Tuesday, November 3, 2009

நீயெல்லாம் ஒரு நல்ல நண்பனா? -Are u a good Friend?

உங்கள் நண்பருக்கு..நீங்கள் நல்ல நண்பரா?!

உங்கள் நட்பை பலமாக்க சில டிப்ஸ் இதோ...


http://s165.photobucket.com/albums/u73/cyarena/comments/friend-is/images/friendIs952.jpg


1.உங்கள் நண்பருக்கு என்ன கொடுக்க முடியும் என்று பாருங்கள், என்ன பெறலாம் என்பதை விடுங்கள்.
“உங்கள் சுயமகிழ்ச்சிக்காக நண்பர்களை தேடுகிறீர்கள்
என்றால் நிச்சயம் நீங்கள் நல்ல நண்பராக இருக்க
முடியாது. அது முழு சுயநலமே தவிர வேறில்லை.
கொடுத்து பழகுங்கள்.பெறுவதற்கான தகுதி
கொடுக்கும் போதுதான் வருகிறது”

2. ஊக்கப்படுத்துங்கள் உங்கள் நண்பரை..!!

“நீங்கள் நிஜ நண்பராய் இருக்க வேண்டுமானால் எப்போதும்
உங்கள் நண்பர் உங்களிடம் இருந்து பாஸிட்டிவ் எண்ணங்களையே
பெற வேண்டும்.எப்போதும் உற்சாகமாக, துடிப்புடன் நல்லமுறையில்
அவர்களை கையாளுங்கள்.அவர்களின் லட்சியங்களை நோக்கி
அவர்களை தூண்டுவதே நட்பின் உண்மையான அழகு”.

3.மன்னிக்க பழகுங்கள்..!!

”சின்ன வார்த்தைதான்..அது பல அர்த்தம் கற்பிக்கப்பட்டது.
இன்று அவரும் நானும் எங்கோ பிரிந்துவிட்டோம்..இந்த
பிரிவுக்கு காரணம் என்ன? மன்னிக்காத குணம் தான்.
எனக்கு ஒரு பழக்கம் உண்டு. என்னை புண்படுத்தும்படி பேசியபோதும்
நண்பரை குஷிப்படுத்தும்படி எதாவது பேசிவிடுவேன்.
அவரும் சிரித்தபடி மன்னிப்பை கேட்டுவிட்டு மீண்டும் சகஜமாகி
விடுவார். இதை பின்பற்றுவது உங்கள் விருப்பம்.”
ஆனால் முக்கியமான விஷயம்:
மன்னிக்கும் குணம். அது மனதிற்கு நல்லது.
அது உங்கள் நண்பருக்கும் நல்லது, உங்களுக்கும் நல்லது.

4. தவறுகளை குத்திகாட்டாதீர்கள்,சுட்டிகாட்டுங்கள்..!!

”சிலர் இருக்கிறார்கள், இவன் நம் நண்பர்தானே என்ன சொல்லிவிட போகிறார்
என்று நம்மை பலவகையில் மன்னிப்பதுபோல் மன்னித்துவிட்டு,குத்திகாட்டுவார்கள்.
அந்த வலி என்னவென்று நமக்கே தெரியும். ஆதிக்க மனப்பான்மையின்
வெளிப்பாடு குத்திகாட்டுதல். ஒரு குருவை போல நீ இந்த இடத்தில், இந்த வகையில்
சரியாக இல்லை. இது உன்னை பாதிக்க கூடும் என்று அன்பாய் எடுத்து சொன்னால்..
ஆஹா..அதுதான் உங்கள் நட்பை மிகவும் உயர்த்தும்.”

5.சொன்னதை செய்யுங்கள்..!!

“நீங்கள் அவரை சந்திப்பதாக சொன்னால் சரியான நேரத்தில் சென்றுவிடுங்கள்.
காதலுக்கு வேண்டுமானால் காத்திருப்பு அழகானதாய் இருக்கும். ஆனால்
நட்புக்கு ”டைமிங் முக்கியம் அமைச்சரே..!!”.
எனவே நண்பர்களை காக்க வைக்க வேண்டாம்.”

6. நட்புக்கேது கட்டுபாடு..!!

”உண்மையான நண்பர்களாய் நீங்கள் இருக்க விரும்பினால் ஒரு
விஷயத்தை மனதில் வைத்துகொள்ளுங்கள். அது நீங்கள் அவருக்கு
நண்பரே தவிர முதலாளி அல்ல. அவரை கட்டுபாட்டுக்குள் வைக்க
முயற்சிக்கும் போது நட்பு அடிப்பட்டு விடுகிறது. எனவே அவரை அவராய்
இருக்கவிட்டு ரசிப்பதே அழகு.”

