மினிமலிஸம்(Minimalism) என்றால் என்ன என்கிறீர்களா?
வீடு முழுக்க எங்கு பார்த்தாலும் சிதறி கிடக்கும் சாமான்கள், பேப்பர்கள், புத்தகங்கள், அலமாரியை தவிர வேறு எல்லா இடத்திலும் இருக்கும் பொருட்கள், அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளுக்கே இடமில்லாதபடிக்கு ஏகப்பட்ட பொருட்களோடு நிறைந்து வழிகிறது நமது மிடில் கிளால் குடும்பங்களின் வீடுகள்.
"என்னங்க பண்றது? எவ்வளவுதான் ஒரே ஆளா சுத்தம் பண்ண முடியும்? இன்னும் கூட பண்ண வேண்டியது ஏகப்பட்டது இருக்கு" என்று சலிப்பாக சொல்பவரா நீங்கள்?
இதோ இருக்கவே இருக்கிறது மினிமலிஸம்.
பொருள்முதவாதத்தை உலகிற்கு (மூக்கைபிடித்து திணித்து) ஊட்டிய அமெரிக்காவின் இப்பொழுதைய பந்தாவான விஷயமே எங்கள் வீட்டில் பொருட்கள் குறைவு என்பதுதான்.
என்னது?
அதிர்ச்சியாக இருக்கிறதா? ஆனால் உண்மை அதுதான். பொருள்களிடையே சிக்கி சின்னாபின்னபட்ட மேற்கத்திய மக்களின் ஒரு தலைகீழ் திருப்பம் தான் இந்த மினிமலிஸம். அதாவது பொருட்குறையியல். குறைவான பொருட்கள், குறைவான Maintanance வேலைகள். அமைதியான, நிம்மதியான ஒரு சிறிய வீடு. இதுதான் இன்று மேற்கின் புதுமண தம்பதியரின் முதல் முடிவு. மினிமலிஸம் கொஞ்சம் கொஞ்சமாய் அவர்கள் ரத்தத்தோடு அங்கே கலந்துகொண்டிருக்க, நாம் இப்பொழுதுதான் வீட்டு சாமான்கள் வாங்கி போட ஆரம்பித்திருக்கிறோம்.
ஆனாலும், இப்பொழுதே நம்மில் சிலருக்கு எங்கயோ உதைக்க போகுது என்று பட்சி சொல்ல ஆரம்பித்துவிட்டது. ஆம், வீட்டு பொருட்களின் பயனராய் இல்லாமல், வீட்டு பொருட்களின் காவலாளியாக மாறும் நாட்களை நாம் வேகமாய் நெருங்கிகொண்டிருக்கிறோம். இதற்கு காரணம் என்ன என்று ஆராய்வதைவிட, இதனால் ஏற்படும் மன உளைச்சல், சலிப்பு, நேர விரயம், ஓய்வின்மை என இதன் பக்க விளைவுகளால் இப்பொழுதே நாம் அல்லாட துவங்கிவிட்டிருக்கிறோம்.
ஒரு நாளை நமக்கு சரியாக 20 நிமிடங்கள் இருந்தால் நம்மால் ஒரு அமைதியான வீட்டை உருவாக்கிவிட முடியும் என்று ஒரு Interior Designer நண்பர் கூறுகிறார். அது மட்டுமின்றி, பழைய சாமான்களை Sentiment-ஆக சேர்த்து வைக்கும் பழக்கமும் நம்மிடையே காலம் காலமாய் இருக்கிறது, அதை விடுத்து, நாமே ஒரு மொத்த வீட்டையும் நமது பாணியில் உருவாக்குவது இன்னும் இதயத்தை தொடும் விஷயமாகத் தானே நிச்சயம் இருக்க முடியும்..?
அடடா.. Introduction பகுதியே மிகவும் நீண்டுவிட்டது, சரி இனி வரும் தினங்களில் மினிமலிஸம் பற்றி இன்னும் விரிவாக எழுதுகின்றேன்.