உன் தந்தை தாயை கொல்லாமல் நீ சுதந்திரம் அடைய முடியாது - புத்தர்
என்ன இப்படி சொல்லிட்டாரு.. பயப்படாதீங்க. இந்த கொலைக்கு வழக்கு கிடையாது.
கைது கிடையாது. போலீஸ் இல்லை. ஏன் குற்றவாளிக்கூட இல்லை. சொல்லப்போனால்
குற்றவாளியை திருந்த வைக்கத்தான் இப்படி புத்தர் சொன்னார்.
அப்படியா? அப்போ யார் அந்த குற்றவாளி..?
நீங்க தான். வேற யாரு.. ம்ம்..உண்மைதான். எல்லா தாயும் தந்தையும் உங்களை
குற்றவாளிகளாகவே வளர்க்கிறார்கள். எப்படி? சமுதாயத்திற்கு எதிராக செயல்படும் எவரும்
குற்றவாளிதானே.. எனவே உங்களை முடமாக்கி, சிறகுகளை அறுத்து, இந்த சமுதாய
சிறைக்குள் சரிவர பொருந்த வளர்க்கிறார்கள். அப்படி வளர்ப்பதால் நீங்கள் உங்கள் தனித்தன்மையை
கொன்றுவிடுகிறீர்கள். உங்கள் சுதந்திரத்தை அடமானம் வைத்துவிட்டீர்கள். உங்கள் உண்மை அன்பை
நீங்களே உதாசீனம் செய்துவிட்டீர்கள். உங்கள் சுயத்தை பாதுகாப்பு தேடும் கோழைத்தனத்திற்காக கொன்றுவீட்டீர்கள்.
எனவே நீங்கள் குற்றவாளிதான்.
சரி இந்த குற்றவாளி திருந்த முடியாதா? முடியும்.
எப்படி? என் தந்தை தாயை கொல்லணுமா?
கண்டிப்பா.
ஆனா...வெளியில் இருக்கும் அவர்களை சொல்லவில்லை. உங்களுக்குள் இருக்கும் அவர்களின் குரல்களை கொல்லவேண்டும். அவைகள் தான் உங்களுக்குள் இருந்து உங்களையே அழிக்கும்
விஷம்.அவைகள் உங்கள் சிறுவயது முதலே உங்களுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி வளரவைக்கப்பட்டுள்ளது.
இப்போது உங்களின் வார்த்தைகளில் 85% அவர்களின் வார்த்தைகள் தான். உங்களின் எண்ணங்களின் 95% அவர்களின் எண்ணங்கள் தாம்.
இப்படி நீங்கள் வெறுமனே அவர்களின் நகலாக இருக்கிறீர்கள்.வெறும் தாளாய் இருந்த உங்கள் மனத்தில்
இப்போது முழுக்க முழுக்க அவர்களின் கிறுக்கல்கள். உங்களை நீங்கள் வெறும் தாளாய் கண்டெடுக்க முடியாதபடி மொத்தமாக
கிறுக்கி தள்ளி இருக்கிறார்கள்.
இளம் வயதில் உங்களை நீங்கள் உணர ஆரம்பிக்கும்போது, மெல்ல அந்த கிறுக்கல்கள் உங்களை உறுத்துகிறது.அது இன்றைய
சூழலுக்கு சம்பந்தமில்லாமல், ஆனால் தவிர்க்க முடியாத ஒரு கட்டளையாய் உங்களை துன்புறுத்துகிறது. என்ன செய்வீர்கள் பாவம்..
உங்கள் மனமே இரண்டாய் பிளந்து ஒன்று சூழ்நிலைக்கேற்ப செயல்பட துடிப்பதும், ஒன்று உங்கள் பெற்றோரின் கட்டளைகளுமாய்
குழம்பி நிற்கிறது. இதனால் இயலாமை பிறக்கிறது. தாழ்வு மனப்பான்மை துவங்குகிறது.
இப்படி சிறுக சிறுக சறுக்கி தாழ்வு மனப்பான்மையில் புதை சேற்றில் மாட்டிகொண்டீர்கள்.
போதும், இனிமேலும் நம்மை நாமே துன்புறுத்திகொள்ளுதல் ஆகாது. தாயும் தந்தையும் பாதைகள்.
ஆனால் கொஞ்சம் பேதைகள். அவர்கள் செய்வது என்னவென்று அவர்களுக்கே தெரியாத பேதைகள்.
சாவி கொடுத்த பொம்மைகளாய் சமுதாயத்திற்காக ஆடுகிறார்கள். அவர்களை சொல்லி குற்றமில்லை.
அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான். அவர்களும் உங்களை போல் அவர்களின் பெற்றோரின் குப்பைகளை
சுமந்து நிற்கிறார்கள். அவர்களை மன்னிப்போம், அடுத்து ஆகவேண்டியதை பார்ப்போம்.
முதலில், எங்கெங்கு அச்சம் எழுகிறதோ, அங்கங்கே போய் நில்லுங்கள். பெண்ணை கண்டால் பயமா?
பேச துணிச்சல் இல்லையா? உலகை கண்டால் நடுக்கமா? ஓடும் நதியில் நீந்த பயமா? எங்கும் எதிலும்
அச்சம் தெரிந்தாலும் அதை துணிந்தே செய்யுங்கள். தவறுகளின் கற்பவனே தன்னம்பிக்கைக்கு உறியவன்.
உங்கள் தவறுகளில் தேர்ச்சி பெருங்கள். கல்லடி பட்ட மரமே பழுக்கும். இது புதுமொழி.அடிபடுங்கள்.
அடிகள் படிகளாகட்டும். அவை உங்கள் சுயத்திற்கு உங்களை கொண்டு சேர்க்கட்டும். பெற்றோர்
பெற்றோராய் மட்டும் இருந்தால் போதும். வளர்த்தோராய் நமக்கு நாமே இருப்போம்.
அப்படி வளர்வதே வளர்ச்சி. இப்போதுதான் உங்கள் காலில் நீங்கள் நிற்கிறீர்கள். உங்கள் தோள்கள்தான்
உங்கள் சுமை சுமக்கிறது. உங்களின் பொறுப்பு உங்கள் கைகளில் இருக்கட்டும். இனி நீங்கள் வாழும்
வாழ்க்கை உங்களுக்கானதாய் இருக்கட்டும்.