Monday, May 30, 2011

சோகமாய்...ஒரு கவிதை...!!இருப்பதில் இருப்பது
ஏதுமில்லை எனவே
இருப்பதா வேண்டாமா
யோசிக்கிறேன்..

பொறுமை என்னை
போவென விட்டபின்
பொருப்பதா போகவா
யோசிக்கிறேன்..

நன்மையும் தீமையும்
தீர்க்கமாய் தெரிந்தபின்
தீயில் தீய்ந்திட
யோசிக்கிறேன்..

சுட்ட பழங்கள் எல்லாம்
சுடாமல் போனபின்
சுடலையில் சுடப்பட
யாசிக்கிறேன்..

அண்டமும் பிண்டமும்
அவனே ஆனப்பின்
அணைவதா எரிவதா?
யோசிக்கிறேன்..

நேசங்கள் அத்தனையும்
வேஷங்கள் ஆனப்பின்
காற்றோடு கரைந்திட
யாசிக்கிறேன்..

மண்ணும் நீரும்
கொஞ்சம் காற்றும்
கலவையாய் கலந்து
கொடுத்த உடம்பை
கவனமாய் கழட்டிவிட்டு
கரைந்திட போகிறேன்..

சிரித்ததும் போதும்
சிரிக்க வைத்ததும் போதும்
அழுததும் போதும்
இந்த அன்பான மானுடத்தில்

வருந்துகிறேன் 
இங்கு வந்தமைக்கு
திரும்புகிறேன் 
என் தாய்வீட்டிற்கு!!Monday, May 23, 2011

தாழ்வு மனப்பான்மையிலிருந்து வாழ்வு மனப்பான்மைக்கு - 2


உன் தந்தை தாயை கொல்லாமல் நீ சுதந்திரம் அடைய முடியாது - புத்தர்

என்ன இப்படி சொல்லிட்டாரு.. பயப்படாதீங்க. இந்த கொலைக்கு வழக்கு கிடையாது.
கைது கிடையாது. போலீஸ் இல்லை. ஏன் குற்றவாளிக்கூட இல்லை. சொல்லப்போனால்
குற்றவாளியை திருந்த வைக்கத்தான் இப்படி புத்தர் சொன்னார்.

அப்படியா? அப்போ யார் அந்த குற்றவாளி..?


நீங்க தான். வேற யாரு.. ம்ம்..உண்மைதான். எல்லா தாயும் தந்தையும் உங்களை
குற்றவாளிகளாகவே வளர்க்கிறார்கள். எப்படி? சமுதாயத்திற்கு எதிராக செயல்படும் எவரும்
குற்றவாளிதானே.. எனவே உங்களை முடமாக்கி, சிறகுகளை அறுத்து, இந்த சமுதாய
சிறைக்குள் சரிவர பொருந்த வளர்க்கிறார்கள். அப்படி வளர்ப்பதால் நீங்கள் உங்கள் தனித்தன்மையை
கொன்றுவிடுகிறீர்கள். உங்கள் சுதந்திரத்தை அடமானம் வைத்துவிட்டீர்கள். உங்கள் உண்மை அன்பை
நீங்களே உதாசீனம் செய்துவிட்டீர்கள். உங்கள் சுயத்தை பாதுகாப்பு தேடும் கோழைத்தனத்திற்காக கொன்றுவீட்டீர்கள்.
எனவே நீங்கள் குற்றவாளிதான்.

சரி இந்த குற்றவாளி திருந்த முடியாதா? முடியும்.

எப்படி? என் தந்தை தாயை கொல்லணுமா?

கண்டிப்பா.
 ஆனா...வெளியில் இருக்கும் அவர்களை சொல்லவில்லை. உங்களுக்குள் இருக்கும் அவர்களின் குரல்களை கொல்லவேண்டும். அவைகள் தான் உங்களுக்குள் இருந்து உங்களையே அழிக்கும்
விஷம்.அவைகள் உங்கள் சிறுவயது முதலே உங்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி வளரவைக்கப்பட்டுள்ளது.
இப்போது உங்களின் வார்த்தைகளில் 85% அவர்களின் வார்த்தைகள் தான். உங்களின் எண்ணங்களின் 95% அவர்களின் எண்ணங்கள் தாம்.
இப்படி நீங்கள் வெறுமனே அவர்களின் நகலாக இருக்கிறீர்கள்.வெறும் தாளாய் இருந்த உங்கள் மனத்தில்
இப்போது முழுக்க முழுக்க அவர்களின் கிறுக்கல்கள். உங்களை நீங்கள் வெறும் தாளாய் கண்டெடுக்க முடியாதபடி மொத்தமாக
கிறுக்கி தள்ளி இருக்கிறார்கள்.

