Wednesday, March 30, 2011

என் உயிரினும் மேலான..femaleக்கு..



நீ தயவுசெய்து சிரிக்காதே..
பொறாமையில் பூப்பதில்லையாம்..
சொர்க்கத்தில் பூக்கள்..

நீ தயவுசெய்து முறைக்காதே..
என்னை விட சூடா என்று
சுருங்கிப்போகிறான் சூரியன்..

நீ தயவுசெய்து அழாதே..
என்னைவிட அதிகம் தண்ணீர்..
நடுங்கிப்போகிறது நயாகரா..

நீ தயவுசெய்து நடக்காதே..
உன் பாதத்தின் மென்மையில்
உருகிவிடுகின்றன சாலைகள்..

நீ எதையும் தொடாதே..
தொட்டதெல்லாம் தங்கமானால்
தங்கத்திற்கும் ஏது மதிப்பு..??

நீ பேசவே செய்யாதே...
வரும் வார்த்தைகளை எல்லாம்
பொருக்கிகொண்டு ஓடுகிறது காற்று..

நீ எதையும் பார்க்காதே..
பார்ப்பதெல்லாம் பாசம்கொண்டு
பின்னால் வருகிறது உன்னோடு..

நீ பிறக்கத்தான் நான் பிறந்தேனாம்..
நாம் சேரத்தான் பூமி வந்ததாம்..
நாம்தானாம்

அந்த ஆசை  ஆதாமும்..
அழகி ஏவாளும்..
....
...
..
.

Monday, March 28, 2011

உன் பார்வையில்...!




புரட்டும் புத்தகம் பிடுங்கி எறிந்து
புதிதாய் பார்த்தாய் என்னை..

சீவி முடித்த தலை கலைத்து
சிரித்து பார்த்தாய் என்னை..

ஒரு கால் ஷூவை ஒளித்துவைத்து
ஒருமாதிரி பார்த்தாய் என்னை..

வெறும் தட்டை வெட்டென வைத்து
வெகுளியாய் பார்த்தாய் என்னை..

சட்டைபை நிறைய சில்லரை கொட்டி
சின்னதாய் பார்த்தாய் என்னை..

கைப்பையை காலியாக்கி
காளியாய் பார்த்தாய் என்னை..

நான் வாசல் நெருங்க
நீ ஓடிவந்து
கோபமாய் கிட்டே வந்து
காதோரம் சொன்னாய் நீ..

“லூஸே..இன்னைக்கு ஞாயிற்றுகிழமை”..


:))))

Wednesday, March 23, 2011

நான் இந்தியனில்லை.. நான் இந்துவுமில்லை..!!




எனக்கு இன்னைக்கு காலைல தாங்க தோணிச்சு..
அட.. நாம இந்த நாட்டுல பிறந்தது நம்ம தலையெழுத்தா?
இல்லை எதேச்சையான ஒரு விஷயமா? ம்ம்ம்..
எனக்கு நல்லா தெரியும் இது தலையெழுத்து இல்லைன்னு.. எனக்கு மொட்டை போட்டபோது எடுத்த போட்டோஸ் எல்லாத்தையும்..
ஜூம் பண்ணி பண்ணி பார்த்தேன்.. ”இந்தியனாய் பிற”ன்னு எதுவும் எழுதலை.. ஸோ..நோ தலையெழுத்து..

அப்போ.. எதேச்சையா நடந்த ஒரு விஷயம்.. ஓ.. அப்போ நான் இந்தியனெல்லாம் இல்லை..
இங்க பிறந்ததால இந்தியன்னு மெச்சிகலாம்.. அப்போ இதுல என்ன பெருமை இருக்கு?
நிறைய பேரை பாருங்க.. நான் இந்தியன்.. நான் ஆரியன்.. நான் திராவிடன்.. நான் அது.. நான் இது..
ஸ்ஸ்ஸப்பா.. எத்தனை ”..ன்”கள்.. முடியல..

இந்தியா ராக்கெட் விட்டா.. ஆஹா..இந்தியனாய் இருப்பதில் பெருமை.. அதே இந்தியா வேற நாட்டுகிட்ட
(முக்கியமா பாகிஸ்தான்)கிட்ட தோத்துட்டு வந்தா.. அந்த விளையாட்டு வீரர்கள் வீட்டை இடிக்கிறது.. பொம்மை எறிப்பு, அப்புறம்
இந்தியனாய் இருப்பதே அவமானம்னு புலம்பல்.

