Showing posts with label கட்டுரைத்தல். Show all posts
Showing posts with label கட்டுரைத்தல். Show all posts

Thursday, March 29, 2012

உன்னால் மட்டும்தான் அழ/சிரிக்க முடியும்..

 
 
 
 
 
உலகை பார், உலக உயிர்களை பார், மரம், செடி, கொடி, மிருகங்கள், பறவைகள்,
பூச்சிகள் இப்படி அனைத்தையும் பார். அவைகளை வாழ்கிறோம் என்ற விழிப்புணர்வே
இல்லாது வாழ்கின்றன. அவைகள் அவைகள் தான். அவைகளால் வேறொன்றாய் மாறமுடியாது.
நிச்சயமாய் முடியாது. பழமொழிகளில் மட்டுமே பூனை புலியை பார்த்து சூடு போட்டுகொள்ளும்.
மற்றபடி, எந்த புலியும் பூனையாய் வாழ்ந்ததில்லை. எந்த குருவியும் கழுகாக மாற துடித்ததில்லை.
தான் கழுகாய் இல்லையே என்று ஏங்கியதில்லை. ஏன், தான் ஒரு குருவி என்கிற கவனம் கூட
அதற்கு இல்லை. அவை அனைத்தும், விதிக்கப்பட்ட படி மட்டுமே வாழ தகுதியுடையவை.
ஒரு சிங்கம் பிறக்கும் போதே சிங்கம் தான். ஒரு மாமர விதை, அதை விதையிலிருந்தே மாமரம் தான்.
அதை நீ பலாமரமாகவோ, தேக்காகவோ மாற்ற இயலாது. அதன் விதி, அதன் விதையிலேயே
நிர்யணிக்கப்பட்டாயிற்று. இனி அதற்கு கவலை இல்லை, ஒன்று மாமரமாய் வளரலாம், இல்லையேல் அழிந்துபோகலாம்.
இரண்டே வாய்ப்புகள் தான். மாமரம் இல்லையேல் மரணம். (மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரண தேவி என்பது போல்)

ஆனால் உன்னை பார், ஒரு மனிதனாய் உன்னை நீயே கவனி, அப்போது ஒரு அதியற்புதமான விஷயம், பளிச்சென்று
உனக்கு புரிபடும். அது நீ அளவுகடந்த வாய்ப்பு கொண்டவன் என்பது. நீ உடலில் மனிதன், ஆனால் உள்ளத்தில்?
நீ யார்? நீ யார்? நீ யார்? சொல்ல தெரியவில்லை தானே. அதுதான் உன் சுதந்திரம், அந்த தடுமாற்றம் இயலாமை அல்ல.
அந்த தடுமாற்றம் உன் முன் விரிந்துகிடக்கும் அளவற்ற வாய்ப்புகளால் உண்டானது. அதை பார்த்து வாயடைத்து போவதால் தான்
உன்னிடம் இருந்து எந்த பதிலும் வருவதில்லை. எப்போது நீ யார் என்று கேட்டாலும், நீ தெளிவடைந்த நீ, உனக்குள் விரியும்
வாய்ப்புகளை பார்க்கலாம், இப்போதே நீ கடவுளும் ஆகலாம், அல்லது இப்போதே நீ மிருகத்தைவிட கீழ் நோக்கியும் செல்லலாம்.
அந்த வாய்ப்பு இங்கே உன் முன் நிச்சயமாய் இருப்பது உனக்கு தெரிவதால் தான் உன்னால் “நீ யார்” என்பதற்கு பதிலளிக்கவே முடிவதில்லை.

பொத்தாம் பொதுவாய், நான் ஆண், நான் முகமதியன், இந்து, கிறுஸ்தவன், அந்த ஜாதி, இந்த இனம் என்று சொன்னாலும்,
அந்த உள்ளிருக்கும் ஒன்று நீ இதெல்லாம் இல்லை என்று மென்மையாக சொல்லிகொண்டே தான் இருக்கிறது. அதை நீ மறைக்கலாம்,
அதை நீ மறக்கலாம். அந்த வாய்ப்பும் கூட உன் கையிலேயே இருக்கிறது. இந்த அளவற்ற சுதந்திரத்தை கவனித்தாயா?
எந்த ஒரு மரத்தாலும், மிருகத்தாலும் தன் உள்ளியல்பை மறக்கவோ, மறைக்கவோ இயலாது. எல்லா வகையிலும் மாமரம்,
மாமரமாகத்தான் மிளிரும். எல்லா வகையிலும் ஒரு மல்லிகைப்பூ மல்லிகைப்பூ வாசமே வீசும். அவைகளால் மறைக்கவோ,மறக்கவோ முடியாது.
நிச்சயமாய் முடியாது. 

ஆனால், நீ இந்த அரிய வாய்ப்பை பெற்றிருக்கிறாய், நீ மறக்கலாம், மறைக்கலாம், அல்லது நீ உன் உள்ளியல்பை முழுவதுமாய்
வெளிப்படுத்தி, இந்த பாலத்தை கடக்கலாம். பாலமா? ஆம் பாலம் தான். மனிதன் ஒரு பாலம் தான். மனித பிறவி ஒரு பாலம் தான்.
இயற்கைக்கும் இறைமைக்குமான பாலம். மிருகத்திற்கும் கடவுளுக்குமான பாலம். மனிதன் அவனின் உள்ளியல்பு படி வாழ வாழ,
அவன் இறைமையை நெருங்குகிறான். அவன் உள்ளியல்பை வெறுத்தோ,மறைத்தோ, மறந்தோ வாழும்பொழுது மிருகத்திற்கும் கீழே செல்கிறான்.
அதனால் தான் நாம் புத்தரை உயர்த்தியும், ஒரு குடிகாரனை தாழ்த்தியும் பேசுகிறோம். காரணம், குடியில் மனிதன் தான் மனிதன் என்பதையே
மறக்கிறான். அவன் “அது”வாக மாறுகிறான். ஒரு உயர்திணை அஃறிணைக்கு தள்ளப்படுகிறது. ஆனால் புத்தன், பாலத்தை கடந்துவிட்டான், அவன்
மனிதனையும் கடந்து மேலே எழுந்துவிட்டான், இனி அவன் மனிதன் என்ற சின்ன சிறைக்குள் இல்லை, அதையும் கடந்து, இறைமைக்குள் குதித்துவிட்டான்.
விழிப்புணர்வே அல்லாத நிலை குடிகாரனுடையது. விழிப்புணர்வின் உச்சகட்டம், புத்தனுடையது. கள்ளுண்டவன் நீரின் 0 டிகிரி என்றால், புத்தன் நீரின் 100 டிகிரி.

