Friday, April 24, 2009
அற்புத பதிவு -1001!!!
பதிவிடுவது என்பதை பொழுதுபோக்காய் தொடங்கினேன்.ஆனால் இன்று அது இல்லாமல் ஒரு நாளை ஓட்டுவது என்பது சிரமமானதாகவே ஆகிவிட்டது.
தினசரி நான்கைந்து பதிவுகளையாவது படித்து கமெண்ட் போடாவிடில் தூக்கம் வருவதில்லை. நமது ஜமால் போல் பத்தாயிரம் பின்னுரை எல்லாம் போட்டு அசத்த வேண்டும் என்றுகூட சில நேரங்களில் ஆசையாயிருக்கு எனக்கு. மனிதருக்கு எப்படி தான் நேரம் கிடைக்குதோ தெரியலீங்க..!!
ஆனால் நிச்சயமாக என்னால் முடிந்த சிறந்த , சில உதவிகரமான பின்னுரைகளை தந்திருக்கிறேன் என்பதில் பெருமகிழ்ச்சி.
நான் 2007-ஆம் ஆண்டு சிபியால் அறிமுகப்படுத்த பட்டேன். அவர் அறிமுகப்படுத்திய பல பதிவர்கள் நான் படித்து அசந்து போகும் அளவுக்கு பதிவில் கலக்குகிறார்கள் ,அடியேன் இன்னும் கத்துக்குட்டிதான்..என்பதில் பெருமையே எனக்கு.
அதுமட்டுமில்லாமல் என்னை வளர்த்துகொள்ள சில பதிவர்கள் உற்ற துணையாய் இருந்திருக்கிறார்கள். அவர்களின் பதிவை படித்தே நான் என்னை உயர்த்திகொண்டு வருகிறேன் என்பது அவர்களுக்கே தெரியாது பாவம்.
உதாரணமாக இவரை சொல்லலாம்.. இவரை பதிவுகளில் இல்லாத சுவையே இல்லை எனலாம். இவரின் பதிவுகள் ஒவ்வொன்றும் இந்த பதிவுலகத்தையே கலக்கும் திறம் பெற்றவை என்று சொன்னால் அது மிகையாகாது.
அப்படியே சில பல பிரச்சனைகளை சந்திக்கவும் சமாளிக்கவும் கற்றுத் தந்தது இந்த பதிவுலகம் தான்.
ஆமா.. இப்போ நீ என்னதான் சொல்ல வரே? ன்னு கடுப்பாய் காதில் புகையுடன் கேட்பது புரிகிறது.
அது தெரிஞ்சா முதல் பாராவிலேயே சொல்லி இருக்க மாட்டேனா?
பாட்டு பாஸ்கி : அடப்பாவி இன்னுமா உனக்கு எழுத மேட்டர் கிடைக்கலை.. இன்னிக்கு நீ செத்தடி...நான் வரலை.. நீயாச்சு.. அவங்களாச்சு.. நான் இப்போவே டீசண்டா கழண்டுக்கறேன்..
Sunday, April 19, 2009
வெயிடிங்க்...!!!
அவளின் வளையல்களின் அசைவாய்
காற்றில் மெல்லிய சங்கீதம்..
அவளின் கண்ணசைவின் கிறக்கங்களாய்
பூக்களின் மெல்லிய கவர்ச்சிகள்..
அவளின் மெல்லிய பேச்சுக்களாய்
வண்டுகளின்.. ர்ர்ர்ரிங்ங்ங்ங்காரம்..
அவளின் மேனியின் நறுமணமாய்
மயக்கும் ரோஜாக்களின் வாசம்..
காலால் மிதிக்க மனம் வராத
காதலியின் கன்னம்போன்று புற்கள்...
அவளின் மெல்லிய நடை போல்
சின்ன மானின் அழகிய நடை..
கொஞ்சவந்தால் ஓடுகிறது அவளை போல்
இந்த பல வர்ண பட்டாம்பூச்சி..
அவளின் நீல சுடிதாரின் நிறம் போல்
வானிலும் அதே நீல நிறம்..
இப்படி அத்தனையும் அவளை பற்றிய
அழகினை சொல்லிக் கொண்டிருக்க..
