Showing posts with label உலகம். Show all posts
Showing posts with label உலகம். Show all posts

Saturday, November 19, 2011

நாமும், நமது வாழ்க்கையும்..!!








வாழ்க்கை..சிலர் என்னிடம் என்னடா வாழ்க்கை இது ? என்கிறார்கள்.
சிலர் என்னவொரு வாழ்க்கை அடடா!! என்கிறார்கள்.

இப்போது இவர்களில் யாரை நான் நம்புவது.? வாழ்க்கை கொடுமையும்
கசப்புமானதா? அல்லது இனிமையும் நிறைவுமானாதா? இப்படி
வாழ்க்கை எதன் பக்கம் என்று எண்ணிகொண்டிருந்த போது..

பட்டென மனதில் பட்டது ஒரு பொறி..வாழ்க்கை வெறுமனே வாழ்க்கை
மட்டுமே.. நம் மனத்தை கொண்டு அதை நல்லது என்றும் புகழ்ந்து பாடலாம்
..மோசம்..சுத்த மோசம் என்று ஏசவும் செய்யலாம்.

ஆனால்..போற்றுவார் போற்றட்டும்..தூற்றுவார் தூற்றட்டும் என்று
வாழ்க்கை அதன் வழியை பார்த்து வளர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

இன்னும் தெளிவாய் சொல்லவேண்டுமென்றால்.. பொதுவாக நம்மில் பலர்
கல்லை இடித்துவிட்டு, ”என் காலில் கல் இடித்துவிட்டது” என்று சொல்லும் ஆட்கள் தான்.
வெகு வெகு சிலரால் மட்டும்.. “தெரியாமல் நானே போய் இடித்துகொண்டேன்” என்று
நிதானித்து சொல்ல முடியும்.

ஆனால் கல் உங்களை இடிப்பதற்காகத்தான் அங்கே இருந்தாதா?
இல்லை கல்லில் இடிப்படுவதுதான்
உங்கள் நோக்கமா? இரண்டுமே இல்லை.
கல்லில் கால் மோதி கொண்டு வலியெடுக்கிறது. அதற்கு நம் மனதின்
விளக்கமே இடித்துவிட்டது என்பதும்..இடித்துகொண்டேன் என்பதும்.

நான் சொல்லவருவது மூன்றாவது வழி. வெறுமனே கால் கல்லில் இடித்துவிட்டது. அவ்வளவே..!!
Fact. Thats all. அதை நான் இடித்துகொண்டேன் என்றாலும், அது இடித்துவிட்டது என்றாலும்..
கல்லில் கால் மோதிகொண்டது என்பது மட்டுமே Fact.

வாழ்க்கையும் அப்படித்தான்.. உங்களை குஷிப்படுத்தவும் அது இங்கே இல்லை..உங்களை அழவைக்கவும்
அது இங்கே இல்லை. நீங்களே குஷியாகிகொள்கிறீர்கள்..நீங்களே வருத்தப்படவும் செய்கிறீர்கள்..மற்றபடி..
ரங்கராஜனுக்கோ, ஒபாமாவுக்கோ, பில்கேட்ஸுக்கோ, என் தெருவோர பிச்சைக்காரருக்கோ அது எந்த வகையிலும்
Commit ஆகவில்லை..ஆகப்போவதும் இல்லை.

நாளை காலை மனித இனமே இல்லாமல் போய்விட்டாலும்.. சூரியன் உதிக்கத்தான் போகிறது, நதிகள் ஓடத்தான்
போகிறது..கடலலைகள் கரைத்தொட்டு விளையாடத்தான் போகின்றன..நாம் ஒரு (.) புள்ளி அளவுக்குக்கூட இந்த பூமிக்கோ,
சூரியக்குடும்பத்திற்கோ முக்கியமானவர்கள் அல்ல. நாமும் ஒரு Accidental உயிரனங்கள் தான்.

அதனால், வாழ்க்கை அப்படி, வாழ்க்கை இப்படி என்று ஓவராக அலட்டிகொள்ளாமல், வந்த வாழ்க்கை நிறைவாய், அன்பாய்,இந்த
கட்டுரையை படித்துமுடிக்கும்வரை + அதற்கு மேலும் நம்மை உயிரோடு வைத்திருக்கும் இயற்கைக்கு நன்றி சொல்லி நலமாய் வாழுங்கள்..!!

Monday, May 23, 2011

தாழ்வு மனப்பான்மையிலிருந்து வாழ்வு மனப்பான்மைக்கு - 2


உன் தந்தை தாயை கொல்லாமல் நீ சுதந்திரம் அடைய முடியாது - புத்தர்

என்ன இப்படி சொல்லிட்டாரு.. பயப்படாதீங்க. இந்த கொலைக்கு வழக்கு கிடையாது.
கைது கிடையாது. போலீஸ் இல்லை. ஏன் குற்றவாளிக்கூட இல்லை. சொல்லப்போனால்
குற்றவாளியை திருந்த வைக்கத்தான் இப்படி புத்தர் சொன்னார்.

அப்படியா? அப்போ யார் அந்த குற்றவாளி..?






நீங்க தான். வேற யாரு.. ம்ம்..உண்மைதான். எல்லா தாயும் தந்தையும் உங்களை
குற்றவாளிகளாகவே வளர்க்கிறார்கள். எப்படி? சமுதாயத்திற்கு எதிராக செயல்படும் எவரும்
குற்றவாளிதானே.. எனவே உங்களை முடமாக்கி, சிறகுகளை அறுத்து, இந்த சமுதாய
சிறைக்குள் சரிவர பொருந்த வளர்க்கிறார்கள். அப்படி வளர்ப்பதால் நீங்கள் உங்கள் தனித்தன்மையை
கொன்றுவிடுகிறீர்கள். உங்கள் சுதந்திரத்தை அடமானம் வைத்துவிட்டீர்கள். உங்கள் உண்மை அன்பை
நீங்களே உதாசீனம் செய்துவிட்டீர்கள். உங்கள் சுயத்தை பாதுகாப்பு தேடும் கோழைத்தனத்திற்காக கொன்றுவீட்டீர்கள்.
எனவே நீங்கள் குற்றவாளிதான்.

சரி இந்த குற்றவாளி திருந்த முடியாதா? முடியும்.

எப்படி? என் தந்தை தாயை கொல்லணுமா?

கண்டிப்பா.
 ஆனா...வெளியில் இருக்கும் அவர்களை சொல்லவில்லை. உங்களுக்குள் இருக்கும் அவர்களின் குரல்களை கொல்லவேண்டும். அவைகள் தான் உங்களுக்குள் இருந்து உங்களையே அழிக்கும்
விஷம்.அவைகள் உங்கள் சிறுவயது முதலே உங்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி வளரவைக்கப்பட்டுள்ளது.
இப்போது உங்களின் வார்த்தைகளில் 85% அவர்களின் வார்த்தைகள் தான். உங்களின் எண்ணங்களின் 95% அவர்களின் எண்ணங்கள் தாம்.
இப்படி நீங்கள் வெறுமனே அவர்களின் நகலாக இருக்கிறீர்கள்.வெறும் தாளாய் இருந்த உங்கள் மனத்தில்
இப்போது முழுக்க முழுக்க அவர்களின் கிறுக்கல்கள். உங்களை நீங்கள் வெறும் தாளாய் கண்டெடுக்க முடியாதபடி மொத்தமாக
கிறுக்கி தள்ளி இருக்கிறார்கள்.

இளம் வயதில் உங்களை நீங்கள் உணர ஆரம்பிக்கும்போது, மெல்ல அந்த கிறுக்கல்கள் உங்களை உறுத்துகிறது.அது இன்றைய
சூழலுக்கு சம்பந்தமில்லாமல், ஆனால் தவிர்க்க முடியாத ஒரு கட்டளையாய் உங்களை துன்புறுத்துகிறது. என்ன செய்வீர்கள் பாவம்..
உங்கள் மனமே இரண்டாய் பிளந்து ஒன்று சூழ்நிலைக்கேற்ப செயல்பட துடிப்பதும், ஒன்று உங்கள் பெற்றோரின் கட்டளைகளுமாய்
குழம்பி நிற்கிறது. இதனால் இயலாமை பிறக்கிறது. தாழ்வு மனப்பான்மை துவங்குகிறது.

இப்படி சிறுக சிறுக சறுக்கி தாழ்வு மனப்பான்மையில் புதை சேற்றில் மாட்டிகொண்டீர்கள்.
போதும், இனிமேலும் நம்மை நாமே துன்புறுத்திகொள்ளுதல் ஆகாது. தாயும் தந்தையும் பாதைகள்.
ஆனால் கொஞ்சம் பேதைகள். அவர்கள் செய்வது என்னவென்று அவர்களுக்கே தெரியாத பேதைகள்.
சாவி கொடுத்த பொம்மைகளாய் சமுதாயத்திற்காக ஆடுகிறார்கள். அவர்களை சொல்லி குற்றமில்லை.
அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான். அவர்களும் உங்களை போல் அவர்களின் பெற்றோரின் குப்பைகளை
சுமந்து நிற்கிறார்கள். அவர்களை மன்னிப்போம், அடுத்து ஆகவேண்டியதை பார்ப்போம்.

முதலில், எங்கெங்கு அச்சம் எழுகிறதோ, அங்கங்கே போய் நில்லுங்கள். பெண்ணை கண்டால் பயமா?
பேச துணிச்சல் இல்லையா? உலகை கண்டால் நடுக்கமா? ஓடும் நதியில் நீந்த பயமா? எங்கும் எதிலும்
அச்சம் தெரிந்தாலும் அதை துணிந்தே செய்யுங்கள். தவறுகளின் கற்பவனே தன்னம்பிக்கைக்கு உறியவன்.
உங்கள் தவறுகளில் தேர்ச்சி பெருங்கள். கல்லடி பட்ட மரமே பழுக்கும். இது புதுமொழி.அடிபடுங்கள்.
அடிகள் படிகளாகட்டும். அவை உங்கள் சுயத்திற்கு உங்களை கொண்டு சேர்க்கட்டும். பெற்றோர்
பெற்றோராய் மட்டும் இருந்தால் போதும். வளர்த்தோராய் நமக்கு நாமே இருப்போம்.

அப்படி வளர்வதே வளர்ச்சி. இப்போதுதான் உங்கள் காலில் நீங்கள் நிற்கிறீர்கள். உங்கள் தோள்கள்தான்
உங்கள் சுமை சுமக்கிறது. உங்களின் பொறுப்பு உங்கள் கைகளில் இருக்கட்டும். இனி நீங்கள் வாழும்
வாழ்க்கை உங்களுக்கானதாய் இருக்கட்டும்.

Wednesday, March 23, 2011

நான் இந்தியனில்லை.. நான் இந்துவுமில்லை..!!