இளம் வயதில் உங்களை நீங்கள் உணர ஆரம்பிக்கும்போது, மெல்ல அந்த கிறுக்கல்கள் உங்களை உறுத்துகிறது.அது இன்றைய
சூழலுக்கு சம்பந்தமில்லாமல், ஆனால் தவிர்க்க முடியாத ஒரு கட்டளையாய் உங்களை துன்புறுத்துகிறது. என்ன செய்வீர்கள் பாவம்..
உங்கள் மனமே இரண்டாய் பிளந்து ஒன்று சூழ்நிலைக்கேற்ப செயல்பட துடிப்பதும், ஒன்று உங்கள் பெற்றோரின் கட்டளைகளுமாய்
குழம்பி நிற்கிறது. இதனால் இயலாமை பிறக்கிறது. தாழ்வு மனப்பான்மை துவங்குகிறது.

இப்படி சிறுக சிறுக சறுக்கி தாழ்வு மனப்பான்மையில் புதை சேற்றில் மாட்டிகொண்டீர்கள்.
போதும், இனிமேலும் நம்மை நாமே துன்புறுத்திகொள்ளுதல் ஆகாது. தாயும் தந்தையும் பாதைகள்.
ஆனால் கொஞ்சம் பேதைகள். அவர்கள் செய்வது என்னவென்று அவர்களுக்கே தெரியாத பேதைகள்.
சாவி கொடுத்த பொம்மைகளாய் சமுதாயத்திற்காக ஆடுகிறார்கள். அவர்களை சொல்லி குற்றமில்லை.
அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான். அவர்களும் உங்களை போல் அவர்களின் பெற்றோரின் குப்பைகளை
சுமந்து நிற்கிறார்கள். அவர்களை மன்னிப்போம், அடுத்து ஆகவேண்டியதை பார்ப்போம்.

முதலில், எங்கெங்கு அச்சம் எழுகிறதோ, அங்கங்கே போய் நில்லுங்கள். பெண்ணை கண்டால் பயமா?
பேச துணிச்சல் இல்லையா? உலகை கண்டால் நடுக்கமா? ஓடும் நதியில் நீந்த பயமா? எங்கும் எதிலும்
அச்சம் தெரிந்தாலும் அதை துணிந்தே செய்யுங்கள். தவறுகளின் கற்பவனே தன்னம்பிக்கைக்கு உறியவன்.
உங்கள் தவறுகளில் தேர்ச்சி பெருங்கள். கல்லடி பட்ட மரமே பழுக்கும். இது புதுமொழி.அடிபடுங்கள்.
அடிகள் படிகளாகட்டும். அவை உங்கள் சுயத்திற்கு உங்களை கொண்டு சேர்க்கட்டும். பெற்றோர்
பெற்றோராய் மட்டும் இருந்தால் போதும். வளர்த்தோராய் நமக்கு நாமே இருப்போம்.

அப்படி வளர்வதே வளர்ச்சி. இப்போதுதான் உங்கள் காலில் நீங்கள் நிற்கிறீர்கள். உங்கள் தோள்கள்தான்
உங்கள் சுமை சுமக்கிறது. உங்களின் பொறுப்பு உங்கள் கைகளில் இருக்கட்டும். இனி நீங்கள் வாழும்
வாழ்க்கை உங்களுக்கானதாய் இருக்கட்டும்.

Tuesday, May 17, 2011

தாழ்வு மனப்பான்மையிலிருந்து வாழ்வு மனப்பான்மைக்கு...பொதுவாகவே மேலைநாட்டு அறிஞர்களுக்கும், ஏன் நமது நாட்டு அறிஞர்கள் சிலருக்குமே ஒரு கருத்து உண்டு.
அதாவது இந்தியா ஒரு இறந்த நாடு என்று. அட..!! ஏன் இவர்கள் இப்படி சொல்கிறார்கள்?
காரணம் உண்டு. அது நாம் நமக்குள் சுமக்கும் அழுத்தமான ஆழமான தாழ்வுமனப்பான்மை. அது ஒரு நாடு
முழுக்க பரவி பரதிபலிப்பதால் இந்தியா தாழ்வுமனப்பான்மை கொண்ட மக்கள் நிறைந்த இறந்த நாடாக இருக்கிறது.

