எத்தனையோ வருடங்களாக நானும் சுயமுன்னேற்ற நூல்களை படித்தவன் தான். ஆனால்..இதற்கு மேலும் என்னால் இந்த குப்பைகளை
சகித்துகொள்ள முடியாது.
காரணம். சுய முன்னேற்றம் என்பதே ஒரு தவறான வார்த்தை. நாம் நம்மை மதிக்காததால் வெளியான வார்த்தை. நாம் நம்மை இன்னும் முழுதாய்
தெரிந்துகொள்ளாததால் வெளியான வார்த்தை இது. இந்த வார்த்தையின் நிஜமான சமுதாய அர்த்தம் : "பிறரோடு ஒப்பிட்டு பார்த்து வருத்தப்படு" என்பதே.
இதற்கு மேலும் பொருத்துக்கொள்ள முடியாது. நீங்கள் இனியும் இந்த சுயமுன்னேற்ற குப்பைகளில் சிக்கி சின்னாபின்ன படாதீர்கள். அது நரகம்... வெளியே வரவே முடியாத நரகம்.
எப்போது நீங்கள் ஒப்பிட ஆரம்பிக்கிறீர்களோ அப்போதே நீங்கள் உங்களை அவமானப்படுத்திகொள்ள ஆரம்பித்துவிட்டீர்கள். உங்கள் தாழ்வு மனப்பான்மையை நீங்கள் ஒப்புகொண்டுவிட்டீர்கள்
என்றே அர்த்தம். என்னுடைய தாழ்வு மனப்பான்மை சம்பந்தமான பதிவுகளின் அடிப்படை சாரமே.. தாழ்வு மனப்பான்மை என்பது ஒரு மாயை. அது
பிறரால் உங்களுக்கு உருவாக்கப்பட்டதே ஒழிய..நீங்கள் உங்களையே வெறுப்பது முடியாத காரியம். ஆனால் நாம் எப்படியோ அதனோடு ஒத்துபோய்விட்டோம். ஒரு தேவையே இல்லாத மனநிலையோடு
நாம் ஒத்துப்போய்விட்டோம். அதனால் நாம் இழந்தது,
நிதானத்தை,
எப்படி இழந்தீர்கள்? ஓடும் கூட்டத்தோடு ஓடவே உங்களுக்கு நேரம் சரியாக இருந்தது. ஓட ஓட தூரம் குறையவில்லை. ஆனால் வேகமெடுக்கவேண்டுமென்ற வெறியில் எத்தனையோ மனிதர்களின் கழுத்தில் மிதித்தீர்கள்..
அவர்களின் வேதனையிலும், கண்ணீரிலும் உங்கள் மாளிகைகள் வளர்ந்தன. நிதானித்திருந்தால்..நாம் மதிக்கவேண்டியது பணத்தை அல்ல, நல்ல மனிதர்களை என்று புரிந்திருக்கும்.
தெளிவை,
நம்முடைய குறிக்கோள்கள் எல்லாமே நம்மை நாமே மயக்கிகொள்ள பயன்படுத்தும் போதைவஸ்துக்கள் தான். அப்போதுதான் நாமும் செயல்பட்டுகொண்டே இருக்கிறோம் என்று நமக்கு ஒரு திருப்தி இருக்கும்.
இந்த விஷயத்தை எங்காவது பார்த்திருப்பீர்கள். அதாவது ஒரு வட்ட ஏணியில் ஒரு எலியை ஓடவிடுவார்கள்..அதன் முன்னால் இருக்கும் வெண்ணெய்கட்டிக்காக அது அப்படி ஓடும்..தன் முழு சக்தியையும் செலுத்தும்.
ஆனால் இறுதிவரை அதற்கு அது கிடைக்கப்போவதில்லை. அது வெறும் மாயை என்பது அதற்கு புரியப்போவதில்லை. நாமும் இப்படித்தான் சிக்கிகொண்டோம். நம் குறிக்கோள்கள் அத்தனையுமே அந்த மாய வெண்ணெய்கட்டிப்போல்..
