Wednesday, May 26, 2010

எப்படி குட்டி கண்ணன் அசுரர்களை வென்றான்?

தலைப்பில் உள்ள கேள்வியை படிக்கும்போதே இரண்டு மாபெரும் முரண்கள்  விளங்கும்.
1. குட்டி கண்ணன் , கண்ணன் வாலிபனாகவோ, 30 வயதுக்கு மேற்பட்டவனோஇல்லை..குட்டி..அதாவது குழந்தை கண்ணன்.

ஆச்சரியம்...ஒரு குழந்தை அசுரர்களை ஜெயிக்கிறது!!!

2. அசுரர்கள் , மாபெரும் வீரர்கள், கோபக்காரர்கள், பலம் கொண்டு தாக்குபவர்கள்.
அதைவிட ஆச்சரியம்..இவ்வளவு பெரிய வீரர்கள் குழந்தையிடம் தோற்கிறார்கள்!!

இது வெறும் புராணம்தானே.!! புராணங்களை உண்மை என்று ஏற்றுகொள்ளவேண்டிய அவசியமில்லை
என்று நாம் நினைக்கலாம். என்னை பொறுத்தவரை கண்ணன் இருந்தானா இல்லையா என்பதை விட
அவன் மூலமாக அந்த புராணத்தை எழுதிய மனிதர்கள் சொல்லவருவது என்பதே முக்கியம் என்றுபடுகிறது.
அதன் அடிப்படை மனோத்தத்துவம் புரிந்துவிட்டால் அந்த புராணம் மிகவும் நன்மைதரக் கூடியதாக இருக்கும்.

அப்படி யோசிக்கும் போது இங்கே நமக்கு தெரிந்த “வலியவன் எளியவனை வெல்வான்”என்பது இந்த விஷயத்தில்
ஒத்து போகும். ஆம், கண்ணன் எல்லாம் வல்ல கடவுள், அதனால் தன் சிறுவயதிலேயே அசுரர்களை அழிக்க
முடிந்தது என்று முடிவு கட்டிவிடலாம். அதற்கும் என் மனம் ஒத்துபோகவில்லை. இன்னும் யோசிக்கிறேன்.

இங்கே வேறு ஒருவகை தத்துவத்தை என்னால் பார்க்க முடிகிறது. கண்ணன் ராமனை போல அல்ல, ராமன் வாழ்க்கையை
ஒரு பெரிய வேலையாக, கடமையாக, தொழிலாக ஏற்றவன். கண்ணன் அப்படி அல்ல, அவனுக்கு எல்லாமே விளையாட்டு.
எதிரிகளை கொல்வதும், கோபியரின் மனதை வெல்வதும் என எல்லாமே அவனுக்கு விளையாட்டு.

எனவே, அசுரர்களை அழிப்பதை ஒரு விளையாட்டாக செய்திருக்கிறான் கண்ணன். ஆம், அவனுக்கு பெரிதாய் எந்த
சக்தியும் தேவைப்படவில்லை. அசுரர்களின் கோபமும், ஆத்திரமுமே அவர்களை அழித்துவிட்டது. கண்ணன் அதை
தூண்டிவிட்டால் மட்டும் போதும்.

என்னது...? அசுரர்களின் கோபமே அவர்களை கொன்றதா? என்று கேட்கலாம்.
ஆம்,உண்மை என்னவோ அதுதான்.

இதற்குமுன் நீங்கள் ஜூடோவை பற்றி அறிந்துகொண்டால் இது உங்களுக்கு புரியும். ஜூடோ என்பது ஒரு மல்யுத்த கலை.
கராத்தெ, குங்ஃபூ போல் அல்லாமல் இது சற்றே அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத கலை. இந்த கலையின் அடிப்படை விதியே,
கோபப்படுபவன் தோற்பான் அல்லது தாக்குகிறவன் தோற்பான் என்பதுதான். அப்படி எதிராளியை முதலில் தாக்கவிட்டு,
அவனின் தாக்குதலை முழுமையாக ஏற்றுகொள்ளும்போது அது நமக்கு இரண்டுமடங்கு பலத்தை தருகிறது. அதே போல் எதிராளியும்
விரைவில் சோர்ந்துபோய்விடுகிறான். இப்படியாக, எதிராளியை கோபப்படுத்தியே வெற்றிபெற்றுவிடலாம்.