 அடிப்படைகள் புரிந்த எந்த விஷயமுமே
சீக்கரம் சரிசெய்யக்கூடியதாய் மாறிவிடும் இல்லையா.. சரி தாழ்வு மனப்பான்மைக்கான அடிப்படைகள் என்ன?

முதலில் பால்ய பருவம்:

நம் நாட்டில் குழந்தைகளை மிகவும் குழந்தைத்தனமாக வளர்க்கப்படுகிறார்கள்.
குழந்தைகள் வெறுமனே தாய் தந்தையரோடு மட்டும் வளராமல் அவர்களின் சொந்தகளோடும் வெளிவட்டார நட்புகளோடும்
இருக்க அனுமதிக்க வேண்டும். வெறுமனே தாய் தந்தையே உலகம் என்றிருந்தால் குழந்தைகளின் சிந்தனைத் திறன் குறைவது
மட்டுமில்லாமல், படிப்பிலும், விளையாட்டிலும் ஆர்வமில்லாமல் இருக்கும். அதிகமான நட்புறவு கொண்ட குழந்தைகள்
வேகமாகவும், விவேகமாகவும் இருப்பார்கள். சுறுசுறுப்பும், எல்லாரிடமும் எளிதில் பழகும்விதமாகவும் இருப்பார்கள்.
இதனால் அவர்களின் தாழ்வு மனப்பான்மை அளவு குறைவாகவே இருக்கும்.

முதலில் நாம் குழந்தைகளின் அங்க அடையாளங்களை சுட்டிக்காட்டி அவர்களை குறைகூறுதல் கூடாது. அது முதல்கட்ட
தாழ்வு மனப்பான்மைக்கான அடிப்படை.

அடுத்து குழந்தைகளை யாரோடும் ஒப்பிட்டு பேசாதீர்கள். அது மிகவும் மோசமான வழக்கம். அப்படி பேசுவதால்
குழந்தைகள் மிகவும் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். எல்லா குழந்தையும் சச்சினாகவோ, விஸ்வநாதன் ஆனந்தாகவோ பிறப்பதில்லை.
பிறக்காது. எனவே, உங்கள் குழந்தைகளின் தனித்தன்மையை புரிந்துகொண்டு அவனை/அவளை வளர்ப்பதே சிறந்தது. பிறரின் ஜெராக்ஸ்
காப்பியாக உங்கள் குழந்தையை வளர்க்கும் பாவத்தை தவறியும் செய்துவிடாதீர்கள்.

மூன்றாவது முக்கியமான விஷயம். குழந்தைகளை அடிப்பது. இது மிகவும் மோசமான, மனிதத்தன்மையற்ற செயல்.
ஏன் குழந்தையை அடிக்கிறீர்கள். திருப்பி அடிக்கமாட்டான்/மாட்டாள் என்கிற தைரியம் தானே... இதே கோபத்தை உங்களைப்போன்ற
சக வயதினரிடமோ, அல்லது ஒரு இளைஞரிடமோ காட்டிப்பாருங்கள். பற்கள் நொறுங்கிவிடும். குழந்தைகளை அடித்துதான் வளர்க்கவேண்டும்
என்று எவரேனும் சொன்னால், அவர்கள் அறிவு இன்னும் வளரவே இல்லை என்றுதான் அர்த்தம். ஒன்றை புரிந்துகொள்ளுங்கள். எப்போது
நாம் நம் குழந்தைகளின் நண்பனாக மாறுகிறோமோ அப்போதே அவர்கள் மாற ஆரம்பித்துவிடுகிறார்கள்.

அன்பை சொல்லிக்கொடுங்கள். அரவணைப்பை தாருங்கள். அவனை/அவளை அவனாக/அவளாக இருக்கவிடுங்கள். நீங்கள் பாதுக்காப்பை மட்டும்
தந்தால் போதும். இந்த சின்னஞ்சிறு பறவைகள் பாசமாய் கூட்டைத்தேடி வரும். தாயும் தந்தையுமே குழந்தைகளின் முதல் நண்பர்களாகட்டும்.

தாழ்வு மனப்பான்மை ஒழிந்து வாழ்வு மனப்பான்மை மலரட்டும்..

தொடரும்....

Monday, May 9, 2011

தியானமும் நானும்..!!
எவ்ளோ நாள் ஆச்சு.. அடடா.. என் வலைப்பக்கத்தை பார்க்க எனக்கே சங்கடமாய் இருக்கிறது.
இருந்தாலும்.. பிஸியாக இருந்த அளவுக்கு அது இப்போது ரெஸ்ட் எடுத்துகொண்டிருக்கிறது என்று ஒரு ஆறுதல்
சொல்லிகொள்கிறேன்..