ஏன் இந்த வெட்டி பந்தா..ஏன் இந்த வீண் சோகம், வெறுமனே லாஜிக்கா யோசிச்சாலே போதும் இந்த எல்லா “..ன்”களும்
காணாம போய்டும். அப்படி என்னத்த இழந்துட்டீங்க.. அப்படி என்னத்த சாதிச்சிட்டீங்க.. ஒன்னுமில்லை..
இன்னும் இமயமலைதான் உசரமா இருக்கு.. இன்னும் கடலன்னை உங்களை மீறி சுனாமியா வரத்தான் செய்யுது..
Then what is the point in all the "ians"?

ஸோ..யாருக்கும் அவங்க அவங்க நாட்டை நினைச்சு பெருமைப்பட்டுக்கவோ, கேவலப்பட்டுக்கவோ வேண்டிய அவசியம் இல்லை!!

..அடுத்து வருவது மதம்..

ஸேம் லாஜிக்.. எதேச்சையா ஒரு இந்து அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பிறக்கவேண்டியதா போச்சு.... உடனே நானும் இந்துவாம்..
என்ன நியாயம் இது? நான் இந்துவாக இருப்பதும் வேறுமதத்தினனாய் இருப்பதும் என் தனிப்பட்ட உரிமை. இவங்களா எப்படி என் முதுகுல
இந்துன்னு சீல் குத்தலாம்? முதுகுலனா கூட பரவாயில்லை..தெரியாது ..சட்டை போட்டு மறைச்சிடலாம்.. ஆனா
நெத்தில விபூதி, குங்குமம், அப்புறம் அதென்னது..ஆங்..சந்தனம்.. ஃபர்பெக்ட்.. தேசிய கொடி கணக்கா எங்கப்பா வெச்சிவிட்டு அனுப்புவாரு..
அவருக்காக அதை ஏத்துக்குட்டேன்..அவரோட மதத்துக்காக அல்ல!! அதை ஒரு கிறுஸ்துவ டீச்சர் அழிச்சப்போ ஒரு இந்துவா எனக்கு
கோபமே வரலை.. என் தந்தையின் பாசமான பிள்ளையா எனக்கு செம கடுப்பு.

இப்படி சின்னவயசுல இருந்தே மதம் என்னை எப்பவும் பாதிக்காம தொல்லை பண்ணாம இருக்கணும்னு நினைச்சேன்.. இன்னும் நினைக்கிறேன்..
பட்..உலகம் அப்படி இல்லை.. எப்போ பாரு மதபீத்தல்கள். என் கடவுள்தான் பெருசு, உன் கடவுள் டம்மி பீசுன்னு அடிச்சுக்கறாங்க.
ஏன்.. இந்துகளுக்குள்ளயே.. மூணுகண்ணன் சிவன் பெருசா? நாலுகை நாராயணன் பெரிசான்னு இன்னும் சண்டை....
(சின்னவயசுல அம்மா மூணுகண்ணன் வரான்னு சொல்லி சோறு ஊட்டுவாங்க.. ஒருவேளை இவராத்தான் இருக்குமோ?!)

இப்படி.. மதம் சம்பந்தமா அடிச்சிக்கிறது அர்த்தமே இல்லாத ஒரு வேளை. (எனக்கு சாமி கும்பிடுவதே அர்த்தமில்லாத வேலை)
எதேச்சையா ஒரு இந்து குடும்பத்திலோ, ஒரு இஸ்லாமிய அல்லது கிருத்துவ குடும்பத்திலோ பிறந்துவிட்டதால்..
நம்மை நாமே இந்து என்றோ, முஸ்லிம் என்றோ, கிருத்துவன் என்றோ நினைத்துகொண்டால் அது முட்டாள்தனம்.

சோ.. நம்மை பற்றி எதுவும் (கடவுள் உள்பட) எதுவும் கவலைப்படவில்லை. நாம் தான் தேவையே இல்லாமல் எல்லாவற்றையும்
பற்றி கவலைப்பட்டு, நேரத்தை வீணாக்கி மனநோயாளிகளாய் திரிகிறோம்.

மதமும், நாட்டு பற்றும் போலி வேஷங்கள். ஏமாற வேண்டாம்.

