என்னது புத்தரையே தடுமாற வெச்ச கேள்வியா? ஆமாங்க..
அப்படி யோசிச்சு கேள்விகேட்டது யாருங்க? இருங்க சொல்றேன்..
ஞானி..எல்லாம் தெரிஞ்சவர் அவர் ஏன் தடுமாறினாரு? எல்லாம் தெரிஞ்சதாலதான்..
சரி..கதைக்கு வருவோம்.
புத்தர் தன்னுடைய ஞான வாழ்வின் இறுதிகட்டத்தில் இருக்கிறார். அப்போது
ஒரு பிரசங்கத்தில் கலந்துகொள்ள தன் சொந்த நாட்டின் வழியாக செல்லவேண்டிய சூழல்.
எப்படியும் அவரின் நாடு வழியாக சென்றால், உற்றார் உறவினர், தம் குடும்பத்தாரை எல்லாம்
சந்திக்க வேண்டிவருமே...
அப்படி அவரை சந்தித்தால்.. அவர்கள் மிக வருந்துவார்களே! முக்கியமாய் அவரின் மனைவி
யசோதா இந்த செய்தியை கேள்விப்பட்டால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாவாளே என்று வருந்தினார்
புத்தர்.
இருந்தாலும்.. எல்லாரையும் தன் அன்பால் சமாதானப்படுத்திவிட முடியும் என்று முழுமையாய்
நம்பினார்.
நாட்கள் ஓடின.. தன் பிறந்த தேசத்திற்குள் அடியெடுத்து வைத்தார் புத்தர். மக்கள் குதூகலித்தனர்,
கூக்குரலிட்டு, விழுந்து, தொழுது எதேதோ செய்து தம் அன்பை வெளிப்படுத்தினர்.
அப்போது புத்தரின் முக்கிய சீடர் அனந்தர் கேட்டார்: உங்கள் நாட்டில் இப்படி அன்பான மக்கள் இருக்க..
எப்படி இவர்களைவிட்டு வர முடிந்தது?
புத்தர் சொன்னார்: அவர்கள் அன்பை வெளியில் தேடியும், கண்டுகொண்டும்விடுகிறார்கள். நானோ
உள்ளே தேடவேண்டி இருந்தது. அதனால் வந்தேன். என்றார்.
புத்தர் மீண்டும் சொன்னார்: அனந்தா..நிச்சயம் நான் தடுமாற போகிறேன். என் பாதையை கவனி என்று புன்னகைத்தார்.
அனந்தருக்கோ ஆச்சரியம். மிகவும் சுத்தமான , புதிதாக இடப்பட்ட சாலையில், கண்ணுகெட்டிய தூரம்
வரை எந்த கல்லோ, கட்டைகளோ இல்லை. புத்தரும் தெம்பாய் தெளிவாய் நடக்கிறார். எப்படி தடுமாற போகிறார் என்று யோசித்தவண்ணமே வந்தார்.
பாதையை மீண்டும் கவனித்தார். அங்கே தூரத்தில் ஒரு அரண்மனை தெரிந்தது. அடுத்த சில நிமிடங்களில்.
திடீரென..ஒரு பெரும் கும்பலாய் மக்கள் அரண்மனையில் இருந்து வெளியே ஓடிவந்தனர்.
புத்தரை நோக்கி கைக்கூப்பி நின்றனர். சிலர் சாஷ்டாங்கமாய் விழுந்து தொழுதனர்.
அப்போது ஒரு பெண்..நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு அம்மையார்..வணங்குவதற்கான எந்த செய்கைகளும் இல்லாமல்.. புத்தரை நோக்கி வந்தாள்.
புத்தரும் நேரே சென்றவண்ணம் இருந்தார். அந்த அம்மையார் இப்போது கண்களில் நீர்விட ஆரம்பித்தார். கைகள் அதுவாக கூப்பிநின்றன.
அந்த அம்மையாரின் அருகில் வந்துநின்றார் புத்தர்.
¨நலமா¨ என்றார் அந்த பெண்மணி.
¨நலம் யசோதா¨ என்றார் புத்தர்.
¨ஒரு கேள்வி கேட்கலாமா?¨ என்றாள் யசோதா.
¨எங்கெங்கோ காடுமலைகள் சுற்றி திரிந்து அடைந்த ஒன்றை... இங்கே அரண்மனையிலேயே
அடைந்திருக்க முடியாதா?¨ என்றார்.
புத்தர் வாயெடுத்தார். ஆனால் சொல்வரவில்லை. முயன்றார். ஆனால் முடியவில்லை.
இப்போதுதான் அனந்தர் புத்தர் முதல்முறையாக தடுமாறுவதை பார்க்கிறார்.
எதுவும் பேசாமல் புத்தர் விலகி சென்றார். அனந்தருக்கோ ஆச்சரியம்.
புத்தரிடம் கேட்டே விட்டார்: ஏன் தடுமாறினீர்கள் புத்தரே?
புத்தர் சொன்னார்: ஞானமடைவதற்கு இந்த இடம்தான் சிறந்தது என்று எதுவுமில்லை என்று எனக்கு தெரியும். அதை வீட்டிலும், காட்டிலும் எங்கும் அடையலாம்.
எங்கும் அடையலாம் என்று சொல்லி அவளுக்கு புரியவைக்கவும் முடியுமா? அல்லது
அரண்மனையில் முடியாது என்று அவளிடம் பொய் சொல்லவும் முடியுமா?என்றார் புத்தர்.
அனந்தர் புன்னகைத்தார்.
பயணம் தொடர்ந்தது..!!
9 comments:
புத்தரை தடுமாற வைத்த இடம் அருமை. தகவலுக்கு நன்றி. வாழ்த்துக்கள்
//ஞானமடைவதற்கு இந்த இடம்தான் சிறந்தது என்று எதுவுமில்லை என்று எனக்கு தெரியும். அதை வீட்டிலும், காட்டிலும் எங்கும் அடையலாம்.//
அது ஒவ்வொருவரின் மன வலிமையை பொறுத்தது ...
புத்தரைப் பற்றிய தகவல் சுவையாய்...
:)
இதுவரை கேள்விப்படாத கதைங்க ..!! நல்லா இருக்கு ..!!
nana iruku theerkatharisiyae:)
ஞானம் என்றால் அறிவு .. அரண்மனைக்குள் எவ்வாறு ஞானம் பெற இயலும். ஒவ்வொரு மக்களின் கஸ்ட்டத்தையும் கண்கூடப் பார்த்து அதன் மூலத்தை நோக்கிய புத்தரின் பயணமே அவரை ஞானம் பெற்றவர் என்று கருதச் செய்தது.
அரண்மனையிலோ, வீட்டிலோ அமர்ந்து இருந்தால் தியானம் வேண்டுமானால் செய்யலாம். ஞானம் கிடைக்காது..
இப்போது எனக்கு குழப்பம் வந்துவிட்டது மருது..
நீங்கள் புத்தரா? இல்லை அவரா? ஞானமடைந்தவன் சொல்வதை நம்புவதா? இல்லை எதோ ஒரு பதிவில் தன் அறிவாளிதனத்தை காட்டுபவரை நம்புவதா?
ஒருவேளை நீங்கள்தான் புத்தரின் மறுபிறவியா?
வேண்டுமென்றால்.. “மருதை திணற வைத்த கேள்வி” என்று தலைப்பை மாற்றிவிடவா?
என்ன சொல்கிறீர்கள்?
புது விஷயம் தெரிந்து கொண்டேன்
Post a Comment
வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.