Showing posts with label ஆரோக்கியம். Show all posts
Showing posts with label ஆரோக்கியம். Show all posts

Tuesday, December 6, 2011

தியானமும் நானும்-2





தியானத்திற்கு எப்போதும் ஒரு அரிய சக்தி உண்டு. நாம் நிதானம் தவறாது காப்பதே அதன் சக்தி. என்ன சூழ்நிலை வந்தாலும் நாம் நம்மை அறிந்தபடியால், அமைதியாய், தெளிவாய், நிதானித்து
வாழ்க்கையை பார்க்கும் ஒரு மனிதனாய் தியானம் நம்மை மாற்றியமைத்துவிடுகிறது. என் வாழ்க்கையையே எடுத்துகொள்ளுங்கள்..எத்தனை கோடி முறை தற்கொலை எண்ணங்கள் வந்துபோயின,
எத்தனை முறை என் வீட்டை, மக்களை, உலகை வெறுத்திருக்கிறேன்..இப்போது அதை எல்லாம் நினைத்துபார்த்து சிரிக்கத்தான் தோன்றுகிறது. இன்னும் கூட சில நேரங்களில் என் அகந்தை மேலெழும்
நேரம்..அதை உடனே தள்ளிநின்று பார்த்து சிரித்துவிடும் தெளிவு எனக்குள் வந்திருக்கிறது.. உடனே நான் எதோ பெரிதாய் கண்டுவிட்டேன்..ஆச்சா போச்சா என்று அகந்தையுரை எழுத வரவில்லை.

ஒரு அற்ப ஜீவராசி என்னாலேயே இவ்வளவு தெளிவாய், பொருமையாய், அழகாய் வாழ்க்கையை அப்படியே ஏற்றுகொண்டு வாழமுடிகிறதென்றால், உங்களால், உங்களுக்காகவும், உங்களை சார்ந்திருப்பவர்களுக்காகவும்
உழைக்கும் மக்களாகிய உங்களால் எவ்வளவோ தெளிவாய் வாழ முடியும். அப்படி வாழும்போது வாழ்க்கை ரம்மியமாய், அழகாய், ஒரு கலைநயமிக்கதாய் இருக்குமே.. ஒரு ஆடலோடும், பாடலோடும்
ஒரு துள்ளலோடும், ஒரு குதுகலத்தோடும் ஏன் வாழ்க்கையை வாழக்கூடாது?

தம்பி..எல்லாம் சரிதான்..இந்த துள்ளலும், குதூகலம், ஆடல், பாடல் எல்லாம் எப்படிப்பா இந்த அவசர உலகில் சாத்தியம்?

சாத்தியம், ஒரே ஒரு விஷயத்தை சரியாக புரிந்துகொண்டால்...

அது என்ன?

 உலகம் அவசரமாய் இல்லை..மனிதர்கள் நமக்குத்தான் அவசரம். உலகம் அவசரமானது என்பது பச்சைப்பொய்..அப்படி இருந்தால்,
இந்நேரம் மனித இனமே இல்லாமல் போய், அடுத்த கட்ட evolution துவங்கி இருக்கும்.... இந்த பூமி சூரியனை சுற்றுகிறதே..அவசரமாகவா சுற்றுகிறது? இல்லை..ஒருமுறை தன்னைத்தானே சுற்றிவர
24 மணிநேரங்கள் எடுத்துகொள்கிறது. இதனால் பூமி சோம்பேறி என்று அர்த்தமல்ல. அதற்குள் ஒரு நிதானமிருக்கிறது. அது அதனளவில் தெளிவாய்தான் இருக்கிறது. பூமியும் நமது கார்ப்பரேட் கந்தசாமிகள் போல்
இன்னும் வேகமாய், இன்னும் வேகமாய் என்று சுழல ஆரம்பித்தால் நம் கதி அதோகதிதான். பாருங்கள், அது சூரியனை சுற்றிவர ஒரு வருட காலம் தேவைப்படுகிறது. இப்படி பூமிக்கு இருக்கும் நிதானமும்
தெளிவும், உங்கள் வழியில் சொல்வதானால், உங்கள் உலகத்திற்கு இருக்கும் தெளிவும், நிதானமும், அதன் பிள்ளைகளான நமக்கு இல்லையே..?!

ஏன் இந்த பைத்தியம்பிடித்தது போன்ற ஓட்டம்? அவசரமே படாத பூமியில், அவசர அவசரமாய் வாழ்ந்து அவசரமாய் செத்துப்போகும் அவலம் ஏன்?  கொஞ்சம் யோசித்தால், இதற்கு நீங்கள் தான் முழுப்பொறுப்பு
என்று புரியும்.. ஆனால் எப்படி?