எனக்கு இன்னைக்கு காலைல தாங்க தோணிச்சு..
அட.. நாம இந்த நாட்டுல பிறந்தது நம்ம தலையெழுத்தா?
இல்லை எதேச்சையான ஒரு விஷயமா? ம்ம்ம்..
எனக்கு நல்லா தெரியும் இது தலையெழுத்து இல்லைன்னு.. எனக்கு மொட்டை போட்டபோது எடுத்த போட்டோஸ் எல்லாத்தையும்..
ஜூம் பண்ணி பண்ணி பார்த்தேன்.. ”இந்தியனாய் பிற”ன்னு எதுவும் எழுதலை.. ஸோ..நோ தலையெழுத்து..

அப்போ.. எதேச்சையா நடந்த ஒரு விஷயம்.. ஓ.. அப்போ நான் இந்தியனெல்லாம் இல்லை..
இங்க பிறந்ததால இந்தியன்னு மெச்சிகலாம்.. அப்போ இதுல என்ன பெருமை இருக்கு?
நிறைய பேரை பாருங்க.. நான் இந்தியன்.. நான் ஆரியன்.. நான் திராவிடன்.. நான் அது.. நான் இது..
ஸ்ஸ்ஸப்பா.. எத்தனை ”..ன்”கள்.. முடியல..

இந்தியா ராக்கெட் விட்டா.. ஆஹா..இந்தியனாய் இருப்பதில் பெருமை.. அதே இந்தியா வேற நாட்டுகிட்ட
(முக்கியமா பாகிஸ்தான்)கிட்ட தோத்துட்டு வந்தா.. அந்த விளையாட்டு வீரர்கள் வீட்டை இடிக்கிறது.. பொம்மை எறிப்பு, அப்புறம்
இந்தியனாய் இருப்பதே அவமானம்னு புலம்பல்.

ஏன் இந்த வெட்டி பந்தா..ஏன் இந்த வீண் சோகம், வெறுமனே லாஜிக்கா யோசிச்சாலே போதும் இந்த எல்லா “..ன்”களும்
காணாம போய்டும். அப்படி என்னத்த இழந்துட்டீங்க.. அப்படி என்னத்த சாதிச்சிட்டீங்க.. ஒன்னுமில்லை..
இன்னும் இமயமலைதான் உசரமா இருக்கு.. இன்னும் கடலன்னை உங்களை மீறி சுனாமியா வரத்தான் செய்யுது..
Then what is the point in all the "ians"?

ஸோ..யாருக்கும் அவங்க அவங்க நாட்டை நினைச்சு பெருமைப்பட்டுக்கவோ, கேவலப்பட்டுக்கவோ வேண்டிய அவசியம் இல்லை!!

..அடுத்து வருவது மதம்..

ஸேம் லாஜிக்.. எதேச்சையா ஒரு இந்து அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பிறக்கவேண்டியதா போச்சு.... உடனே நானும் இந்துவாம்..
என்ன நியாயம் இது? நான் இந்துவாக இருப்பதும் வேறுமதத்தினனாய் இருப்பதும் என் தனிப்பட்ட உரிமை. இவங்களா எப்படி என் முதுகுல
இந்துன்னு சீல் குத்தலாம்? முதுகுலனா கூட பரவாயில்லை..தெரியாது ..சட்டை போட்டு மறைச்சிடலாம்.. ஆனா
நெத்தில விபூதி, குங்குமம், அப்புறம் அதென்னது..ஆங்..சந்தனம்.. ஃபர்பெக்ட்.. தேசிய கொடி கணக்கா எங்கப்பா வெச்சிவிட்டு அனுப்புவாரு..
அவருக்காக அதை ஏத்துக்குட்டேன்..அவரோட மதத்துக்காக அல்ல!! அதை ஒரு கிறுஸ்துவ டீச்சர் அழிச்சப்போ ஒரு இந்துவா எனக்கு
கோபமே வரலை.. என் தந்தையின் பாசமான பிள்ளையா எனக்கு செம கடுப்பு.

இப்படி சின்னவயசுல இருந்தே மதம் என்னை எப்பவும் பாதிக்காம தொல்லை பண்ணாம இருக்கணும்னு நினைச்சேன்.. இன்னும் நினைக்கிறேன்..
பட்..உலகம் அப்படி இல்லை.. எப்போ பாரு மதபீத்தல்கள். என் கடவுள்தான் பெருசு, உன் கடவுள் டம்மி பீசுன்னு அடிச்சுக்கறாங்க.
ஏன்.. இந்துகளுக்குள்ளயே.. மூணுகண்ணன் சிவன் பெருசா? நாலுகை நாராயணன் பெரிசான்னு இன்னும் சண்டை....
(சின்னவயசுல அம்மா மூணுகண்ணன் வரான்னு சொல்லி சோறு ஊட்டுவாங்க.. ஒருவேளை இவராத்தான் இருக்குமோ?!)

இப்படி.. மதம் சம்பந்தமா அடிச்சிக்கிறது அர்த்தமே இல்லாத ஒரு வேளை. (எனக்கு சாமி கும்பிடுவதே அர்த்தமில்லாத வேலை)
எதேச்சையா ஒரு இந்து குடும்பத்திலோ, ஒரு இஸ்லாமிய அல்லது கிருத்துவ குடும்பத்திலோ பிறந்துவிட்டதால்..
நம்மை நாமே இந்து என்றோ, முஸ்லிம் என்றோ, கிருத்துவன் என்றோ நினைத்துகொண்டால் அது முட்டாள்தனம்.

சோ.. நம்மை பற்றி எதுவும் (கடவுள் உள்பட) எதுவும் கவலைப்படவில்லை. நாம் தான் தேவையே இல்லாமல் எல்லாவற்றையும்
பற்றி கவலைப்பட்டு, நேரத்தை வீணாக்கி மனநோயாளிகளாய் திரிகிறோம்.

மதமும், நாட்டு பற்றும் போலி வேஷங்கள். ஏமாற வேண்டாம்.

கொஞ்சம் மாத்தி யோசிங்க.. நான் மனிதன்ன்னு பெருமைப்படுங்க.. உலக உயிரங்களிலேயே தன்னை தனக்குள் தேடும்
ஒரே உயிரனம் மனிதன் மட்டுமே.
வாழ்வை ரசித்துவாழ, நம்மால் மட்டுமே முடியும். அன்பும், அரவணைப்பும், கவிதையும், காதலும், பாட்டும், ஓவியமும்,
கலையும், நயமும், ஆடலும் பாடலுமாய்.. மட்டற்ற மகிழ்ச்சியோடு வாழும் ஒரே உயிரனம் மனிதன் மட்டுமே..!!

Friday, October 29, 2010

என் கேள்விக்கென்ன பதில்?



நாம் நம்முடைய இந்திய கல்வியின்படி சிறப்பாக பதில் சொல்லவே கற்றுதரப்படுகிறோம்.
அதே 40 வருட பழமையான கேள்விகள். பதில்கள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கிற்து.

என்னை எப்போதும் வாட்டுவது..
ஒரு குழந்தையிடம் ¨நீ வருங்காலத்தில் என்னவாக போகிறாய்?¨ என்ற முட்டாள்தனமான
கேள்வி.
ரேடியோக்களில், டி.வியில், ஏன் நம் வீடுகளிலும் சகஜமாய் இந்த கேள்வி குழந்தைகளிடம்
கேட்கப்படுகிறது. இது ஒரு அர்த்தமற்ற கேள்வி.
அதே கேள்வியை குழந்தை உங்களிடம் திருப்பிகேட்டால்..
¨நீங்க என்னவா  ஆகி இருக்கீங்க அங்கிள்/ஆண்டி? சின்னவயசில் நீங்க சொன்னதை அடைஞ்சுட்டீங்களா?¨ என்று தன் பிஞ்சு மொழியில் கேட்டாலும்..நெஞ்சில் நஞ்சை பாய்ச்சியதுபோல
இருக்கும். காரணம். நமக்கே தெரியும்.
நாம் நம்மை இலக்கை இன்னும் அடையவே இல்லை. நம் இலக்கை இன்னும் தீர்மானிக்கக்கூட இல்லை என்பது.
குழந்தைகள் கலெக்டர்களாவதற்கு பிறக்கவில்லை, டாக்டராகவும் பிறக்கவில்லை, என்ஜினியராகவும்
பிறக்கவில்லை. அவர்கள் வாழப் பிறக்கிறார்கள்.  அவர்கள் நம்மைப்போல் கேள்விகளுக்கு பதில்
சொல்லும் கிளிப்பிள்ளைகள் இல்லை. பிரபஞ்சத்தின் மிச்சங்கள் அவர்கள். அவர்களுக்கு சிறப்பாக
பதில் சொல்ல கற்றுதருவதை விட சிறப்பாக கேள்விகேட்க கற்றுகொடுக்க வேண்டும்.

இனி பிள்ளைகளிடம் நீ என்னவாக போகிறாய் என்று கேட்காதீர்கள்..
அவர்கள் எப்படியும் நீங்கள் சொல்லிகொடுத்ததை தான் சொல்வார்கள்.
அவர்களுக்கு முதலில் வாழ கற்றுகொடுங்கள். கேள்வி கேட்கும் பிள்ளைகளால்தான் உலகம் இந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறதே தவிர..
டேப்ரிக்காடர்களாலோ, கிளிப்பிள்ளைகளாலோ..இந்த உலகுக்கு ஒரு புண்ணியமும் இல்லை.

ஏன் ஆப்பிள் கீழே விழவேண்டும்? என்று ஒரு இந்தியன் யோசிக்கவில்லை.
ஒருவேளை  பூமி சூரியனை சுற்றுகிறதோ? என்று இந்தியன் யோசிக்கவில்லை. தீக்குளித்தானே முத்துகுமார்.. உண்மையில் அவன் ஈழத்துக்காகத்தான் இறந்தானா? என்று
எத்தனை பேர் யோசித்து இருப்போம்..??

3000 ஆண்டுகளாக மண்ணையும், பெண்ணையும் தின்றே வாழ்ந்த சமூகம் நம் சமூகம்.
இல்லை..இல்லை..ஆர்யபட்டருக்கு புவியீர்ப்பு தெரியும், கோள்களை பற்றியும் தெரியும் என்று சொன்னாலும்..
அவைகள் மதக்கலாச்சாரத்தில் மக்கிபோய்விட்டன.

தெரியும் என்று சொல்வதை விட..தெரிவிக்க என்ன செய்யலாம் என்று யோசிப்பவனை தான் உலகம்
தேடிக்கொண்டிருக்கிறது.

இன்று கேள்விகளை சிறப்பாக கேட்க தெரிந்ததால் தான் சந்திராயன் என்கிற இந்திய செயற்கோளை
உலகுக்கு தந்து நம்மால் நெஞ்சை  நிமிர்த்தி நிறக முடிகிறது.