கொஞ்சம் மாத்தி யோசிங்க.. நான் மனிதன்ன்னு பெருமைப்படுங்க.. உலக உயிரங்களிலேயே தன்னை தனக்குள் தேடும்
ஒரே உயிரனம் மனிதன் மட்டுமே.
வாழ்வை ரசித்துவாழ, நம்மால் மட்டுமே முடியும். அன்பும், அரவணைப்பும், கவிதையும், காதலும், பாட்டும், ஓவியமும்,
கலையும், நயமும், ஆடலும் பாடலுமாய்.. மட்டற்ற மகிழ்ச்சியோடு வாழும் ஒரே உயிரனம் மனிதன் மட்டுமே..!!

Sunday, March 13, 2011

விவேகானந்தர் புத்தகத்தை எரித்தேன்.. ஏன்?



ம்ம்ம்.. ரொம்ப வருடங்களாக அந்த புத்தகம் என் அலமாரியை அலங்கரித்து வந்தது. அதன் மீது எனக்கு ஒரு காலத்தில்
அளவுகடந்த காதலும் மதிப்பும் இருந்தது.  அந்த புத்தகத்தை படித்து முடித்திருக்கிறேன் என்று சொன்னாலே எல்லாரும்
ஆச்சரியப்படுவார்கள். கண்கள் விரியும். புருவங்கள் உயரும். எனக்கும் மகிழ்ச்சியும் கொஞ்சம் மேதாவி என்கிற அகந்தையும்
கூடும்.. அதே போல் கூடியது.

சில மாதங்களுக்கு முன் ஒரு நாள் ஒரு சின்ன சிந்தனை... இவ்வளவு படித்து என்ன கிழித்துவிட்டோம்? இரண்டு கொம்புகள்
முளைத்துவிட்டதா? சிறகுகள் எதும் முளைத்துவிட்டதா?
மேதாவி என்பதால் தலையில் ஒளிவட்டம் எதும் தெரிகிறதா?
என் அறிவை பாராட்டும் எல்லாரும் என் அன்பை பாராட்டியிருக்கிறார்களா?
பார்ப்பதை எல்லாம் பகுத்தாராய்ந்துகொண்டே  இருந்தால்.. ரசிப்பது எப்போது? சுவைப்பது எப்போது?
அருவியில் நின்று குளித்து கும்மாளம் போடாமல் அதன் வேகத்தை அளப்பவன் முட்டாள் தானே?
வாழ்க்கை எனும் மாபெரும் அருவி என்னை அள்ளி அணைத்து இன்பம் தரத் துடிக்கும்போது..
அதை எட்ட நின்று பகுத்தாய்ந்து என்ன புண்ணியம் கண்டேன்..?

மண்டைகனமும், மனதில் வெறுமையுமாய் வரண்டதொரு வாழ்க்கை தேவையா?
சிரிக்க தெரியாதவன் மனிதன் இல்லை என்பார்கள். நானும் சிரிப்பை தொலைத்திருந்தேன். என்னுடைய அறிவும் மூளையுமே
என் அன்பிற்கும் இதயத்திற்கும் எதிரிகளாய் மாறி நிற்பதை கண்டேன்.
கொஞ்ச நாள் இதைப்பற்றி யோசித்தபடி சுற்றி வந்தேன்.. சில வாரங்களில் பிறருக்கு அறிவுரை  கூறுதல் குறைந்தது.
இப்போது உலகம் கொஞ்சம் தெளிவாய் தெரிந்தது. அடுத்து வீணாக எனக்கு என்ன தெரியும் என்று காட்டிகொள்வதை நிறுத்தினேன்.
என்னை எவரும் எக்கேள்வியும் கேட்கதாவரை நான் எந்தவகையிலும் அறிவை வெளிப்படுத்தமாட்டேன் என்று உறுதிபூண்டேன்.
இந்த சிந்தனைகளின் உச்சகட்டமாய்.. என்னை என்னிடமிருந்தே பிரித்த எதோவொன்றை எரித்தால் என்னவென்று யோசித்தேன்.