நீ ஓவியனாகலாம், கவிஞனாகலாம், கலைஞனாகலாம், அறிஞனாகலாம், அறிவியல் செய்யலாம், ஆராய்ச்சியாளனாகலாம், புத்தனாகலாம் இப்படி
உன்னுடைய சுதந்திரம் அளப்பறியது. நீ உன்னுடைய இயல்பிலிருந்து எழும் எதை செய்தாலும், அது உன்னை இன்னும் மேம்படவே வைக்கும். எனவே,
உனக்குள் ஆழ்ந்து போ, உன்னை, உன் நிஜ உன்னை கண்டுபிடி. அதுதான் நீ மற்றவை எல்லாம், மனதின் சூதாட்டம்.

நன்றி,
ரங்கன்.

Sunday, August 8, 2010

மாற்றமும் மாறும்!!



இந்த உலகத்தில் நிலைத்த தன்மை என்ற ஒன்றை நினைத்துபார்க்கவே முடிவதில்லை.
இதை இன்றைய விஞ்ஞானமும், மெய்ஞானமும் இணைந்தே ஒப்புகொள்கின்றன.
காரணம், இயற்கை. இயற்கையின் நியதிகளில் மிகவும் முக்கியமானதும், அத்தியாவசியமானதுமாய்
இந்த மாறுதல் கோட்பாடு அமைந்திருக்கிறது. அதன் அடிப்படையிலேயே இவ்வுலகமும், பிற உலகங்களும்,
ஏன்..மொத்த பிரபஞ்சமுமே இயங்கி வருகிறது.
இப்படிப்பட்ட அத்தியாவசிய மாறுதல் விதி நம்மை சுற்றி மட்டுமே நடக்கிறதா என்றால் இல்லை.
நமக்குள்ளும்,அதாவது நம்முடைய உடல், மனம், அறிவு, ஆன்மா ஆகிய நான்கு கூறுகளிலும் ஒரு தொடர் நிகழ்வாக நிகழ்ந்தவண்ணமே
உள்ளது.

நாம் அன்றைய நாகரிகமற்ற மனிதர்களைப்போல் இல்லை. கல்லை குட்டி தீமூட்டவில்லை. உணவை பச்சையாக உண்பதில்லை.
இவ்வளவு ஏன்..80களில் இருந்த மனித சமுதாயத்திற்கும் இப்போது இருக்கும் மனித சமுதாயத்திற்குமே ஏகப்பட்ட வித்தியாசங்கள்.
இப்படி நம் அழகுணர்ச்சி முதல் நாம் பயன்பாட்டில் ஏற்றுகொண்ட பொருட்கள் வரை அவ்வளவும் தங்கள் நிலையில் இருந்து மருவி,
மாறுபட்டு நிற்கின்றன. மாறுபட்டு என்கிற வார்த்தையில் அடியிலும் எதோ ஒரு உட்கருத்து ஒளிந்துள்ளதை நான் உணர்கிறேன்.

அதுதான் படைப்பாற்றல்.

படைப்பாற்றல் என்பது ஓவியருக்கோ, பாடகருக்கோ, அல்லது சினிமாக்காரர்களுக்கு மட்டுமே இருக்கும் விஷயம் என்றால்,
நீங்கள் நினைப்பது தவறு. உங்கள் வீட்டில் தினமும் ஒரே குழம்பும் இட்லியும் செய்தால் ஏன் கோபப்படுகிறீர்கள்? மனம் புதியதை
அல்லது புதுவகையில் அதே விஷயம் மாறி இருப்பதையே விரும்புகிறது. நம் படைப்பாற்றலின் ஊற்று எல்லாருக்குள்ளும் ஒளிந்து
நம்மை மாற்றமடையவும், மேம்பட்ட ஒரு வாழ்க்கைக்கான ஊக்கத்தையும் தந்த வண்ணம் இருக்கிறது.

மாற்றங்களை தூண்டும் படைப்பாற்றல் மனித மனத்தில் ஒரு சிறந்த சீரான முதிர்ச்சியை தெளிவை கொடுக்கக்கூடியது.
அதன் எல்லைகளை தொட்டவர்கள் துறைசார்ந்த ஞானிகளாக விளங்கிகொண்டிருக்கிறார்கள். டாவின்சி முதல் ரஹ்மான் வரை
நாம் அவர்களை பெருமையோடு போற்றி வந்துள்ளோம். அப்படிப்பட்ட மாறுதலை தூண்டும் படைப்பாற்றல் எல்லாருக்கும் சொந்தமானது.

அதை அனைவரும் சுயமாய் தெரிந்துகொண்டு அதை சிறப்பான முறைகளில் வழிநடத்துவதன் மூலம் தன்னுள்ளும் மேம்பட்டு , மனித
சமுதாயத்தையும் மேம்படுத்த முடியும் என்பது என் ஆழமான நம்பிக்கை.