அடுத்த பதிவில் சிந்திப்போம்..!!

Monday, October 10, 2011

தாழ்வு மனப்பான்மையிலிருந்து வாழ்வு மனப்பான்மைக்கு - 4


இன்று நான் பார்க்கும் இளைஞர்கள், நடுத்தர வயதினர், முதியவர்கள் அனைவரிடமும் ஒரு ஒற்றுமையை என்னால் கவனிக்க முடிகிறது. அதுதான் ”பிறரோடு தன்னை ஒப்பிட்டு வருந்துதல்”.

அவரை போல் தான் இல்லையே.. அந்த நடிகனைப்போல் எனக்கு கட்டுடல் இல்லையே..அந்த நடிகைப்போல் நான் சிகப்பாக, ஒல்லியாக இல்லையே.. அந்த எதிர்வீட்டுக்காரரைப் போல் தன்னால் ஒரு கார் வாங்க முடியவில்லையே..அந்த பெண்மணிபோல் உயர்ந்த பதவிகளில் இருந்துகொண்டு பிறரை ஆள நமக்கொரு வாய்ப்பில்லையே.. என் பிள்ளைகள் அவர்களைப்போல் அறிவுஜீவிகளாக இல்லையே..இப்படி எதற்கெடுத்தாலும் பிறரோடு நம்மை ஒப்புநோக்கும் பழக்கம் நம்மிடம் வந்துவிட்டது.

எப்படி வந்தது?

பள்ளியில் நீங்கள் படிக்கும்போது இந்த Comparision உங்களுக்கு போதிக்கப்படுகிறது. அதாவது நீங்கள் உங்களைவிட சிறப்பாக படிக்கும் மாணவரோடு எப்போதும் உங்களை ஒப்பிட்டுப்பார்த்துகொள்ள முதலில் உங்களுக்கு சொல்லித்தரப்படுகிறது. இப்படி செய்வதால், உங்களை நீங்களே காயப்படுத்திகொண்டு, அதாவது மாடு தன்னைத்தானே சவுக்கால் அடித்துகொண்டு வேகமாய் ஓடுவதுபோல்.. நீங்கள் உங்களை காயப்படுத்திகொண்டு மேலும் நன்றாய் படிக்க முயற்சி செய்கிறீர்கள். இப்படி கொஞ்சம் மேலே வந்ததும்..இன்னும் மேலே இருப்பவனோடு கம்பேர் செய்கிறீர்கள். பத்தாவது, பன்னிரெண்டாவது  வரும்போது.. காயங்களே உங்கள் உடம்பாய், கம்பேர் செய்வதொன்றே உங்கள் முழுநேர வேலையாகிவிடுகிறது. இப்படி கொஞ்சம் கொஞ்சமாய் உங்கள் மனம் கம்பேரிங் இயந்திரமாய் மாறிவிடுகிறது. உங்களை விட மெத்த படிப்பவன் 4 நண்பர்கள் வைத்திருந்தால், நீங்கள் 6 நண்பர்களை சேர்த்துகொள்வீர்கள். அவனை முந்தவே உங்கள் முழுநேரப்பொழுதும் செலவழிந்திருக்கும். இப்படி.. முப்பொழுதும் முழுமூச்சாய் போட்டி மனப்பான்மையில் வாழ நீங்கள் பழக்கப்பட்டுவிட்டீர்கள்.

இப்போது கல்லூரி வந்ததும், காதல் மலர்கிறது. அவன் அவளை காதலிக்கிறானே..நம்மை ஒருத்தியும் பார்ப்பதில்லையே..இவளுக்கு இவ்வளவு ஆண் நண்பர்கள் இருக்கிறார்களே..நம்மை ஒருவன்க்கூட பார்ப்பதில்லையே.. அவள் அவ்வளவு அழகாய் இருக்கிறாளே நாமில்லையே.. என்று..மீண்டும் மீண்டும் கம்பேரிங் குழியில் விழுகிறோம். தாழ்வு மனப்பான்மையில் தவிக்கிறோம்.

சரி.. பிறகு திருமணம்.. அங்கேயும் நகை, சீர்செய்வது, என்று மீண்டும் ஒரு கூட்டம் நம்மை கம்பேர் செய்து கேலி செய்கிறது. அல்லது மெச்சுகிறது. அடுத்து குழந்தை பேறு. அங்கேயும், அவள் உடனே பெற்றுவிட்டாள், நீ ஏன் இன்னும் இழுத்தடிக்கிறாய் என்று கம்பேர் செய்கிறது. அடுத்து நம் பிள்ளை படிப்பு முதல், நம் செல்வ செழிப்புகள் வரை அந்த கூட்டம் நம்மையும், நாம் அந்த கூட்டத்தையும் பார்த்து கம்பேர் செய்தபடியே வாழ்க்கையை வீணடிக்கிறோம்.