7. நல்லதுக்கும், கெட்டதுக்கும் உடனிருப்பதே நட்பு..!!

“நல்ல விஷயத்திற்கு போறமோ இல்லையோ..கெட்டதுக்கு போய்டணும், என்கிற பழமொழி
இங்கே செல்லாது. அவர்களின் மகிழ்ச்சியில் பங்கெடுக்கும்போதுதான் நட்பிற்கான மரியாதை
அதிகரிக்கிறது.அதே போல் கெட்டது நடந்தால் முதலில் நீங்கள் தான் போய் நிற்கவேண்டும்.
இது கட்டாயம் அல்ல...கடமையும் அல்ல..அதுதான் அன்பு. அதுதான் நட்பின் கற்பு.

8. அவர் அவராகவே இருக்கட்டும்..!!

“நீங்கள் யார் அவரை மாற்ற..?? அவரை முன்னேற்ற வேண்டுமானால் நீங்கள் ஆனதை
செய்யலாம். ஆனால் அவரின் தனித்துவத்தில் நீங்கள் குறிக்கிடுவது அனுமதிக்க முடியாதது.
அதாவது அவர் பர்மிஷனோட கதவை தட்டிட்டு தான் அவர் அறைக்கு போகனும்..அது டீஸன்ஸி.
என் நண்பர்தானே என்ன சொல்ல போறார்னு நீங்க பாட்டுக்கு போன..நட்பின் இலக்கணம் கெட்டுவிடும்..

9. ஓட்டவாயா இருக்காதீங்கப்பு..!!

“நெருங்கிய நண்பர்களின் ரகசியங்கள் உங்களுக்கு தெரிந்திருக்கிறதா? முடிந்தால் அதை ஒரு பேப்பரில் எழுது
பசிபிக் கடலின் ஆழத்தில் போட்டுவிடுங்கள். அல்லது மனதிலேயே புதைத்துவிடுங்கள். தங்கள் நண்பரின் முழு
நம்பிக்கையை பெற்றதால்தான் அவர் உங்களிடம் சொல்கிறார். அதை வெளியே சொல்வது மட்டுமில்லை..அதை அவரிடம்
மீண்டும் அவர் விருப்பமில்லாமல் விவாதிப்பது கூட நட்புக்கு ஏற்படுத்தும் களங்கம் தான். அது ஒரு மனிதத் தன்மையற்ற செயலும்கூட.

10. பேச்சு பேச்சாதான் இருக்கணும்..!!

எப்போது விவாதம் என்று வந்துவிட்டதோ அப்போதுதான் நட்புக்கு சோதனை வருகிறது. யார் புத்திசாலி
என்பதை காட்ட விவாதம் செய்தால்..நட்பு முறிய அதிக வாய்ப்புள்ளது. அதுவே இருவரும் ஒருவரை ஒருவர்
சிந்திக்க தூண்டுவதற்கான அன்பான விவாதமாய் இருந்தால் அதுபோல சிறந்த பொழுது வேறில்லை.
எனவே எப்போதும் ஈகோ அரக்கன் உங்கள் மனதை ஆக்கிரமிக்காமல் பார்த்துகொள்ளுங்கள்..முக்கியமாக விவாதங்களில்போது..!

என்ன நண்பர்களே.. படிச்சாச்சா? இனிமேலாவது பாத்து பக்குவமா நடந்துக்கோங்க..!!

விழும் அடியிலிருந்து கொஞ்சமாச்சும் தப்பிக்கலாம்..!!

Sunday, November 1, 2009

ஒரு புலியின் முடிவு..!!

சில வலைப்பக்கங்களை உலாவிக்கொண்டிருந்த போது இந்த விஷயம் கிடைத்தது.

மென்மையான மனம் கொண்டவர்கள் மேற்கொண்டு தயவுசெய்து மேலும் தொடர வேண்டாம்..!



http://www.tamilvanan.com/content/wp-content/uploads/2008/10/ltte-leader-prabhakaran.jpg


யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத, நெஞ்சையுருக்கும் உண்மைச் சம்பவமொன்றுதான் இது.