அவள் மட்டும் இன்னும் வராமல்
காத்திருக்க செய்கிறாள் கள்ளி.
இப்படிக்கு-
பார்க் பெஞ்சில் காதலிக்காக காத்திருந்தவன்.
பாட்டு பாஸ்கி : என்னடா..மச்சி.... பதிவு எழுத எதும் மேட்டர் கிடைக்கலியா...?என்கிட்ட கேட்டா நிறைய சொல்லி இருப்பேன்ல.... சரி வுடு.. கவித(ஜ) நல்லாதான் இருக்கு... ஆனா கும்மி உறுதி.. சொல்லிட்டேன்..
Saturday, April 11, 2009
பட்டாம்பூச்சி சொல்லிதந்தது..!! பாகம்-2.
கடந்த பாகத்தில் நம் பட்டாம்பூச்சி உலகிற்கு சொல்லிதந்தது என்னவென்று பார்த்தோம். இந்த பாகத்தில் அது ஒரு தனிமனிதனுக்கு என்ன சொல்லிதருகிறது என்று பார்ப்பொம்.
முதலில் பட்டாம்பூச்சியாக மாறியது யார்?
ஒரு சின்ன புழு.
புழு என்பதால் அது "ஆ.. நான் வெறும் புழுவாக அல்லவா இருக்கிறேன். எனக்கு இப்படி வாழ்வதே பிடிக்கவில்லை" என்று எவையும் தற்கொலை செய்துகொண்டதில்லை. அவைகளுக்குள் இருக்கும் உள்ளுணர்வு அவைகள் சிறந்த பட்டாம்பூச்சியாக மிளிரும் என்று அவைகளிடம் எப்போதும் சொல்லியபடி இருக்கின்றன.
நாம் கீழாய் மதிக்கும் புழுக்கள் கூட தற்கொலைக்கு முயல்வதில்லை.
புழுக்கள் கூட மேலாய் மதிக்கும் மனிதர்களாகிய நாம்...
எத்தனை தற்கொலை முயற்சிகள்.தான் இறந்தால் மட்டும் போதாதென்று தான் அழியும் போது மற்றவரையும் சேர்த்து அழிக்கிறோம்.
இதை பற்றி புழுக்கள் கேள்விப்பட்டால்..
"அட.. இறைவா!! இதற்கு நாங்களே பரவாயில்லை போலிருக்கிறதே" என்று சொல்லக்கூடும்.
தற்கொலை வேண்டாம். அதை இயற்கை அனுமதிப்பதில்லை. நம் உண்மையான முடிவு தானாக நிகழட்டும். நாமாக அதை தேடிப்போக வேண்டாம்.
உள்ளுணர்வு என்கிற ஒன்று நமக்கு இருக்கிறது.ஆம்.. நம்மை போன்ற ஒவ்வொரு உயிரனத்திற்கும் இருக்கிறது. அது நமக்காக மட்டும் தனியாக படைக்கப்பட்டதில்லை. எல்லா உயிரனங்களும் தங்கள் உள்ளுணர்வின் படி மட்டுமே வாழ்கின்றன.சொல்லபோனால் அவைகள் தான் ஒவ்வொரு உயிரனத்தின் டேட்டாபேஸ்.
நாம்..மனிதர்கள் மட்டுமே உள்ளுணர்வை தொலைத்துவிட்டு வாழ்கிறோம். அதன் சத்தம் எப்போதும் இருக்கிறது. நாம் காதுகளுக்கு அதை கேட்க நேரமில்லை. யாரொ சொன்ன வரிகள்தான் ஞாபகம் வருகிறது.. "காது.. அது செல்போன் அடைத்ததால் செத்துவிட்ட ஒன்று" என்று.
வாருங்கள். உங்கள் இயல்பில் சேராத வேலையினை செய்யாதீர்கள். எது உங்கள் இயல்போ அங்கே சேருங்கள். உங்கள் வாழ்க்கை வளமாகவேண்டுமெனில் உங்கள் உள்ளுணர்வின் சொல் படி நடைபோடுங்கள். உலகில் நம்மை ஏமாற்றாத ஒரே குரல்.. உள்ளுணர்வின் குரல் மட்டுமே.