ஒருநாளாவது, அந்த இளைஞன் 20லேயே இறந்துவிட்டாரே.. நாம் இன்னும் இங்கு என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று யாரும் கம்பேர் செய்ததில்லை. ஏன்? அதையும் முயன்று பாருங்களேன்.. நாட்டில் ஜனத்தொகையாவது குறையும்.

சரி இதற்கு தீர்வு என்ன?

முதலில் கம்பேரிஸனால் பொருள் சேருமே தவிர நிம்மதி சேராது என்பதை தெளிவாய் புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்காக நீங்கள் உழைத்து சேர்த்ததுதான் பொருளே தவிர, பிறரை பார்த்து, நீங்கள் சேர்த்தது உங்கள் பொருள் இல்லை அது அவர்களின் பொருள்.. காரணம் அவர்கள்தானே உங்களை வாங்க ஊக்கப்படுத்தியது. எனவே மனநிம்மதி என்பது பொருள் சேர்ப்பதில் இல்லை..நல்ல எண்ணங்களை, நல்ல சுபாவங்களை, நல்ல மனிதர்களை சேர்ப்பதில்தான் இருக்கிறது...இதை புரிந்துகொண்டாலே..இதை வாழ்வில் கொண்டுவர துவங்கினாலே போதும்..வாழ்வு நிறைவு பெறும்..!!

Tuesday, May 17, 2011

தாழ்வு மனப்பான்மையிலிருந்து வாழ்வு மனப்பான்மைக்கு...



பொதுவாகவே மேலைநாட்டு அறிஞர்களுக்கும், ஏன் நமது நாட்டு அறிஞர்கள் சிலருக்குமே ஒரு கருத்து உண்டு.
அதாவது இந்தியா ஒரு இறந்த நாடு என்று. அட..!! ஏன் இவர்கள் இப்படி சொல்கிறார்கள்?
காரணம் உண்டு. அது நாம் நமக்குள் சுமக்கும் அழுத்தமான ஆழமான தாழ்வுமனப்பான்மை. அது ஒரு நாடு
முழுக்க பரவி பரதிபலிப்பதால் இந்தியா தாழ்வுமனப்பான்மை கொண்ட மக்கள் நிறைந்த இறந்த நாடாக இருக்கிறது.

 அடிப்படைகள் புரிந்த எந்த விஷயமுமே
சீக்கரம் சரிசெய்யக்கூடியதாய் மாறிவிடும் இல்லையா.. சரி தாழ்வு மனப்பான்மைக்கான அடிப்படைகள் என்ன?

முதலில் பால்ய பருவம்:

நம் நாட்டில் குழந்தைகளை மிகவும் குழந்தைத்தனமாக வளர்க்கப்படுகிறார்கள்.
குழந்தைகள் வெறுமனே தாய் தந்தையரோடு மட்டும் வளராமல் அவர்களின் சொந்தகளோடும் வெளிவட்டார நட்புகளோடும்
இருக்க அனுமதிக்க வேண்டும். வெறுமனே தாய் தந்தையே உலகம் என்றிருந்தால் குழந்தைகளின் சிந்தனைத் திறன் குறைவது
மட்டுமில்லாமல், படிப்பிலும், விளையாட்டிலும் ஆர்வமில்லாமல் இருக்கும். அதிகமான நட்புறவு கொண்ட குழந்தைகள்
வேகமாகவும், விவேகமாகவும் இருப்பார்கள். சுறுசுறுப்பும், எல்லாரிடமும் எளிதில் பழகும்விதமாகவும் இருப்பார்கள்.
இதனால் அவர்களின் தாழ்வு மனப்பான்மை அளவு குறைவாகவே இருக்கும்.

முதலில் நாம் குழந்தைகளின் அங்க அடையாளங்களை சுட்டிக்காட்டி அவர்களை குறைகூறுதல் கூடாது. அது முதல்கட்ட
தாழ்வு மனப்பான்மைக்கான அடிப்படை.

அடுத்து குழந்தைகளை யாரோடும் ஒப்பிட்டு பேசாதீர்கள். அது மிகவும் மோசமான வழக்கம். அப்படி பேசுவதால்
குழந்தைகள் மிகவும் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். எல்லா குழந்தையும் சச்சினாகவோ, விஸ்வநாதன் ஆனந்தாகவோ பிறப்பதில்லை.
பிறக்காது. எனவே, உங்கள் குழந்தைகளின் தனித்தன்மையை புரிந்துகொண்டு அவனை/அவளை வளர்ப்பதே சிறந்தது. பிறரின் ஜெராக்ஸ்
காப்பியாக உங்கள் குழந்தையை வளர்க்கும் பாவத்தை தவறியும் செய்துவிடாதீர்கள்.

