Saturday, February 20, 2010

புயல்களுடன் ஒரு வாழ்க்கை!!

ஒரு நாளுக்குள் எத்தனை பிரச்சனைகள்..எத்தனை புயல்கள்..
இவைகளில் இருந்து விடுபடவே முடியாதா?


http://www.freewebs.com/hoseo_environmental_club/Cyclones.jpg

இந்த கேள்விதான் நம் மாபெரும் வாழ்க்கையின் அடிப்படை கேள்வியாக இருக்கிறது.
முதலில் நாம் அதை உணர முயல்வோம்..பிறகு அதை குறை கூறலாம். கடலில் அலைகள்
வந்தும் போயும் இருப்பது போல, பிரச்சனை புயல்களும் உங்கள் வாழ்வில் வந்தும் போயுமே இருக்கிறது.
எந்த ஒரு புயலும் அதே இடத்தில் தங்குவதில்லை..ஒன்று மறைந்தும் அடுத்து வந்துகொண்டுமே இருக்கின்றன.

ஒரு புயல் ஓய்ந்த பின் நீங்கள் பெருமகிழ்ச்சி கொள்கிறீர்கள், சந்தோஷத்தில் திளைக்கிறீர்கள்..ஆனந்தமாய் உணர்கிறீர்கள்..
அந்த கணங்களில் உங்களுக்குள் இருக்கும் பயம், தயக்கம், நடுக்கம் எல்லாம் மறந்து, மறைந்து போகிறது.
அன்பு ஊற்றெடுக்கிறது.

எப்போது நீங்கள் புயல்களை திறந்த மனதோடு வரவேற்கிறீர்களோ அப்போதே அவைகள் சக்தி இழந்துவிடுகின்றன.
அப்படி திறந்த மனதோடு இருக்க நீங்கள் முதலில் சில தியாகங்கள் செய்ய வேண்டி இருக்கிறது..
அற்ப ஆசைகள், அலையும் மனது, குற்ற உணர்ச்சிகள் என பலவகையான உணர்ச்சிகளை நீங்கள் தடுத்து ஆராய்வது அவசியம்.
அப்படி ஆராயும் போதுதான்..”இந்த கயிறுகளையா பாம்பென்று பயந்தேன் !!” ..என்று நீங்கள் தெளிவடைவீர்கள்..
அப்போது அறிவு பிறக்கும்..தெளிவு உண்டாகிடும்.

எல்லா ஞானிகளுமே ஒரு வகையில் இதைத்தான் செய்தார்கள்..தன்னுடைய குழப்பங்களை, அற்ப ஆசைகளை, குற்ற உணர்ச்சிகளை
பிரித்து பிரித்து வகுத்து பார்த்தார்கள்..அப்படி பிரித்து பார்த்து பெற்றதை ஞானம் என்றார்கள்.அதை நமக்கும் சொன்னார்கள்.

எப்போதும் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும்..அலைகள் இல்லாத கடல் எப்படி சாத்தியமில்லையோ அதே போல் பிரச்சனைபுயல்கள் இல்லாத
வாழ்க்கையும் சாத்தியமில்லை...ஞானிகளுக்கும் மிகப்பெரும் மனிதர்களுக்கும் கூட பிரச்சனைகள் இருந்தன..இருக்கும், அது தான் இயற்கை.

எப்போதும் புயல்களை ஒழிக்கவோ, அதில் இருந்து தப்பிக்கவோ முயற்சிக்க தேவையில்லை. அதனோடு இருங்கள். அவைகளோடு ஒரு கப் தேனீர் கூட அருந்துங்கள்.
உங்கள் மடியில் வைத்துகொள்ளுங்கள். பிரச்சனைகள் வெளியே இல்லை உங்களுக்குள் தான் என்பது அப்போது புரியும். நீங்கள் தான் இப்போது உலகத்தின் மையம்.
அதாவது உங்கள் பிரச்சனைக்குரிய உலகத்திற்கு.

நீங்கள் எங்கே சென்றாலும் உடன் ஒருவரை ரகசியமாய் அழைத்தே போகிறீர்கள்..அது தான் உங்கள் மனம். அது எப்போதும் பிரச்சனைகளை சுமந்தபடி உங்களோடே வருகிறது.
அதை விட்டு நீங்கள் தப்பிக்க முடியாது..ஆனால் அது சுமக்கும் பிரச்சனை என்கிற பாரத்தை குறைக்கலாம்.

அப்படி பாரமில்லாத மனதோடு எங்கு சென்றாலும் உங்களுக்கு ஒரு பிரபஞ்ச ரகசியம் விளங்கும் : “புயல்கள் எப்போதும் இருக்கின்றன..நம்மை உயர்த்துவதற்காக”

Tuesday, February 9, 2010

அவளுக்கான என் காதல் கவிதைகள்


நன்றிகள் சில..
நெஞ்சுக்குள் பல...
சொல்லுக்குள் சேராத வார்த்தைகள் அழ..
நீ சொல்லில் சொல்லி சென்றாய்...
நான் தேடி நின்றேன்..
நாம் காதலை
காணாத கண்ணீர் கண்களோடு...!!