விடுதலைப்புலிகளின் கொள்கைகள் பற்றி விமர்சனங்களும் சர்ச்சைகளும் ஆச்சரியங்களும் உண்டு. எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற கொள்கையை இயக்கம் தொடங்கப்பட்ட காலம் முதலே மிக இறுக்கமாகக் கடைப்பிடித்து வருபவர்கள் அவர்கள். ஒவ்வொரு போராளியின் கழுத்திலும் சயனைட் வில்லைகள் இருக்கும். இச்சம்பவமும் எதிரியிடம் பிடிபடும் சந்தர்ப்பமொன்றின்போது நடந்ததுதான்.
1997 ஆனி மாதம் மட்டக்களப்பிலிருந்து வன்னி நோக்கி இருபடகுகளில் சில போராளிகள் வருகிறார்கள். இரவுப்பயணம். கடும் சண்டைக்குரிய ஆயத்தங்களேதுமற்ற சாதாரண பயணம். எப்படியோ திருகோணமலையை நெருங்கியபோது எதிரியின் விசைப்படகின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். படகு சேதமடைகிறது. கடலிற்குதித்து நீந்தத் தொடங்குகின்றனர். எல்லோரும் பிரிந்துவிட்டனர். அதில் ஒருவன் தான் பாலன். கடற்கரும்புலி அணியைச் சேர்ந்தவன் தான் பாலன்.
இரவிரவாக நீண்டதூரம் நீந்தி "இறக்க கண்டி" எனுமிடத்திற் கரைசேர்கிறான் பாலன். விடிந்துவிட்டது. கரையில் சோர்வினால் மயங்கிப்போன நிலையில் சிலரால் காட்டிக்கொடுக்கப்பட்டு இராணுவத்தாற் கைதாகிறான்.
இராணுவ முகாமில் கண்விழித்த பாலனுக்கு அப்போதுதான் தாம் கைதுசெய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. கழுத்தில் குப்பியில்லை.
இனி சித்திரவதை செய்யப்படப்போவது உறுதி. அதில் இரகசியங்கள் காப்பாற்றப்பட வேண்டுமே. அதுவும் பாலன் கடற்கரும்புலி அணியாதலால் நிறைய விசயங்கள் தெரிந்திருந்தான். தன்னை மாய்த்துக்கொள்ள ஏதும் கிடைக்குமா என்று முயன்றான். கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் குப்புறக் கிடத்தப்பட்டிருந்தான். இன்னும் சிறிது நேரத்தில் ‘விசாரணை’ தொடங்கப் போகிறது. எதுவும் செய்ய முடியாத நிலை. அந்த நேரத்தில் தான் அசாதாரணமான முடிவையெடுத்தான். தன் நாக்கை வெளித்தள்ளி பற்களால் இறுக கடித்தபடி தலையை உயர்த்தி தன் நாடியை ஓங்கித் தரையில் அடித்தான். நாக்குத் துண்டானது. சித்திரவதையின் போது தன்னால் உண்மைகள் வெளிவரக்கூடாதென்பதற்காகத் தன் நாக்கைத் தானே துண்டித்தான்.
மீண்டும் மயங்கிய அவன் கண்விழித்தபோது இராணுவ மருத்துவமனையிற் கிடத்தப்பட்டிருந்தான். தனக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை அறிந்த பாலன் அடுத்த கட்டத்தை யோசித்தான். எப்படியும் தன்னை மாய்த்துக்கொள்ள வேண்டுமென்பதிலேயே குறியாயிருந்தான். ஏனெனில் தன்னிடமிருந்து போகப்போகும் விவரங்கள் ஏற்படுத்தப்போகும் விளைவுகள் பயங்கரமானவையென்பதை நன்கு அறிந்திருந்தான். முயற்சித்து முயற்சித்து இறுதியில் அந்த முடிவையெடுத்தான். நினைத்தும் பார்க்க முடியாதது அது. தன் தலையை அந்த இரும்புக்கட்டிலில் மோதி மோதி மண்டையுடைந்து இறந்துபோனான்.
ஒரு மோதலுக்குப்பின்னும் சாகும்வரை தொடர்ந்து தன் தலையைக் கட்டிலின்மேல் மோதுமளவுக்கு அவனுக்குத் துணிவும் வைராக்கியமும் இருந்தது, ஒரு துளி நீர் கூட வாயில் வைக்காமல் 12 நாட்கள் இருந்து அணுவணுவாகச் தன்னைத்தானே சாகடித்த திலீபனைப் போல. (பாலனது இயற்பெயர்கூட திலீபன் தான்.).

எப்போதும் மரணம் நிகழ்ந்தவண்ணமே இருக்கிறது..ஆனால் சிலரது மரணம் மட்டுமே நினைவுகளாக வாழ்கிறது..!!

ஒரு சோம்பல் முறிப்பும்..!! சில ஜென் கதைகளும்!!

நான் புதுமையானவன்

புதுசா தலைப்பு(ஹெட்டர்) மாத்தியாச்சு..!!
கீழ பஞ்ச் டயலாக் கூட மாத்தியாச்சே!!
ம்ம்.. அப்புறம்..என்னை தெரியுதா.. ரொம்ப நாளா சரியா பதிவு போடும் மனநிலையில் இல்லாமல்..அல்லாடி தள்ளாடி..மீண்டும் களத்துல ஜம்முனு குதிச்சாச்சு..

