Wednesday, May 26, 2010

எப்படி குட்டி கண்ணன் அசுரர்களை வென்றான்?

தலைப்பில் உள்ள கேள்வியை படிக்கும்போதே இரண்டு மாபெரும் முரண்கள்  விளங்கும்.




1. குட்டி கண்ணன் , கண்ணன் வாலிபனாகவோ, 30 வயதுக்கு மேற்பட்டவனோஇல்லை..குட்டி..அதாவது குழந்தை கண்ணன்.

ஆச்சரியம்...ஒரு குழந்தை அசுரர்களை ஜெயிக்கிறது!!!

2. அசுரர்கள் , மாபெரும் வீரர்கள், கோபக்காரர்கள், பலம் கொண்டு தாக்குபவர்கள்.
அதைவிட ஆச்சரியம்..இவ்வளவு பெரிய வீரர்கள் குழந்தையிடம் தோற்கிறார்கள்!!

இது வெறும் புராணம்தானே.!! புராணங்களை உண்மை என்று ஏற்றுகொள்ளவேண்டிய அவசியமில்லை
என்று நாம் நினைக்கலாம். என்னை பொறுத்தவரை கண்ணன் இருந்தானா இல்லையா என்பதை விட
அவன் மூலமாக அந்த புராணத்தை எழுதிய மனிதர்கள் சொல்லவருவது என்பதே முக்கியம் என்றுபடுகிறது.
அதன் அடிப்படை மனோத்தத்துவம் புரிந்துவிட்டால் அந்த புராணம் மிகவும் நன்மைதரக் கூடியதாக இருக்கும்.

அப்படி யோசிக்கும் போது இங்கே நமக்கு தெரிந்த “வலியவன் எளியவனை வெல்வான்”என்பது இந்த விஷயத்தில்
ஒத்து போகும். ஆம், கண்ணன் எல்லாம் வல்ல கடவுள், அதனால் தன் சிறுவயதிலேயே அசுரர்களை அழிக்க
முடிந்தது என்று முடிவு கட்டிவிடலாம். அதற்கும் என் மனம் ஒத்துபோகவில்லை. இன்னும் யோசிக்கிறேன்.

இங்கே வேறு ஒருவகை தத்துவத்தை என்னால் பார்க்க முடிகிறது. கண்ணன் ராமனை போல அல்ல, ராமன் வாழ்க்கையை
ஒரு பெரிய வேலையாக, கடமையாக, தொழிலாக ஏற்றவன். கண்ணன் அப்படி அல்ல, அவனுக்கு எல்லாமே விளையாட்டு.
எதிரிகளை கொல்வதும், கோபியரின் மனதை வெல்வதும் என எல்லாமே அவனுக்கு விளையாட்டு.

எனவே, அசுரர்களை அழிப்பதை ஒரு விளையாட்டாக செய்திருக்கிறான் கண்ணன். ஆம், அவனுக்கு பெரிதாய் எந்த
சக்தியும் தேவைப்படவில்லை. அசுரர்களின் கோபமும், ஆத்திரமுமே அவர்களை அழித்துவிட்டது. கண்ணன் அதை
தூண்டிவிட்டால் மட்டும் போதும்.

என்னது...? அசுரர்களின் கோபமே அவர்களை கொன்றதா? என்று கேட்கலாம்.
ஆம்,உண்மை என்னவோ அதுதான்.

இதற்குமுன் நீங்கள் ஜூடோவை பற்றி அறிந்துகொண்டால் இது உங்களுக்கு புரியும். ஜூடோ என்பது ஒரு மல்யுத்த கலை.
கராத்தெ, குங்ஃபூ போல் அல்லாமல் இது சற்றே அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத கலை. இந்த கலையின் அடிப்படை விதியே,
கோபப்படுபவன் தோற்பான் அல்லது தாக்குகிறவன் தோற்பான் என்பதுதான். அப்படி எதிராளியை முதலில் தாக்கவிட்டு,
அவனின் தாக்குதலை முழுமையாக ஏற்றுகொள்ளும்போது அது நமக்கு இரண்டுமடங்கு பலத்தை தருகிறது. அதே போல் எதிராளியும்
விரைவில் சோர்ந்துபோய்விடுகிறான். இப்படியாக, எதிராளியை கோபப்படுத்தியே வெற்றிபெற்றுவிடலாம்.

அதற்காக, கண்ணன் ஜூடோ கற்றவன் என்று சொல்லவரவில்லை. அவனுடைய “டெக்னிக்” ஜூடோவை ஒத்ததாக இருக்கிறது
என்பதே இதன் பொருள்.

அதே போல் கண்ணன் அந்த சண்டையில் வெற்றிபெற வேண்டும் என்கிற நோக்கத்தோடும் வெறியோடும் இருந்திருந்தால் சில அசுரர்களிடம்
தோற்றிருப்பான். ஆனால் அவனுக்கு வெற்றி தோல்விகள் மீது பற்றில்லை, எனவே எல்லாரையும் தூக்கிப்போட்டு துவம்சம் செய்ய அவனால்
முடிந்தது. எப்படி? வெற்றி பெற நினைக்காமல் எப்படி வென்றான்?

அடுத்த பாகத்தில் பார்ப்போம்!!



(டிஸ்கி) : இது மதப்பிரச்சாரத்திற்கான பதிவு அல்ல. கண்ணனை புகழ்வது என் நோக்கமுமல்ல. அவனை கொண்டு அந்த காலத்து மனிதர்கள் நமக்கு என்ன சொல்லவருகிறார்கள் என்பதை ஆராய்வதே என் நோக்கம்..!!