மூன்றாவது முக்கியமான விஷயம். குழந்தைகளை அடிப்பது. இது மிகவும் மோசமான, மனிதத்தன்மையற்ற செயல்.
ஏன் குழந்தையை அடிக்கிறீர்கள். திருப்பி அடிக்கமாட்டான்/மாட்டாள் என்கிற தைரியம் தானே... இதே கோபத்தை உங்களைப்போன்ற
சக வயதினரிடமோ, அல்லது ஒரு இளைஞரிடமோ காட்டிப்பாருங்கள். பற்கள் நொறுங்கிவிடும். குழந்தைகளை அடித்துதான் வளர்க்கவேண்டும்
என்று எவரேனும் சொன்னால், அவர்கள் அறிவு இன்னும் வளரவே இல்லை என்றுதான் அர்த்தம். ஒன்றை புரிந்துகொள்ளுங்கள். எப்போது
நாம் நம் குழந்தைகளின் நண்பனாக மாறுகிறோமோ அப்போதே அவர்கள் மாற ஆரம்பித்துவிடுகிறார்கள்.

அன்பை சொல்லிக்கொடுங்கள். அரவணைப்பை தாருங்கள். அவனை/அவளை அவனாக/அவளாக இருக்கவிடுங்கள். நீங்கள் பாதுக்காப்பை மட்டும்
தந்தால் போதும். இந்த சின்னஞ்சிறு பறவைகள் பாசமாய் கூட்டைத்தேடி வரும். தாயும் தந்தையுமே குழந்தைகளின் முதல் நண்பர்களாகட்டும்.

தாழ்வு மனப்பான்மை ஒழிந்து வாழ்வு மனப்பான்மை மலரட்டும்..

தொடரும்....

Monday, May 9, 2011

தியானமும் நானும்..!!




எவ்ளோ நாள் ஆச்சு.. அடடா.. என் வலைப்பக்கத்தை பார்க்க எனக்கே சங்கடமாய் இருக்கிறது.
இருந்தாலும்.. பிஸியாக இருந்த அளவுக்கு அது இப்போது ரெஸ்ட் எடுத்துகொண்டிருக்கிறது என்று ஒரு ஆறுதல்
சொல்லிகொள்கிறேன்..

நான் தியானம் பயில்கிறேன்.. ஆமாம்...உண்மைதான்..அட நிஜமாப்பா, ஆனால் பொதுவாக எல்லாரும் பயில்வது
போல் பத்மாசனம் போட்டு அமர்ந்து கண்ணை மூடி, முதுகை நிமிர்த்தி, மூச்சை இழுத்து இழுத்துவிட்டு, இப்படி
எதுவுமே செய்வது இல்லை. அதே போல் தியானம் செய்தே ஆகவேண்டும் என்று என்னை நானே கட்டாயப்படுத்திகொண்டதும்
இல்லை. எப்போது பசிக்கிறதோ அப்போது உண் என்பது போல எப்போது மனம் ஓய்வாய் அமைதியாய் இருக்க ஏங்குகிறதோ
அப்போதெல்லாம் தியானம் செய்ய தயாராகிவிடு என்பது எனது கொள்கை.

பொதுவாக எல்லாரும் மனம் அலைபாயும்போதும், கோபத்தில், ஆசையில், ஏக்கத்தில் கொதிக்கும்போதும் மட்டுமே தியானத்தை
நினைவுபடுத்தி மனதை கட்டுபடுத்தும் ஒரு முயற்சியாக அதை செய்கிறார்கள். ஆனால் மனதை கட்டுபடுத்தினால் மட்டும்
மனம் எதையும் சாதித்துவிடும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இது ஓடும் ரயிலை ட்ராக்கில் நின்றுகொண்டு
இரண்டு கையால் தடுக்க முடியும் என்று முயற்சிப்பதை போல.

ஒரு ரயிலை நிறுத்த அதன் அடிப்படை அம்சங்கள் தெரிந்திருக்க வேண்டும். எந்த லிவரை இழுத்தால் ரயில் வேகம் குறையும்,
எந்த லிவர் ப்ரேக்காக செயல்படுகிறது என்று முழுமையாக ஒரு ரயில் என்ஜினை புரிந்தவருக்கே ரயிலை நிறுத்துவது சாத்தியம்.