அதை எப்படி கேட்பது...? உள்ளுணர்வின் சத்தம் எனக்கு கேட்கவே இல்லையே. என்கிறீர்களா..அதையும் பட்டாம்பூச்சி சொல்லிதருகிறது.
புழுவாய் இருப்பது எப்படி சிறகுகள் பெற்றது? கேட்டதும் கிடைத்துவிட்டதா ? இல்லை. தன்னை ஒரு கூட்டுக்குள் சுற்றி கொண்டது. அதற்குள் இருள்.. இருள் ..இருள் மட்டுமே. வெளியுலக சத்தங்கள் அதை தொல்லை செய்யாத வண்ணம் தன்னை கூட்டுபுழுவாக்கி கொண்டது. காத்திருந்தது, பொறுமையுடன்.
நான் உங்களை கூடு கட்டி குடிப்புக சொல்லவில்லை. உங்களுக்குள் செல்லுங்கள். "எனக்குள் இருப்பதைபோன்ற அதிசயத்தை வெளியில் நான் கண்டதில்லை" என்கிறார் ஐன்ஸ்டீன். அப்படி கண்டதால்தான் அவரை இன்னும் கொண்டாடுகிறோம்.
உங்களுக்கு நீங்களே புதிதாய் தெரிவீர்கள். அட.. இது நானா..!! என்று உண்மையான உங்களை பார்த்து உங்களுக்கே ஆச்சர்யமாய் இருக்கும்.
அப்படி உங்களை நீங்கள் கண்டறிய முதலில் தனிமையில் இருக்க பழகுங்கள். வாரத்தில் ஒரு நாள். ஒரு மணி நேரம் மட்டும். தனித்து
இருங்கள். மற்றவரை பற்றிய சிந்தனையை நிறுத்தி வைத்துவிட்டு
உங்களிடம் நீங்கள் பேசுங்கள். உங்கள் இயல்பை கண்டறியுங்கள்.
"உள்ளுணர்வின்படி வாழுங்கள்.அதுதான் உங்களின் வாழ்க்கை."
தொடரும்...
Thursday, April 9, 2009
பட்டாம்பூச்சி சொல்லிதந்தது..!! பாகம்-1.
பட்டாம்பூச்சி.. சொல்லும்போதே அதனுடைய வர்ணஜாலங்கள், பறக்கும் அழகு, அதன் மெல்லிய சிறகுகள் இப்படி பல விஷயங்கள் மனதில் வந்து குவிகிறது.
அப்படி குவியும் விஷயங்களில் சேராத இன்னொரு விஷயம் அதன்
உருமாற்றம். ஒரு சாதாரணமான கையில் தொடவே கூச்சப்படும் புழுவாய் தான் பிறக்கிறது அந்த பட்டாம்பூச்சி. சில வாரங்களுக்கு பிறகு
அது தன்னுடைய இயல்பை அறிந்து தன்னை உறுமாற்றம் செய்ய தயாராகிகொள்கிறது. பிறகு மேலும் சில வாரங்களுக்கு தான் கட்டிய கூட்டிற்குள்ளே தானே அமர்ந்து தவம் செய்கிறது.
இது நம்மை போல பணம் கொடு, நிலம் கொடு என்பதற்காக தவமல்ல. இயற்கையிடம் தன்னை முழுமையாக சமர்பித்துக்கொள்ள வேண்டிய தவம் இது. இந்த வாழ்க்கை எனும் பிரபஞ்ச சக்கரத்தில் தன்னையும் சேர்த்துக்கொள்ள வேண்டி செய்கிறது தவம்.
கேட்டதை கேட்டபடி அள்ளி தரவல்லது தானே இயற்கை.அது கேட்டதோ வாழ்க்கை சக்கரத்தில் தனக்கும் ஒரு பாகம். ஆனால் இயற்கை அதனை ஆசிர்வதித்து அதன் அழகை கூட்ட சிறகுகள் தந்து தன் மடியில் அதனை ஏந்தி கொள்கிறது. இப்போது நீங்கள் தொட தயங்கிய புழுதான் இந்த பட்டாம்பூச்சி. இப்போது அதை புழு என்று பட்டாம்பூச்சியை பார்த்து சொன்னால் என்னை முட்டாள் என்பீர்கள். அத்தனை அகழகோடு மறுபிறவி எடுத்து நம்முன் தன் அழகை காட்டி மயக்குகிறது நம் கண்களை.