Wednesday, May 5, 2010

ஒரு பெரிய்ய்ய்ய்ய விஷயம் - ஒரு குட்டி கதையில்!!

இந்த நாளை கொண்டாடுங்கள்!!




அந்த துறவிகள் கூடத்தில் புதிதாக சேர்ந்திருந்தார் அந்த இளம் துறவி.
மாலை நேரத்தில் அந்த ஆசிரமத்தில் இருக்கும் மூத்த துறவியிடம் சென்று ஆசிப்பெற்றுவிட்டு
தன் அறைக்கு திரும்பினார் துறவி. விடிகாலை தியானத்திற்காக சீக்கிரம் எழுந்தார் அந்த இளம் துறவி.
வெளியே வந்து பார்த்தவருக்கு ஒரே ஆச்சரியம்..அந்த மூத்த துறவி மகிழ்ச்சியாக நடனமாடிக்கொண்டிருந்தார்.
இந்த இளம்துறவிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. “என்னடா இந்த மனிதர் இப்படி குதிக்கிறார்..ஆடுகிறார்..பாடுகிறார்?..ஒருவேளை இவருக்கு
பைத்தியமோ” என்று நினைத்துகொண்டார்.

பிறகு அடுத்த கட்ட வேலைகள் வந்து சேர..இந்த விஷயத்தை மறந்து போனார்.
இரவு படுக்க போகும் போதும் இதே போல மூத்த துறவி குதித்தாடி கொண்டே தன் அறைக்கு செல்வதை இந்த இளம்துறவி பார்த்துவிட்டார்.

“என்ன இந்த மனிதர் இப்படி செய்கிறாரே..குழந்தைதனமாக அல்லவா இருக்கிறது” என்று நினைத்தபடியே தூங்கிப்போனார்.

அடுத்த நாள் காலையும் அதே போல் மூத்த துறவி குதியாட்டம் போட..
இந்த இளம்துறவிக்கு ஆர்வம் தாங்கவில்லை.. நேரடியாக கேட்டே விடுவது என்று முடிவு செய்து அவரை நெருங்கினார்.

மூத்த துறவி இவரை பார்த்து புன்னகைக்க..
இவர் தன் சந்தேகத்தை கேட்டார் : “அய்யா, கடந்த இரண்டு நாட்களாக நானும் கவனித்து வருகிறேன்..நீங்கள் தினசரி காலையும்
இரவு தூங்க செல்வதற்கு முன்னும் இப்படி மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறீர்கள்..இது ஏன்? அப்படி என்ன விஷயத்தை சாதித்ததால்
இந்த மகிழ்ச்சி? எனக்கும் சொல்லுங்களேன் “ என கேட்கிறார்.

அந்த கேள்வி மூத்த துறவியை இன்னும் சிரிப்பு மூட்டியது. விழுந்து விழுந்து சிரித்தார்.
இப்போது அந்த இளம்துறவியை பார்த்து கேட்டார் : “எதாவது சாதித்தால் தான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா என்ன?”என்று.

இவரும் ”ஆமாம், அதுதானே மகிழ்ச்சி”என்று சொல்ல..

மூத்த துறவி “அப்படி பார்த்தால் நான் இங்கே உன்னோடு பேசிக்கொண்டிருப்பதே சாதனை தான்” என்றார்.

இளம்துறவிக்கு இன்னும் புரியவில்லை. “எப்படி வெறுமனே பேசுவதே சாதனையாகும் ?” என்று கேட்டார்.

துறவி கொஞ்சம் நிதானித்து விளக்கினார் “ இன்று நீ என்னிடம் பேச, இந்த கேள்வியை கேட்க இறைவன் அல்லது இயற்கை உன்னை
இன்னும் உயிரோடு வைத்திருக்கிறதே..அது சாதனை தான். இன்று காலை நீ மரணத்தை வென்று விழிந்தெழுந்துவிட்டாய். இதோ
என் பேச்சை கவனிக்கும் இந்த கணம் நீ மரணமடையவில்லை..எனவே நீ மரணத்தை வென்று வாழ்கிறாய்....இப்படி உலகையே அச்சுறுத்தும்
மரணத்தை சர்வ சாதரணமாக வெற்றிகொள்வது சாதனை இல்லையா..இதற்கு நீ மகிழ்ச்சி கொள்ள வேண்டாமா?” என்று கேட்கிறார்.



இளம்துறவியின் கண்கள் பனித்தன. மகிழ்ச்சி அவரையும் தொற்றிகொள்ள..அவரும் எழுந்து நடனமாட துவங்கி விட்டார்.

.....

இந்த கதையை படித்து முடிக்கும் வரை எல்லாமே சரியாக நிகழ்ந்திருக்கிறது. உங்கள் கணினி சரியாக இயங்குகிறது. உங்களுக்கு கண் பார்வை
தெரிகிறது. நீங்கள் அழகாக மூச்சு விடுகிறீர்கள். சொல்லப்போனால் இன்னும் உயிரோடு தான் இருக்கிறீர்கள்..எனவே மகிழ்ச்சி கொள்ளுங்கள்.
சோதனைகளை எல்லாம் சாதனையாக்குங்கள்.

(பி.கு)இது முழுக்கதையும் எங்கிருந்தும் எடுக்கபடவில்லை. என் எண்ணங்களில் உதித்தது தான். :)