Monday, January 25, 2010

சிகப்பாய் சில பூக்கள்!!


முதல் புன்னகை,
சின்ன அறிமுகம்,
நயமான பேச்சுக்கள்,
பூத்தன அவர்களிடையே
கண்ணியமாய் வெள்ளை பூக்கள்..;

தொடும் தூரத்தில் விரல்கள்,
தொட அஞ்சும் நெஞ்சம்,
கண் பார்த்த பேச்சு,
பூத்தன அவர்களிடையே
நட்பாய் மஞ்சள் பூக்கள்..;

பார்த்த கணம் புன்னகை,
பேச்சில் தொடும் அக்கறை,
பிரியும் போது மென்வருத்தம்,
பூத்தன அவர்களிடையே,
பாசமாய் நீலப் பூக்கள்..;

மறந்து விட்ட கர்ச்சீப்,
ரசித்து பார்த்த புத்தர் சிலை,
சருகான மல்லிப்பூ,
பூத்தன அவர்களிடையே,
நேசமாய் ஊதா பூக்கள்..;


மன்னித்துவிடு
நான் உன்னோடு அப்படி
பழகவில்லை;
இனிமே நான் சந்திக்க வேண்டாம்..

சில கணங்களில்
செத்து போயின
சிகப்பாய் சில பூக்கள்..!!

Monday, January 18, 2010

ஆயிரத்தில் ஒருவன் - திரை விமர்சனம்

எனக்கு மிகவும் பிடித்த எம்ஜிஆர் படம் இதுதான்.


http://4.bp.blogspot.com/_03G3R_dD0Cc/SzSjk1GO3VI/AAAAAAAAAgI/pcu83jxQsGE/s320/2.jpg

1965இல் வந்த படம். எம்ஜிஆர், ஜெயலலிதா, நாகேஷ், நம்பியார், மனோகர், ராமதாஸ், எல். விஜயலக்ஷ்மி நடிப்பு. விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணைந்து இசை அமைத்த கடைசி படம். பி.ஆர். பந்துலு சிவாஜியுடன் முறைத்துக்கொண்டு எம்ஜிஆர் பக்கம் வந்து எடுத்த முதல் படம். அவரேதான் இயக்கம் என்று நினைக்கிறேன், சரியாக நினைவில்லை.

கலர் படங்கள் அபூர்வமாகவே வந்த காலத்தில் வந்த கலர் படம். கலர் மேக்கப் ரொம்ப கோரமாக இருக்காது (சரோஜாதேவி, எங்க வீட்டுப் பிள்ளை, enough said) எட்டு மணி மணியான பாட்டுகள். ராஜா ராணி சாகசக் கதைகளில் எம்ஜிஆரை அடிக்க ஆளில்லை என்று நிரூபித்த படம்.



எம்ஜிஆர் ஒரு டாக்டர். சர்வாதிகாரி மனோகரை எதிர்க்கும் புரட்சியாளர்களுக்கு தன் தொழில் தர்மப்படி சிகிச்சை அளிப்பார். அதற்காக அடிமையாக ராமதாசின் தீவில் விற்கப்படுவார். அங்கே சென்று நாம் அடிமையாகவே இருக்க வேண்டியதுதானா என்று கேட்கும் தோழர்களுக்கு ஓராயிரம் ஆண்டுகள் ஆகட்டுமே, நம் பொறுமையின் பொருள் மட்டும் விளங்கட்டுமே என்று ஆறுதல் சொல்வார். நடுவில் தன்னை சைட் அடிக்கும் ஜெவை பற்றி மாளிகையில் அவள் வீடு, மரக்கிளையில் ஏன் கூடு, இதில் நான் அந்த மான் நெஞ்சில் வாழுவதேங்கே கூறு என்று பாடுவார். கொள்ளை அடிக்கவரும் நம்பியாருடன் போராடினால் சுதந்திரம் தருகிறேன் என்று சொல்லும் ராமதாசை நம்பி நம்பியாரை விரட்டுவார். ஏமாற்ற நினைக்கும் ராமதாசிடமிருந்து தப்பி நம்பியாரின் கப்பலில் போவார். நம்பியாரின் ப்ளாக்மெயிலால் கொள்ளைக்காரனாக மாறுவார். ஆனால் கொள்ளைக்காரர்களிடமிருந்துதான் கொள்ளை அடிப்பார். ஜெவின் கப்பலை கைப்பற்றுவார். ஜெவை விரும்பும் நம்பியாரிடமிருந்து அவரை காப்பாற்ற தன் அடிமையாக்கிக்கொள்வார். பிறகு அவரை மணப்பார். நம்பியாரிடமிருந்து தப்ப முயற்சி செய்யும்போது நம்பியாருடன் ஒரு சூப்பர் கத்தி சண்டை போட்டு பிறகு அதோ அந்த பறவை என்று பாட்டு பாடி, மனோதரின் கப்பலுடன் சண்டை போட்டு, மனோகரை சாவிலிருந்து காப்பற்றி, மனோகர் தரும் ராஜ பதவியை நிராகரித்து டாக்டராகவே வாழ்வார்.