Tuesday, June 22, 2010

தூக்கமும், மரணமும், கொஞ்சம் புரிதலும்!! பாகம்-1

இரவு தூங்கும் நேரம்..நினைவு தூங்கிடாது!! நினைவு தூங்கினாலும், உறவு தூங்கிடாது!!
நல்ல பாடல் !! இரவில் கேட்க இன்னும் சுகம்..!!

தூக்கம் மனிதனின் ஆதர்ஷ நண்பன். இவன் அதிக நேரம் நம்மோடு இருந்துவிடவும் கூடாது.
வராமலும் நம்மை வருந்தவைக்க கூடாது.

ஒரே ஒரு நண்பனை மட்டும் நாம் எப்போதும் வரவேற்பதில்லை. அவன் பெயர் மரணம்!!

இவைகள் இரண்டை பற்றியும் நான் சிந்தித்து தெளிந்த கருத்துகளை சொல்ல ஆசைப்படுகிறேன்..!!

தூக்கம், மரணம் இவை இரண்டுமே ஒரே விஷயத்தின் இரண்டு பக்கங்களாக...அல்லது
ஒரே விஷயமோ என்று யோசிக்கிறேன்!!


முதலில் தூக்கத்திற்கு வருவோம். தூக்கம் என்பது உடம்புக்கு ஓய்வு கொடுத்து மனதை அமைதிப்படுத்தும்
ஒரு தினசரி நிகழ்வு. சிலருக்கு இது நடப்பதே இல்லை..உடம்பு ஓய்வுபெற்றாலும் மனம் தூக்கத்திலும் இயங்கி,
தூக்கத்தை கெடுத்துவிடுவது வேறு கதை :).

இப்போது தூக்கத்தின் சாரத்தை நாம் சரியாக புரிந்துகொள்ள வேண்டி
இருக்கிறது. முதலில் தூக்கம் துவங்கும் போது..உடனே கண்கள் மூடி ஆழ்ந்து தூங்கிவிடுவதில்லை. முதலில் உடலுக்குள்
ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு..கொஞ்சமாய் நம் கைகளும் கால்களும் ஓய்வு பெறுகின்றன..அடுத்து அடிவயிறு, மேல்வயிறு..பிறகு
மார்பு என இந்த பகுதிகளில் ஒரு அயற்சி ஏற்பட்டு அந்த சதைகள் இளகுகின்றன.

பிறகு அதற்கும் மேலாக நம் தோள்பட்டை சதைகள்
இளகிவிடும் போது..தூக்கம் நம்மை நெருங்கியதாக உணர ஆரம்பிக்கிறோம். மூச்சு லேசாகிறது. ஆழ்ந்து மூச்சுவிட முடிகிறது. கண்கள்
கனத்து தூக்கம் வந்துவிடுகிறது. அடுத்து..உடல் மீண்டும் சுறுசுறுப்பாகிறது. உங்கள் அனுமதியை பற்றியெல்லாம் கவலைப்படாமல்
உடல் திசுக்கள் தானாக தங்களை சரிசெய்து கொள்கின்றன.

அடுத்த கட்டமான ரிப்பேர்கள் முடிந்து உடல் சமநிலை பெறுகிறது. அப்போது உங்களை மறந்து ஆழ்ந்து தூங்கிபோவீர்கள்.அப்போது
நம் உள்ளார்ந்த சக்திகள் அனைத்தும் நிதானமடைந்து அவைகள் உயிராற்றலுடன் கலந்துவிடுகிறது. இதைதான் “Returning to Source" என்று
சொல்வார்கள். அதாவது உயிரின் மூலத்திற்கே எல்லா சக்திகளும் திரும்பி விடுவது. அப்போது கொஞ்ச நேரம் நீங்கள் மரணமடைந்தவர்தான்.

....இதில் நல்ல விஷயம் என்னவென்றால் காலை நீங்கள் எழும் போது..உங்கள் முதல் கான்சியஸில் சக்திகள் அனைத்தும் உடலின் பாகங்களுக்கு
மீண்டும் பரவி உங்களை ஃப்ரெஷ்ஷாக்கி விடுகிறது. தூங்கி எழுந்தவுடன் ஃப்ரெஷ்ஷாக உணர்வதெல்லாம் அதனால் தான்.
புதிய சக்தி உங்கள் உடலில் பாயதுவங்கியதால்.நாம் எப்போது தூங்குவோம், எப்போது விழிக்க வேண்டும், என்ற கால நேர வரையறைகளில்
தூக்கம் முடிந்துவிடுகிறது. ஆனால் ”மிஸ்டர் மரணம்” அப்படி இல்லை..!!

”நான் எப்போ வருவேன்..எப்படி வருவேன்னு யாருக்கு தெரியாது” ...என்று அது பஞ்ச் டயலாக் பேசினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
உண்மை என்னவோ அதுதான்..!!

மனிதர்கள் தூங்க தயார். சாக தயாரில்லை என்று சொல்வதே வினோதமான ஒன்று.
தூக்கம் என்பதே ஒருவகை வரையறுக்கப்பட்ட மரணம்தான்.!!


நீங்கள் உங்கள் உடலில் இறந்து...மீண்டும் அதே உடலில் மீண்டும் விழிந்தெழுந்தால் அது தூக்கம்...!! 
நீங்கள் இன்று தூங்கி நாளை காலை வேறொரு உடலில் விழித்தெழுந்தால்.. அது தூக்கமில்லை ..மரணம்!!



மரணம் பற்றிய பயத்தை விட அதை பற்றிய புரிதல் தேவை..அப்படி புரிந்துகொண்டால் அது எவ்வளவு நல்ல விஷயம் என்பது புரியும்..!!
அதை அடுத்த பாகத்தில் பார்ப்போம்..!!

Friday, June 4, 2010

கண்ணன் ஏன் தோற்பதில்லை?