அதற்காக, கண்ணன் ஜூடோ கற்றவன் என்று சொல்லவரவில்லை. அவனுடைய “டெக்னிக்” ஜூடோவை ஒத்ததாக இருக்கிறது
என்பதே இதன் பொருள்.

அதே போல் கண்ணன் அந்த சண்டையில் வெற்றிபெற வேண்டும் என்கிற நோக்கத்தோடும் வெறியோடும் இருந்திருந்தால் சில அசுரர்களிடம்
தோற்றிருப்பான். ஆனால் அவனுக்கு வெற்றி தோல்விகள் மீது பற்றில்லை, எனவே எல்லாரையும் தூக்கிப்போட்டு துவம்சம் செய்ய அவனால்
முடிந்தது. எப்படி? வெற்றி பெற நினைக்காமல் எப்படி வென்றான்?

அடுத்த பாகத்தில் பார்ப்போம்!!(டிஸ்கி) : இது மதப்பிரச்சாரத்திற்கான பதிவு அல்ல. கண்ணனை புகழ்வது என் நோக்கமுமல்ல. அவனை கொண்டு அந்த காலத்து மனிதர்கள் நமக்கு என்ன சொல்லவருகிறார்கள் என்பதை ஆராய்வதே என் நோக்கம்..!!

7 comments:

அகநாழிகை said...

நண்பர் ரங்கனுக்கு, புராணங்கள் எல்லாமே செவிவழிச் செய்தியை கொண்டு எழுதப்பட்ட அதீத கற்பனைப் பாத்திரங்கள். மேலும் அதிகாரம் என்ன சொல்கிறதோ அதன்படிதான் புராணங்கள் பதியப்பட்டது. நாம் வாசிக்கிற வரலாறு என்ற ஒன்றே பொய்யானது. அசுரர் தேவர் என்பதே யாரால் உருவாக்கப்பட்ட புராணம் என்பதைக் கொண்டு ஆய்வுக்குட்படுத்த வேண்டியது. ஒருவர் தன்னை நியாயப்படுத்த நல்லவராக காட்டிக்கொள்வது போலத்தான் புராணங்கள். தேவர்கள் நல்லவர்கள், அசுரர்கள் கெட்டவர்கள், தீங்கு செய்பவர்கள். இராமாயணக் கதை உலகெங்கிலும் பல்வேறு மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளது. தாய்லாந்து, கம்போடியா, அர்ஜன்டைனா, வடஇந்தியா, தென்னிந்தியா எல்லா இடங்களிலும் உள்ளது. எல்லாமே புனைவுகள்தான் என்பதால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக அமைந்திருக்கிறது. அந்த காலத்து மனிதர்கள் சொல்ல வந்தது வேறொன்றுமில்லை, தங்களைவிட உடல் வலிமையாக அசுரர்கள் இருந்தாலும், அவர்களை தாங்கள் (தேவர்கள்) வீழ்த்திவிட்டோம், வென்று விட்டோம் என்பதுதான். இதற்கு காரணம் இப்புராணங்கள் தேவர்களால் புனையப்பட்டவை என்பதுதான்.

கனிமொழி said...

Me waiting for the next post....

வால்பையன் said...

டாய்ச்சி என்றொரு தற்காப்பு கலை இருக்கிறது! அதன் சாராம்சம், எதிரியும் வேகத்தை அவனுக்கு எதிராகவே திருப்பிவிடுவது!

S.Sudharshan said...