சரி அதான் உருவம் மாறியாயிற்று. கேட்டது கிடைத்துவிட்டது.அப்புறமும் ஏன் நான் இயற்கையோடு இயைந்து இருக்க வேண்டும் என்று எந்த பட்டாம்பூச்சியும் கேள்வி கேட்டதில்லை.
அப்படி கேட்காததாலோ என்னவோ பல்லாயிரம் ஆண்டுகளாகியும் அவைகள் தங்கள் உண்மை அழகோடு ஜொலிக்கின்றன. தங்களின் இனம் பல்கி பெறுகியும் கிளை இனங்களோடும் மகிழ்ந்து திரிகின்றன இந்த பூமியில்.
அவை இன்றும் பிரபஞ்சத்தின் ஒரு முக்கிய அழகான பக்கமாய் திகழ்வதன் காரணம். அவை இயற்கையை ஏற்றுகொண்டது.
நாம். வெறும் ஒரு குரோமோசோம் சேர்ந்து உறுமாற்றம் பெற்றதற்கே
இயற்கை எதிர்த்து போரிடுகிறோம். அவைகள் சிறகுகள் பெற்றாலும்
இயற்கைக்கு என்றும் எதிர்த்து போராடியதில்லை. நமக்கும் சிறகுகள் முளைத்திருந்தால் பக்கத்து நாட்டின் மீது பறந்து பறந்து தாக்கி இருப்போமோ என்னவோ.?!.
ஒரு சின்ன உயிரனத்திற்கு கூட தெரிக்கிறது இயற்கை எதிர்ப்பு என்பது தாயின் கருப்பையை சிதைக்க துடிப்பது போன்று என்று. நாம் அதை உணராது போனது எப்படியோ தெரியவில்லை. இத்தனைக்கும் நமக்கு ஆறறிவு வேறு.
நீங்களே சொல்லுங்கள் எந்த பட்டாம்பூச்சியாவது தன் இனத்தை சேர்ந்த இன்னொரு பட்டாம்பூச்சியை கொன்று பார்த்திருக்கிறீர்களா..?
இந்த பட்டாம்பூச்சிகள் எப்போதாவது எதிர் நாட்டின் மீது குண்டு வீசியுள்ளதா?
இந்த பட்டாம்பூச்சிகள் என்றாவது தங்கள் ஆரோக்கியம் கெடும் என தெரிந்தும் உணவை உட்கொண்டு நீங்கள் பார்த்ததுண்டா?
புவிக்கு வெப்பமேற்றி அதன் நிலை தடுமாற வைத்ததுண்டா?
சிந்தியுங்கள்.. சீர்திருத்தி கொள்ளுங்கள்.
என்றாவது ஒரு நாள் அவைகள் பொறாமை படுமளவு நாம் அழகாகி காட்டுவோம்.
சொல்லமுடியாது இயற்கையை ஏற்று நடப்பதால் உங்களுக்கும் சிறகுகள் கிடைக்கலாம்.
Wednesday, April 8, 2009
என் அன்பு அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
அட.. !! என்ன இன்றைக்கு உனக்கு அழகு கூடி விட்டது?
என்ன உன் நடையில் ஒரு கம்பீரம் மிளிர்கிறது?
உன் கண்ணில் காந்தம் எதும் வைத்துவிட்டான கடவுள்
இப்படி ஈர்க்கிறது என்னை?
அடிக்கடி என்னை அழைத்து சிரிக்கிறதன் அர்த்தம் என்னவோ?
எதோ சொல்ல வருகிறாய்.. காபி கொடுக்கும் போது புதியதாய் புன்னகை வேறு...?
"கல்யாண நாளா?" என்று அப்பாவின் காதோரம் கேட்டேன்.
அந்த துக்க தினம் இன்று இல்லை என்று அப்பா கிண்டலடிக்கிறார்.
வேறென்ன..
உன் மாமியார் கிளவியிடம் கேட்டேன்.."ம்ம்கும்" ..என்று முகத்தை திருப்பிகொள்கிறது.
