Showing posts with label புலம்பல்கள். Show all posts
Showing posts with label புலம்பல்கள். Show all posts

Monday, April 23, 2012

பெண்களும் அழகியலும்..என் வருத்தமும்





..க்ரீம்கள், லோஷன்கள், ஸன்ஸ்க்ரீன்கள், பீல்-ஆஃப்கள், சோப்புகள் இப்படி அத்தனையும் விற்கிறது இந்த வியாபார உலகம்.
அதை கண்ணை மூடிகொண்டு வாங்கி பூசிகொள்கிறது இந்த பெண்களின் உலகம்(கொஞ்ச காலமாய் ஆண்களின் உலகமும்)

. ஃபேர் அண்ட் லவ்லியின் ஏழே நாளின் சிகப்பழகு பிரச்சாரம், என் வீட்டில் இருபது வருடமாய் நிரூபிக்கமுடியாமல்
மீண்டும் மீண்டும் முயற்சி செய்யப்படும் ஒரு அறிவியல் ஆய்வு.

நான் ஒரு நாள் என் அம்மாவிடம் சொன்னேன் “மேக்கப்பில், மேற்புறத்தில் அழகாய் இருப்பது அழகே இல்லை. உள்ளிருந்து ஒரு தெளிவு உன் கண்களிலும்
முகத்திலும் ஒளிரும்பொழுது வருவதே அழகு” என்று சொல்லி புரியவைத்தேன். அன்றே அவர் அந்த பேர் அண்ட் லவ்லியை தூக்கி எறிந்துவிட்டார்.

நான் ஒன்றும் தலை சீவாதே, சுத்தமாய் இருக்காதே என்று சொல்லவில்லை. கண்டமேனிக்கு எதையாவது தடவி, பிறரைவிட நான் அழகு என்று
காட்டிகொள்ள போராடாதே என்று சொல்கிறேன். யாராவது “உன்னைவிட நான் பெரிய முட்டாள் தெரியுமா? பார் என் முட்டாள்தனத்தை” என்று பரைசாற்றுகொள்வார்களா?

இப்பொழுதைய பெண்களை கவனிக்கையில் ஒன்று நன்றாக தெரிகிறது.
தன்னை எவ்வளவு வருத்திகொள்ளவும் அவர்கள் தயார், ஆனால் யாராவது ஒருவராவது தன் அழகை ரசித்துவிட வேண்டும் என்கிற மனப்பாங்கிற்கு வந்துவிட்டனர் போல.
இருக்கமான சுடிதார்களும், ஜீன்ஸும், காலை, உடலை சுற்றி, இறுக்கிகொண்டிருக்கும் ஆடைகளும், ”அய்யோ கடவுளே, ஏன் இப்படி இருக்கிறார்கள்” என்று என்னை மனதிற்குள்
அலறவைக்கிறது. தன்னை சவுக்கால் அடித்துகொண்டு பணம் கேட்பார்களே சிலர், அவர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? இதுவும் ஒருவகை குரூரம் தானே. அவன் சாட்டையால் அடித்துகொள்கிறான், இவள் ஆடையால் இறுக்கிகொள்கிறாள். This is Masochism.

வயதுக்கேற்ப ஆடைகள் அணியலாம் என்பது என் கருத்து. 30 வயதை கடந்தவர்கள், அதற்கேற்ற ஆடைகளை அணிவதை விடுத்து, 20 வயது பெண்களைப்போல் சுடிதாருக்குள் சிறைப்பட்டு சித்திரவதைப்படுவது எந்த விதத்தில் புத்திசாலித்தனம் என்று எனக்கு புரியவில்லை.

அன்றொரு நாள் அப்படித்தான், ஒரு முகூர்த்தத்திற்கு செல்ல வேண்டி இருந்தது, வேர்க்க விருவிருக்க பட்டு புடவை அணிந்து வந்தார், பார்க்கவே பாவமாக இருந்தது.
வெயிலில் செல்லப்போகிறோம், ஒரு நீட்டான காட்டன் புடவை அணியலாமே, அதுவுமில்லாமல், அங்கே கும்பலாக இருக்கும், அங்கே இன்னும் வியர்க்குமே என்றேன்.
நான் ஒருத்தி மட்டும் அப்படி போவதா? என்று வாதத்திற்கு வந்தாரே தவிர, என்பக்க நியாத்தை கேட்கவில்லை. சரியென்று விட்டுவிட்டேன்.

ஒரு தெளிந்த மனிதன் தன்னை நிம்மதியாக வைத்திருப்பவைகளையே தேர்ந்தெடுப்பான் என்பார்கள், தெளிவானவர்கள் என்று ஆண்களால் நினைக்கப்பட்டுகொண்டிருக்கும் பெண்கள், இப்படி மிகச்சிரிய விஷயங்களில் கூட தெளிவாய், நிம்மதியாய் இல்லாது இருப்பது வருத்தமளிக்கிறது.

