Tuesday, June 22, 2010

தூக்கமும், மரணமும், கொஞ்சம் புரிதலும்!! பாகம்-1

இரவு தூங்கும் நேரம்..நினைவு தூங்கிடாது!! நினைவு தூங்கினாலும், உறவு தூங்கிடாது!!
நல்ல பாடல் !! இரவில் கேட்க இன்னும் சுகம்..!!

தூக்கம் மனிதனின் ஆதர்ஷ நண்பன். இவன் அதிக நேரம் நம்மோடு இருந்துவிடவும் கூடாது.
வராமலும் நம்மை வருந்தவைக்க கூடாது.

ஒரே ஒரு நண்பனை மட்டும் நாம் எப்போதும் வரவேற்பதில்லை. அவன் பெயர் மரணம்!!

இவைகள் இரண்டை பற்றியும் நான் சிந்தித்து தெளிந்த கருத்துகளை சொல்ல ஆசைப்படுகிறேன்..!!

தூக்கம், மரணம் இவை இரண்டுமே ஒரே விஷயத்தின் இரண்டு பக்கங்களாக...அல்லது
ஒரே விஷயமோ என்று யோசிக்கிறேன்!!


முதலில் தூக்கத்திற்கு வருவோம். தூக்கம் என்பது உடம்புக்கு ஓய்வு கொடுத்து மனதை அமைதிப்படுத்தும்
ஒரு தினசரி நிகழ்வு. சிலருக்கு இது நடப்பதே இல்லை..உடம்பு ஓய்வுபெற்றாலும் மனம் தூக்கத்திலும் இயங்கி,
தூக்கத்தை கெடுத்துவிடுவது வேறு கதை :).

இப்போது தூக்கத்தின் சாரத்தை நாம் சரியாக புரிந்துகொள்ள வேண்டி
இருக்கிறது. முதலில் தூக்கம் துவங்கும் போது..உடனே கண்கள் மூடி ஆழ்ந்து தூங்கிவிடுவதில்லை. முதலில் உடலுக்குள்
ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு..கொஞ்சமாய் நம் கைகளும் கால்களும் ஓய்வு பெறுகின்றன..அடுத்து அடிவயிறு, மேல்வயிறு..பிறகு
மார்பு என இந்த பகுதிகளில் ஒரு அயற்சி ஏற்பட்டு அந்த சதைகள் இளகுகின்றன.

பிறகு அதற்கும் மேலாக நம் தோள்பட்டை சதைகள்
இளகிவிடும் போது..தூக்கம் நம்மை நெருங்கியதாக உணர ஆரம்பிக்கிறோம். மூச்சு லேசாகிறது. ஆழ்ந்து மூச்சுவிட முடிகிறது. கண்கள்
கனத்து தூக்கம் வந்துவிடுகிறது. அடுத்து..உடல் மீண்டும் சுறுசுறுப்பாகிறது. உங்கள் அனுமதியை பற்றியெல்லாம் கவலைப்படாமல்
உடல் திசுக்கள் தானாக தங்களை சரிசெய்து கொள்கின்றன.

அடுத்த கட்டமான ரிப்பேர்கள் முடிந்து உடல் சமநிலை பெறுகிறது. அப்போது உங்களை மறந்து ஆழ்ந்து தூங்கிபோவீர்கள்.அப்போது
நம் உள்ளார்ந்த சக்திகள் அனைத்தும் நிதானமடைந்து அவைகள் உயிராற்றலுடன் கலந்துவிடுகிறது. இதைதான் “Returning to Source" என்று
சொல்வார்கள். அதாவது உயிரின் மூலத்திற்கே எல்லா சக்திகளும் திரும்பி விடுவது. அப்போது கொஞ்ச நேரம் நீங்கள் மரணமடைந்தவர்தான்.

....இதில் நல்ல விஷயம் என்னவென்றால் காலை நீங்கள் எழும் போது..உங்கள் முதல் கான்சியஸில் சக்திகள் அனைத்தும் உடலின் பாகங்களுக்கு
மீண்டும் பரவி உங்களை ஃப்ரெஷ்ஷாக்கி விடுகிறது. தூங்கி எழுந்தவுடன் ஃப்ரெஷ்ஷாக உணர்வதெல்லாம் அதனால் தான்.
புதிய சக்தி உங்கள் உடலில் பாயதுவங்கியதால்.நாம் எப்போது தூங்குவோம், எப்போது விழிக்க வேண்டும், என்ற கால நேர வரையறைகளில்
தூக்கம் முடிந்துவிடுகிறது. ஆனால் ”மிஸ்டர் மரணம்” அப்படி இல்லை..!!