கேட்பவனின் துணிவும், அதற்கான பதிலை  அடைய துடிக்கும் முயற்சியும் இருந்துவிட்டால்..பிரபஞ்சத்தின் கதவுகள்..தானே  திறந்துகொள்ளும்..!!

(பி.கு):  இந்த பதிவு சம்பந்தமாய் எதேனும் கேள்விகள் இருந்தால் என்னை கேட்கலாம்!!

Monday, September 27, 2010

ஹையா ஜாலி!! நான் சுயநலவாதி!!

இதுக்கெல்லாமா சந்தோஷப்படுவாங்க.
ஏங்க..ஏன் சந்தோஷப்படகூடாது..?

இன்னைக்குதான் சுயநலம் என்பது எவ்வளவு அழகானதுன்னு புரிஞ்சிகிட்டேன்.


இது ரொம்ப முக்கியமான விஷயம். பல சந்தர்பங்களில் நாம் பொதுநலவாதிகளா மாறி நமக்கு நாமே ஆப்புவைத்துகொண்ட
நிகழ்வுகள் எல்லார் வாழ்விலும்  நடந்திருக்கும். அப்படிப்பட்ட நிலைமைக்கு காரணம் இந்த "பொதுநலம்" என்கிற எண்ணம்.

முதலில் பொதுநலம் என்பது என்ன? நாலு பேருக்கு கொடுப்பது.. நாலு பேருக்கு நன்மை செய்வது. இப்படி நாலு நாலு பேருக்கா
தினமும் நன்மை செஞ்சிகிட்டு  இருந்தா .நாலு பேரு நம்மை... நாலு நாள் கழிச்சு.. நாலு தெரு தள்ளி இருக்குற இடுகாட்டுக்கு தூக்கிட்டு
போகவேண்டியதுதான்.

  ஏன் இப்படி சொல்கிறேன்?

காரணம் நம்மிடம் இருப்பதில் பங்களித்து கொடுப்பதுதான் பொதுநலமாகமே தவிர.. நம்மையே கொடுத்துவிடுவது பொதுநலமில்லை.
அப்படி கொடுத்தவர்களும் உண்டு. அவர்கள் அன்பில் நிறைந்துவழிந்தவர்கள், அப்படிப்பட்ட நிறைவு, நம்மிடம் இருக்குமேயானால்
கொடுப்பதில் தவறேதும் இல்லை.

இங்கு நாமே "அய்யா சாமி"என்று அலையும்போது நம் வாசலில் எவனாவது கடன்கேட்டு வந்தால், கண்டிப்பாக உதையை தவிர வேறெதுவும் கொடுக்க
வேண்டியதில்லை. நம்மிடமே இல்லாத போது கர்ணபிரபுவாக மாறுவது முட்டாள்தனம். நம்மிடம் அதிகமாக இருக்கும்போது கஞ்சப்பிரபுவாக
மாறுவது அதைவிட முட்டாள்தனம். நாம் இவைகள் இரண்டையுமே இப்போதைய காலத்தில் சிறப்பாக செய்து வருகிறோம்.
நம் வறுமையை போக்கிகொள்ள வக்கில்லாமல் இருந்தாலும், பிறருக்காக, பொதுநலனுக்காக செய்கிறேன் பேர்வழி என்று எத்தனையோ பேர்
குடும்பத்தை கவிழ்த்திருக்கிறார்கள்.

இயற்கையில் தனக்காக வாழத்தெரியாத ஒரு பைத்தியக்காரத்தனமான உயிரனம் மனிதாக மட்டுமே இருக்க முடியும். மரங்களை எடுத்துகொள்ளுங்கள்.
அவைகள் சுயநலமானவைதான். அவைகள் நன்கு வளரும்வரை வேர்களை பரப்பி நீரை தேடுகின்றன. இலைகளில் சூரியவெப்பத்தை சேர்த்து உணவு
சமைக்கின்றன. இப்படி ஒரு பெரும் சுயநலப் போராட்டத்திற்கு பின்பே..அவைகள் பூக்கின்றன, காய்க்கின்றன, கனிகள் தருகின்றன. காரணம், அவைகள்
நிறைந்துவிட்டன. நிறைவடைந்துவிட்டன. இனிமேல் அவைகள் பொதுநலவாதிகள் ஆகலாம். அவைகள் தன்னளவில் நிறையாவிட்டால் காயுமில்லை,
கனியுமில்லை. இப்படிமொத்த இயற்கையும் சுயநலம் என்பதை சரியாக பயன்படுத்திகொள்கிறது.
இவ்வளவு சுயநலமான இயற்கையை நம்மால் ரசிக்கமுடிகிறது. நம் அருகில் இருக்கும் ஒரே ஒரு சுயநலவாதியை நம்மால் சகித்துகொள்ள முடிவதில்லை.

அப்போ எப்பவுமே சுயநலமா இருக்கணுமா?
எப்போதும் சுயநலமாய் இரு என்று சொல்லவரவில்லை. நீங்க நிறைவடையாமல், நீங்கள் முழுமையடையாமல் பிறரை முழுமைப்படுத்த முடியாது.
நீங்கள் எப்போது முழுமையடைகிறீர்களோ அப்போதே அது பொதுநலமாக மாறிவிடும். அது உங்களை மீறி நடந்துவிடும். பொதுநலம் ஒரு மகிழ்ச்சிதரும்.
நிறைவடையாமல் இப்போது நாம் செய்யும் எந்த பொதுநல சேவையும் மகிழ்ச்சிதராது. நம்மை நாமே ஏமாற்றிகொள்வது அது. நீங்கள் வாழ்வை முழுமையாக வாழுங்கள்.
முழுமை கிடைத்ததும், பிறரை கவனிக்கலாம். :)

புதிதாய் திருமணமான தம்பதிகளுக்கு முக்கியமாய் நான் சொல்வதும் இதுதான். அவளை நீயும், அவனை நீயும் புரிந்துகொள்ளுங்கள். புரிதலில் முழுமை வந்ததும்
பிறப்பதே பிள்ளையாக இருக்கும்.!!, மற்றவை.....  ( இது ஒரு பேச்சுலரின் அட்வைஸ். :))) )

Friday, August 27, 2010

"நல்லவர்"- ஒரு மோசமான கெட்ட வார்த்தை!



என்னடா இவன், நல்லவர்னு சொல்றதை கெட்ட வார்த்தை ஆக்கிட்டானேன்னு
யோசிக்கிறீங்களா.. காரணம் இருக்கு..

முதல் காரணம். நம் மனது. அதென்ன.. நன்மை தீமை, நல்லவர், கெட்டவர்..
இந்த இரண்டு விஷயங்களும் எப்படி நம் மனித சமுதாயத்தை எப்படி ஆக்ரமிக்க
ஆரம்பித்தன..?

நல்ல- என்பது என்னை பொறுத்தவரை சாதகமான என்கிற வார்த்தையின் திரிபுச் சொல்.
அதாவது நமக்கு சாதகமான எல்லாமே நமக்கு நல்லவை. நம் பேச்சை கேட்டு வளரும் பிள்ளைகள்
நல்ல பிள்ளைகள். நம் தேவைக்கேற்ற சம்பளம் வழங்கும் நிறுவனம் நல்ல நிறுவனம். இப்படி
நமக்கும், நம் சூழ்நிலைகளுக்கும் சாதகமாக எவரோ, எவைகளோ இருந்தால் அவைகள், அவர்கள்
நல்லவர்களாகிவிடுகிறார்கள்.

இந்த நல்ல , தீய என்கிற வார்த்தைகள் வெகு சீக்கிரமாக நம் மனதை  ஆக்ரமித்து நம் அறிவுக்கு
வேலை இல்லாமல் செய்து நம்மை முடமாக்கிவிடுகின்றன. அதுவும் நம்மை பார்த்தே நான்கு பேர்
நல்லவன் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டால்.. முட்டாளாக முதல் வகுப்பு ஆரம்பித்துவிட்டது என்றே அர்த்தம்..!!

நல்லவர் பட்டம்: அதென்ன நல்லவர் என்கிற முத்திரை குத்துவது? ஏன் இந்த வழக்கம்?
அதாவது ஒருவர் உங்களுக்கு சாதகமாக செயல்படவோ, செயல்பட்டிருந்தாலோ அவரை உங்கள்
அருகில் வைத்துகொள்ள இந்த நல்லவர் பட்டத்தை அவருக்கு கொடுத்து நீங்களும் அவரும் சேர்ந்தே
நல்லவராகிவிடுகிறீர்கள்.

நல்லவன் ஒரு மனநோயாளி: என்னது நல்லவன் மனநோயாளியா? ஆமாம். இல்லாத ஒரு கற்பனையான
ஒரு பதவியை, முத்திரையை  தன்மீது சுமந்துகொண்டு, அதனால் ஒரு பலனும் இல்லாமல் படாதபாடுபடும்
பரிதாப மனநோயாளி. அவனுக்கு இந்த முத்திரையை குத்தியதும் சில மனநோயாளிகள்தான்.
இந்த மனநோயால் பாதிக்கப்படுவது, அவனுடைய சொந்த வாழ்க்கையும், அவனை  சுற்றியுள்ளோரின் வாழ்க்கையும்தான்.
இதை புரிந்துகொண்டாலுமே இதில் இருந்து வெளிவர பெரும்பாடு படவேண்டும்.

கடவுள் நல்லவரா? : என்னை கேட்டால் நிச்சயமாக இல்லை. நமக்கு சாதகமான விஷயங்களை , சூழ்நிலைகளை மட்டுமே  அமைத்துதரும் கடவுள் நிச்சயம் கடவுளாகக்கூட இருக்க முடியாது.
காரணம், சிறப்பான வாழ்க்கைக்கு, மேம்படும் வாழ்க்கைக்கு அன்பு எப்படி முக்கியமோ அதே போல்
சில அடிகளும் முக்கியம். இரண்டுமே நம்மை மேம்படுத்தும். நம்மை வலிமைமிக்கவராக ஆக்கும் ஒரு ஜிம் ட்ரெயினர் , அல்லது பி.டி. மாஸ்டரை போலத்தான்
கடவுள் இருக்கமுடியுமே தவிர.. நம் காதுக்கும், கண்ணுக்கும் இனிமை  அளிக்கும் கவர்ச்சி நடிகையாக இருக்க முடியாது.