சென்ற பதிவில் பார்த்ததுபோல்..கண்ணனின் டெக்னிக் என்ன என்பதை ஆராய்ந்தோம்.
இப்போது..அவன் எப்படி வெற்றி வீரனாக திகழ்கிறான் என்பதை பார்ப்போம்.

http://moralstories.files.wordpress.com/2006/10/chaanuura-mushtika-vadha.jpg
இதை புரிந்துகொள்ள, முற்றிலும் வித்தியாசமான சிலவற்றை சொல்லப்போகிறேன்.
என்னை பொறுத்தவரை, வெல்ல விரும்பாதவனே வெல்கிறான்; வெல்ல நினைப்பவன் தோற்றுவிடுகிறான்!
அந்த கதைகள் எல்லாம், நான் புரிந்துகொண்ட அளவில், இதைத்தான் சொல்கின்றன.

வெல்லும் ஆசைக்குள், தோல்வி ஒளிந்து கொண்டிருக்கிறது, அதன் அடியாழத்தில். இந்த கண்ணன் ஆசையற்றவன் ,
ஏற்கனவே வென்று விட்டான், இனி வெற்றி அவனுக்குத் தேவையில்லை என்பது பொருள்.

இதை வேறு கோணத்திலும் புரிந்துகொள்ளலாம். யாராவது ஒருவர் வாழ்வில் வெல்ல ஆசைப்பட்டு, அதற்காகப்
போராடுகிறபோது, அடியாழத்தில், ஏதோ இல்லை என்ற தவிப்பு இருக்கிறது; தாழ்வு மனப்பான்மையால் அவர்
தவித்துகொண்டிருக்கிறார் என்று அர்த்தம். அடியாழத்தில் அந்த தாழ்வு மனப்பான்மை இருப்பதால், அதை வெற்றியால்
மூடி மறைக்கிறார் என்று அர்த்தம்.

இதற்கு மாறாக,  வெற்றிகளை விரும்பாத ஒருவர், தன்னுடைய மனத்தில் தாழ்வு மனப்பான்மையின் சிறு சாயல் கூட
இல்லாதவராய் இருப்பதால்..எதையும் வெற்றி கொள்ளும் ஆவல் அவரிடம் இல்லை.

ஒரு ஜென் குரு தன் நண்பர்களிடம் “நான் சாகும்வரை என்னை யாரும் வெல்ல முடியாது” என்று கூறினார்.
அவருடைய நண்பர்களில் ஒருவர் எழுந்து “ அந்த ரகசியத்தை எங்களுக்கும் சொல்லிக்கொடுங்கள். நாங்களும் வாழ்க்கையில்
வெற்றி பெற விரும்புகிறோம். எங்களை யாரும் வெல்லக் கூடாது” என்றார்.

அந்த குரு சிரிக்க ஆரம்பித்தார். “அப்படியானால் அந்த ரகசியம் உங்களுக்கு விளங்காது. நான் சொல்லிமுடிப்பதற்குள் நீங்கள் குறுக்கிட்டுவிட்டீர்கள்.
முழுவதுமாய் கேளுங்கள். நான் சொன்னது என்னை வெல்ல யாராலும் முடியாது ஏனென்றால் நான் முழுமையாக தோற்றுவிட்டேன். எனக்கு தோல்விக்கான
அச்சமோ, வெற்றிக்கான ஆவலோ இல்லை, எனவே என்னை எவராலும் வெல்ல முடியாது” என்று சொன்னேன் என்றார்.

நம்முடைய அடிப்படை வெற்றிகான வெறியே தோல்விக்கு இட்டுசெல்கிறது. எப்படியும் வாழவேண்டும் என்கிற ஆவலே உங்களை கல்லரைக்கு தள்ளிவிடுகிறது.
இன்றைய சமூகத்தில் ஆரோக்கியத்திற்கான அதிகப்படியான அக்கறையே நோய்களில் தள்ளிவிடுகிறது. இயற்கை வித்தியாசமானது. எதன்மீது மிகவும் அன்பு செலுத்துகிறோமொ
அதை சீக்கிரமே நம்மிடமிருந்து பிரித்துவிடுகிறது.

கண்ணனுக்கு எல்லாமே விளையாட்டு தான். குழந்தைகள் விளையாட்டிற்காகவே விளையாடுகின்றன. அவைகள் அதில் உள்ள வெற்றிக்காகவோ,
பெருமைக்காகவோ விளையாடவில்லை. அப்படி விளையாட அவர்கள் ஒன்றும் நம்மை போல் பைத்தியக்காரர்கள் இல்லை. முக்கியமாக கண்ணன்
பைத்தியக்காரனில்லை என்றே நினைக்கிறேன். சரிதானே?

Anyhow,இதுதான் என் கண்ணனின் விளையாட்டான வாழ்க்கையின் சாராம்சத்தை கொஞ்சமாய் ருசித்துபார்த்துவிட்டோம். அது என்னவென்றால்,
வாழ்க்கையை அதற்காக மட்டுமே வாழ்வது, லட்சிய வெறி, பண வெறி, காம வெறி, காதல் வெறி(இப்படியும் சிலருண்டு), பதவி வெறி என்கிற
எந்த மடத்தனமும் இல்லாமல், வாழ்க்கையை அதன்வழியிலேயே ஏற்றுகொள்வதே வாழ்வதாகும்.
வெற்றியை பற்றி கவலையே படாதீர்கள், வென்றுவிடுவீர்கள்..!!
வாழ்த்துக்கள்!!