”நான் எப்போ வருவேன்..எப்படி வருவேன்னு யாருக்கு தெரியாது” ...என்று அது பஞ்ச் டயலாக் பேசினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
உண்மை என்னவோ அதுதான்..!!

மனிதர்கள் தூங்க தயார். சாக தயாரில்லை என்று சொல்வதே வினோதமான ஒன்று.
தூக்கம் என்பதே ஒருவகை வரையறுக்கப்பட்ட மரணம்தான்.!!


நீங்கள் உங்கள் உடலில் இறந்து...மீண்டும் அதே உடலில் மீண்டும் விழிந்தெழுந்தால் அது தூக்கம்...!! 
நீங்கள் இன்று தூங்கி நாளை காலை வேறொரு உடலில் விழித்தெழுந்தால்.. அது தூக்கமில்லை ..மரணம்!!மரணம் பற்றிய பயத்தை விட அதை பற்றிய புரிதல் தேவை..அப்படி புரிந்துகொண்டால் அது எவ்வளவு நல்ல விஷயம் என்பது புரியும்..!!
அதை அடுத்த பாகத்தில் பார்ப்போம்..!!

Tuesday, June 15, 2010

பாட வராதா? ஆட வராதா? கவிதை வராதா? பொய் சொல்லாதீங்க..!!

ம்ம்ம்ம்..மனிதர்கள் தோன்றி ஒரு 2 லட்சம் வருடங்கள் இருக்குமா?

                      

இருக்கும்...!! கடந்த கால மனிதர்களுக்கும் நம் நவீன கால மனிதர்களுக்கும் தான் எத்தனை வித்தியாசம்.!!
எத்தனை மாற்றங்கள், எத்தனை முன்னேற்றங்கள், எத்தனை சவுகரியங்கள், சுகங்கள்!!

இதை, இந்த சவுகரியத்தையும் சுகத்தையும்தான் அந்த ஆதிகால மனிதன், அந்த கல்லை குட்டி தீமூட்டி நின்றவன்
சிந்தித்தான். செயலாற்ற முனைந்தான். அதுவே இன்று நம்மை இந்த நிலைக்கு கொண்டுவந்து விட்டுருக்கின்றன..!!

இதற்கு அடிப்படை மனிதனின் படைப்பாற்றல்!! Creativity. அது அவனை இன்னும் பல்வேறு மைல்கள் கொண்டுசெல்லும்
என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை..!! அது எப்போதும் முட்டி மோதி தன்னை வெளிப்படுத்திகொண்டே இருக்கிறது..!!

ஆனால்..இப்போது சூழ்நிலை சரியில்லையோ என்று தோன்றுகிறது. என்னிடம் பேசும் பலர்...எனக்கு கற்பனைத் திறன் கம்மி!! என்று
பெருமையாக சொல்லும் போது “வெகு சிறுமையாக உணர்ந்தேன்”..!!
என்ன செய்ய..இப்போது இதுவே ஒரு ட்ரெண்ட் ஆகிவிட்டது..

ஹிஹி..!! எனக்கு பாட வராது..!! எனக்கு வரைய வராது..!! எனக்கு வாசிக்க வராது..!! என்று எல்லா படைப்பாற்றலையும்
வராது வராது என்று சொல்லியே வரவிடாமல் செய்துவிட்டோம்..!!

ஏன் நான் வரைய வராது என்று கூசாமல் சொல்கிறேன்..?? அடிப்படை படைப்பாற்றலையே அழிக்க பார்க்கும் இந்த சுபாவம்
எங்கிருந்து வந்தது?
அதன் அடிப்படை..நம்முடைய தாழ்வு மனப்பான்மை.!! இப்போது இந்த மொத்த சமூகத்திலும் தாழ்வு மனப்பான்மை பெருமையானதாக
மாற துவங்கி இருக்கிறது..!!