ஒரு சிலரின் சுயநலத்திற்காக நீங்கள் அந்த எலிகளாய், வட்ட ஏணிகளுக்குள் ஓடி ஓடி உயிர்விடுவீர்கள். இது தேவையா? ஏணியை உடைத்துவிட்டு எழுந்துவாருங்கள்.
அமைதியை,
உலகத்திலேயே அமைதியான மனிதன் யார் தெரியுமா? தன்னை தானே எவன் எந்தவகையிலும் சித்திரவதை செய்துகொள்ளாது ஒருவன் இருந்தால், அவன் தான் இந்த உலகில் அமைதியான மனிதன்.
உங்களால், சொல்லமுடியுமா? நீங்கள் அமைதியான மனிதரென்று?
தன்னைத்தானே பார்த்து அறிந்துகொள்ளும் தன்மையை,
ஊரிலிருக்கும் சுயமுன்னேற்ற சொக்கர்களின் பேச்சில் மயங்கியே வாழ்வை ஓட்டிகொண்டிருந்தால், நீங்கள் எப்போது உங்களின் பேச்சை கேட்பது?
சுயமதிப்பை,
இரண்டாவது பேராவின் முதல் வரியை படியுங்களேன். ம்ம்.. இப்போது நம்மை நாம் மதித்திருந்தால், நம் திறமைகளை, நம் கற்பனைத்திறனை, நம் சக்தியை நாம் மதித்திருந்தால்,நாம் இப்படி அடுத்தவனின் கைப்பாவையாக ஆடவேண்டிய
சூழ்நிலை உருவாகி இருக்காது. இனியேனும் உங்களை நீங்கள் மதிக்க பழகுங்கள்.
அன்பை,
அன்புதான் நீங்கள்..நீங்கள் தான் அன்பு. அது தனியே வெளியிருந்து வருவது இல்லை. நீங்கள் முதலில் உங்களிடம், முதலில் உங்கள் உடலிடம் அன்பாய் இருங்கள்.. பிறகு உங்கள் உணர்வுகளுக்கு அன்பாய் இருங்கள். பிறகு பாருங்கள்..உங்களிடம் பொங்கும் அன்பை
அள்ளிப்பருக ஆயிரம் பேர் கூடிவிடுவர்..!!
மகிழ்ச்சியை,
அன்பென்று ஒன்று வந்துவிட்டால், மகிழ்ச்சி என்பதும் வந்தே தீரும். அது அன்பின் அடுத்த நிலை.
நட்புணர்வை,
மகிழ்ச்சியின் வழியில் பகிர்தல் துவங்கும். நீங்கள் மகிழ்ச்சியை, அன்பை, எதாவது ஒருவகையில் சகமனிதருக்கு கொடுக்கும்போது நட்புணர்வே அதன் முதல் சாத்தியம். பிறகென்ன..தினம் தினம்..நண்பர்கள்..
அமைதியான, தெளிவானதொரு வாழ்க்கை.
4 comments:
:)
உற்சாமூகட்டும் சிந்தனை..!!
nice ranga..
so muching thinking..
:)
அன்பின் ரங்கா - சிந்தனை அருமை - உண்மையான சிந்தனையும் கூட - நிதானத்தை - தெளிவை - அமைதியை - தன்னையே எண்ணிப்பார்க்கும் தன்மை -சுய மதிப்பை - அன்பை - மகிழ்ச்சியை - நட்புணர்வை - இத்தனையும் இழந்து விட்டோமா ..... என்ன செய்வது - அத்தனையும் திரும்பப் பெற வேண்டும். சிந்திப்போம் - செயலாற்றுவோம். நல்வாழ்த்துகள் ரங்கா - நட்புடன் சீனா
Post a Comment
வாங்க.. படிச்சாச்சா? அப்படியே உங்க கருத்தையும் சொல்லுங்க.. அது தான் நமக்கு டானிக்.