டிஸ்கி:
பதிவுலகில் சண்டைகளும், சமாதானங்களும் சகஜமான ஒன்று தான். ஆனால் அடிப்படையான ஒரே விஷயமே இரண்டு வருடங்களாக ஒரு சண்டைக்கு
காரணாமாக அமைந்துவிட்டது. அது ”இமேஜ்”. நமக்கு தரும் பட்டமே நமக்கு வைக்கப்படும் ஆப்பு என்பதை பதிவர்கள் உணரவேண்டும். அதே போல்
நாம் நம் திருப்திக்காக எழுவது மட்டுமே சரியான வழியே தவிர..மற்றவருக்கோ, கடை பரபரப்பாக இருக்கவேண்டும் என்றோ எழுதினால் சிக்கல்தான். இது என் பணிவான அட்வைஸ்..!!

இமேஜை விடுங்கள். நீங்கள் நீங்களாக மட்டுமே எழுதுங்கள். வாழ்த்துக்கள்!!

Tuesday, July 7, 2009

எவரும் எழுதலாம் கவிதை!!


கவிதை எழுவது என்பது.. காதலிப்பதை போல.

ஆனால் சிலர்..

- "இப்போது எல்லாம் கவிதை என்கிற பேரில் கிறுக்க ஆரம்பித்துவிட்டனர் பலரும். ஒரு பத்து கவிதை எழுதுகிறார். கவிஞராகி விடுகிறார். "

என்று கவிதை வராத பலர் உளறிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் விஷயம் அப்படியல்ல. கவிதை எழுவது என்பது.. காதலிப்பதை போல. கவிதை என்றால் வாலியும், வைரமுத்துவும், கண்ணதாசனும், வண்ணதானும், பா.விஜயும், பழனிபாரதியும்
மட்டுமே எழுத வேண்டும் என்றில்லை. அது ஒரு காதல். காதலுக்கு பேதங்கள் இல்லை. இவர்தான் காதலிக்க வேண்டும் என்று எவரையும் தனியே குறிப்பிட முடியாது. அது எல்லாருக்கும் பொது. அது போல் தான் கவிதையும்.

அது பூவுக்குள்ளும் இருக்கும். நேற்று பார்த்த அவளின் கண்ணுக்குள்ளும் இருக்கும்.
அது எல்லாருக்கும் பொதுவானது. அது காற்றை போல.


சரி விஷயத்திற்கு வருகிறேன்.

விதை.. ஆஹா.. சொல்லும்போதே இனிமையான.. மகிழ்ச்சியான.. மற்றும் பல எண்ணங்களை ஏற்படுத்திகொடுக்கிற ஒரு வார்த்தை.

வார்த்தை என்று சொல்வதை விட.. அதை ஒரு மையம் என்று சொல்லலாம். ஆம் கவிதை தான் எழுத முயல்கிறோம். ஆனால் கவிதை நம்மிடம் இருந்து பிறந்து நம்மையே எழுதிவிடுகிறது.

நம் எண்ணங்களை அள்ளி தன்னகத்தே கொண்டு.. ஆங்கே ஓர் இணைவை உருவாக்கிவிடுகிறது.

இப்படிப்பட்ட கவிதைகளை எழுத ஏன் நாம் தயங்குகிறோம்.. ஏன்?

வார்த்தைகள் வந்து விழ வேண்டுமே .. வருவதில்லையே.

என்னை பொருத்த வரை வார்த்தைகள் ஒரு பொருட்டே அல்ல. எப்படி?
ஒரு குழந்தை பார்த்து அதன் அருகில் சென்றதும் என்ன செய்கிறோம்.. ஆஆஅ.. ச்ச்சூசு.. என அதற்கு புரிந்த மொழிக்கு நம் மனம் தாவிவிடுகிறது.
அதே போல் தான் கவிதையும். உங்களுக்கு வர வேண்டிய வார்த்தைகள் தானாய் வந்து விழும்.. நீங்கள் வழிவிட்டால் மட்டும் போதும்.

ஓஷோ சொல்வார்.

“நீ உன் கதவை திறந்து மட்டும் வை. வரும் காற்றை வா.. வா. என்று அழைத்துகொண்டு இருக்க வேண்டியதில்லை. அது உனக்கானது நிச்சயமாக. அது உனக்கு வந்தே தீரும். நீ செய்ய வேண்டியதெல்லாம் உன்னை நீ திறந்து வைத்திரு. எதையும் போட்டு குழப்பிகொள்ளாமல் தயாராய் மட்டும் இரு.”

அவ்வளவுதான்.

நீங்கள் கவிதை எழுத முடிவு எடுத்து பேனாவோடு அமர்ந்துகொண்டு ..கவிதையே வா.. என்று கூவினால் வரப்போவதில்லை.மிஞ்சி போனால்.. அடுத்த
அரை மணி நேரத்தில் நீங்கள் அடுத்த வேலையில் இருப்பீர்கள் ..அல்லது தூங்கிகொண்டு இருப்பீர்கள். அவ்வளவே..

பின்ன எப்படி தான் வரும் கவிதை ?

கவிதை.. அது வந்து போகும் ஒரு பொருளோ. எண்ணமோ அல்ல. அது எப்போதும் இருக்கிறது.

நீங்கள் காய்கறி வாங்கும் போதும், பல் துலக்கும்போதும்,
நடக்கும்போதும் அது எப்போதும் இருக்கிறது.

நீங்கள் செய்ய வேண்டியது அதை உணர வேண்டியது மட்டுமே. அந்த போதை வஸ்து உங்களுக்குள்ளேயே
ஊறி கிடக்கிறது.

நீங்கள் போதையை(கவிதையை) உணர நீங்கள் தான் இடைஞ்சல். அதை புரிந்து கொள்ளுங்கள்.

சரி எப்படித்தான் உணர்வது?

கடவுளையும் கவிதையையும் .. அதன் உணர்வையும் எந்த மொழியாலும் சொல்ல முடிந்ததில்லை. அதற்கு வார்த்தைகளே இல்லை.

எனக்கு தெரிந்த ஒரே வழியை சொல்கிறேன்.