நாம் பாடலாம், ஆடலாம், வரையலாம், இசை மீட்டலாம், குறுந்திரைப்படங்கள் இயக்கலாம்..இப்படி எல்லா வகையான படைப்பாற்றல்மிக்க
செயல்களும் செய்ய நமக்கு வசதியும் வாய்ப்பும் இருந்தும்....நாம் வராது என்று சொல்வது நம் கையை நாமே முறித்துகொள்வது போல்.!!

நாம் ஒரு புல்லாங்குழலை எடுத்து ஊத ஆரம்பிக்கும் போது  மனம் சொல்லும்..”இதனால் உனக்கென்ன புதிதாய் வேலைகிடைத்துவிட போகிறதா?
இதனால் என்ன ப்ரயோஜனம்? வீணான வேலை இல்லையா இது? “இப்படி மனம் பல்வேறு வழிகளில் உங்கள் படைப்பாற்றலை முடக்கி போடும்..!!

கண்டுகொள்ளவே செய்யாதீர்கள்.உங்கள் ஜென்ம சனி உங்கள் மனம் மட்டுமே..!! இதயமும் அறிவும் கலந்து நடத்தும் படைப்பாற்றிலின் வித்தையை
மனம் எப்போதும் குறுக்கிட்டு கெடுக்கும்..!

விடாதீர்கள்..அதை கண்டுகொள்ளாமல்.. இசையை..அந்த ஆழ்ந்த நேசத்தை..உங்களுக்கான உள்ளார்ந்த காதலை..
அன்பை..இறைவன் அருளை..அனுபவியுங்கள்..!! நீங்கள் பார்த்திராத நிம்மதியும் அமைதியும் உங்களை தேடி வந்து தாலாட்டும்..மீண்டும்
உங்கள் தாயின் மடிக்கே திரும்பிய சுகத்தை நிச்சயம் உணர்வீர்கள்..!!

முயன்றுபாருங்கள்..!! படைப்பாற்றலை கையிலெடுங்கள்..!! அது தரும் நிம்மதியை உணருங்கள்..முழுமையான மனிதராய் வாழுங்கள்!!
வாழ்த்துக்கள்!!

Friday, June 4, 2010

கண்ணன் ஏன் தோற்பதில்லை?

சென்ற பதிவில் பார்த்ததுபோல்..கண்ணனின் டெக்னிக் என்ன என்பதை ஆராய்ந்தோம்.
இப்போது..அவன் எப்படி வெற்றி வீரனாக திகழ்கிறான் என்பதை பார்ப்போம்.

http://moralstories.files.wordpress.com/2006/10/chaanuura-mushtika-vadha.jpg
இதை புரிந்துகொள்ள, முற்றிலும் வித்தியாசமான சிலவற்றை சொல்லப்போகிறேன்.
என்னை பொறுத்தவரை, வெல்ல விரும்பாதவனே வெல்கிறான்; வெல்ல நினைப்பவன் தோற்றுவிடுகிறான்!
அந்த கதைகள் எல்லாம், நான் புரிந்துகொண்ட அளவில், இதைத்தான் சொல்கின்றன.

வெல்லும் ஆசைக்குள், தோல்வி ஒளிந்து கொண்டிருக்கிறது, அதன் அடியாழத்தில். இந்த கண்ணன் ஆசையற்றவன் ,
ஏற்கனவே வென்று விட்டான், இனி வெற்றி அவனுக்குத் தேவையில்லை என்பது பொருள்.

இதை வேறு கோணத்திலும் புரிந்துகொள்ளலாம். யாராவது ஒருவர் வாழ்வில் வெல்ல ஆசைப்பட்டு, அதற்காகப்
போராடுகிறபோது, அடியாழத்தில், ஏதோ இல்லை என்ற தவிப்பு இருக்கிறது; தாழ்வு மனப்பான்மையால் அவர்
தவித்துகொண்டிருக்கிறார் என்று அர்த்தம். அடியாழத்தில் அந்த தாழ்வு மனப்பான்மை இருப்பதால், அதை வெற்றியால்
மூடி மறைக்கிறார் என்று அர்த்தம்.

இதற்கு மாறாக,  வெற்றிகளை விரும்பாத ஒருவர், தன்னுடைய மனத்தில் தாழ்வு மனப்பான்மையின் சிறு சாயல் கூட
இல்லாதவராய் இருப்பதால்..எதையும் வெற்றி கொள்ளும் ஆவல் அவரிடம் இல்லை.

