Friday, April 23, 2010

உங்களுக்கு கடவுள் மீதிருப்பது நம்பிக்கையா ? பயமா?

கடந்த சில வருடங்களாகவே என்னுள் எப்போதும் ஒரு ஊசலாட்டம்.
நம்பிக்கை, நம்பிக்கையின்மை(பயம்) இவைகளுக்கு இடையேயான ஊசலாட்டம் அது.

http://geesun.files.wordpress.com/2009/12/believe_small1.jpg

எல்லா ஊஞ்சல்களையும் போல இது மேலேயும் கொண்டு சென்றது. கீழேயும் தள்ள பார்த்தது.

என்ன செய்ய? எல்லா மனிதனுக்கும் இந்த ஊசலாட்டம் இருந்துகொண்டு தானே இருக்கிறது. நான் மட்டும் என்ன விதிவிலக்கா?
நானும் இந்த ஊசலில் ஆடி ஓய்ந்த போது ஒரு சின்ன விஷயம் மூளையில் பளிச்சிட்டது. அதுதான், நம்பிக்கை, பயம் இரண்டுமே
ஒரே விஷயத்தின் இரண்டு பக்கங்கள். ஒரு நாணயத்தின் இரு பக்கம் போல். அவைகள் ஒன்றை ஒன்று சார்ந்தும், சாராமலும் இயங்கும்
ஒரு விசித்திர இயந்திரமாய் தெரிந்தது.

ஒரு இருட்டறையில் நுழையும்போது, அங்கே எதுவும் இருக்காது என்கிற நம் மனதின் நம்பிக்கையே, எதாவது இருக்குமோ என்கிற பயமாய்
மாறிவிடுகிறது. இது எப்போதும் நிகழ்வதே. நம்பிக்கையே நாம் செய்யும் எந்த செயலுக்கும் அடிப்படை. பயமே நாம் தவிர்க்கும் எந்த செயலுக்கும்
அடிப்படை. இப்படி நன்மைகளுக்கும் தீமைகளுக்கும் ஆதார சுருதியாக விரும்பும் இந்த இருவரின் கையில் நாம் பொம்மைகளாக இருக்கிறோம்.

http://ui05.gamespot.com/260/fear_2.jpg

நம்பிக்கையால் தூண்டப்படுவதும், அதனால் சில செயல்கள் செய்வதும், அது தோற்றபின் அந்த செயலில் பயம்கொள்வதும்
எப்போதும் நடக்கிறது. எப்போதும் நாம் முழுமையாக வெற்றியடையும் என்கிற நம்பிக்கை உடைய விஷயங்களை மட்டுமே முன்னுரிமை தருகிறோம்.
தோல்வி சார்ந்த விஷயங்களை நாம் எப்போதும் கண்டு அஞ்சுகிறோம். இந்த அச்சம் தேவையற்றது என்கிறேன்.



குழந்தைகள் விளையாடும் போது கவனித்திருக்கிறீர்களா? அவைகள் எப்போதும் வெற்றிக்காக விளையாடுவதில்லை.
அந்த விளையாட்டில் கிடைக்கும் மகிழ்ச்சிக்காகவே அவைகள் விளையாடுகின்றன. வெற்றிக்கான வெறியும் இல்லை. தோல்விக்கான
பயமும் இல்லை.
கால்பந்து வீரர் பீலே ஒரு பேட்டியின் சொன்னார் :
“நான் விளையாடவே ஆசைப்படுகிறேன். ஆனால் என்னையும் அறியாமல் ஜெயித்துவிடுகிறேன்” என்று.

வாழ்க்கை நம்பிக்கையை சார்ந்ததும் அல்ல, பயத்தை சார்ந்ததும் அல்ல. அது வாழ்க்கையை முழுமையாக ஏற்றுகொள்வதிலேயே இருக்கிறது.

ஒரு அருவியில் குளிப்பதை போல், ஒரு தென்றலை அனுபவிப்பதை போல, ஒரு குழந்தையோடு கொஞ்சி மகிழ்வதை போல..
அது எப்போதும் நம்பிக்கைக்கும், பயங்களுக்கும் அப்பாற்பட்டதாய்...அன்பு மயமானதாய், ஆனந்தமானதாய் இருக்கிறது.