நல்ல ஒரு பாடலை கேளுங்கள். அதன் வரிகளை ரசியுங்கள். முடிந்தால் ஆடுங்கள். பாடுங்கள். அனுபவியுங்கள்.

உங்களுக்குள் ஒரு சிலிர்ப்பு பரவும். அருவியின் சாரல் பட்டால் உடல் சிலிர்க்குமே அந்த சிலிர்ப்பு வரும்.


அப்போது எடுங்கள் பேனாவை.

அடுத்த பத்து நிமிடங்களில் நீங்கள் ஒரு அழகான அற்புதமான வரிகள் கொண்டு ஒரு கவிதையை புனைந்திருக்கிறீர்கள்.

முயன்று பாருங்கள்.

உங்களுக்குள் பரவசத்தை கொண்டு வரும் வழி எது என்று கண்டுபிடியுங்கள்.

பிறகு நீங்களும் ஒரு மகாகவி.

Monday, June 1, 2009

பட்டாம்பூச்சி சொல்லிதந்தது ! பாகம்-3

இந்த மூன்றாம் பாகம் என் வாழ்க்கையோடு சரியாக பின்னப்பட்டதாக உணர்கிறேன்.
ஆம்.. இந்த பாகத்தில் நான் சொல்லப்போவது சூழ்நிலைக்கேற்றபடி தன்னை சரியமைத்துக்கொள்வது பற்றி.
இதை ஆங்கிலத்தில் “Evolve, Evolution" போன்ற வார்த்தைகளால் குறிப்பிடுகிறார்கள்.

பட்டாம்பூச்சியின் தகவமைப்பும் சூழ்நிலைக்கேற்றபடி மாறிய ஒன்றுதான்.
ஆம்.. வெறும் புழுவாய் தன்னை ஏற்றுகொள்ளமுடியாத அந்த பட்டாம்பூச்சி தன்னை இரு உயர்ந்த இடத்தில்
கொள்ள ஆசைப்பட்டதன் விளைவுதான் அதன் சிறகுகள்.
அதன் சிறகுகள் அதற்கு மிகப்பெரிய பெருமையை தேடிந்தந்திருக்கிறது.அதன் உருமாற்றம் அதனுடைய வாழ்க்கையை
அர்த்தமுள்ளதாக்கியிருக்கிறது.அதனிடம் இருக்கும் இறைமையை வெளிப்பட வைத்து அதனை அழகான ஒரு
உயிரனமாக ஏற்றுக்கொள்ள வைத்தது.

இப்படி தன்னை சுற்றியுள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு தகவமைப்பை மாற்றிக்கொள்வதன் அவசியம் என்ன?
வாழ்க்கை போராட்டம் தான். அவைகள் வயிற்றுக்காக செய்யும் அந்த தகவமைப்பு மாற்றத்தை நாம் நம்
ஆன்மாவுக்காக செய்தே ஆகவேண்டியுள்ளது. அப்படி சில உயர்ந்த நோக்கங்களுக்காக தன்னை தகவமைத்துகொள்கிற எந்த
மனிதனும் வீணாக போனதில்லை. என் வாழ்விலும் இது நடந்திருக்கிறது.

”தந்தை காலமாகி விட்டார்”.. மருத்துவர் அந்த வார்த்தைகளை சொல்லும்போது என் அம்மா மயக்கமுற்றார்.
தாங்கி பிடித்து மெல்ல அவர்களை சரி செய்து.. அடுத்த இருபது நிமிடங்கள் என் கண்களில் நீர் நின்றது.
நின்ற வண்ணமே இருந்தது.. கீழே விழாமல். மெல்ல மெல்ல என் மனநிலை மாறி வருவதை என்னால் உணர முடிந்தது.
அப்பாவின் சடலத்தினை வீட்டில் வைத்த போது நேரம் 1.30 மணி. நடு ஜாமம். என் தாயும் பாட்டியும் கண்ணீரில் நனைகிறார்கள்.
என்னால் ஏனோ அழ முடியவில்லை. அப்பாவின் நண்பர் ஆறுதல் சொல்ல அருகே வந்த போது.. ”அடுத்து என்ன செய்யணும் சொல்லுங்க” என்ற போது
அவர் மலைத்துதான் போனார். அவருக்காக சோகமாய் அமர்ந்தது அந்த இருவது நிமிடங்கள் மட்டுமே.
இப்போது தூக்கு சட்டியுடன் இடுப்பில் ஒற்றை வேஷ்டியுடன்.. அவரின் இறுதி ஊர்வலத்தில்..சாலையில் நான் நடக்கிறேன். எனக்கு அப்போது தான் உறைத்தது..
என் மனநிலை முற்றிலுமாக மாறிவிட்டது என்பது. ஏதோ ஒன்று என்னை சாயாமல் தாங்கி நின்றதை உணர்ந்தேன்.

என்னை அழசொல்லி எவ்வளவோ பேர் வற்புருத்தினார்கள் என்றாலும்..அழ தோன்றவில்லை.
மனோரீதியான மாற்றங்கள் எனக்குள் நிகழ்ந்தவண்ணம் இருந்தன,இருக்கின்றன.

சரி.. இந்த சம்பவத்திற்கும் பட்டாம்பூச்சிக்கும் என்ன தொடர்பு. அது சொன்னது என்ன?
...சொல்கிறேன். பட்டாம்பூச்சியின் தகவமைப்பும் இதுவும் ஒரே
விஷயம்தான். ஆம் அது உடல்பூர்வமான தகவமைப்பு மாற்றம். இது மனப்பூர்வமான எவல்யூஷன்.




தன்னை முட்டாள் என்று பள்ளியை விட்டு நீக்கிய ஆசிரியையிடமே அறிவியல் மேதையாக மெடல் வாங்கியவர் ஐன்ஸ்டீன்.
அன்று அவருக்குள் நிகழ்ந்ததும் இதே மாற்றம் தான்.