இப்போ  என்னதான் செய்யட்டும்? : வெகு எளிய வழி ஒன்று இருக்கிறது. பட்டத்தை  தூக்கி எறி, அதுக்காக பத்துபேர் பல்லை உடைக்க சொல்லவில்லை.
சூழ்நிலைகளை  அப்படியே  ஏற்றுகொள்ளுங்கள். இந்த சூழ்நிலைக்கு நீங்கள் கெட்டவராகியே தீரவேண்டுமென்றால், போய்ட்டு போகுது பதவி. கெட்டவராகுங்கள்.
நமக்கு End Result தான் முக்கியமே தவிர..பட்டம் முக்கியமில்லை. கையில் கத்தியோடு எதிரி முன்னால் நிற்கும் போது, நல்லவன் வேஷம் பலிக்காது.
அவனுக்கு நீங்கள் கெட்டவனானால்தான்..உங்கள் குடும்பம் உங்களை  போற்றும். இல்லைன்னா எமதூதர்கள்கூட கேவலமாக சிரிப்பார்கள்.

மொத்தத்தில், இனிமேல் யாராவது உங்களை நல்லவர் என்று சொன்னால் எச்சரிக்கையாக இருங்கள். அது உங்களை அரவணைக்க அல்ல. ஆப்பு வைக்க.!!

 டிஸ்கி: அதே  போல் உங்களை நன்கு புரிந்துகொண்டவர்கள் உங்களை நல்லவர் என்றும் போற்றி புகழமாட்டார், கெட்டவர் என்றும் தூற்றி இகழவும் மாட்டார்.

Friday, July 23, 2010

உறவுப்பூர்வமான அன்பும், உணர்வுப்பூர்வமான அன்பும்!!




அன்பு, கேட்க, காண, நுகர, தொட, உணர என பல்வேறு வழிகளில் தினமும் நாம் அன்பை , அன்பாய் பெற்றும் கொடுத்தும் வருகிறோம்.
அதே அன்பு இன்றைய உலகில் இரண்டு வேறு கூறுகளாக பிரிந்துகிடக்கிறது. 

ஒன்று: உறவுப்பூர்வமான அன்பு.
இரண்டு: உணர்வுப்பூர்வமான அன்பு.

முதலில் ஏன் இப்படி அன்பு இருகூறுகளாய் பிரிந்தது என்று தெரிஞ்சிக்குவோம்.
அன்பு எப்போதும் அன்பு மட்டுமே. அதற்கு வேறு  அடைமொழிகள் கிடையாது.
ஆனால் உறவுக்காக சிலர் அன்பாய் இருப்பதாய் காட்டிகொள்ள ஆரம்பித்த போது,
உண்மை அன்பு குறைந்து சிதறி, உறவுப்பூர்வமான அன்பாகி போனது.

உணர்வுப்பூர்வமான அன்பு என்பது முழுக்க முழுக்க சுயநலமான அன்பு. என்னடா
இவன் உணர்வுப்பூர்வமான அன்பை சுயநலம் என்கிறானே என்று நீங்கள் எண்ணலாம்.
ஆனால் அதில்தான் விஷயம் இருக்கிறது.

நீங்கள் உங்கள் அன்பை பிறருக்கு பகிர்ந்தளிக்க வேண்டுமெனில், அது முதலில் உங்களுக்காக,
உங்களுக்குள் பூத்த அன்பாய் இருக்கவேண்டும். அதாவது, உங்களுக்குள் மணற்கேணி நீராய் ஊரும்
அன்பானது வெளியே கொடுக்கப்பட்டால் அது உண்மையில் நல்ல சுயநலமான, அன்புதான்.
அப்படிப்பட்ட அன்பை தான் புத்தர் போதித்தார். ஏசு ரத்தத்தில் காட்டினார். மஹாவீரர் அகிலத்தையே
அரவணைத்து தன் சொந்த அன்பால் உலகை நனைத்தார்.

இப்படி அன்பானது அதன் துவக்கம், அல்லது அது பிறக்கும் காரணத்தை பொறுத்து மாறுபடுகிறது.
உறவுப்பூர்வமான அன்பிற்கு வருவோம். இதுதான் இந்த உலகில் இப்போது மலிந்துகிடக்கும் அன்பின்
ரகம். ஆனால் தரம் மிககுறைவு. ஏன் தரம் குறைந்தது என்கிறேன்..?

பல நேரங்களில் பல உறவுக்காரர்களை நமக்கு பிடிக்காவிட்டாலும், அவர்களை பார்த்தமட்டில் அன்பே
பொங்காவிட்டாலும், அவர்கள் மீது அன்புசெலுத்துவதாய் காட்டிகொள்கிறோம். அவர்களை நாம் ஆதரிப்பதாகவும்,
அரவணைப்பதாகவும் காட்டிகொள்கிறோம். காரணம். சொஸைட்டி. கௌரவம். அவர்கள்மீது நீங்கள் அன்பாய் இருப்பதாக
காட்டிகொண்டால் மட்டுமே நீங்கள் மற்றவரால் மதிக்கப்படுவீர்கள் என்கிற சூழ்நிலை என்பதால், இந்த அன்பு நாடகம்.

இது வெரும் உறவுக்காரர்கள் மத்தியில் மட்டும் நாம் செய்வதல்ல, நம் நண்பர்களிடமும் இதே நிலைமை தான். வசதிப்படைத்த
நண்பர்கள் கைவசம் இருக்கவேண்டும் என்பதற்காக நாம் அன்பாய் நடிக்கிறோம். சரி..நண்பர்கள், உறவுக்காரர்கள் மத்தியில்
மட்டும்தான் இந்த நிலை என்றால் அதுதான் இல்லை. ஒரு குடும்பத்திற்குள்ளேயே இது நடக்கிறது. எனக்கு தெரிந்தவர் வீடு ஒன்றில்,
கலியாணம் முடிந்த  அடுத்த வருடமே குழந்தை பெற்றுகொள்கிறார்கள்! இப்போது
இரண்டு பிள்ளைகளுடன் அந்த இளம்தாயார், "இதுங்களை பெத்ததுக்கு", "ஏன்தான் இந்த மனுஷனை கட்டிகிட்டேனோ?!" என்று எசப்பாடல்கள்
பாடிவருகிறார்.

சமுதாய அங்கீகாரத்திற்காக பிள்ளைகள் பெறுவதை  எப்போதுதான் நிறுத்துவார்களோ சில பெண்கள். இப்படி சமுதாயத்திற்காக பிள்ளைபெற்றுகொள்ளும் மனோபாவம் மாறவேண்டும்.

இப்படி பிள்ளைபெற்றவர்கள் உண்மை அன்பை அவர்களுக்கு காட்ட இயலுமா? அவர்களால் அதை உணர்ந்திருக்கவும் முடியுமா?பிள்ளைகளை நல்லமுறையில் வளர்க்கமுடியுமா? என்பது சந்தேகமே!!

உறவுரீதியான அன்பை  விடுத்து, உணர்வுப்பூர்வமான அன்பை கொடுங்கள்!! அதுவே மனிதத்தின் வளர்ச்சியாகும். மனதின் முதிர்ச்சியும் அங்கேதான் பரிமளிக்கிறது!!
உறவுப்பூர்வமான அன்பிற்கு மனமுதிர்ச்சி தேவையே இல்லை. ஆனால் உணர்வுப்பூர்வமான அன்பில் மனம் நிச்சயமாய் முதிர்ச்சியடையும்! உலகம் மீதான பயம் தெளிந்து
தெளிவு பிறக்கும்.

உறவுரீதியான அன்பை  விடுத்து, உணர்வுப்பூர்வமான அன்பை கொடுங்கள்!!


வாழ்க்கை அன்புமயமாகட்டும், வாழ்த்துக்கள்!!


டிஸ்கி : இந்த பதிவில் தாய்மார்களை தாக்க வேண்டுமென எனக்கேதும் எண்ணமில்லை.
அப்படி தாக்கி இருந்தாலும் அது வெகு சிலரையே தவிர.. என் அன்னையை  போல் எல்லாரையும் மதிக்கிறேன்.

Tuesday, June 22, 2010

தூக்கமும், மரணமும், கொஞ்சம் புரிதலும்!! பாகம்-1

இரவு தூங்கும் நேரம்..நினைவு தூங்கிடாது!! நினைவு தூங்கினாலும், உறவு தூங்கிடாது!!
நல்ல பாடல் !! இரவில் கேட்க இன்னும் சுகம்..!!

தூக்கம் மனிதனின் ஆதர்ஷ நண்பன். இவன் அதிக நேரம் நம்மோடு இருந்துவிடவும் கூடாது.
வராமலும் நம்மை வருந்தவைக்க கூடாது.

ஒரே ஒரு நண்பனை மட்டும் நாம் எப்போதும் வரவேற்பதில்லை. அவன் பெயர் மரணம்!!

இவைகள் இரண்டை பற்றியும் நான் சிந்தித்து தெளிந்த கருத்துகளை சொல்ல ஆசைப்படுகிறேன்..!!

தூக்கம், மரணம் இவை இரண்டுமே ஒரே விஷயத்தின் இரண்டு பக்கங்களாக...அல்லது
ஒரே விஷயமோ என்று யோசிக்கிறேன்!!


முதலில் தூக்கத்திற்கு வருவோம். தூக்கம் என்பது உடம்புக்கு ஓய்வு கொடுத்து மனதை அமைதிப்படுத்தும்
ஒரு தினசரி நிகழ்வு. சிலருக்கு இது நடப்பதே இல்லை..உடம்பு ஓய்வுபெற்றாலும் மனம் தூக்கத்திலும் இயங்கி,
தூக்கத்தை கெடுத்துவிடுவது வேறு கதை :).

இப்போது தூக்கத்தின் சாரத்தை நாம் சரியாக புரிந்துகொள்ள வேண்டி
இருக்கிறது. முதலில் தூக்கம் துவங்கும் போது..உடனே கண்கள் மூடி ஆழ்ந்து தூங்கிவிடுவதில்லை. முதலில் உடலுக்குள்
ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு..கொஞ்சமாய் நம் கைகளும் கால்களும் ஓய்வு பெறுகின்றன..அடுத்து அடிவயிறு, மேல்வயிறு..பிறகு
மார்பு என இந்த பகுதிகளில் ஒரு அயற்சி ஏற்பட்டு அந்த சதைகள் இளகுகின்றன.

பிறகு அதற்கும் மேலாக நம் தோள்பட்டை சதைகள்
இளகிவிடும் போது..தூக்கம் நம்மை நெருங்கியதாக உணர ஆரம்பிக்கிறோம். மூச்சு லேசாகிறது. ஆழ்ந்து மூச்சுவிட முடிகிறது. கண்கள்
கனத்து தூக்கம் வந்துவிடுகிறது. அடுத்து..உடல் மீண்டும் சுறுசுறுப்பாகிறது. உங்கள் அனுமதியை பற்றியெல்லாம் கவலைப்படாமல்
உடல் திசுக்கள் தானாக தங்களை சரிசெய்து கொள்கின்றன.