** ** ** **
தேடியதில்சேர்த்த கடைசி பொக்கிஷம் நீ..
கடத்தி போகவில்லை..களவாடி போகவில்லை..
பறித்து செல்லவில்லை..
பதறி தொலைக்கவில்லை..
தானே கரைந்தது காற்றில்..
என் நெஞ்சம் மீண்டும்
தேட தொடங்கியது..
வாழ்க்கை இவ்வளவுதான்..
வாழ்வதும் எவ்வளவுதான்..
தேடி பார்க்க துணிந்த நெஞ்சுக்கு..
தேரும் சிரு துரும்பு..
எரும்பும் பெரும்தேராம்..!!

** ** ** **
சிரிக்காத கணங்களிலும் உனக்கான என் உதட்டோர புன்னகை..
அழாத நேரங்களிலும் நீ இல்லாத துக்கத்தில் கண்களில் கண்ணீர்..

சிரிக்கும் நேரத்திலும் நீ என்னிடம் சொல்லாத பொய்களுக்காக பொய் கோபம்...
எங்கு முடியும் என்று எவருக்கும் தெரியாத இந்த காதற் பயணத்தில்..

நீ இறங்கிவிட்டாய்..உன் ஊரை பார்க்க..
நான் எங்குசெல்வேன்..
உன் பேரே என் ஊராய் ஆன போது..???

** ** ** **

தமிழரசிக்காக கிறுக்கிய கவிதைகள் இவை..!! :)

Friday, February 5, 2010

திமிங்கலத்தை தின்பது எப்படி?-2கடந்த பதிவில் Procrastination பற்றி பார்த்தோம்..

இப்போது நீங்கள் திமிங்கலத்தை தின்ன தயாரியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நீங்கள் மலைத்து போகும் அந்த மிகப்பெரிய வேலையை திமிங்கலத்தை தின்ன வரிசையான செய்முறை விளக்கம்
இதோ..


1.நம் வாய் எவ்வளவு கிராம் கொள்ளளவு கொண்டது என்பதை கணக்கெடுத்து கொள்ளுங்கள்.(VOLUME)
(முப்பது கிராம் அளவு என்கிறது அறிவியல்)

2. பின்பு திமிங்கலத்தை துண்டுதுண்டாக வெட்டிக் கொள்ள வேண்டும்.(PARTITIONING)

3. வெட்டிய துண்டுகளை மீண்டும் 30 கிராம் அளவுகொண்ட துண்டுகளாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.(CONTENT BASED PARTITIONS)

4. வெட்டிய துண்டுகளை குளிரூட்டப்பட்ட அறைகளில் வைத்துவிடுங்கள்.(PRESERVATION)

5. ஒவ்வொரு துண்டுகளாக போகவர எடுத்து சாப்பிட்டுகொண்டே வரவேண்டும்.(CONTINOUS PROCESS)

6. விடாது , தொடர்ந்து இதையே செய்து வரவேண்டும்.(MAINTANANCE OF CONTINUUM)ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு பின்..திமிங்கலத்தை முழுவதுமாய் சாப்பிட்டு முடித்திருப்போம்.

சரி இதன் சூட்சமம் என்ன..இதை நம் வாழ்க்கை முறையில் , நேர மேலாண்மையில் பயில்வது எப்படி?

திமிங்கலத்தை போய் யார் சாப்பிடுவார்கள் அதுவும் பச்சையாக? என்றெல்லாம் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்.
பெரிய விஷயத்தை எப்படி சிறு பகுதிகளாக்கி முடிப்பதற்கான உதாரணம்தான் இது என்று சரியாகப் புரிந்துகொண்டிருப்பீர்கள்.


நீங்கள் புதிதாக ஒரு மொழியை கற்க விரும்புகிறீர்கள்..என்றால் எடுத்த எடுப்பில் அதன் இலக்கிய நூல்களை புரட்டினால் என்ன ஆகும்?

எதுவும் புரியாது. என்னடா இது மொழி பிரச்சனை என்று மலைத்து போவீர்கள்.

அதே அந்த மொழி சம்பந்தமான ஒரு அகராதி(டிக்‌ஷனரி)யை வாங்கி அதன் வார்த்தைகளையும் அர்த்தங்களையும் புரிந்துகொண்டு..

தினமும் பத்து அல்லது பதினைந்து வார்த்தைகளை விடாமல் படித்து வந்தால்..ஒரு நாள் நீங்களும் அந்த மொழியில் புலமை பெற்றவர் ஆவீர்கள்.!!