உன் மனதை பற்றி நீ சரியாக புரிந்துகொண்டால் அதை கொஞ்சம் கொஞ்சமாய் கவனித்து கவனித்து அதன் அடிப்படைகளை
புரிந்துகொள்ள முடியும். அப்படி புரிந்துகொண்ட பின் அதை நிறுத்துவது, அதை உனக்கேற்றவாறு செயல்பட வைப்பது,
என அது சுலபமாக உன் கைக்குள் வந்துவிடும்.

மனம் ஓய்வை தேடும் நேரத்தில் அதை புரிந்துகொள்வது சுலபம். ஆனால், உனக்கு மனம் எப்போது ஓய்வை தேடுகிறது என்பதும்
தெரியாதே!!, இருக்கட்டும், எப்போதெல்லாம் உன் மனம் நிதானமாய் நிம்மதியாய் இருப்பதாய் உணர்கிறாயோ,
அதாவது உனக்கு பிடித்தவரோடு பேசும்போது, நடக்கும்போது, உனக்கு பிடித்த புத்தகம், பாடல், கவிதைகள் படிக்கும்போது
இப்படி பல்வேறு சமயங்களில் மனம் ஓய்வாய் இருக்கும். அந்த சமயங்களில் அதை கவனி.

வெறுமனே கவனி. நீ அதனிடம் பேச முயற்சி செய்யவே செய்யாதே. இது தவறான போக்கு. அப்படி பேசுவது அர்த்தமற்றது.
வெறுமனே கவனித்தல் போதுமானது. அப்படி கவனித்து வர வர அதன் அடிப்படைகள் புரிந்துவிடும்.

அப்போது அதை தாண்டி செல்வது சுலபமானது.

மனதை தாண்டி என்ன இருக்கிறது? எல்லாம் மனதை தாண்டிதான் இருக்கிறது. மனம் வெறும் காவலாளி. சொர்க்கத்தின் காவலாளி.
அவன் அவ்வளவு சீக்கிரன் உன்னை உள்ளே விடமாட்டான். அவனை தாண்டி நீ சென்றுவிடு. சென்றுவிட்டால், அப்போது புரியும்
அந்த சொர்க்கமே உன்னுடையது என்று.

நன்றி,
ரங்கன்.

Tuesday, October 19, 2010

நீங்க அறிவாளியா ? நல்லவரா?


இந்த உலகமே இரண்டு முக்கியமான அம்சங்களில் இயங்குகிறது.
ஒன்று.. அறிவு. இன்னொன்று அன்பு.

சொல்லபோனால்.. இரண்டுமே எல்லாவகையிலும் ஒன்றுகொன்று எதிரானவை.
ஆனால் இந்த இயற்கையை , மொத்த பிரபஞ்சத்தை எடுத்து பார்த்தால்..
வாய்பிளக்கவைக்கும் அறிவியலும், நெஞ்சை பிழியும் அன்பும் சரிசமமாய் இணைந்திருக்கிறது.

ஏன் வானம் வரை போய்கொண்டு... ஒரு மரத்தை எடுத்துகொள்ளுங்கள்.
அதன் வேர்கள்.. அதன் கிளைகளை விட நீளமானவை.. ஆழமானவையும் கூட.
அதன் நடுமரம். அதாவது தண்டுபகுதி.. அது கடினமானதே என்றாலும்..அதன் வழியாகத்தான்
நீர் புகுந்து செல்கிறது. இது கிளைகளின் பரவி..இலைகளை தளைக்க செய்கிறது.
சூரியகாந்தி பூவை எடுத்துகொள்ளுங்கள். அதன் நடுவில் மகரந்த அடுக்கு.. அது ஒரு
Fibonacci numberக்கு சரியான குறியீடு.

இப்படி மனிதன் தன்னை சுற்றி உள்ள எல்லா விஷயங்களில் அறிவியல் ஒளிந்திருப்பதை
காண்கிறான். அதை கணிதத்திலும், கணினியிலும் கணக்கிட்டு புதிய பல மேம்பாடுகளை
அவன் வாழ்க்கைக்கு ஏற்படுத்தி கொள்கிறான்.

இப்படி, வாழ்க்கையின் எல்லா விஷயங்களிலும் அறிவியலை திணித்து திணித்து..
அதாவது..மூளையை கொண்டு மட்டுமே யோசித்து யோசித்து..இன்று மனிதன்
இதயமில்லாதவன் என்ற பெரும்பேறு பெற்றிருக்கிறான்.

ஒரு மரத்தின் இத்தனை விஷயங்களை கவனித்து கணித்த நாம், அதன்
சலசலப்பில் என்றாவது மனம் மயங்கி நின்று..நாமும் மரமும் ஒன்றாகி நின்றிருப்போமா?

இப்போது அறிவியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் வாழ்வில் நடத்த சம்பவத்தை
சொல்கிறேன் கேளுங்கள்.