”சூழ்நிலை உன்னை என்ன சொல்கிறது என்பது தேவையில்லை.
சூழ்நிலையிடம் நீ என்ன கற்றுகொண்டாய் எனபது தான் முக்கியம்” என்கிறார் மார்க்ஸ்.

எனவே உங்களிடம் நீங்கள் பேசி மெல்ல மெல்ல உங்களின் லட்சியத்தை நோக்கி செல்பவராக மாற்றுங்கள். மாறுங்கள்.
சூழ்நிலை உங்களுக்கு பட்டம் கட்டியது போதும். இனி உலகத்தை நீங்கள் கட்டுங்கள். கட்டியாளுங்கள். வாழ்த்துக்கள்!!

Saturday, April 11, 2009

பட்டாம்பூச்சி சொல்லிதந்தது..!! பாகம்-2.



கடந்த பாகத்தில் நம் பட்டாம்பூச்சி உலகிற்கு சொல்லிதந்தது என்னவென்று பார்த்தோம். இந்த பாகத்தில் அது ஒரு தனிமனிதனுக்கு என்ன சொல்லிதருகிறது என்று பார்ப்பொம்.

முதலில் பட்டாம்பூச்சியாக மாறியது யார்?

ஒரு சின்ன புழு.




புழு என்பதால் அது "ஆ.. நான் வெறும் புழுவாக அல்லவா இருக்கிறேன். எனக்கு இப்படி வாழ்வதே பிடிக்கவில்லை" என்று எவையும் தற்கொலை செய்துகொண்டதில்லை. அவைகளுக்குள் இருக்கும் உள்ளுணர்வு அவைகள் சிறந்த பட்டாம்பூச்சியாக மிளிரும் என்று அவைகளிடம் எப்போதும் சொல்லியபடி இருக்கின்றன.

நாம் கீழாய் மதிக்கும் புழுக்கள் கூட தற்கொலைக்கு முயல்வதில்லை.
புழுக்கள் கூட மேலாய் மதிக்கும் மனிதர்களாகிய நாம்...
எத்தனை தற்கொலை முயற்சிகள்.தான் இறந்தால் மட்டும் போதாதென்று தான் அழியும் போது மற்றவரையும் சேர்த்து அழிக்கிறோம்.
இதை பற்றி புழுக்கள் கேள்விப்பட்டால்..
"அட.. இறைவா!! இதற்கு நாங்களே பரவாயில்லை போலிருக்கிறதே" என்று சொல்லக்கூடும்.

தற்கொலை வேண்டாம். அதை இயற்கை அனுமதிப்பதில்லை. நம் உண்மையான முடிவு தானாக நிகழட்டும். நாமாக அதை தேடிப்போக வேண்டாம்.

உள்ளுணர்வு என்கிற ஒன்று நமக்கு இருக்கிறது.ஆம்.. நம்மை போன்ற ஒவ்வொரு உயிரனத்திற்கும் இருக்கிறது. அது நமக்காக மட்டும் தனியாக படைக்கப்பட்டதில்லை. எல்லா உயிரனங்களும் தங்கள் உள்ளுணர்வின் படி மட்டுமே வாழ்கின்றன.சொல்லபோனால் அவைகள் தான் ஒவ்வொரு உயிரனத்தின் டேட்டாபேஸ்.
நாம்..மனிதர்கள் மட்டுமே உள்ளுணர்வை தொலைத்துவிட்டு வாழ்கிறோம். அதன் சத்தம் எப்போதும் இருக்கிறது. நாம் காதுகளுக்கு அதை கேட்க நேரமில்லை. யாரொ சொன்ன வரிகள்தான் ஞாபகம் வருகிறது.. "காது.. அது செல்போன் அடைத்ததால் செத்துவிட்ட ஒன்று" என்று.

வாருங்கள். உங்கள் இயல்பில் சேராத வேலையினை செய்யாதீர்கள். எது உங்கள் இயல்போ அங்கே சேருங்கள். உங்கள் வாழ்க்கை வளமாகவேண்டுமெனில் உங்கள் உள்ளுணர்வின் சொல் படி நடைபோடுங்கள். உலகில் நம்மை ஏமாற்றாத ஒரே குரல்.. உள்ளுணர்வின் குரல் மட்டுமே.

அதை எப்படி கேட்பது...? உள்ளுணர்வின் சத்தம் எனக்கு கேட்கவே இல்லையே. என்கிறீர்களா..அதையும் பட்டாம்பூச்சி சொல்லிதருகிறது.
புழுவாய் இருப்பது எப்படி சிறகுகள் பெற்றது? கேட்டதும் கிடைத்துவிட்டதா ? இல்லை. தன்னை ஒரு கூட்டுக்குள் சுற்றி கொண்டது. அதற்குள் இருள்.. இருள் ..இருள் மட்டுமே. வெளியுலக சத்தங்கள் அதை தொல்லை செய்யாத வண்ணம் தன்னை கூட்டுபுழுவாக்கி கொண்டது. காத்திருந்தது, பொறுமையுடன்.



நான் உங்களை கூடு கட்டி குடிப்புக சொல்லவில்லை. உங்களுக்குள் செல்லுங்கள். "எனக்குள் இருப்பதைபோன்ற அதிசயத்தை வெளியில் நான் கண்டதில்லை" என்கிறார் ஐன்ஸ்டீன். அப்படி கண்டதால்தான் அவரை இன்னும் கொண்டாடுகிறோம்.


உங்களுக்கு நீங்களே புதிதாய் தெரிவீர்கள். அட.. இது நானா..!! என்று உண்மையான உங்களை பார்த்து உங்களுக்கே ஆச்சர்யமாய் இருக்கும்.