அடுத்த கட்டமான ரிப்பேர்கள் முடிந்து உடல் சமநிலை பெறுகிறது. அப்போது உங்களை மறந்து ஆழ்ந்து தூங்கிபோவீர்கள்.அப்போது
நம் உள்ளார்ந்த சக்திகள் அனைத்தும் நிதானமடைந்து அவைகள் உயிராற்றலுடன் கலந்துவிடுகிறது. இதைதான் “Returning to Source" என்று
சொல்வார்கள். அதாவது உயிரின் மூலத்திற்கே எல்லா சக்திகளும் திரும்பி விடுவது. அப்போது கொஞ்ச நேரம் நீங்கள் மரணமடைந்தவர்தான்.

....இதில் நல்ல விஷயம் என்னவென்றால் காலை நீங்கள் எழும் போது..உங்கள் முதல் கான்சியஸில் சக்திகள் அனைத்தும் உடலின் பாகங்களுக்கு
மீண்டும் பரவி உங்களை ஃப்ரெஷ்ஷாக்கி விடுகிறது. தூங்கி எழுந்தவுடன் ஃப்ரெஷ்ஷாக உணர்வதெல்லாம் அதனால் தான்.
புதிய சக்தி உங்கள் உடலில் பாயதுவங்கியதால்.நாம் எப்போது தூங்குவோம், எப்போது விழிக்க வேண்டும், என்ற கால நேர வரையறைகளில்
தூக்கம் முடிந்துவிடுகிறது. ஆனால் ”மிஸ்டர் மரணம்” அப்படி இல்லை..!!

”நான் எப்போ வருவேன்..எப்படி வருவேன்னு யாருக்கு தெரியாது” ...என்று அது பஞ்ச் டயலாக் பேசினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
உண்மை என்னவோ அதுதான்..!!

மனிதர்கள் தூங்க தயார். சாக தயாரில்லை என்று சொல்வதே வினோதமான ஒன்று.
தூக்கம் என்பதே ஒருவகை வரையறுக்கப்பட்ட மரணம்தான்.!!


நீங்கள் உங்கள் உடலில் இறந்து...மீண்டும் அதே உடலில் மீண்டும் விழிந்தெழுந்தால் அது தூக்கம்...!! 
நீங்கள் இன்று தூங்கி நாளை காலை வேறொரு உடலில் விழித்தெழுந்தால்.. அது தூக்கமில்லை ..மரணம்!!



மரணம் பற்றிய பயத்தை விட அதை பற்றிய புரிதல் தேவை..அப்படி புரிந்துகொண்டால் அது எவ்வளவு நல்ல விஷயம் என்பது புரியும்..!!
அதை அடுத்த பாகத்தில் பார்ப்போம்..!!

Wednesday, April 7, 2010

வார்த்தைகளினூடே கவனித்தல்!!

கடந்த சில வருடங்களுக்கு முன்,


ஒரு பள்ளி பாராட்டு விழாவில் கலந்துகொள்ள என் அப்பாவும் நானும் சென்றிருந்தோம்.
அங்கே மேடையில் பள்ளி சார்பான பெரியோர்கள், ஆசிரியர்கள் அமர்ந்திருந்தார்கள்.
அப்பாவின் அருகில் அமர்ந்தபடி அவர்கள் பேசுவதை கேட்டுகொண்டிருந்தேன்.
அப்போது அப்பா ஒரு சிலர் பேசும் போது “இவர் பொய் சொல்கிறார், இவர் உண்மையாக பேசுகிறார்” என்று
அவ்வப்போது என்னிடம் சொல்வார்.

அன்று இரவு அப்பாவிடம் ”அப்பா , எப்படி அவர்கள் பொய் சொல்கிறார், உண்மையை சொல்கிறார்னு
உங்களுக்கு தெரியும்?” என்று கேட்டேன். அவர் “அதில் விஷயம் இருக்குப்பா, நீ ஒருத்தர் பேசும்போது
எப்படி கேட்பாய்? வரிசையான வார்த்தைகள் உன் காதில் விழும்..அதை உன் மனசு படிக்கும் போது அது பேச்சை கேட்பதாகிறது,
அதுவே..அந்த வார்த்தைகளுக்கு இடையே..பேச்சில் ஏற்ற இறக்கங்களை கவனித்தும்..அவர் கண்களை கவனித்தும்,
உடல் அசைவுகளை வைத்தும் அவர் உண்மையாக பேசுகிறாரா? அல்லது பொய்யுரைக்கிறான்னு சொல்லிட முடியும்”
என்று ஒரு விளக்கம் கொடுத்தார்.


அப்போது என் அறிவுக்கு அது புரியவில்லை. அவரும் அதை பெரிதாக எடுத்துகொள்ளவில்லை. ஆனால் அவர் சொன்ன விஷயம்
அதன் கருத்து, அந்த சாரம் மனதில் அப்படியே இருந்தது. என்றாவது இந்த கருத்தை முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்று நினைத்து
அதை மனதிலேயே பத்திரமாய் வைத்திருந்தேன்.

சில வருடங்கள் கடந்தன..மீண்டும் பல்வேறு மனிதர்கள், மற்றும் நண்பர்களை சந்திக்க வேண்டி வந்தது.
அப்போது எனக்கு அப்பா சொன்னாரே அந்த ”வார்த்தைகளுக்கு இடையே கவனித்தல்” ஞாபகம் வந்தது.
அதை கொஞ்சம் கொஞ்சமாய் பயிற்சி எடுக்க ஆரம்பித்தேன்.

சில மாதங்களிலேயே நல்ல பலன் கிடைத்தது. நண்பர்கள் பேசும்போது அவர்கள் வார்த்தைகளிடையே கவனித்தேன்.
வெகு சிலரே உணமையான பற்றோடும், பாசத்தோடும், அக்கறையோடும் பேசுகிறார்கள் என்பதும், மற்ற 75% பேர்
காரியம் ஆகவே பேச்சுகொடுக்கிறார்கள் என்பதும் தெரிந்தது.

இதை அப்பாவிடம் சென்று சொன்னேன். அவர் புன்னகைத்தார். என் உறவினர் ஒருவரிடம் பேச சொன்னார்..
அவர் எப்படிப்பட்டவர் சொல் பார்ப்போம் என்றார். அந்த உறவினர் நல்ல மனிதர். எப்போதும் உற்சாகமாகவும், பரபரப்போடும் இருப்பவர்.
ஒப்புகொண்டேன். பேசினேன். அவரிடம் வந்தேன். ” அவர் பாவம் பா..எதோ மனவேதனையோடே எப்போதும் இருக்கிறார். அதை மறைக்கத்தான் இவ்வளவு
உற்சாகமாய் இருக்கிறார் ”
என்று சொன்னேன். புன்னகைத்தார். ம்ம்..சரியாக சொல்லிவிட்டாய்..என்று தட்டிகொடுத்தார்.

உனக்கு இது நிச்சயம் கைக்கொடுக்கும் என்றார்.

இந்த “வார்த்தைகளுக்கு இடையே கவனித்தல்” மூலம்நல்லவர்களின் அருகாமை அதிகரித்தது. இந்த பயிற்சி
பேசும்போது மட்டுமல்லாமல், புத்தகங்கள் படிக்கும் போதும், செய்திகள் கேட்கும் போதும்,
கவிதைகள் கட்டுரைகள் படிக்கும் போதும்,என எல்லா இடங்களிலும் பரவ ஆரம்பித்தது.

அதனால் தான் எப்போதும் என்னால் கிடைத்ததை எல்லாம் படிக்க முடிவதில்லை..தேடிப்பிடித்தே படிக்க ஆசைப்படுகிறேன்..!!

இப்படியாக தினசரி வாழ்வில் நல்லோரின் இணக்கத்தையும், நல்ல விஷயங்கள் மீதான இணக்கத்தையும்
அதிகரிக்க அப்பா சொல்லிதந்த “ வார்த்தைகளினூடே கவனித்தல்” எனக்கு பயன்பட்டு வருகிறது.

நீங்களும் முயற்சி செய்யுங்கள். என் வாழ்த்துக்கள்.

Tuesday, December 1, 2009

ஏம்ப்பா..நீங்களாவது சொல்லுங்க..இது தமிழ்நாடு தானே?

இன்னாங்கடா இது..ஆச்சரியமா கீது.. நெசமாத்தான் சொல்றியா?

இப்படி எனக்குள் கேட்டுகொண்டேன் இன்று முழுதும்..

“ஏம்பா...ஏய்..இது தமிழ்நாடு ஸ்டேட் தானே.. இல்ல ஆஸ்திரேலியா எதும் வந்துட்டேனா? ” என்று புளங்காதிப்படும் விதமாய் சில சம்பவங்கள் நெஞ்சை தொட்டது..

சம்பவம் -1:

தங்கை புதுக்குடித்தனம் போவதால் அவர் பெயரை அட்டையில் இருந்து நீக்க வேண்டும்..அதற்கு இன்று வர சொல்லி இருந்தார்கள். போன சில நிமிடங்களில் அன்பான உபசரிப்போடு!!! சான்றிதழ் வழங்கிவிட்டார்கள்.

அட..!! இது முதல் அதிர்ச்சி.

சம்பவம் -2 :

இன்னைக்கு என்று பார்த்து என் வாகனம் நட்ட நடு சாலையில் மக்கர் பண்ண..அதுவும் சேலம் நான்கு ரோடு பகுதியில் நடு ரோட்டில் பக்கி பழிவாங்கிவிட்டது..

இன்னிக்கு ஃபைன் தான்.. 500 வாங்காம மாமா விடமாட்டாரு..அய்யயோ போச்சே.. ஆமா யார் முகத்தில் விழிச்சோம் என்றெல்லாம் என்ன அலைகள் அழுவ..

அருகில் வந்த அந்த ட்ராபிக் கான்ஸ்டபிள்.. தம்பி..பாத்து...இப்படி..ஓரமா கொண்டுவாங்க..என்று அவரும் எனக்கு உதவ.. எதற்கும் ஒரு முறை பார்த்துகொள்வோம் அது கடவுளாய் இருந்துதொலைத்துவிட போகிறது என்று உத்த்த்த்து பார்த்தேன்..அவர் பெயர் சண்முக சுந்தரம்.ஆபத்தில் ஓடு வந்து உதவிய இவரது செயல் என்னை வியப்பில் ஆழ்த்தியது. ஒரு திட்டு இல்லை..ஒரு கோபப் பார்வை இல்லை..அட ஒரு ஃபைன் கூட இல்லை ..நீ நீடுழி வாழ்க என போற்றியபடி புறப்பட்டேன்..