பி.கு: மொத்த பெண்ணினமே இப்படி என்று சொல்லவரவில்லை,என் கண்ணுக்கு தெரிந்த மனிதர்களை, பெண்களை கண்டதில் எழுத தோன்றியது. எழுதுவிட்டேன்..!!

Sunday, March 13, 2011

விவேகானந்தர் புத்தகத்தை எரித்தேன்.. ஏன்?



ம்ம்ம்.. ரொம்ப வருடங்களாக அந்த புத்தகம் என் அலமாரியை அலங்கரித்து வந்தது. அதன் மீது எனக்கு ஒரு காலத்தில்
அளவுகடந்த காதலும் மதிப்பும் இருந்தது.  அந்த புத்தகத்தை படித்து முடித்திருக்கிறேன் என்று சொன்னாலே எல்லாரும்
ஆச்சரியப்படுவார்கள். கண்கள் விரியும். புருவங்கள் உயரும். எனக்கும் மகிழ்ச்சியும் கொஞ்சம் மேதாவி என்கிற அகந்தையும்
கூடும்.. அதே போல் கூடியது.

சில மாதங்களுக்கு முன் ஒரு நாள் ஒரு சின்ன சிந்தனை... இவ்வளவு படித்து என்ன கிழித்துவிட்டோம்? இரண்டு கொம்புகள்
முளைத்துவிட்டதா? சிறகுகள் எதும் முளைத்துவிட்டதா?
மேதாவி என்பதால் தலையில் ஒளிவட்டம் எதும் தெரிகிறதா?
என் அறிவை பாராட்டும் எல்லாரும் என் அன்பை பாராட்டியிருக்கிறார்களா?
பார்ப்பதை எல்லாம் பகுத்தாராய்ந்துகொண்டே  இருந்தால்.. ரசிப்பது எப்போது? சுவைப்பது எப்போது?
அருவியில் நின்று குளித்து கும்மாளம் போடாமல் அதன் வேகத்தை அளப்பவன் முட்டாள் தானே?
வாழ்க்கை எனும் மாபெரும் அருவி என்னை அள்ளி அணைத்து இன்பம் தரத் துடிக்கும்போது..
அதை எட்ட நின்று பகுத்தாய்ந்து என்ன புண்ணியம் கண்டேன்..?

மண்டைகனமும், மனதில் வெறுமையுமாய் வரண்டதொரு வாழ்க்கை தேவையா?
சிரிக்க தெரியாதவன் மனிதன் இல்லை என்பார்கள். நானும் சிரிப்பை தொலைத்திருந்தேன். என்னுடைய அறிவும் மூளையுமே
என் அன்பிற்கும் இதயத்திற்கும் எதிரிகளாய் மாறி நிற்பதை கண்டேன்.
கொஞ்ச நாள் இதைப்பற்றி யோசித்தபடி சுற்றி வந்தேன்.. சில வாரங்களில் பிறருக்கு அறிவுரை  கூறுதல் குறைந்தது.
இப்போது உலகம் கொஞ்சம் தெளிவாய் தெரிந்தது. அடுத்து வீணாக எனக்கு என்ன தெரியும் என்று காட்டிகொள்வதை நிறுத்தினேன்.
என்னை எவரும் எக்கேள்வியும் கேட்கதாவரை நான் எந்தவகையிலும் அறிவை வெளிப்படுத்தமாட்டேன் என்று உறுதிபூண்டேன்.
இந்த சிந்தனைகளின் உச்சகட்டமாய்.. என்னை என்னிடமிருந்தே பிரித்த எதோவொன்றை எரித்தால் என்னவென்று யோசித்தேன்.

என்னை பெரிய Intellectual Personஆக காட்டும் பொருட்களில் எதாவதை எரித்தால் என்னவென்று தோன்றியது.
கண்ணில் பட்டார் விவேகானந்தர். அவரை மதிக்கிறேன். அவரின் வார்த்தைகளின் மதிப்பும் எனக்கு நன்றாகவே தெரியும்.
ஆனால் இப்போது காப்பாற்றப்பட வேண்டியது நா. என்னை  என் அகந்தையிலிருந்து காப்பாற்றவேண்டி இருப்பதால்..