ஒருமுறை  அவரை சந்திக்க சில விஞ்ஞானிகள் வந்திருக்கிறார்கள்.
என்ன விஷயம் என்று கேட்டால், புகழ்பெற்ற பீத்தோவனின் சிம்பனிகளை
ஆராய்ந்ததில் சில புதிய ஒலிமாறுபாடுகளை கண்டுபிடித்திருப்பதாகவும்,
அவைகளை ஐன்ஸ்டீனும் ஆராய்ந்து ஒரு ஒப்புகை சான்று வழங்கவேண்டும்
எனக் கேட்க வந்திருந்தனர்.
ஐன்ஸ்டீனுக்கோ வெகு கோபம், ஒழுங்காக ஓடிவிடுங்கள்.
அந்த மாமனிதரின் இசையை, அதன் தெய்வீகத்தை  ரசித்து மகிழ்வதை
விட்டுவிட்டு.. அதை கூறுபோட்டு அசிங்கப்படுத்த பார்க்கிறீர்களா?
கிளம்புங்கள் முதலில்.. என்று அவர்களை விரட்டிவிட்டார்.

 அறிவு.. என்ற ஒன்றை மட்டுமே கொண்டு
எந்த வகையிலும் வாழ்க்கையை நடத்திவிட முடியாது என்று இயற்கைக்கே
தெரிந்ததால்தான் நமக்கு இதயத்தையும் சேர்த்து வைத்து படைத்திருக்கிறது.

அதை சுத்தமாய் மறந்துவிட்டு... அறிவியலை கண்ட உலகில் அன்பை
பறிகொடுத்துவிட்டு நிற்கிறோம்.

இதற்கு ஒரு மாற்று உண்டு.
நீங்கள் உங்களை பிடிக்காதவரோடு பேசவும் பழகவும் வேண்டி உள்ளதா?
3:1 என்கிற அளவில் , 3 பங்கு அறிவு, ஒரு பங்கு அன்போடு இருங்கள்.
உங்கள் குழந்தைகளிடம்... 1:3, அதாவது ஒரு பங்கு அறிவு..மூன்று பங்கு
அன்போடு இருங்கள். இப்படி சரியான அளவுகளில் மூளையையும், இதயத்தையும்,
பயன்படுத்த பழகிகொண்டால், வாழ்வில் நாம் எந்த தடைகளையும்
முறியடித்து வாழலாம்..!!

Saturday, February 20, 2010

புயல்களுடன் ஒரு வாழ்க்கை!!

ஒரு நாளுக்குள் எத்தனை பிரச்சனைகள்..எத்தனை புயல்கள்..
இவைகளில் இருந்து விடுபடவே முடியாதா?


http://www.freewebs.com/hoseo_environmental_club/Cyclones.jpg

இந்த கேள்விதான் நம் மாபெரும் வாழ்க்கையின் அடிப்படை கேள்வியாக இருக்கிறது.
முதலில் நாம் அதை உணர முயல்வோம்..பிறகு அதை குறை கூறலாம். கடலில் அலைகள்
வந்தும் போயும் இருப்பது போல, பிரச்சனை புயல்களும் உங்கள் வாழ்வில் வந்தும் போயுமே இருக்கிறது.
எந்த ஒரு புயலும் அதே இடத்தில் தங்குவதில்லை..ஒன்று மறைந்தும் அடுத்து வந்துகொண்டுமே இருக்கின்றன.

ஒரு புயல் ஓய்ந்த பின் நீங்கள் பெருமகிழ்ச்சி கொள்கிறீர்கள், சந்தோஷத்தில் திளைக்கிறீர்கள்..ஆனந்தமாய் உணர்கிறீர்கள்..
அந்த கணங்களில் உங்களுக்குள் இருக்கும் பயம், தயக்கம், நடுக்கம் எல்லாம் மறந்து, மறைந்து போகிறது.
அன்பு ஊற்றெடுக்கிறது.

எப்போது நீங்கள் புயல்களை திறந்த மனதோடு வரவேற்கிறீர்களோ அப்போதே அவைகள் சக்தி இழந்துவிடுகின்றன.
அப்படி திறந்த மனதோடு இருக்க நீங்கள் முதலில் சில தியாகங்கள் செய்ய வேண்டி இருக்கிறது..
அற்ப ஆசைகள், அலையும் மனது, குற்ற உணர்ச்சிகள் என பலவகையான உணர்ச்சிகளை நீங்கள் தடுத்து ஆராய்வது அவசியம்.
அப்படி ஆராயும் போதுதான்..”இந்த கயிறுகளையா பாம்பென்று பயந்தேன் !!” ..என்று நீங்கள் தெளிவடைவீர்கள்..
அப்போது அறிவு பிறக்கும்..தெளிவு உண்டாகிடும்.