சம்பவம் -3:

அடுத்து வீடு வந்து சேர்ந்தால் மின்சாரம் தடைப்பட்டிருந்தது. சம்சாரம் போனா சந்தோஷபடலாம்(ஊருக்கு போனால்).. மின்சாரம் போனால் முடியுமா? உடனே மின்சார வாரிய தொலைப்பேசிக்கு அழைத்தேன்..
அட...!!
அமைதியான தெளிவான குரலில் பதில்கள் வந்தன.. என்னால் இதை நம்ப முடியவில்லை...காலை பதினோரு மணிக்கு கம்ப்ளெயிண்ட் புக் செய்யப்பட்டது...மதியம் 12.30க்குள் மின்சார விநியோகம் சீர் செய்யப்பட்டு விட்டது.

ஏம்ப்பா..நீங்களாவது சொல்லுங்க..இது தமிழ்நாடு தானே?

Sunday, November 15, 2009

கண்டதும் வென்றதும்..!!

http://a.espncdn.com/photo/2008/0810/oly_g_kitajima_300.jpg

சிரித்தேன்..

கிண்டலடிக்கிறார்கள்..!

அழுதேன்..

வீணாய் போகிறவன் அழுவான் என்றார்கள்..!

முறைத்தேன்..

லாயக்கு இல்லாதவன் முறைக்கிறான் என்றார்கள்..!

வருந்தினேன்..

வருத்தம் பணம் சேர்க்காது என்றார்கள்..!

அன்பு காட்டினேன்..

பணம் பிடுங்க நெருங்கிவருகிறான் என்றார்கள்..!

எது செய்தாலும் என்ன செய்தாலும்..

அந்த நாலு பேருக்கு நாம் நல்லவரில்லை..

நம்மை பற்றி நாம் அறிந்து கொண்டால்..

இந்த அகிலத்தில் நமை போல் வல்லவரில்லை..!!

வாழ்க்கை சிறந்தது..

வாழ்தல் அறியது..

வாழ துணிந்துவிட்டால்..

அந்த வானும் சிறியது..!!

Sunday, November 1, 2009

ஒரு புலியின் முடிவு..!!

சில வலைப்பக்கங்களை உலாவிக்கொண்டிருந்த போது இந்த விஷயம் கிடைத்தது.

மென்மையான மனம் கொண்டவர்கள் மேற்கொண்டு தயவுசெய்து மேலும் தொடர வேண்டாம்..!



http://www.tamilvanan.com/content/wp-content/uploads/2008/10/ltte-leader-prabhakaran.jpg


யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத, நெஞ்சையுருக்கும் உண்மைச் சம்பவமொன்றுதான் இது.

விடுதலைப்புலிகளின் கொள்கைகள் பற்றி விமர்சனங்களும் சர்ச்சைகளும் ஆச்சரியங்களும் உண்டு. எதிரியிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற கொள்கையை இயக்கம் தொடங்கப்பட்ட காலம் முதலே மிக இறுக்கமாகக் கடைப்பிடித்து வருபவர்கள் அவர்கள். ஒவ்வொரு போராளியின் கழுத்திலும் சயனைட் வில்லைகள் இருக்கும். இச்சம்பவமும் எதிரியிடம் பிடிபடும் சந்தர்ப்பமொன்றின்போது நடந்ததுதான்.
1997 ஆனி மாதம் மட்டக்களப்பிலிருந்து வன்னி நோக்கி இருபடகுகளில் சில போராளிகள் வருகிறார்கள். இரவுப்பயணம். கடும் சண்டைக்குரிய ஆயத்தங்களேதுமற்ற சாதாரண பயணம். எப்படியோ திருகோணமலையை நெருங்கியபோது எதிரியின் விசைப்படகின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். படகு சேதமடைகிறது. கடலிற்குதித்து நீந்தத் தொடங்குகின்றனர். எல்லோரும் பிரிந்துவிட்டனர். அதில் ஒருவன் தான் பாலன். கடற்கரும்புலி அணியைச் சேர்ந்தவன் தான் பாலன்.
இரவிரவாக நீண்டதூரம் நீந்தி "இறக்க கண்டி" எனுமிடத்திற் கரைசேர்கிறான் பாலன். விடிந்துவிட்டது. கரையில் சோர்வினால் மயங்கிப்போன நிலையில் சிலரால் காட்டிக்கொடுக்கப்பட்டு இராணுவத்தாற் கைதாகிறான்.
இராணுவ முகாமில் கண்விழித்த பாலனுக்கு அப்போதுதான் தாம் கைதுசெய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. கழுத்தில் குப்பியில்லை.
இனி சித்திரவதை செய்யப்படப்போவது உறுதி. அதில் இரகசியங்கள் காப்பாற்றப்பட வேண்டுமே. அதுவும் பாலன் கடற்கரும்புலி அணியாதலால் நிறைய விசயங்கள் தெரிந்திருந்தான். தன்னை மாய்த்துக்கொள்ள ஏதும் கிடைக்குமா என்று முயன்றான். கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் குப்புறக் கிடத்தப்பட்டிருந்தான். இன்னும் சிறிது நேரத்தில் ‘விசாரணை’ தொடங்கப் போகிறது. எதுவும் செய்ய முடியாத நிலை. அந்த நேரத்தில் தான் அசாதாரணமான முடிவையெடுத்தான். தன் நாக்கை வெளித்தள்ளி பற்களால் இறுக கடித்தபடி தலையை உயர்த்தி தன் நாடியை ஓங்கித் தரையில் அடித்தான். நாக்குத் துண்டானது. சித்திரவதையின் போது தன்னால் உண்மைகள் வெளிவரக்கூடாதென்பதற்காகத் தன் நாக்கைத் தானே துண்டித்தான்.
மீண்டும் மயங்கிய அவன் கண்விழித்தபோது இராணுவ மருத்துவமனையிற் கிடத்தப்பட்டிருந்தான். தனக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை அறிந்த பாலன் அடுத்த கட்டத்தை யோசித்தான். எப்படியும் தன்னை மாய்த்துக்கொள்ள வேண்டுமென்பதிலேயே குறியாயிருந்தான். ஏனெனில் தன்னிடமிருந்து போகப்போகும் விவரங்கள் ஏற்படுத்தப்போகும் விளைவுகள் பயங்கரமானவையென்பதை நன்கு அறிந்திருந்தான். முயற்சித்து முயற்சித்து இறுதியில் அந்த முடிவையெடுத்தான். நினைத்தும் பார்க்க முடியாதது அது. தன் தலையை அந்த இரும்புக்கட்டிலில் மோதி மோதி மண்டையுடைந்து இறந்துபோனான்.
ஒரு மோதலுக்குப்பின்னும் சாகும்வரை தொடர்ந்து தன் தலையைக் கட்டிலின்மேல் மோதுமளவுக்கு அவனுக்குத் துணிவும் வைராக்கியமும் இருந்தது, ஒரு துளி நீர் கூட வாயில் வைக்காமல் 12 நாட்கள் இருந்து அணுவணுவாகச் தன்னைத்தானே சாகடித்த திலீபனைப் போல. (பாலனது இயற்பெயர்கூட திலீபன் தான்.).

எப்போதும் மரணம் நிகழ்ந்தவண்ணமே இருக்கிறது..ஆனால் சிலரது மரணம் மட்டுமே நினைவுகளாக வாழ்கிறது..!!

Wednesday, June 3, 2009

நானும் இந்த வலையில் சிக்கிவிட்டேன்.. !!

1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?


இப்போதான் எனக்கும் அந்த யோசனை வருது. இருந்தாலும் சொல்றேன்.
சும்மா திடீர்னு தோணிண பேர்தான் இது. (ஹிஹி.. இதுக்கே இவ்ளோ யோசனையான்னு கேக்ககூடாது)

2.கடைசியாக அழுதது எப்பொழுது?

அந்த அறுவை மெகா சீரியலை பாட்டியோடு உக்காந்து பார்த்த போது.. அவ்வ்வ்வ்....!!

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

ஆமாம்.. பிடிக்கும்,
ஏனோ தெரியலை மத்தவங்க பிடிக்கலைன்னுதான் சொல்றாங்க..
(இன்னும் பயிற்சி வேணுமோ?!)
4).பிடித்த மதிய உணவு என்ன?

நான் வெஜிடேரியன் .. அதனால்..
...


கோழிக்குழம்பு நல்லா திக்கா காரமா இருக்கணும். அப்புறம் அந்த முட்டை பொரியல்.
(அதான் சொன்னேன்ல.. நான் - வெஜிடேரியன் என்று.. !!)


5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

அதெல்லாம் .. ஆமா.. ஏன் வெச்சிக்ககூடாது. பிடிச்சா நண்பர்களா இருப்போம். இல்லியா ப்ரெண்ட்ஸாவே இருப்போம்.. வாங்க பழகலாம்..!!


6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

முதலில் குளிக்கவே பிடிக்காது. இருந்தாலும் அருவிதான் எனக்கு பெஸ்ட். சுருளி பால்ஸ்ல கடைசியா குளிச்சேன். ஆகா.. அருமையோ அருமை.. என் ஜாய் பண்ணி குளிச்சேன். நீங்களும் போய் பாருங்க. அருமையா இருக்கு.




7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

முகம் , கண்கள்.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்ச விஷயம்: பிடிக்காத விஷயங்களை மாற்றிகொள்வது.

பிடிக்காத விஷயம் : பிடிக்காத விஷயங்களே இல்லாமல் போனது. அதான் எனக்கு பிடிக்கலை..


9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

இன்னும் பார்ட் பார்ட்டா பிரிக்க ஆள் வரலை. வந்ததும் சொல்றேன்.

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

அப்பா ..............


11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

வெண்ணிற ஆடை நிர்மலாவின் முதல் படத்தின் தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிறம்தான்.

12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம். பார்த்துகொண்டும் கேட்டுகொண்டும்.

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

நீலம், கறுப்பு.

14.பிடித்த மணம்?

மல்லிகைப்பூ மணம், சந்தன வாசம்.


15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

ஜோசப் பால்ராஜ்- மாரநேரிகாரர்.
சென்ஷி- பின்நவீனத்துவத்தின் பிள்ளை.
சீனா- ஓல்டு ஈஸ் கோல்டு மா

16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

தமிழரசியின் கவிதைகள் அத்தனையும் அவ்வளவு அழகு. படிக்கதூண்டுபவை அவை. கலக்கும் கவிதை சோலை அவர்.

17. பிடித்த விளையாட்டு?

கில்லி தாண்டி, நொண்டி குதிர, கண்ணாமூச்சி, அஞ்சாங்கல், ரிங்கா ரிங்கா ரோஸஸ்...

இதெல்லாம் பிடித்த விளையாட்டுகள் அப்போது.

இப்போது ஷட்டில் , புட்பால், ஸ்நோ பவுலிங்க்.

18.கண்ணாடி அணிபவரா?

இல்லை ஆனால் அணிய வேண்டும் என்பது மருத்துவரின் ஆலோசனை

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?