நான் தியானம் பயில்கிறேன்.. ஆமாம்...உண்மைதான்..அட நிஜமாப்பா, ஆனால் பொதுவாக எல்லாரும் பயில்வது
போல் பத்மாசனம் போட்டு அமர்ந்து கண்ணை மூடி, முதுகை நிமிர்த்தி, மூச்சை இழுத்து இழுத்துவிட்டு, இப்படி
எதுவுமே செய்வது இல்லை. அதே போல் தியானம் செய்தே ஆகவேண்டும் என்று என்னை நானே கட்டாயப்படுத்திகொண்டதும்
இல்லை. எப்போது பசிக்கிறதோ அப்போது உண் என்பது போல எப்போது மனம் ஓய்வாய் அமைதியாய் இருக்க ஏங்குகிறதோ
அப்போதெல்லாம் தியானம் செய்ய தயாராகிவிடு என்பது எனது கொள்கை.

பொதுவாக எல்லாரும் மனம் அலைபாயும்போதும், கோபத்தில், ஆசையில், ஏக்கத்தில் கொதிக்கும்போதும் மட்டுமே தியானத்தை
நினைவுபடுத்தி மனதை கட்டுபடுத்தும் ஒரு முயற்சியாக அதை செய்கிறார்கள். ஆனால் மனதை கட்டுபடுத்தினால் மட்டும்
மனம் எதையும் சாதித்துவிடும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இது ஓடும் ரயிலை ட்ராக்கில் நின்றுகொண்டு
இரண்டு கையால் தடுக்க முடியும் என்று முயற்சிப்பதை போல.

ஒரு ரயிலை நிறுத்த அதன் அடிப்படை அம்சங்கள் தெரிந்திருக்க வேண்டும். எந்த லிவரை இழுத்தால் ரயில் வேகம் குறையும்,
எந்த லிவர் ப்ரேக்காக செயல்படுகிறது என்று முழுமையாக ஒரு ரயில் என்ஜினை புரிந்தவருக்கே ரயிலை நிறுத்துவது சாத்தியம்.

உன் மனதை பற்றி நீ சரியாக புரிந்துகொண்டால் அதை கொஞ்சம் கொஞ்சமாய் கவனித்து கவனித்து அதன் அடிப்படைகளை
புரிந்துகொள்ள முடியும். அப்படி புரிந்துகொண்ட பின் அதை நிறுத்துவது, அதை உனக்கேற்றவாறு செயல்பட வைப்பது,
என அது சுலபமாக உன் கைக்குள் வந்துவிடும்.

மனம் ஓய்வை தேடும் நேரத்தில் அதை புரிந்துகொள்வது சுலபம். ஆனால், உனக்கு மனம் எப்போது ஓய்வை தேடுகிறது என்பதும்
தெரியாதே!!, இருக்கட்டும், எப்போதெல்லாம் உன் மனம் நிதானமாய் நிம்மதியாய் இருப்பதாய் உணர்கிறாயோ,
அதாவது உனக்கு பிடித்தவரோடு பேசும்போது, நடக்கும்போது, உனக்கு பிடித்த புத்தகம், பாடல், கவிதைகள் படிக்கும்போது
இப்படி பல்வேறு சமயங்களில் மனம் ஓய்வாய் இருக்கும். அந்த சமயங்களில் அதை கவனி.

வெறுமனே கவனி. நீ அதனிடம் பேச முயற்சி செய்யவே செய்யாதே. இது தவறான போக்கு. அப்படி பேசுவது அர்த்தமற்றது.
வெறுமனே கவனித்தல் போதுமானது. அப்படி கவனித்து வர வர அதன் அடிப்படைகள் புரிந்துவிடும்.

அப்போது அதை தாண்டி செல்வது சுலபமானது.

மனதை தாண்டி என்ன இருக்கிறது? எல்லாம் மனதை தாண்டிதான் இருக்கிறது. மனம் வெறும் காவலாளி. சொர்க்கத்தின் காவலாளி.
அவன் அவ்வளவு சீக்கிரன் உன்னை உள்ளே விடமாட்டான். அவனை தாண்டி நீ சென்றுவிடு. சென்றுவிட்டால், அப்போது புரியும்
அந்த சொர்க்கமே உன்னுடையது என்று.

நன்றி,
ரங்கன்.