எல்லா ஞானிகளுமே ஒரு வகையில் இதைத்தான் செய்தார்கள்..தன்னுடைய குழப்பங்களை, அற்ப ஆசைகளை, குற்ற உணர்ச்சிகளை
பிரித்து பிரித்து வகுத்து பார்த்தார்கள்..அப்படி பிரித்து பார்த்து பெற்றதை ஞானம் என்றார்கள்.அதை நமக்கும் சொன்னார்கள்.

எப்போதும் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்..அலைகள் இல்லாத கடல் எப்படி சாத்தியமில்லையோ அதே போல் பிரச்சனைபுயல்கள் இல்லாத
வாழ்க்கையும் சாத்தியமில்லை...ஞானிகளுக்கும் மிகப்பெரும் மனிதர்களுக்கும் கூட பிரச்சனைகள் இருந்தன..இருக்கும், அது தான் இயற்கை.

எப்போதும் புயல்களை ஒழிக்கவோ, அதில் இருந்து தப்பிக்கவோ முயற்சிக்க தேவையில்லை. அதனோடு இருங்கள். அவைகளோடு ஒரு கப் தேனீர் கூட அருந்துங்கள்.
உங்கள் மடியில் வைத்துகொள்ளுங்கள். பிரச்சனைகள் வெளியே இல்லை உங்களுக்குள் தான் என்பது அப்போது புரியும். நீங்கள் தான் இப்போது உலகத்தின் மையம்.
அதாவது உங்கள் பிரச்சனைக்குரிய உலகத்திற்கு.

நீங்கள் எங்கே சென்றாலும் உடன் ஒருவரை ரகசியமாய் அழைத்தே போகிறீர்கள்..அது தான் உங்கள் மனம். அது எப்போதும் பிரச்சனைகளை சுமந்தபடி உங்களோடே வருகிறது.
அதை விட்டு நீங்கள் தப்பிக்க முடியாது..ஆனால் அது சுமக்கும் பிரச்சனை என்கிற பாரத்தை குறைக்கலாம்.

அப்படி பாரமில்லாத மனதோடு எங்கு சென்றாலும் உங்களுக்கு ஒரு பிரபஞ்ச ரகசியம் விளங்கும் : “புயல்கள் எப்போதும் இருக்கின்றன..நம்மை உயர்த்துவதற்காக”

Tuesday, April 7, 2009

ரங்காவிண்ட சமையல் கட்டு.. வாழைப்பழ பேஸ்டு செய்வது எப்படி?

வணக்கம் மக்கள்ஸ்!!

இன்னிக்கு நாம பாக்க போற டிஷ் பேரு... வாழைப்பழ பேஸ்ட்.

என்ன பேர கேட்டதுக்கே அதிருதா.. அதான் ரங்கன்.

நாங்க எப்பவும் டிஃபரண்டாதான் யோசிப்போம்.ஹிஹி..

சரி.. இப்போ மேட்டருக்கு வருவொம்.

தேவையான பொருட்கள்
1. பழுக்காத வாழைப்பழம்-2
2. பழைய டூத்பேஸ்ட் டியூப்
3. கத்தி அல்லது கத்தரிகோல்
4. பெவிக்குயிக் கம்.

முதலில் நல்ல பழுக்காத வாழைப்பழமா வாங்கிகோங்க.. இல்ல வாங்கிட்டு வர சொல்லுங்க.
அது நல்லா பழுக்காம திக்கா இருக்கனும். அடுத்து இப்போ கத்தி.. வைச்சு (வாயால கத்துவது இல்லை). கட் பண்ணிடுங்க.

அடுத்து அந்த பேஸ்ட் டியூப் இருக்கா.. அதை எடுங்க.. அதனுடைய வாய் பகுதிய மட்டும்..
அதாங்க பேஸ்ட் வெளியே வருமே.. அந்த பகுதி.. அதை மட்டும் கட் பண்ணி வெச்சுகங்க.

இப்போ பெவிக்குயிக் கம்மை அதில் பூசுங்க.. உடனடியா அதை வாழைப்பழத்தோட கட் பண்ண பகுதியில் ஒட்டிடுங்க.

20 நிமிடம் கழித்து உங்களுடைய வாழைப்பழ பேஸ்ட் ரெடி.

நான் செய்த வாழைப்பழ பேஸ்ட் கீழ இருக்கு.





எப்படி சூப்பரா இருக்கா..

நீங்களும் இதை முயற்சி பண்ணி பாருங்க.. உங்க கருத்தை சொல்லுங்க.


பாட்டு பாஸ்கி : மச்சி.. இன்று முதல் நீ சமையல் கட்டின் சாதனையாளன் என்று அழைக்கப்படுவாய்..