இந்து சமயத்தின் சில கதைகள் புனையப்பட்டவையாக இருந்தாலும் . மகாபாரதத்தில் உள்ளது போன்று அனைத்து விடயத்தையும் வேறு எதுவும் உள்ளடக்கி உள்ளதாக இல்லை .. அனைத்தும் முதலே ஊகிக்கப்பட்டவை . காரணங்கள் இல்லை என்று சொல்ல முடியாது .. நவ கிரகங்களை விஞ்ஞானம் அறிய முன் ஒன்பது என கூறியவர்கள் அவர்கள் . ஒவ்வொரு விடயமும் விஞ்ஞான அர்த்தமுடையவை . இந்தியாவில் உள்ளதால் அர்த்தமற்றவையாகி விட்டன

வால்பையன் said...

@ சுதர்ஷன்

நவகிரகம் ஒன்பது என்றால் சந்திரனும் ஒரு கிரகமா, மூனு மூனு நாலு பக்கமும் தெரியிற மாதிரி கற்களை அடுக்கி நடுவில் ஒரு கல்லை வைத்து ஒன்பது கிரகம் என்றான், அடுக்கியவன் அன்றே பக்கத்திற்கு நாலு கல் வைத்திருந்தால் 13 கிரகம் என்றிருப்பான், சில தற்செயல் நிகழ்வுகளை கண்டுபிடிப்புடன் முடிச்சி போடாதீர்கள்!, சந்திரனை விட பெரிய துணைகோள்கள் வியாழனையும், சனியையும் சுற்றி வருகிறது!

ரங்கன் said...

@வால்பையன்,
நீங்கள் சொல்வது உண்மை என்றாலும், இன்றைய நவீன உலகில் சூரிய கிரகணத்தின் போது பொதுமக்களை போலவே விஞ்ஞானிகளும், அறிவியலாளர்களும் ஆர்வமாய் இருப்பதன் காரணத்தை யோசியுங்கள்.
மனோத்தத்துவ ரீதியாக அமாவாசை அன்று மனதின் செயல்பாடுகளும் ,உடலில் உள்ள ரசாயனங்களின் செயல்பாடும் மிகவும் வலிமையோடு செயல்படுவதாக மருத்துவர்கள் ஏற்றுகொண்டுவிட்டார்கள்.

நம் முன்னோர்கள் அதையும் கணக்கில் எடுத்துகொண்டே ராகுவையும் கேதுவையும் உருவாக்கினார்கள்.

வால்பையன் said...

@ ரங்கன்

ராகு கேதுக்கும் சந்திரனுக்கும் எப்படி முடிச்சி போடுறிங்க, இதுக்கு அவரே பரவாயில்லை போல!

சூரியகிரகணத்தின் போது சில நிமிடங்கள் புற ஊதாகதிர்கள் பூமிக்கு வருவது தடை படும் அச்சமயம், பூமியை சூழ்ந்திருக்கும் காந்த அலைகளின் வரிசையை கண்டறியலாம், அவ்வாறு தான் கண்டும் பிடித்தார்கள், அறிவியல் கொட்டாம்பட்டி டீ கடையில் உட்கார்ந்து விவாதிதிப்பதல்ல, பல காரணிகளையும் பல நூற்றாண்டு கண்டுபிடிப்பின் மேம்படுத்தலையும் உள்ளடக்கியது!


சபரிநாதன் பதிவிலேயே பல பின்னூட்டங்களீல் விவாதித்தேன், சந்திரனின் ஈர்ப்பு அந்த அளவு வரை பூமியை பாதிக்கும் என்று!, இழுபரப்பு விசையின் மூல அது தண்னீருக்கு அதுவும் திறந்த வெளியில் இரண்டு மடங்கு பூமியை மூடியிருக்கும் கடலை மட்டுமே லேசாக அசைத்து பார்க்கும்! அவற்றால் ஒன்றும் பிரயோஜனமில்லை!

Post a Comment

வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.