அட.. என்னம்மா ஆச்சு... உனக்கு..
அட.. இன்று ஏப்ரல் எட்டா?
நேராக சென்றேன்... கையை பிடித்து நிறுத்தி சொன்னேன்.
"ஹாப்பி பர்த்டே மா"
"அடடா....!! இரு மேட்டூர் போகலாம் அங்கே அழு.. அணையாவது நிரம்பட்டும்."
"சிரிக்காதே கள்ளி.. !! சொல்லாமல் சொன்ன உனக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை என் இதயத்தில்."
நகரு.. இன்று நான் சமைக்கிறேன் என்றேன்.
நான் நீண்ட நாள் வாழ பிடிக்கவில்லையா என்று கலாய்கிறாய் நீ.
எதாவது செய்ய வேண்டுமே ..ஆசையோடு நின்றேன்.
"நீ வாழ்வில் சிறப்பானவனாக வா.. அது போதும்." என்றாய்.
"நிச்சயமாக மா.. நிச்சயமாக"
"இப்போது இருவருமே மேட்டூர் கிளம்புங்கள்" என் கண்ணீர் துடைத்துவிட்டார் அப்பா.
பாட்டு பாஸ்கி : மம்மீ.. ஹாப்பி பர்த்டே..வாழ்த்துக்கள் அம்மா.
இவன் என்னா இப்படி உருகறான். அடக்கிவைங்க அவனை.
Tuesday, April 7, 2009
ரங்காவிண்ட சமையல் கட்டு.. வாழைப்பழ பேஸ்டு செய்வது எப்படி?
இன்னிக்கு நாம பாக்க போற டிஷ் பேரு... வாழைப்பழ பேஸ்ட்.
என்ன பேர கேட்டதுக்கே அதிருதா.. அதான் ரங்கன்.
நாங்க எப்பவும் டிஃபரண்டாதான் யோசிப்போம்.ஹிஹி..
சரி.. இப்போ மேட்டருக்கு வருவொம்.
தேவையான பொருட்கள்
1. பழுக்காத வாழைப்பழம்-2
2. பழைய டூத்பேஸ்ட் டியூப்
3. கத்தி அல்லது கத்தரிகோல்
4. பெவிக்குயிக் கம்.
முதலில் நல்ல பழுக்காத வாழைப்பழமா வாங்கிகோங்க.. இல்ல வாங்கிட்டு வர சொல்லுங்க.
அது நல்லா பழுக்காம திக்கா இருக்கனும். அடுத்து இப்போ கத்தி.. வைச்சு (வாயால கத்துவது இல்லை). கட் பண்ணிடுங்க.
அடுத்து அந்த பேஸ்ட் டியூப் இருக்கா.. அதை எடுங்க.. அதனுடைய வாய் பகுதிய மட்டும்..
அதாங்க பேஸ்ட் வெளியே வருமே.. அந்த பகுதி.. அதை மட்டும் கட் பண்ணி வெச்சுகங்க.
இப்போ பெவிக்குயிக் கம்மை அதில் பூசுங்க.. உடனடியா அதை வாழைப்பழத்தோட கட் பண்ண பகுதியில் ஒட்டிடுங்க.
20 நிமிடம் கழித்து உங்களுடைய வாழைப்பழ பேஸ்ட் ரெடி.
நான் செய்த வாழைப்பழ பேஸ்ட் கீழ இருக்கு.
எப்படி சூப்பரா இருக்கா..
நீங்களும் இதை முயற்சி பண்ணி பாருங்க.. உங்க கருத்தை சொல்லுங்க.
பாட்டு பாஸ்கி : மச்சி.. இன்று முதல் நீ சமையல் கட்டின் சாதனையாளன் என்று அழைக்கப்படுவாய்..
Saturday, April 4, 2009
என்னையும் கவர்ந்த வீடியோ-1
பாட்டு பாஸ்கி : மச்சி நான் கூட இப்படி யோசிச்சதில்லைடா..
எங்க இருந்துடா பிடிச்ச இதை.. சூப்பரா கீதுப்பா..!!
என் ஆளுக்கு உடனே இப்படி ஒன்னு அனுப்புனும்..இரு வரேன்..