ஆக்ஷன் திரில்லர்,
அறிவியல் புனைவு படங்கள்,
அனிமேஷன் படங்கள்.
ப்ரெஞ் படங்கள் அதிகம் பார்க்க பிடிக்கும்.

20.கடைசியாகப் பார்த்த படம்?

பசங்க, டுவல் என்கிற ஆங்கிலப்படம்.(இரண்டையும் ஒரே நாளில் பார்த்ததால் குறிப்பிடுகிறேன்.)

21.பிடித்த பருவ காலம் எது?

மார்கழிதான்.

ஏனெனில் அந்த மாதங்களில் இரவின் நீளம் அதிகம். நல்லா தூங்கலாம் பாருங்க.. அதான்.

அதுவும் காலை குளிரில் குளித்து கோவிலுக்கு போனால் அட..அட.. திவ்ய தரிசனம் கிட்டுமே..(கடவுளின்!!)..


22)என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

Take it Easy- பாகம் 1.

23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

ஒரு நாளைக்கு மூன்று முறை.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடித்த சப்தம் :அம்மாக்களின் தாலாட்டு, வயலின் மற்றும் புல்லாங்குழல் இசை.

பிடிக்காதது :சாலையில் ஹாரன்கள்.(பொய்ய்ய்ய்ங்ங்ங்ன்ங்....!!)

25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

குஜராத் .. ஒரு சுற்றுலாவிற்காக..

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

ஓ.. இருக்கே!!

நல்லா வரைவேன்.
கவிதை எழுதுவேன்.
பாட்டுக்கு தாளம் போடுவேன்.
நன்றாக சமைப்பேன்.
எல்லோருடைய தனித்திறமைகளையும் ரசிப்பேன்.
அதைப்போல் நானும் முயற்சி செய்து பார்ப்பேன்.


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

உங்களை புத்திசாலின்னு யாரோ சொன்னதை...

(சும்மா உல்லுலாயி.. நோ..நோ..நோ பேட் வேர்ட்ஸ்!!)



28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

நாங்களெல்லாம் அகம் ப்ரம்மாஸ்மிப்பா..

29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

சுவிசர்லாந்து, சிம்லா, ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம்.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

முடிந்த அளவு மற்றவர்க்கு உதவியாக

இல்லாவிட்டால் உபத்திரம் இல்லாத அளவு இருந்தால் போதும்

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

மனைவி இல்லாம்ல் செய்ய விரும்பும் காரியம்.... ..

அவங்க வரட்டும்.. கேட்டு சொல்றேன்..ஓக்கே!!

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

மகிழ்ந்திரு, மகிழ்ச்சிபடுத்து.



இந்த தொடர் பதிவுக்கு நான் அழைப்பது

சீனா, ஜோசப், சென்ஷி.

Monday, June 1, 2009

பட்டாம்பூச்சி சொல்லிதந்தது ! பாகம்-3

இந்த மூன்றாம் பாகம் என் வாழ்க்கையோடு சரியாக பின்னப்பட்டதாக உணர்கிறேன்.
ஆம்.. இந்த பாகத்தில் நான் சொல்லப்போவது சூழ்நிலைக்கேற்றபடி தன்னை சரியமைத்துக்கொள்வது பற்றி.
இதை ஆங்கிலத்தில் “Evolve, Evolution" போன்ற வார்த்தைகளால் குறிப்பிடுகிறார்கள்.

பட்டாம்பூச்சியின் தகவமைப்பும் சூழ்நிலைக்கேற்றபடி மாறிய ஒன்றுதான்.
ஆம்.. வெறும் புழுவாய் தன்னை ஏற்றுகொள்ளமுடியாத அந்த பட்டாம்பூச்சி தன்னை இரு உயர்ந்த இடத்தில்
கொள்ள ஆசைப்பட்டதன் விளைவுதான் அதன் சிறகுகள்.
அதன் சிறகுகள் அதற்கு மிகப்பெரிய பெருமையை தேடிந்தந்திருக்கிறது.அதன் உருமாற்றம் அதனுடைய வாழ்க்கையை
அர்த்தமுள்ளதாக்கியிருக்கிறது.அதனிடம் இருக்கும் இறைமையை வெளிப்பட வைத்து அதனை அழகான ஒரு
உயிரனமாக ஏற்றுக்கொள்ள வைத்தது.

இப்படி தன்னை சுற்றியுள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு தகவமைப்பை மாற்றிக்கொள்வதன் அவசியம் என்ன?
வாழ்க்கை போராட்டம் தான். அவைகள் வயிற்றுக்காக செய்யும் அந்த தகவமைப்பு மாற்றத்தை நாம் நம்
ஆன்மாவுக்காக செய்தே ஆகவேண்டியுள்ளது. அப்படி சில உயர்ந்த நோக்கங்களுக்காக தன்னை தகவமைத்துகொள்கிற எந்த
மனிதனும் வீணாக போனதில்லை. என் வாழ்விலும் இது நடந்திருக்கிறது.

”தந்தை காலமாகி விட்டார்”.. மருத்துவர் அந்த வார்த்தைகளை சொல்லும்போது என் அம்மா மயக்கமுற்றார்.
தாங்கி பிடித்து மெல்ல அவர்களை சரி செய்து.. அடுத்த இருபது நிமிடங்கள் என் கண்களில் நீர் நின்றது.
நின்ற வண்ணமே இருந்தது.. கீழே விழாமல். மெல்ல மெல்ல என் மனநிலை மாறி வருவதை என்னால் உணர முடிந்தது.
அப்பாவின் சடலத்தினை வீட்டில் வைத்த போது நேரம் 1.30 மணி. நடு ஜாமம். என் தாயும் பாட்டியும் கண்ணீரில் நனைகிறார்கள்.
என்னால் ஏனோ அழ முடியவில்லை. அப்பாவின் நண்பர் ஆறுதல் சொல்ல அருகே வந்த போது.. ”அடுத்து என்ன செய்யணும் சொல்லுங்க” என்ற போது
அவர் மலைத்துதான் போனார். அவருக்காக சோகமாய் அமர்ந்தது அந்த இருவது நிமிடங்கள் மட்டுமே.
இப்போது தூக்கு சட்டியுடன் இடுப்பில் ஒற்றை வேஷ்டியுடன்.. அவரின் இறுதி ஊர்வலத்தில்..சாலையில் நான் நடக்கிறேன். எனக்கு அப்போது தான் உறைத்தது..
என் மனநிலை முற்றிலுமாக மாறிவிட்டது என்பது. ஏதோ ஒன்று என்னை சாயாமல் தாங்கி நின்றதை உணர்ந்தேன்.

என்னை அழசொல்லி எவ்வளவோ பேர் வற்புருத்தினார்கள் என்றாலும்..அழ தோன்றவில்லை.
மனோரீதியான மாற்றங்கள் எனக்குள் நிகழ்ந்தவண்ணம் இருந்தன,இருக்கின்றன.

சரி.. இந்த சம்பவத்திற்கும் பட்டாம்பூச்சிக்கும் என்ன தொடர்பு. அது சொன்னது என்ன?
...சொல்கிறேன். பட்டாம்பூச்சியின் தகவமைப்பும் இதுவும் ஒரே
விஷயம்தான். ஆம் அது உடல்பூர்வமான தகவமைப்பு மாற்றம். இது மனப்பூர்வமான எவல்யூஷன்.




தன்னை முட்டாள் என்று பள்ளியை விட்டு நீக்கிய ஆசிரியையிடமே அறிவியல் மேதையாக மெடல் வாங்கியவர் ஐன்ஸ்டீன்.
அன்று அவருக்குள் நிகழ்ந்ததும் இதே மாற்றம் தான்.

”சூழ்நிலை உன்னை என்ன சொல்கிறது என்பது தேவையில்லை.
சூழ்நிலையிடம் நீ என்ன கற்றுகொண்டாய் எனபது தான் முக்கியம்” என்கிறார் மார்க்ஸ்.

எனவே உங்களிடம் நீங்கள் பேசி மெல்ல மெல்ல உங்களின் லட்சியத்தை நோக்கி செல்பவராக மாற்றுங்கள். மாறுங்கள்.
சூழ்நிலை உங்களுக்கு பட்டம் கட்டியது போதும். இனி உலகத்தை நீங்கள் கட்டுங்கள். கட்டியாளுங்கள். வாழ்த்துக்கள்!!

Saturday, April 11, 2009

பட்டாம்பூச்சி சொல்லிதந்தது..!! பாகம்-2.



கடந்த பாகத்தில் நம் பட்டாம்பூச்சி உலகிற்கு சொல்லிதந்தது என்னவென்று பார்த்தோம். இந்த பாகத்தில் அது ஒரு தனிமனிதனுக்கு என்ன சொல்லிதருகிறது என்று பார்ப்பொம்.

முதலில் பட்டாம்பூச்சியாக மாறியது யார்?

ஒரு சின்ன புழு.




புழு என்பதால் அது "ஆ.. நான் வெறும் புழுவாக அல்லவா இருக்கிறேன். எனக்கு இப்படி வாழ்வதே பிடிக்கவில்லை" என்று எவையும் தற்கொலை செய்துகொண்டதில்லை. அவைகளுக்குள் இருக்கும் உள்ளுணர்வு அவைகள் சிறந்த பட்டாம்பூச்சியாக மிளிரும் என்று அவைகளிடம் எப்போதும் சொல்லியபடி இருக்கின்றன.

நாம் கீழாய் மதிக்கும் புழுக்கள் கூட தற்கொலைக்கு முயல்வதில்லை.
புழுக்கள் கூட மேலாய் மதிக்கும் மனிதர்களாகிய நாம்...
எத்தனை தற்கொலை முயற்சிகள்.தான் இறந்தால் மட்டும் போதாதென்று தான் அழியும் போது மற்றவரையும் சேர்த்து அழிக்கிறோம்.
இதை பற்றி புழுக்கள் கேள்விப்பட்டால்..
"அட.. இறைவா!! இதற்கு நாங்களே பரவாயில்லை போலிருக்கிறதே" என்று சொல்லக்கூடும்.

தற்கொலை வேண்டாம். அதை இயற்கை அனுமதிப்பதில்லை. நம் உண்மையான முடிவு தானாக நிகழட்டும். நாமாக அதை தேடிப்போக வேண்டாம்.

உள்ளுணர்வு என்கிற ஒன்று நமக்கு இருக்கிறது.ஆம்.. நம்மை போன்ற ஒவ்வொரு உயிரனத்திற்கும் இருக்கிறது. அது நமக்காக மட்டும் தனியாக படைக்கப்பட்டதில்லை. எல்லா உயிரனங்களும் தங்கள் உள்ளுணர்வின் படி மட்டுமே வாழ்கின்றன.சொல்லபோனால் அவைகள் தான் ஒவ்வொரு உயிரனத்தின் டேட்டாபேஸ்.
நாம்..மனிதர்கள் மட்டுமே உள்ளுணர்வை தொலைத்துவிட்டு வாழ்கிறோம். அதன் சத்தம் எப்போதும் இருக்கிறது. நாம் காதுகளுக்கு அதை கேட்க நேரமில்லை. யாரொ சொன்ன வரிகள்தான் ஞாபகம் வருகிறது.. "காது.. அது செல்போன் அடைத்ததால் செத்துவிட்ட ஒன்று" என்று.