ஒரு ஜென் குரு தன் நண்பர்களிடம் “நான் சாகும்வரை என்னை யாரும் வெல்ல முடியாது” என்று கூறினார்.
அவருடைய நண்பர்களில் ஒருவர் எழுந்து “ அந்த ரகசியத்தை எங்களுக்கும் சொல்லிக்கொடுங்கள். நாங்களும் வாழ்க்கையில்
வெற்றி பெற விரும்புகிறோம். எங்களை யாரும் வெல்லக் கூடாது” என்றார்.

அந்த குரு சிரிக்க ஆரம்பித்தார். “அப்படியானால் அந்த ரகசியம் உங்களுக்கு விளங்காது. நான் சொல்லிமுடிப்பதற்குள் நீங்கள் குறுக்கிட்டுவிட்டீர்கள்.
முழுவதுமாய் கேளுங்கள். நான் சொன்னது என்னை வெல்ல யாராலும் முடியாது ஏனென்றால் நான் முழுமையாக தோற்றுவிட்டேன். எனக்கு தோல்விக்கான
அச்சமோ, வெற்றிக்கான ஆவலோ இல்லை, எனவே என்னை எவராலும் வெல்ல முடியாது” என்று சொன்னேன் என்றார்.

நம்முடைய அடிப்படை வெற்றிகான வெறியே தோல்விக்கு இட்டுசெல்கிறது. எப்படியும் வாழவேண்டும் என்கிற ஆவலே உங்களை கல்லரைக்கு தள்ளிவிடுகிறது.
இன்றைய சமூகத்தில் ஆரோக்கியத்திற்கான அதிகப்படியான அக்கறையே நோய்களில் தள்ளிவிடுகிறது. இயற்கை வித்தியாசமானது. எதன்மீது மிகவும் அன்பு செலுத்துகிறோமொ
அதை சீக்கிரமே நம்மிடமிருந்து பிரித்துவிடுகிறது.

கண்ணனுக்கு எல்லாமே விளையாட்டு தான். குழந்தைகள் விளையாட்டிற்காகவே விளையாடுகின்றன. அவைகள் அதில் உள்ள வெற்றிக்காகவோ,
பெருமைக்காகவோ விளையாடவில்லை. அப்படி விளையாட அவர்கள் ஒன்றும் நம்மை போல் பைத்தியக்காரர்கள் இல்லை. முக்கியமாக கண்ணன்
பைத்தியக்காரனில்லை என்றே நினைக்கிறேன். சரிதானே?

Anyhow,இதுதான் என் கண்ணனின் விளையாட்டான வாழ்க்கையின் சாராம்சத்தை கொஞ்சமாய் ருசித்துபார்த்துவிட்டோம். அது என்னவென்றால்,
வாழ்க்கையை அதற்காக மட்டுமே வாழ்வது, லட்சிய வெறி, பண வெறி, காம வெறி, காதல் வெறி(இப்படியும் சிலருண்டு), பதவி வெறி என்கிற
எந்த மடத்தனமும் இல்லாமல், வாழ்க்கையை அதன்வழியிலேயே ஏற்றுகொள்வதே வாழ்வதாகும்.
வெற்றியை பற்றி கவலையே படாதீர்கள், வென்றுவிடுவீர்கள்..!!
வாழ்த்துக்கள்!!

டிஸ்கி:
பதிவுலகில் சண்டைகளும், சமாதானங்களும் சகஜமான ஒன்று தான். ஆனால் அடிப்படையான ஒரே விஷயமே இரண்டு வருடங்களாக ஒரு சண்டைக்கு
காரணாமாக அமைந்துவிட்டது. அது ”இமேஜ்”. நமக்கு தரும் பட்டமே நமக்கு வைக்கப்படும் ஆப்பு என்பதை பதிவர்கள் உணரவேண்டும். அதே போல்
நாம் நம் திருப்திக்காக எழுவது மட்டுமே சரியான வழியே தவிர..மற்றவருக்கோ, கடை பரபரப்பாக இருக்கவேண்டும் என்றோ எழுதினால் சிக்கல்தான். இது என் பணிவான அட்வைஸ்..!!

இமேஜை விடுங்கள். நீங்கள் நீங்களாக மட்டுமே எழுதுங்கள். வாழ்த்துக்கள்!!