சரி..இன்னிக்கு என்ன பதிவலாம்னு யோசிச்ச போது..!!!!!!!
இப்படி பல Exclamatoryயை மனசுக்குள்ள கொண்டுவரும் ஜென் கதைகள் பல்பாய் எறிஞ்சுது.

நீ செய்ய வேண்டாம் நீ செய்தால் போதும்,
நீ வாழ நான் சாகவேண்டி இருக்கும்..

இப்படி பல குழப்பமான பஞ்ச் டயலாக் இருக்கும் பல ஜென் கதைகளை படிச்சு இருக்கேன்.. என்றாலும்..அதில் இருக்கும் அதீத சொல்லாடலும், தத்துவங்களும் என்னை ரொம்ப கவர்ந்தன.

அதில் குறிப்பிட்ட சில ஜென் கதைகளை இங்க தரேன்..படிச்சுட்டு சொ(கொ)ல்லுங்க..!!

எங்கிருந்து வந்தது..?
ஒருவன் ஒரு ஜென் துறவியைக் காண வந்தான். அவரிடம், "இவ்வுலகில் இப்போது புத்தர் இருக்கிறாரா? இல்லையே? எதுவுமே இல்லை என்பதில் தான் இருக்கிறது. அனைத்துமே வெற்றிடம் தான். யாரும் எதுவும் கொடுப்பதில்லை. எதுவும் பெறுவதில்லை." என்றான்.

உடனே அந்த துறவி அவனை தன்னிடமிருந்த ஒரு குச்சியால் ஒரு அடி அடித்தார்.

அவனுக்குக் கோபம் வந்து விட்டது.

"எதுவுமே இல்லை என்றால் உனது கோபம் எங்கிருந்து வந்தது அப்பனே!", என்று கேட்டார் துறவி.


உண்மையான மகிழ்ச்சி!!

ஒரு ஜென் துறவியைச் சந்திக்க ஒரு பணக்காரர் வந்திருந்தார். துறவியிடம் தாம் தம் வழித்தோன்றல்களுடன் மகிழ்ச்சியாக வாழ ஒரு வழி சொல்லுமாறு வேண்டிக் கொண்டார். துறவியும் ஒரு ஓலையை எடுத்து "தந்தை இறப்பார். மகன் இறப்பான். பேரன் இறப்பான்." என்று எழுதிக் கொடுத்தார். பணக்காரருக்கு கடும் கோபம் வந்தது. "என்ன இது? வாழ்வைப் பற்றிக் கேட்டால் சாவைப் பற்றி சொல்கிறீர்களே?", என்று கேட்டார். துறவியோ சிரித்துக் கொண்டே, "வாழ்விற்குத் தான் வழி சொல்லி இருக்கிறேன். நீங்கள் இறக்கும் முன் உங்கள் மகனோ, உங்கள் பேரனோ இழந்தால் அது மகிழ்ச்சி தருமா? எனவே உண்மையான மகிழ்ச்சி என்பது இயற்கையின் வழி வாழ்ந்து இயற்கையாகவே இறப்பது", என்றார்.


விடுதியா? அரண்மனையா?

ஒரு ஜென் குரு ஒரு அரசனின் அரண்மனை நோக்கி வந்தார். நேராக அரசவைக்கே சென்றார். அரசனின் சிம்மாசனத்துக்கு அருகில் வந்ததும், அரசனே, " ஐயா! உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டான்.

அவரோ, "இந்த விடுதியில் ஓரிரவு தங்க இடம் வேண்டும்" என்றார்.

அரசனோ, "இது விடுதி அல்ல. அரண்மனை." என்றான்.

ஜென் குரு, "உனக்கு முன் இது யாருடையது?" என்றார். "என் தந்தையாருடையது".

"அவருக்கு முன்?" என்ற குருவிற்கு "என் பாட்டனாருடையது" என்றான் அரசன்.

இப்படி ஒவ்வொருவரும் சிறிது காலமே தங்கிச் சென்ற இது விடுதி இல்லாமல் வேறென்ன? என்றார் குரு.

இன்னும் இருக்கு..இருந்தாலும் இத்தோட நிறுத்திகிக்க சொல்லி பட்சி சொல்லுது..

நீங்க என்ன சொல்றீங்க...?

அதோட.. எனக்கு தெரிஞ்சு.. ஐநூறூஊஊஊஊஊஊ(500!!).. பதிவுகள் எழுதின ஒரே பதிவர்.. நம்ம புதுகை தென்றலுக்கு தனிப்பட்ட முறையில் ஒரு வாழ்த்துகளையும் சொல்லிக்கிறேன்..!!