Thursday, March 12, 2009

மகிழ்ச்சியே மருத்துவம்

எனக்கு எந்த கவலையுமே இல்லயே..
அதுதான் எனக்கு கவலையா இருக்கு...!!!
இப்படி பல பேரு நம்ம ஊருல புலம்பிட்டு இருக்காங்க.

அதுவும் பெண்களின் பக்கத்தில் இது கொஞ்சம் அதிகமா இருக்கு.

எங்க அத்தை ஒருத்தங்க அப்படித்தான்..
சாப்பாட்டில் ஒரு முடி விழுந்திட்டாக்கூட
பதறி.. பயந்துபோய் தனக்கு எதுவோ வியாதி இருக்குனு நினைச்சுக்குவாங்க..
அவ்ளோ சென்சிட்டிவ்..

சில பேர் லேசா உடம்பு சுடுதுன்னு யாராச்சும் அல்லது தெர்மாமீட்டர்
சொன்னாக்கூட..போச்சு..
கண்ணு செவந்திருக்கா பாரு..
நாக்கு மஞ்சளா இருக்கா பாருன்னு பத்ரகாளி மாதிரி வாயத் திரப்பாங்க..

அதிகபட்சம் வியாதிகள் நமக்கு வருவதும் போவதுமாய் தான் இருக்கிறது
அதை நாம் அறியாமலே உடல் பார்த்துக்கொள்கிறது.

அப்படி மீறிப்போய் வந்தாலும் அதுக்கு தேவையான மருத்துவம் பார்த்துவிட்டு
அடுத்த வேலையை பார்க்கலாம்.அப்படி தொடர்ந்து வேலையில் இருப்பதால்
உடலை நாம் அதன்போக்கில் நோயுடன் சண்டைப்போட வழிசெய்கிறோம்.
அதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. சீக்கிரமே நோய் தீர்க்கப்படுகிறது.
அதைவிட்டு நோயை நினைத்து புலம்புவதால் அந்த நோயின் தீவிரத்தை அதிகமாக்குகிறோம்.

பல மனோதத்துவ நிபுணர்கள் சொல்வது இதுதான்:
"மனதினை பொருத்தே மருந்துகள் வேலை செய்கின்றன.
ஒருவர் மருந்தை எடுத்துக்கொண்டிருந்தாலும் நோயினைப் பற்றிய நினைவுகளுடனே இருந்தால்
நோயின் தீவரம் அதிகரிக்குமே தவிர குறைவதில்லை.
அதெ நேரம் மனத்தினை நோய் தாக்கியுள்ள நேரங்களிலும் தெளிவாகவும், மகிழ்ச்சியுடனும்
வைத்திருப்பவர்கள்... வெகு வேகமாக குணமடைகிறார்கள்.

அது மட்டும் இல்லங்க..
இன்னும் ஒரு பெரிய தவறை நாம நமக்கு தெரியாம பண்ணிடுறோம்.
அது என்னனு கீழே படியுங்கள்...



" பல வகையான நோய் தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் நம் ஜுன்களில் தினசரி பதியப்படுகிறது.
அப்படி பதியப்படும்போதே அது எப்படி தீர்க்கப்பட்டது என்ற தகவலும் அதில் சேரும்
அப்படி மனக்குழப்பத்துடனே தீர்க்கப்பட்ட நோய்கள் பற்றிய தகவல் சரியாக சேர்க்கப்பட முடிவதில்லை.
அதனால் உங்களுடைய சந்ததியில் அந்த நோய்க்கான பாதிப்பு தொடர வாய்ப்புகள் அதிகம். "

என்ன ஷாக் ஆகிட்டீங்களா..?
அப்படியே ஆனாலும் இனிமேலாவது "வருவது வரட்டும் .. எது வந்தாலும் என் சந்தோசத்த பறிச்சுட முடியாதுன்னு
இருங்க"
உங்களுக்கு புத்தி சொல்லும் அளவுக்கு எனக்கு வயசு இல்லை..
எல்லாம் ஒரு வேண்டுகோள்தான்..
எடுத்துக்கறதும் தள்ளுவதும் உங்க விருப்பம்.

வாழ்க மகிழ்ச்சியுடன்,
ரங்கன். :D


பாட்டு பாஸ்கி : இந்த பதிவுக்கு சரியான பாடலை அண்ணன் ரங்காவே சொல்லிட்டார்.

"நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்;
நரகத்தில் இடர்படோம் நடலையல்லோம்;
ஏமாப்போம் பிணி அறுப்போம் பணிவோமல்லோம்,-

இன்பமே ஒரு நாளும் துன்பமில்லை."