நம்பிக்கை, பயம் இந்த இரண்டையுமே கடந்து விட்டால் கடவுளும் உங்கள் கைப்பிடித்து நடப்பார் :)

மறக்காம ஓட்டும் கமெண்டும் பண்ணிடுங்க..!!

நன்றி,
ரங்கன்

Wednesday, April 7, 2010

வார்த்தைகளினூடே கவனித்தல்!!

கடந்த சில வருடங்களுக்கு முன்,


ஒரு பள்ளி பாராட்டு விழாவில் கலந்துகொள்ள என் அப்பாவும் நானும் சென்றிருந்தோம்.
அங்கே மேடையில் பள்ளி சார்பான பெரியோர்கள், ஆசிரியர்கள் அமர்ந்திருந்தார்கள்.
அப்பாவின் அருகில் அமர்ந்தபடி அவர்கள் பேசுவதை கேட்டுகொண்டிருந்தேன்.
அப்போது அப்பா ஒரு சிலர் பேசும் போது “இவர் பொய் சொல்கிறார், இவர் உண்மையாக பேசுகிறார்” என்று
அவ்வப்போது என்னிடம் சொல்வார்.

அன்று இரவு அப்பாவிடம் ”அப்பா , எப்படி அவர்கள் பொய் சொல்கிறார், உண்மையை சொல்கிறார்னு
உங்களுக்கு தெரியும்?” என்று கேட்டேன். அவர் “அதில் விஷயம் இருக்குப்பா, நீ ஒருத்தர் பேசும்போது
எப்படி கேட்பாய்? வரிசையான வார்த்தைகள் உன் காதில் விழும்..அதை உன் மனசு படிக்கும் போது அது பேச்சை கேட்பதாகிறது,
அதுவே..அந்த வார்த்தைகளுக்கு இடையே..பேச்சில் ஏற்ற இறக்கங்களை கவனித்தும்..அவர் கண்களை கவனித்தும்,
உடல் அசைவுகளை வைத்தும் அவர் உண்மையாக பேசுகிறாரா? அல்லது பொய்யுரைக்கிறான்னு சொல்லிட முடியும்”
என்று ஒரு விளக்கம் கொடுத்தார்.


அப்போது என் அறிவுக்கு அது புரியவில்லை. அவரும் அதை பெரிதாக எடுத்துகொள்ளவில்லை. ஆனால் அவர் சொன்ன விஷயம்
அதன் கருத்து, அந்த சாரம் மனதில் அப்படியே இருந்தது. என்றாவது இந்த கருத்தை முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்று நினைத்து
அதை மனதிலேயே பத்திரமாய் வைத்திருந்தேன்.

சில வருடங்கள் கடந்தன..மீண்டும் பல்வேறு மனிதர்கள், மற்றும் நண்பர்களை சந்திக்க வேண்டி வந்தது.
அப்போது எனக்கு அப்பா சொன்னாரே அந்த ”வார்த்தைகளுக்கு இடையே கவனித்தல்” ஞாபகம் வந்தது.
அதை கொஞ்சம் கொஞ்சமாய் பயிற்சி எடுக்க ஆரம்பித்தேன்.

சில மாதங்களிலேயே நல்ல பலன் கிடைத்தது. நண்பர்கள் பேசும்போது அவர்கள் வார்த்தைகளிடையே கவனித்தேன்.
வெகு சிலரே உணமையான பற்றோடும், பாசத்தோடும், அக்கறையோடும் பேசுகிறார்கள் என்பதும், மற்ற 75% பேர்
காரியம் ஆகவே பேச்சுகொடுக்கிறார்கள் என்பதும் தெரிந்தது.

