Thursday, March 29, 2012

உன்னால் மட்டும்தான் அழ/சிரிக்க முடியும்..

 
 
 
 
 
உலகை பார், உலக உயிர்களை பார், மரம், செடி, கொடி, மிருகங்கள், பறவைகள்,
பூச்சிகள் இப்படி அனைத்தையும் பார். அவைகளை வாழ்கிறோம் என்ற விழிப்புணர்வே
இல்லாது வாழ்கின்றன. அவைகள் அவைகள் தான். அவைகளால் வேறொன்றாய் மாறமுடியாது.
நிச்சயமாய் முடியாது. பழமொழிகளில் மட்டுமே பூனை புலியை பார்த்து சூடு போட்டுகொள்ளும்.
மற்றபடி, எந்த புலியும் பூனையாய் வாழ்ந்ததில்லை. எந்த குருவியும் கழுகாக மாற துடித்ததில்லை.
தான் கழுகாய் இல்லையே என்று ஏங்கியதில்லை. ஏன், தான் ஒரு குருவி என்கிற கவனம் கூட
அதற்கு இல்லை. அவை அனைத்தும், விதிக்கப்பட்ட படி மட்டுமே வாழ தகுதியுடையவை.
ஒரு சிங்கம் பிறக்கும் போதே சிங்கம் தான். ஒரு மாமர விதை, அதை விதையிலிருந்தே மாமரம் தான்.
அதை நீ பலாமரமாகவோ, தேக்காகவோ மாற்ற இயலாது. அதன் விதி, அதன் விதையிலேயே
நிர்யணிக்கப்பட்டாயிற்று. இனி அதற்கு கவலை இல்லை, ஒன்று மாமரமாய் வளரலாம், இல்லையேல் அழிந்துபோகலாம்.
இரண்டே வாய்ப்புகள் தான். மாமரம் இல்லையேல் மரணம். (மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரண தேவி என்பது போல்)

ஆனால் உன்னை பார், ஒரு மனிதனாய் உன்னை நீயே கவனி, அப்போது ஒரு அதியற்புதமான விஷயம், பளிச்சென்று
உனக்கு புரிபடும். அது நீ அளவுகடந்த வாய்ப்பு கொண்டவன் என்பது. நீ உடலில் மனிதன், ஆனால் உள்ளத்தில்?
நீ யார்? நீ யார்? நீ யார்? சொல்ல தெரியவில்லை தானே. அதுதான் உன் சுதந்திரம், அந்த தடுமாற்றம் இயலாமை அல்ல.
அந்த தடுமாற்றம் உன் முன் விரிந்துகிடக்கும் அளவற்ற வாய்ப்புகளால் உண்டானது. அதை பார்த்து வாயடைத்து போவதால் தான்
உன்னிடம் இருந்து எந்த பதிலும் வருவதில்லை. எப்போது நீ யார் என்று கேட்டாலும், நீ தெளிவடைந்த நீ, உனக்குள் விரியும்
வாய்ப்புகளை பார்க்கலாம், இப்போதே நீ கடவுளும் ஆகலாம், அல்லது இப்போதே நீ மிருகத்தைவிட கீழ் நோக்கியும் செல்லலாம்.
அந்த வாய்ப்பு இங்கே உன் முன் நிச்சயமாய் இருப்பது உனக்கு தெரிவதால் தான் உன்னால் “நீ யார்” என்பதற்கு பதிலளிக்கவே முடிவதில்லை.

பொத்தாம் பொதுவாய், நான் ஆண், நான் முகமதியன், இந்து, கிறுஸ்தவன், அந்த ஜாதி, இந்த இனம் என்று சொன்னாலும்,
அந்த உள்ளிருக்கும் ஒன்று நீ இதெல்லாம் இல்லை என்று மென்மையாக சொல்லிகொண்டே தான் இருக்கிறது. அதை நீ மறைக்கலாம்,
அதை நீ மறக்கலாம். அந்த வாய்ப்பும் கூட உன் கையிலேயே இருக்கிறது. இந்த அளவற்ற சுதந்திரத்தை கவனித்தாயா?
எந்த ஒரு மரத்தாலும், மிருகத்தாலும் தன் உள்ளியல்பை மறக்கவோ, மறைக்கவோ இயலாது. எல்லா வகையிலும் மாமரம்,
மாமரமாகத்தான் மிளிரும். எல்லா வகையிலும் ஒரு மல்லிகைப்பூ மல்லிகைப்பூ வாசமே வீசும். அவைகளால் மறைக்கவோ,மறக்கவோ முடியாது.
நிச்சயமாய் முடியாது. 

ஆனால், நீ இந்த அரிய வாய்ப்பை பெற்றிருக்கிறாய், நீ மறக்கலாம், மறைக்கலாம், அல்லது நீ உன் உள்ளியல்பை முழுவதுமாய்
வெளிப்படுத்தி, இந்த பாலத்தை கடக்கலாம். பாலமா? ஆம் பாலம் தான். மனிதன் ஒரு பாலம் தான். மனித பிறவி ஒரு பாலம் தான்.
இயற்கைக்கும் இறைமைக்குமான பாலம். மிருகத்திற்கும் கடவுளுக்குமான பாலம். மனிதன் அவனின் உள்ளியல்பு படி வாழ வாழ,
அவன் இறைமையை நெருங்குகிறான். அவன் உள்ளியல்பை வெறுத்தோ,மறைத்தோ, மறந்தோ வாழும்பொழுது மிருகத்திற்கும் கீழே செல்கிறான்.
அதனால் தான் நாம் புத்தரை உயர்த்தியும், ஒரு குடிகாரனை தாழ்த்தியும் பேசுகிறோம். காரணம், குடியில் மனிதன் தான் மனிதன் என்பதையே
மறக்கிறான். அவன் “அது”வாக மாறுகிறான். ஒரு உயர்திணை அஃறிணைக்கு தள்ளப்படுகிறது. ஆனால் புத்தன், பாலத்தை கடந்துவிட்டான், அவன்
மனிதனையும் கடந்து மேலே எழுந்துவிட்டான், இனி அவன் மனிதன் என்ற சின்ன சிறைக்குள் இல்லை, அதையும் கடந்து, இறைமைக்குள் குதித்துவிட்டான்.
விழிப்புணர்வே அல்லாத நிலை குடிகாரனுடையது. விழிப்புணர்வின் உச்சகட்டம், புத்தனுடையது. கள்ளுண்டவன் நீரின் 0 டிகிரி என்றால், புத்தன் நீரின் 100 டிகிரி.

நீ ஓவியனாகலாம், கவிஞனாகலாம், கலைஞனாகலாம், அறிஞனாகலாம், அறிவியல் செய்யலாம், ஆராய்ச்சியாளனாகலாம், புத்தனாகலாம் இப்படி
உன்னுடைய சுதந்திரம் அளப்பறியது. நீ உன்னுடைய இயல்பிலிருந்து எழும் எதை செய்தாலும், அது உன்னை இன்னும் மேம்படவே வைக்கும். எனவே,
உனக்குள் ஆழ்ந்து போ, உன்னை, உன் நிஜ உன்னை கண்டுபிடி. அதுதான் நீ மற்றவை எல்லாம், மனதின் சூதாட்டம்.

நன்றி,
ரங்கன்.

No comments:

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.