பல நாட்களாக எழுத நினைத்து, நேரமின்மை காரணமாக தள்ளிபோய்கொண்டே இருந்தது.
இன்று அதற்கான சிறப்பான நேரம் அமைந்ததை தொடர்ந்து எழுதுகிறேன்.
"மக்கள் புத்தகங்களை தேர்ந்தெடுப்பதில்லை, புத்தகங்கள் மக்களை தேர்ந்தெடுக்கின்றன" என்கிற வரி நினைவுக்கு வருகிறது.
இவ்வாறு சில பல நல்ல புத்தகங்கள் என்னை தேர்ந்தெடுத்துள்ளன என்பது என்னை பெருமைப்பட செய்கிறது.
என் மனதில் நீங்க இடம் பிடித்த புத்தகங்களில் ஒன்று, முதன்மையானது..

சிகரங்களை நோக்கி- வைரமுத்து.
கவிப்பேரரசு வைரமுத்துவை பற்றி சொல்லிதெரியவேண்டியதில்லை.. சொல்லிலேயே தெரிந்து விடும்.. அவர் இரண்டு ரத்தினங்களுக்கு சொந்தகாரர்.
ஆம்.. முத்துவும், வைரமும் எப்போதும் அவர் பேரில் பளிச்சிடுகின்றன..அவரின் வரிகளைப்போல..
வைரமுத்துவின் புத்தகங்களை பொருத்தமட்டில்.. முன்னுரைக்காகவே ரசிகனானவன் நான். அந்த புத்தகத்தின் மொத்த வார்த்தைகளின் மதிப்பும், பொருளும் முன்னுரையிலேயே முளைத்து நிற்பவை. அவரின் முன்னுரையே இவ்வளவு ரசிக்கப்படுவது என்றால்.. இன்னும் உள்ளே...!!!
தமிழ்தாயின் தமிழ்த்திருமகனின் வார்த்தை ஜாலங்கள், வாழ்க்கை கோலங்கள் என அனைத்தும் முதல் சில பக்கங்களிலேயே ஆரம்பித்துவிடுகிறது.
ஒரு கதையை கவிதையாக சொல்கிறாரா? இல்லை கவிதையினூடே கதையும் பின்னி வந்துள்ளதா? என சில நேரம் எனக்குள் ஒரு ஆச்சரியம் பெருகுவதுண்டு.
அத்தனை அளவுக்கு கதையில் கவியாக, கவியில் கதையாக, பின்னத் துவங்கிறது பக்கங்கள்.
ஒரு கவிஞனின் ஊமைப்பார்வையும், ஒரு பெண்ணின் உலகப்பார்வையும், ஒரு விஞ்ஞானியின் விஷமப்பார்வையும் சேர்ந்து கதையின் வலிமை கூட்டி நிற்கிறது.
ஒரு நகரத்து இளைஞனின் மலைக்கிராம சந்திப்பும், அங்கே மக்களின் அவலங்களும், அதை மீட்டு எடுக்க முயலும் ஒரு பெண்ணும், ஒரு மர்ம விஞ்ஞானியாக அவளின் அப்பாவும் கதையின் உயிர்நாடிகள்.
இவர்களை சுற்றி நகரும் கதையில் பலகளங்களை பற்றிய கருத்தாடல்கள் நிகழ்கின்றன. கவிஞர் கவிதைகளோடு மட்டுமல்லாது அறிவும் புகட்டுகிறார் .
படித்து சுவையுங்கள் : சிகரங்களை நோக்கி.
எழுதியவர் : கவிஞர் வைரமுத்து.