ச்ச்ரக்க்..  தீக்குச்சி எரிந்தது. அடுத்து அவரின் புத்தகமும். மனம் அமைதியானது. பேச்சு நின்றது. அகந்தை அகன்று அமைதி வந்தது. இதை எழுதுவதற்கு காரணம். படிப்பதும், அதன்படி நடப்பதும் நல்லதுதான். அதையே பிடித்துகொண்டு..
அவர் அதை சொன்னார்..இவர் இதை சொன்னார்..கலீல் ஜிப்ரான் சொன்னார், காக்கை பாடினியார் கரைந்தார் என்று
கூறி அலைந்து அசாதரணமாக தெரிய எனக்கு துளியும் விருப்பமில்லை. சாதாரணம் போதும். அதில் நான் சௌக்கியமாய் இருந்துகொள்வேன்.

உங்ககிட்டயும் MatchBox இருக்குல்ல?

Friday, October 9, 2009

Engineering College for Humans!!!! (எச்சரிக்கை- இது கொஞ்சம் கடுப்பான பதிவு!)

http://cdn.sheknows.com/articles/fighting-couple.jpg


இனியும் என்னால பொறுக்க முடியாது..
இனி களத்துல குதிச்சுட வேண்டியதுதான்.. எப்படியாச்சும் இந்த புத்திமதியை, ஆதங்கத்தை நம்ம வலையுலகத்துல கொட்டிடணும்னு முடிவு பண்ணிட்டேன்.

ஒரு பழமொழி உண்டு ..ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்னு..

அதுபோல..இப்ப இந்த மனுஷ இனத்தையே ரெண்டு பண்ணி மனுஷங்களே கொண்டாடிக்கிறாங்க..!

இந்த சேலம் மாநகராட்சியில ஒரு பெயர் சொல்ல விரும்பாத..கல்லூரியில..

கல்லூரி பேருந்து விடுறாங்க..(இதுல என்னா ஆச்சரியம்னு தானே கேக்குறீங்க.?)...
அதுல முன்னாடி உக்கார்ந்து வரணுமாம் பெண்கள்.. பின்னாடி பசங்க வரணுமாம்..

சரி..கழுத..போய் தொலையுதுன்னு உக்கார்ந்த அடுத்த கண்டிஷன் பொண்ணுங்க கிட்ட எக்காரணம் கொண்டும் பேசவே கூடாதாம். இதை நினைச்சு சிரிக்கிறதா..அழுவுறதா? இல்ல அந்த காலேஜ் பிரின்சிபாலை மிதிக்கிறதான்னு தெரியலை..!!

அதுமட்டும் இல்லாம பேசுனது தெரிஞ்சா ரெண்டு நாளு சஸ்பெண்டு வேறயாம்..!!

அசிங்கமா இல்லை..!! ஒரு மனுஷன் இன்னோரு மனுஷ ஜென்மத்துகிட்ட பேசுவதை.. மூணாவதா இன்னோரு மனுஷ ஜென்மமே தடுக்குது..!!

அப்பா சாமிகளா..! அறிவு ஜீவிகளா! உங்க எல்லாருக்கும் ஒரு பெரிய கும்புடு..
இனிமேவாச்சும் யோசிச்சு பேசுங்க..உங்க வீட்டுலயும் ஒரு பொண்ணோ பையனோ இருக்கும் என்கிறதை ஞாபகம் வெச்சுக்கோங்க..!!

ஆணின் இயல்புகள் பெண்ணிற்கும் ..பெண்ணோட இயல்புகள் ஆணிற்கும் நிச்சயம் தெரிஞ்சிருக்கணும்..அப்படி தெரியாதவங்க மனுஷங்களா? எவ்ளோவோ படிச்சிருக்கோம்.. இதை ஏன் கண்டு பயப்படுறோம்?

தன் சக இனத்(மனித இனம்)தின் சைக்காலஜியையும் அனாடமியையும் தெரிஞ்சுக்காத ஒரே இனம் நாமா தான் இருப்போம்...!!

ப்ளீஸ்... நான் சொல்ல வரது இதுதான்.. பெண் பெண்ணா அழகா லட்சணமா இருக்கட்டும்..ஆனால் அவளுக்கு ஆணிடம் பேசவும் பழகவும் தைரியத்தையும் தெளிவையும் இந்த சமூகம் வளர்க்கட்டும்..

இதுவே தான் ஆணுக்கும்..

ப்ளீஸ் மச்சீஸ், கேர்ள்ஸ்!! இனிமே உங்க வாழ்க்கைய நீங்க வாழுங்க..உங்க அப்பா அம்மா வாழ்க்கைய அப்படியே ஜெராக்ஸ் பண்ணிட்டு இருக்காதிங்க..ஆல் தி பெஸ்ட்..!!

பி.கு : என் ப்ளாகுல நான் என்ன வேணா எழுதுவேன் என்று சொல்லபோவதில்லை.. அதே போல் பிறருக்காக நான் எழுவதை நிறுத்த போவதும் இல்லை.. என்ன சில நேரம் இப்படி கடுப்பா டைப் பண்ணிடுறேன்..ஹாஹாஹஹ..!!