அவரல்லவோ சூப்பர்மான்? இப்போதைய நடிகர்கள் எந்த காலத்திலும் அவருக்கு ஈடாக முடியாது.

அருமையான ஆர்ட் டைரக்ஷன். காட்சிகள் மிகவும் ரிச்சாக எடுக்கப்பட்டிருக்கின்றன. கப்பல் காட்சிகள் நம்மை இன்னும் அசத்துகின்றன. பந்துலு பணத்தை தண்ணீ ராகத்தான் செலவழித்திருக்கிறார்.

எம்ஜிஆர், நம்பியார், ஜெ, ராமதாஸ் ஆகியோருக்கு நல்ல வேஷப் பொருத்தம். சரோஜா தேவியின் கொஞ்சல் பாணியிலிருந்து விடுதலை! நாகேஷ் ராமதாஸ் காட்சிகளில் சிரிக்கலாம்.

நம்பியாரிடமிருந்து ஜெவை ஒரு பெட்டியில் வைத்து கடத்தி செல்ல, நம்பியார் அந்த பெட்டியில் தன் வாளை செருகும் காட்சி அருமையானது. அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் என்று பாடும் போது தியேட்டரில் உற்சாகம் பிய்த்துக்கொண்டு கிளம்பும்.

ராமதாஸ் பேசும் “நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள். ஆனால் வாய்தான் காது வரை இருக்கிறது” என்ற வசனம் எங்கள் வட்டத்தில் ரொம்ப ஃபேமஸ்!

கண்ணதாசனும் வாலியும் போட்டி போட்டுக்கொண்டு அருமையான பாட்டுகளை எழுதி இருக்கிறார்கள். கண்ணதாசன் “அதோ அந்தப் பறவை”, “நாணமோ” பாட்டுகளை எழுதினால், வாலி “பருவம் எனது பாடல்”, “ஆடாமல் ஆடுகிறேன்”, “ஏன் என்ற கேள்வி”, “ஓடும் மேகங்களே”, “உன்னை நான் சந்தித்தேன்” போன்ற பாட்டுகளில் அசத்தி இருக்கிறார்.

எனது ஃபேவரிட் அதோ அந்த பறவைதான். எல்லாருக்குமே அதுதான் ஃபேவரிட். பாட்டும், கப்பலில் எம்ஜிஆரும் ஜெவும் ஓடி ஆடி பாடுவதும் பிரமாதம்.

எனக்கு பிடித்த அடுத்த பாட்டு ஏன் என்ற கேள்விதான். அருமையாக படம் பிடிக்கப்பட்டிருக்கும். எம்ஜிஆரும் அவர் தோழர்களும் வட்டமாக படுத்துக்கொண்டு தண்ணீர் குடிக்கும் காட்சி பார்க்க பிரமாதமாக இருக்கும்.