இதை அப்பாவிடம் சென்று சொன்னேன். அவர் புன்னகைத்தார். என் உறவினர் ஒருவரிடம் பேச சொன்னார்..
அவர் எப்படிப்பட்டவர் சொல் பார்ப்போம் என்றார். அந்த உறவினர் நல்ல மனிதர். எப்போதும் உற்சாகமாகவும், பரபரப்போடும் இருப்பவர்.
ஒப்புகொண்டேன். பேசினேன். அவரிடம் வந்தேன். ” அவர் பாவம் பா..எதோ மனவேதனையோடே எப்போதும் இருக்கிறார். அதை மறைக்கத்தான் இவ்வளவு
உற்சாகமாய் இருக்கிறார் ”
என்று சொன்னேன். புன்னகைத்தார். ம்ம்..சரியாக சொல்லிவிட்டாய்..என்று தட்டிகொடுத்தார்.

உனக்கு இது நிச்சயம் கைக்கொடுக்கும் என்றார்.

இந்த “வார்த்தைகளுக்கு இடையே கவனித்தல்” மூலம்நல்லவர்களின் அருகாமை அதிகரித்தது. இந்த பயிற்சி
பேசும்போது மட்டுமல்லாமல், புத்தகங்கள் படிக்கும் போதும், செய்திகள் கேட்கும் போதும்,
கவிதைகள் கட்டுரைகள் படிக்கும் போதும்,என எல்லா இடங்களிலும் பரவ ஆரம்பித்தது.

அதனால் தான் எப்போதும் என்னால் கிடைத்ததை எல்லாம் படிக்க முடிவதில்லை..தேடிப்பிடித்தே படிக்க ஆசைப்படுகிறேன்..!!

இப்படியாக தினசரி வாழ்வில் நல்லோரின் இணக்கத்தையும், நல்ல விஷயங்கள் மீதான இணக்கத்தையும்
அதிகரிக்க அப்பா சொல்லிதந்த “ வார்த்தைகளினூடே கவனித்தல்” எனக்கு பயன்பட்டு வருகிறது.

நீங்களும் முயற்சி செய்யுங்கள். என் வாழ்த்துக்கள்.

Sunday, April 4, 2010

ஏன் இதயம் உடைத்தாய் ...நொறுங்கவே??

http://i.ehow.com/images/a04/gs/7k/over-broken-heart-800X800.jpg

நடந்து வந்ததோ நதியோரம்,
நனையவில்லை என் பாதம்,
நனையாதது பாதம் மட்டுமே,
என் நெஞ்சமெல்லாம் ஏனோ ஈரம்..


நிற்கவில்லை அமரவில்லை வழியில்,
என்கால்கள் துடிக்கவில்லை வலியில்,
இன்னும் எவ்வளவு தூரம்
ஏனோ மழை வந்தததென் விழியில்.


தூரத்தில் தெரிகிறது பூந்தோட்டம்,
தலையாட்டும் பூக்களின் ஆட்டம்,
இதோ கார்மேகங்களில் கூட்டம்,
ஏனோ என்நெஞ்சில் இன்னும் வாட்டம்.


வந்துவிட்டேன் பயணிகள் நிழற்கூடம்,
ஒருவருமின்று இது தனிக்கூடம்,
கண்களும் இதயமும் நனைந்து
இங்கு அமர்ந்திருக்கிறேன் இது சவக்கூடம்.


காதலிக்கிறேன் என்றாள் அன்று
மறந்துவிடு என்றாள் அன்று
அப்பா மறுப்பார் என்று
தவிக்கவிட்டு அவனோடு சென்றாள் இன்று..!!

எனக்கும் காதல் வந்தது
என்னை வாட்டிவதைத்து சென்றது,
காதல் இன்னும் வாழ்கிறது
காதலியும் வாழ்கிறாள் புதிய கணவனோடு.

******** ******** ******** ******

(பி.கு): என் நண்பன் ”டேய்..நீ சென்ஸிட்டிவ்..இந்த படம் வேணாம்..சொன்னா கேளு”ன்னு சொல்ல சொல்ல கேட்காமல் ”விண்ணை தாண்டி வருவாயா” பார்த்ததன் விளைவு.. நல்ல திரைக்கதை...நல்ல படம்..நோ மோர் கமெண்ட்ஸ்..!!

(பாதி படத்துக்கே மூச்சு வாங்க ஆரம்பித்துவிட்டது வேறு கதை..!!)