெயிலில் செல்லப்போகிறோம், ஒரு நீட்டான காட்டன் புடவை அணியலாமே, அதுவுமில்லாமல், அங்கே கும்பலாக இருக்கும், அங்கே இன்னும் வியர்க்குமே என்றேன்.
நான் ஒருத்தி மட்டும் அப்படி போவதா? என்று வாதத்திற்கு வந்தாரே தவிர, என்பக்க நியாத்தை கேட்கவில்லை. சரியென்று விட்டுவிட்டேன்.

ஒரு தெளிந்த மனிதன் தன்னை நிம்மதியாக வைத்திருப்பவைகளையே தேர்ந்தெடுப்பான் என்பார்கள், தெளிவானவர்கள் என்று ஆண்களால் நினைக்கப்பட்டுகொண்டிருக்கும் பெண்கள், இப்படி மிகச்சிரிய விஷயங்களில் கூட தெளிவாய், நிம்மதியாய் இல்லாது இருப்பது வருத்தமளிக்கிறது.

பி.கு: மொத்த பெண்ணினமே இப்படி என்று சொல்லவரவில்லை,என் கண்ணுக்கு தெரிந்த மனிதர்களை, பெண்களை கண்டதில் எழுத தோன்றியது. எழுதுவிட்டேன்..!!