வாருங்கள். உங்கள் இயல்பில் சேராத வேலையினை செய்யாதீர்கள். எது உங்கள் இயல்போ அங்கே சேருங்கள். உங்கள் வாழ்க்கை வளமாகவேண்டுமெனில் உங்கள் உள்ளுணர்வின் சொல் படி நடைபோடுங்கள். உலகில் நம்மை ஏமாற்றாத ஒரே குரல்.. உள்ளுணர்வின் குரல் மட்டுமே.

அதை எப்படி கேட்பது...? உள்ளுணர்வின் சத்தம் எனக்கு கேட்கவே இல்லையே. என்கிறீர்களா..அதையும் பட்டாம்பூச்சி சொல்லிதருகிறது.
புழுவாய் இருப்பது எப்படி சிறகுகள் பெற்றது? கேட்டதும் கிடைத்துவிட்டதா ? இல்லை. தன்னை ஒரு கூட்டுக்குள் சுற்றி கொண்டது. அதற்குள் இருள்.. இருள் ..இருள் மட்டுமே. வெளியுலக சத்தங்கள் அதை தொல்லை செய்யாத வண்ணம் தன்னை கூட்டுபுழுவாக்கி கொண்டது. காத்திருந்தது, பொறுமையுடன்.



நான் உங்களை கூடு கட்டி குடிப்புக சொல்லவில்லை. உங்களுக்குள் செல்லுங்கள். "எனக்குள் இருப்பதைபோன்ற அதிசயத்தை வெளியில் நான் கண்டதில்லை" என்கிறார் ஐன்ஸ்டீன். அப்படி கண்டதால்தான் அவரை இன்னும் கொண்டாடுகிறோம்.


உங்களுக்கு நீங்களே புதிதாய் தெரிவீர்கள். அட.. இது நானா..!! என்று உண்மையான உங்களை பார்த்து உங்களுக்கே ஆச்சர்யமாய் இருக்கும்.



அப்படி உங்களை நீங்கள் கண்டறிய முதலில் தனிமையில் இருக்க பழகுங்கள். வாரத்தில் ஒரு நாள். ஒரு மணி நேரம் மட்டும். தனித்து
இருங்கள். மற்றவரை பற்றிய சிந்தனையை நிறுத்தி வைத்துவிட்டு
உங்களிடம் நீங்கள் பேசுங்கள். உங்கள் இயல்பை கண்டறியுங்கள்.

"உள்ளுணர்வின்படி வாழுங்கள்.அதுதான் உங்களின் வாழ்க்கை."

தொடரும்...

Thursday, April 9, 2009

பட்டாம்பூச்சி சொல்லிதந்தது..!! பாகம்-1.








பட்டாம்பூச்சி.. சொல்லும்போதே அதனுடைய வர்ணஜாலங்கள், பறக்கும் அழகு, அதன் மெல்லிய சிறகுகள் இப்படி பல விஷயங்கள் மனதில் வந்து குவிகிறது.


அப்படி குவியும் விஷயங்களில் சேராத இன்னொரு விஷயம் அதன்
உருமாற்றம். ஒரு சாதாரணமான கையில் தொடவே கூச்சப்படும் புழுவாய் தான் பிறக்கிறது அந்த பட்டாம்பூச்சி. சில வாரங்களுக்கு பிறகு
அது தன்னுடைய இயல்பை அறிந்து தன்னை உறுமாற்றம் செய்ய தயாராகிகொள்கிறது. பிறகு மேலும் சில வாரங்களுக்கு தான் கட்டிய கூட்டிற்குள்ளே தானே அமர்ந்து தவம் செய்கிறது.



இது நம்மை போல பணம் கொடு, நிலம் கொடு என்பதற்காக தவமல்ல. இயற்கையிடம் தன்னை முழுமையாக சமர்பித்துக்கொள்ள வேண்டிய தவம் இது. இந்த வாழ்க்கை எனும் பிரபஞ்ச சக்கரத்தில் தன்னையும் சேர்த்துக்கொள்ள வேண்டி செய்கிறது தவம்.
கேட்டதை கேட்டபடி அள்ளி தரவல்லது தானே இயற்கை.அது கேட்டதோ வாழ்க்கை சக்கரத்தில் தனக்கும் ஒரு பாகம். ஆனால் இயற்கை அதனை ஆசிர்வதித்து அதன் அழகை கூட்ட சிறகுகள் தந்து தன் மடியில் அதனை ஏந்தி கொள்கிறது. இப்போது நீங்கள் தொட தயங்கிய புழுதான் இந்த பட்டாம்பூச்சி. இப்போது அதை புழு என்று பட்டாம்பூச்சியை பார்த்து சொன்னால் என்னை முட்டாள் என்பீர்கள். அத்தனை அகழகோடு மறுபிறவி எடுத்து நம்முன் தன் அழகை காட்டி மயக்குகிறது நம் கண்களை.



சரி அதான் உருவம் மாறியாயிற்று. கேட்டது கிடைத்துவிட்டது.அப்புறமும் ஏன் நான் இயற்கையோடு இயைந்து இருக்க வேண்டும் என்று எந்த பட்டாம்பூச்சியும் கேள்வி கேட்டதில்லை.
அப்படி கேட்காததாலோ என்னவோ பல்லாயிரம் ஆண்டுகளாகியும் அவைகள் தங்கள் உண்மை அழகோடு ஜொலிக்கின்றன. தங்களின் இனம் பல்கி பெறுகியும் கிளை இனங்களோடும் மகிழ்ந்து திரிகின்றன இந்த பூமியில்.

அவை இன்றும் பிரபஞ்சத்தின் ஒரு முக்கிய அழகான பக்கமாய் திகழ்வதன் காரணம். அவை இயற்கையை ஏற்றுகொண்டது.

நாம். வெறும் ஒரு குரோமோசோம் சேர்ந்து உறுமாற்றம் பெற்றதற்கே
இயற்கை எதிர்த்து போரிடுகிறோம். அவைகள் சிறகுகள் பெற்றாலும்
இயற்கைக்கு என்றும் எதிர்த்து போராடியதில்லை. நமக்கும் சிறகுகள் முளைத்திருந்தால் பக்கத்து நாட்டின் மீது பறந்து பறந்து தாக்கி இருப்போமோ என்னவோ.?!.

ஒரு சின்ன உயிரனத்திற்கு கூட தெரிக்கிறது இயற்கை எதிர்ப்பு என்பது தாயின் கருப்பையை சிதைக்க துடிப்பது போன்று என்று. நாம் அதை உணராது போனது எப்படியோ தெரியவில்லை. இத்தனைக்கும் நமக்கு ஆறறிவு வேறு.



நீங்களே சொல்லுங்கள் எந்த பட்டாம்பூச்சியாவது தன் இனத்தை சேர்ந்த இன்னொரு பட்டாம்பூச்சியை கொன்று பார்த்திருக்கிறீர்களா..?

இந்த பட்டாம்பூச்சிகள் எப்போதாவது எதிர் நாட்டின் மீது குண்டு வீசியுள்ளதா?
இந்த பட்டாம்பூச்சிகள் என்றாவது தங்கள் ஆரோக்கியம் கெடும் என தெரிந்தும் உணவை உட்கொண்டு நீங்கள் பார்த்ததுண்டா?

புவிக்கு வெப்பமேற்றி அதன் நிலை தடுமாற வைத்ததுண்டா?

சிந்தியுங்கள்.. சீர்திருத்தி கொள்ளுங்கள்.
என்றாவது ஒரு நாள் அவைகள் பொறாமை படுமளவு நாம் அழகாகி காட்டுவோம்.

சொல்லமுடியாது இயற்கையை ஏற்று நடப்பதால் உங்களுக்கும் சிறகுகள் கிடைக்கலாம்.

Friday, March 27, 2009

விளக்கை அணை .. உலகம் வாழட்டும்


முதல் முதலாக புவி வெப்பமடைவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலக நாடுகளில் உள்ள மக்கள் பலர் ஒன்று சேர்ந்து நாளை சனி இரவு 8 : 30 மணி முதல் 9:30 மணி வரை தங்கள் வீடுகளில் விளக்கை அணைத்து தங்களின் விழிப்புணர்வை வெளிப்படுத்த இருக்கிறார்கள்.



இது போன்ற முயற்சி எர்த்ஹவர் என்கிற இயக்கம் மூலமாக 2007ல் துவங்கப்பட்டது.
முதல் முதலாக 2007ல் ஆஸ்திரேலிய மக்கள் 2.2 மில்லியன் பேர் தங்களுடைய வீடுகளில் உள்ள விளக்குகளை அணைத்து தங்களுடைய ஓட்டினை எர்த் ஹவருக்கு பதிவு செய்தனர்.
அடுத்த ஆண்டே 2008ல் 50 மில்லியன் பேர் தங்களுடைய ஓட்டினை இவ்வாறு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இயக்கத்தை இந்த வருடம் இந்தியாவும் இந்த ஆண்டு ஆதரிக்க முன்வந்துள்ளது.
நமது நாட்டில் இந்த இயக்கத்தினை தலைமையேற்க பாலிவுட் நடிகர் அமீர்கான் முன்வந்துள்ளார்.

இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்லாமல் உலக வெப்பமாதலில் நமது நாடும் முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே வரும் சனிக்கிழமை இரவு உங்கள் வீடுகளில் உள்ள விளக்குகளை அனைத்து எர்த் ஹவருக்கு உங்கள் ஓட்டினை பதிவு செய்யுங்கள்.
உங்களின் ஓட்டுகள் அனைத்தும் பதியப்படுவது மட்டுமின்றி அது
கோபென்ஹாகனில் நடக்கவிருக்கும் புவி வெப்பமடைதல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் என்பது குறிப்படத்தக்கது.

இன்று வரை சரியாக 80 நாடுகளில் உள்ள 825 நகர மக்கள் இதற்கு ஆதரவு தெரிவுத்துள்ளனர்.
நமது நாட்டில் இன்ஃபோசிஸ், விப்ரோ, HSBC , HP ஆகிய நிறுவனங்கள் இதற்கு ஆதவளித்துள்ளன.

நீங்களும் உங்கள் மேலான ஆதரவினை அளிக்குமாறு கேட்டுகொள்கிறேன்.

மேலும் தகவலுக்கு இங்கே சுட்டவும்.

உங்களின் கருத்துக்களை வரவேற்கிறேன்.