முடிக்கலாம், முடிக்க முயற்சி செய்வோம் என்கிற எண்ணங்களுக்கும் இந்த விஷயத்திற்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்கள்.

முடிக்கலாம் என்று சொல்லும்போதும், முடிக்க முயற்சி செய்யலாம் என்று சொல்கிற போதும், ஒரு மலைப்பும் களைப்பும் வருகிறது..

ஆனால் இந்த முறையில் அப்படி பட்ட களைப்பே வர வாய்ப்பு இல்லை..காரணம்.

1. எந்தப் பெரிய வேலையையும், சிறிய பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளுதல்.

2. பிரித்துக்கொண்ட சிறிய பகுதியை, தினம் தினம் விடாது முடித்துவிடுதல்.

3. மொத்த விஷயமும் முடியும்வரை கவனம், ஆர்வம் பிசகாமல் தொடர்ந்து செய்தல்.

இதன் பெரிய பலன், தங்கு தடையின்றி வேலை நடைபெறும். மலைப்பு விலகும். தினசரி வாழ்க்கையின் சுவாரசியம் கூடும்..வெற்றி நம் முன்னே விரியும்.

Tuesday, February 2, 2010

திமிங்கலத்தை தின்பது எப்படி?-1

http://www.edupics.com/en-coloring-pictures-pages-photo-man-and-whale-p9852.jpg
என் நண்பர் ஒருவர்..வெகு நாட்களுக்கு முன்..

நான் ஒரு நாவல் எழுதப் போகிறேன்..அது மிகவும் புதுமையானதாகவும்,
பலரால் பாராட்ட கூடியதாகவும் இருக்கும் என்று அடிக்கடி (கடந்த 2 வருடங்களாக) என்னிடம்
சொல்லி வந்தார்..வருகிறார் :).

ஆனால் கொடுமை என்னவென்றால் அவர் இன்னும் அந்த நாவலை துவங்க பிள்ளையார் சுழி கூட
போடவில்லை..!!

காரணம்..அது பெரிய வேலை..அதற்கு நல்ல மனநிலையும், அதிக ஆர்வமும், அதிக நேரமும் பிடிக்கும்.
அவரால் சின்ன சின்ன விஷயங்களில் காட்ட முடிகிற ஆர்வத்தை அதில் காட்ட முடிவதில்லை..

இப்போது அவரை குறை சொல்ல வரவில்லை..அவரை போலத்தான் நாமும்..
சில வேலைகள் நம்மை மலைக்க வைக்கிறது..
இது நம்மால் ஆகுமா? என்று நம் தன்னம்பிக்கையை சந்தேகப்பட வைக்கிறது..

அப்படியே தள்ளிவைத்து விட்டு வேறு சிறு வேலைகளில் மூழ்கி விடுகிறோம்..
பிறகு ஒரு நாள் அதே வேலை..பல சிக்கல்களையும் கூட்டிகொண்டு நம்மிடம் வந்து
நிற்கும் போது மீண்டும் மலைத்துபோகிறோம்..

ஏன்.. என்ன காரணம்..ஏன் இந்த மலைப்பு..??


திருமண பந்திகளில் நீங்கள் பார்த்திருக்கலாம்..சிலர்.. பிடித்த பதார்த்தங்களை
ஆவலுடன் பார்த்தபடி மற்ற பதார்த்தங்களை சாப்பிட்டுவிடுவார்கள்.
பின்பு கடைசியாக தான் அவர்கள் அந்த பதார்த்தங்களை ருசித்து ருசித்து
சாப்பிடுவார்கள்..இது ஒரு வகையான மனப்பான்மை..


சிலர் சுலபான வேலைகளை எல்லாம் உடனே முடித்துவிடுவார்கள்.
ஆனால் பெரிய வேலைகளை, அதாவது அதிக நேரமும், கூடுதல் உழைப்பும்
தேவைப்படுகிற வேலைகளை ஆரம்பிக்கவே மாட்டார்கள். தள்ளி போட்டுகொண்டே
வருவார்கள்..

இந்த வகையான மனநிலைக்கு பெயர் Procrastination. இது ஆபத்தானது.

சரி..இதற்கும் திமிங்கலத்தை தின்பதற்கும் என்ன சம்பந்தம்..ஒரு வேளை அதை தின்றால்
Procrastination சரியாகிவிடுமா?

ம்ம்..ஆகலாம்..!! 98 % வாய்ப்பிருக்கிறது..!!

என்னது?!!!!....சரி நான் திமிங்கலத்துக்கு எங்கே போவேன்?

எங்கேயும் போக வேண்டாம்..நீங்கள் தள்ளி போடும் அந்த பெரிய வேலை தான் அந்த திமிங்கலம்.

அதை எளிமையாக முழுமையாக தின்ன நான் உங்களுக்கு சொல்லித்தர போகிறேன்.

தொடர்ச்சி வரும் வெள்ளியன்று..!!