ஓடும் மேகங்களேவுக்கு மூன்றாவது இடம். நாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன் என்ற வரிகள் மிக அருமை. படத்தின் டைட்டிலை வேறு அர்த்தத்தில் வாலி உபயோகித்திருப்பார். வார்த்தைகள் வருவதற்கு முன் அருமையான இசை.

ஒரே ஒரு டூயட் – நாணமோ. நல்ல பாட்டு.

ஜெவுக்கு மூன்று சோலோ பாட்டுகள். பருவம் எனது பாடல், உன்னை நான் சந்தித்தேன், ஆடாமல் ஆடுகிறேன் என்று. நன்றாக, அந்த காலத்துக்கு கவர்ச்சியாக ஆடியிருப்பார்.

எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கைக்கு வித்திட்ட படங்களில் ஆயிரத்தில் ஒருவனும் ஒன்று. இந்த படம் தான் அவரை கோடி மக்களின் தலைவனாக உருவாக்கியது.

நான் ஒரு வைத்தியன் ... இந்த சமுதாயத்திற்கு வைத்தியம் பார்ப்பது மட்டும் தான் என் தொழில்.

தோல்வியை எதிரணிக்கு பரிசளித்வன் நான் இது போன்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்தது.

இந்த படம் வெளியாகும் போது எம்.ஜி. ஆர் ரசிகர்கள் எப்படி இருந்தார்களோ... அதே நிலை தான் இப்போதும் பார்க்க முடிகிறது.

Tuesday, January 5, 2010

”சாலை பாதுகாப்பு வார”த்தை முன்னிட்டு ஒரு சிறுகதை..

http://www.irintech.com/x1/images/jean/hell_met_helmet.jpg
-”டேய்.. சொன்னா கேளுடா.. ஏண்டா இப்படி பண்ற.”

-”மா. சும்மா இரும்மா..பேசும்போது நொய் நொய்னு. பேசிட்டு இருக்கோம்ல.”

-”டேய்.. மனோ. வேண்டாம்.. இப்போ நிறுத்த போறியா இல்லியா?”

- “.. ம்ம்..ஆமாடா.. அம்மாதான்... சும்மா அட்வைஸ் பண்ணிகிட்டு.. டென்ஷன் ஆகுதுடா.”

- “..என்னவொ போடா..நீ சொன்னா கேக்க மாட்டா.. அப்படியே அப்பன் புத்தி..ம்ஹீம்.”

-“ஹேய்..ஒண்ணு குடேன்.. ப்ளீஸ்டா.. என் செல்லம்ல..”

- “இப்படியே எத்தனை நாளைக்கு கொஞ்சிட்டு இருக்க போற?
ஒழுங்கா கலியாணம் பண்ணிக்கிற வழிய பாரு.. மனோ.”

- “ஹேய்.. அம்மா கட்டிக்க சொல்றாங்கடா . கட்டிக்கவா?
தோடா..வெக்கமா.. ம்ம்... அப்புறம்..”

...கீங்..கீங்..கீங்...

அம்மா, “என்னடா போன் கட்டா?”

மனோ, “ஆமாம்மா..பேலன்ஸ் காலி.”

செல்போனை பார்த்தபடி மனோ பைக்கின் ஆக்ஸிலேட்டரை திருக..

..சில பல.. பலமான சத்தங்களுக்கு பின்.

.
.
.

”அம்மா.. என்ன மன்னிச்சுடு.. நீ சொன்னது சரிதான்.. வண்டி ஓட்டும் போது போன் பேசி இருக்க கூடாது.”

தன் பிணத்தின் முன்னால் கதறும் தாயின் பின்னால் நின்றபடி மனோ சொல்லிகொண்டான்.


(பி.கு)..

”சாலை பாதுகாப்பு வார” த்தை முன்னிட்டு இந்த சிறுகதை..!!


டிஸ்கி :

"வண்டியில் செல்லும்போது செல்லை தொடாதீர்கள்.
அழைப்பது எமனாகவும் இருக்கலாம்."