அப்படி உங்களை நீங்கள் கண்டறிய முதலில் தனிமையில் இருக்க பழகுங்கள். வாரத்தில் ஒரு நாள். ஒரு மணி நேரம் மட்டும். தனித்து
இருங்கள். மற்றவரை பற்றிய சிந்தனையை நிறுத்தி வைத்துவிட்டு
உங்களிடம் நீங்கள் பேசுங்கள். உங்கள் இயல்பை கண்டறியுங்கள்.

"உள்ளுணர்வின்படி வாழுங்கள்.அதுதான் உங்களின் வாழ்க்கை."

தொடரும்...

Thursday, April 9, 2009

பட்டாம்பூச்சி சொல்லிதந்தது..!! பாகம்-1.








பட்டாம்பூச்சி.. சொல்லும்போதே அதனுடைய வர்ணஜாலங்கள், பறக்கும் அழகு, அதன் மெல்லிய சிறகுகள் இப்படி பல விஷயங்கள் மனதில் வந்து குவிகிறது.


அப்படி குவியும் விஷயங்களில் சேராத இன்னொரு விஷயம் அதன்
உருமாற்றம். ஒரு சாதாரணமான கையில் தொடவே கூச்சப்படும் புழுவாய் தான் பிறக்கிறது அந்த பட்டாம்பூச்சி. சில வாரங்களுக்கு பிறகு
அது தன்னுடைய இயல்பை அறிந்து தன்னை உறுமாற்றம் செய்ய தயாராகிகொள்கிறது. பிறகு மேலும் சில வாரங்களுக்கு தான் கட்டிய கூட்டிற்குள்ளே தானே அமர்ந்து தவம் செய்கிறது.



இது நம்மை போல பணம் கொடு, நிலம் கொடு என்பதற்காக தவமல்ல. இயற்கையிடம் தன்னை முழுமையாக சமர்பித்துக்கொள்ள வேண்டிய தவம் இது. இந்த வாழ்க்கை எனும் பிரபஞ்ச சக்கரத்தில் தன்னையும் சேர்த்துக்கொள்ள வேண்டி செய்கிறது தவம்.
கேட்டதை கேட்டபடி அள்ளி தரவல்லது தானே இயற்கை.அது கேட்டதோ வாழ்க்கை சக்கரத்தில் தனக்கும் ஒரு பாகம். ஆனால் இயற்கை அதனை ஆசிர்வதித்து அதன் அழகை கூட்ட சிறகுகள் தந்து தன் மடியில் அதனை ஏந்தி கொள்கிறது. இப்போது நீங்கள் தொட தயங்கிய புழுதான் இந்த பட்டாம்பூச்சி. இப்போது அதை புழு என்று பட்டாம்பூச்சியை பார்த்து சொன்னால் என்னை முட்டாள் என்பீர்கள். அத்தனை அகழகோடு மறுபிறவி எடுத்து நம்முன் தன் அழகை காட்டி மயக்குகிறது நம் கண்களை.



சரி அதான் உருவம் மாறியாயிற்று. கேட்டது கிடைத்துவிட்டது.அப்புறமும் ஏன் நான் இயற்கையோடு இயைந்து இருக்க வேண்டும் என்று எந்த பட்டாம்பூச்சியும் கேள்வி கேட்டதில்லை.
அப்படி கேட்காததாலோ என்னவோ பல்லாயிரம் ஆண்டுகளாகியும் அவைகள் தங்கள் உண்மை அழகோடு ஜொலிக்கின்றன. தங்களின் இனம் பல்கி பெறுகியும் கிளை இனங்களோடும் மகிழ்ந்து திரிகின்றன இந்த பூமியில்.

அவை இன்றும் பிரபஞ்சத்தின் ஒரு முக்கிய அழகான பக்கமாய் திகழ்வதன் காரணம். அவை இயற்கையை ஏற்றுகொண்டது.

நாம். வெறும் ஒரு குரோமோசோம் சேர்ந்து உறுமாற்றம் பெற்றதற்கே
இயற்கை எதிர்த்து போரிடுகிறோம். அவைகள் சிறகுகள் பெற்றாலும்
இயற்கைக்கு என்றும் எதிர்த்து போராடியதில்லை. நமக்கும் சிறகுகள் முளைத்திருந்தால் பக்கத்து நாட்டின் மீது பறந்து பறந்து தாக்கி இருப்போமோ என்னவோ.?!.

ஒரு சின்ன உயிரனத்திற்கு கூட தெரிக்கிறது இயற்கை எதிர்ப்பு என்பது தாயின் கருப்பையை சிதைக்க துடிப்பது போன்று என்று. நாம் அதை உணராது போனது எப்படியோ தெரியவில்லை. இத்தனைக்கும் நமக்கு ஆறறிவு வேறு.



நீங்களே சொல்லுங்கள் எந்த பட்டாம்பூச்சியாவது தன் இனத்தை சேர்ந்த இன்னொரு பட்டாம்பூச்சியை கொன்று பார்த்திருக்கிறீர்களா..?

இந்த பட்டாம்பூச்சிகள் எப்போதாவது எதிர் நாட்டின் மீது குண்டு வீசியுள்ளதா?
இந்த பட்டாம்பூச்சிகள் என்றாவது தங்கள் ஆரோக்கியம் கெடும் என தெரிந்தும் உணவை உட்கொண்டு நீங்கள் பார்த்ததுண்டா?

புவிக்கு வெப்பமேற்றி அதன் நிலை தடுமாற வைத்ததுண்டா?

சிந்தியுங்கள்.. சீர்திருத்தி கொள்ளுங்கள்.
என்றாவது ஒரு நாள் அவைகள் பொறாமை படுமளவு நாம் அழகாகி காட்டுவோம்.

சொல்லமுடியாது இயற்கையை ஏற்று நடப்பதால் உங்களுக்கும் சிறகுகள் கிடைக்கலாம்.