என்னை பெரிய Intellectual Personஆக காட்டும் பொருட்களில் எதாவதை எரித்தால் என்னவென்று தோன்றியது.
கண்ணில் பட்டார் விவேகானந்தர். அவரை மதிக்கிறேன். அவரின் வார்த்தைகளின் மதிப்பும் எனக்கு நன்றாகவே தெரியும்.
ஆனால் இப்போது காப்பாற்றப்பட வேண்டியது நா. என்னை  என் அகந்தையிலிருந்து காப்பாற்றவேண்டி இருப்பதால்..

ச்ச்ரக்க்..  தீக்குச்சி எரிந்தது. அடுத்து அவரின் புத்தகமும். மனம் அமைதியானது. பேச்சு நின்றது. அகந்தை அகன்று அமைதி வந்தது. இதை எழுதுவதற்கு காரணம். படிப்பதும், அதன்படி நடப்பதும் நல்லதுதான். அதையே பிடித்துகொண்டு..
அவர் அதை சொன்னார்..இவர் இதை சொன்னார்..கலீல் ஜிப்ரான் சொன்னார், காக்கை பாடினியார் கரைந்தார் என்று
கூறி அலைந்து அசாதரணமாக தெரிய எனக்கு துளியும் விருப்பமில்லை. சாதாரணம் போதும். அதில் நான் சௌக்கியமாய் இருந்துகொள்வேன்.

உங்ககிட்டயும் MatchBox இருக்குல்ல?

Tuesday, March 8, 2011

நில்.. கவனி... செல்..!

            

  

தினமும் சாலைகளையும் மனிதர்களையும் பார்க்கிறோம்.. போக்குவரத்து நிறுத்தங்கள்,
சிகப்பு, பச்சை, மஞ்சள் விளக்குகள், பிறகு மீண்டும் பயணம்.. இப்படி இருக்க..ஒரு
நாள்.. இந்த சிகப்பு, பச்சை, மஞ்சள் என விளக்குகள் எறிய.. என் மனதிலும், இவைகளை சார்ந்து ஒரு விளக்கு எரிந்தது.

நில்..

நில்.. அதாவது.. வேகம் குறை. சில நேரங்களில் ரொம்ப கடுப்பா இருப்பீங்க. இல்ல ரொம்ப டென்ஷனா குழப்பத்தோட இருப்பீங்க. இப்போ கொஞ்சம் கவனிச்சு எல்லாத்தையும் நிறுத்துங்க.
அந்த இடத்தை விட்டு வெளியே வாங்க. வானம் பாருங்க. தண்ணி குடிங்க. உங்களுக்கு பிடிச்ச பாடலை கேளுங்க. வேகத்தையும் கோபத்தையும் விட்டுட்டு நிதானமாக, அமைதியா கூலா இருங்க. இப்போ அடுத்த கட்டம்.

கவனி..

கவனி.. மனம் ஏன் இப்படி அலைபாய்கிறது? ஏன் இந்த சூறாவளி? எதனால்? எக்ஸ்க்யூஸ்மி,
எதனால் என்று யோசியுங்கள். யாரால் என்று அல்ல. அப்படி யோசிப்பதில் பயனே இல்லை. மீண்டும் வெறுப்பும் கடுப்புமே கிளம்பும். எனவே எதனால்.. உங்கள் மனதில் நீங்களே எடுத்துவைத்துகொண்ட எந்த முடிவால் இந்த அவதி? அது தேவையானதா? சூழ்நிலையை சரியாக்க என்ன செய்யலாம்.. இப்படி வரிசையாக பொறுமையாக கவனியுங்கள். வரிசைப்படுத்தி திட்டமிடுங்கள்.

செல்..

அடுத்து செல்வது..விருட்டென்று கிளம்புவதல்ல... கொஞ்சமாக.. கொஞ்சம்கொஞ்சமாக..
0... முதல்.. 10.., 10 முதல் 20.., 20 முதல் 40.. இப்படி.. போட்ட திட்டங்களை நிதானமாக
ஒன்றொன்றாய் செயல்படுத்துங்கள்.. அவசரமே வேண்டாம்.. அதிவேகமாக செயல்பாடுகள்,
உடனடி தோல்விகளில் முடியும். எனவே நிதானமாய் செயல்படுங்கள். வெற்றி நிச்சயம்.





 ************************************

இவையனைத்தும் என் சொந்த அனுபவத்தில் கண்டது. உங்கள் அனுபவங்கள் வேறுபடின் அதையும் பகிருங்கள்.
நன்றி..!!